காட்டிற்குள் இருந்த பாண்டவர்கள் ஐவரும் குந்திதேவியுடன் அடுத்து எங்கு செல்லலாம் என்று கலந்தாலோசித்துக் கொண்டே காட்டிற்குள் நடந்து கொண்டிருந்தார்கள். அவர்களை இடும்பியும் பின் தொடர்ந்து சென்றாள். இதனைக் கண்ட குந்திதேவி எதற்காக எங்கள் பின்னால் வருகின்றாய் என்று கேட்டாள். அதற்கு இடும்பி பீமன் மீது நான் காதல் கொண்டுள்ளேன். அவரோ தன் தாய் தமையன் ஆகியோரிடையே அனுமதியின்றி என் காதலை ஏற்க முடியாது என்று சொல்லிவிட்டார். தாயே என் மீது இரக்கம் வையுங்கள். நான் வேண்டுவது தர்மமே. என்னை தாங்கள் புறக்கணித்தால் நான் மாண்டு போவேன். என் மீது இரக்கம் வைத்து என்னை ஏற்றுக்கொண்டீர்கள் என்றால் நான் உங்களுக்கு விசுவாசத்துடன் இருப்பேன். நீங்கள் எங்கு போக விரும்புகிறீர்களோ அங்கு உங்களை என்னால் தூக்கி செல்ல முடியும். உங்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருகின்றேன் என்றாள். குந்திதேவிக்கு அவள் மீது இரக்கம் உண்டாயிற்று.
மூத்தவன் யுதிஷ்டிரனோடு இந்த விஷயத்தை பற்றி குந்திதேவி கலந்து பேசினாள். அதன் பிறகு பீமன் சிறிது காலம் இடும்பியுடன் வாழ அனுமதித்தாள். இடும்பிக்கு இப்பொழுது பரம திருப்தி உண்டாயிற்று. இடும்பி அவர்கள் அனைவரையும் ஸாலிஹோத்ரத் என்னும் காட்டிற்கு தூக்கிச் சென்றாள். அங்கு அவர்களுக்கு குடில் ஒன்றை கட்டிக் கொடுத்தாள். அவர்கள் வாழ்வதற்கேற்ற வசதிகள் அனைத்தையும் செய்து கொடுத்தாள். காலையில் இருந்து மாலை வரை இடும்பி பீமனைத் தன்னோடு அழைத்துச் சென்று பல இடங்களுக்குச் சென்று மகிழ்ச்சியாக இருந்தாள். சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு பீமனுடன் அவர்கள் வசிக்கும் குடிசைக்கு திரும்பி வந்தாள். பீமனுக்கும் இடும்பிக்கும் ஒரு குழந்தை பிறந்தது. பயங்கரமான கண்களுடனும் பெரிய வாயுடனும் அம்பு போன்ற நீண்ட காதுகளுடனும் பார்ப்பதற்குப் பயங்கரமாகவும் ஒரு மகனை அவள் பெற்றெடுத்தாள். அக்குழந்தைக்கு அவர்கள் கடோத்கஜன் என்று பெயரிட்டார்கள். ராட்சசப் பெண்கள் தாங்கள் விரும்பிய வடிவை அடையும் சக்திவாய்ந்த பிள்ளையைப் பெற்றெடுப்பார்கள். அவர்கள் எப்படி வேண்டுமானாலும் தங்கள் வடிவை மாற்றிக் கொள்வார்கள். அவன் குழந்தையாக இருந்தாலும் பிறந்த அந்த மணிநேரத்திலேயே ஓர் இளைஞனுக்கு உரிய வளர்ச்சியை அடைந்தான்.
வனவாசிகளாக இருந்த பாண்டவர்களுக்கு வியாச பகவான் தரிசனம் கொடுத்தார். அவர்களுடைய நலத்தை அவர் விசாரித்தார். கௌரவர்கள் தங்களுக்கு செய்திருந்த கொடுமைகளை பற்றி அவர்கள் முறையிட்டார்கள். இப்பிரபஞ்ச வாழ்வு அனைத்தும் நலம் மற்றும் கேடு ஆகிய இரண்டும் கலந்தது. தர்மத்தை உறுதியாக பற்றிக்கொண்டு பொறுமையுடன் கேடு காலத்தை சகித்து வரவேண்டும் என்றும் விரைவில் அதனைத் தொடர்ந்து நல்ல காலம் நிச்சயம் வரும் என்றும் அது வரை பொறுமை காக்குமாறு அவர்களிடம் கூறினார். பாண்டவ சகோதரர்கள் அதுவரையில் தவம் செய்யும் பிராமணர்களாக தங்கள் வேஷத்தை மாற்றிக்கொண்டு ஏகசக்கர நகரத்திற்குச் சென்று அங்கு வசித்து வரவேண்டும் என்றும் வியாசர் பாண்டவர்களிடம் தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றார்.
பீமன் இடும்பியிடம் உன்னையும் கடோத்கஜனையும் விட்டு பிரியும் நேரம் வந்து விட்டது என்றும் தான் செல்ல வேண்டும் என்றும் தனக்கு இருக்கும் சூழ்நிலையை விளக்கிக் கூறினான். அதற்கு இடும்பி இத்தனை நாட்கள் தம்முடன் குடும்ப வாழ்க்கை வாழ்ந்து வந்தது தமக்கு திருப்தி என்றும் உங்களை விட்டு நானும் கடோத்கஜனும் பிரிந்து செல்கின்றோம். பாண்டவர்களாகிய உங்களுக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் தம்மையும் கடோத்கஜனையும் எப்பொழுது வேண்டுமானாலும் அழைக்கலாம். உடனே நாங்கள் வருவோம் என்று கூறிவிட்டு கடோத்கஜனையும் அழைத்துக்கொண்டு அரைமனதுடன் அவர்களை விட்டு பிரிந்து சென்றாள்.