பாண்டவர்களும் அவர்களுடன் கிருஷ்ணனும் அஸ்தினாபுரம் வருகின்றார்கள் என்ற செய்தி அஸ்தினாபுரம் மக்களை சென்றடைந்தது. அவர்கள் அடைந்த ஆனந்தத்திற்கு அளவில்லை. அவர்களின் மகிழ்ச்சிக்கு அறிகுறியாக அஸ்தினாபுரத்தை மிகவும் அலங்கரித்தார்கள். தங்கள் அன்புக்குரிய இளவரசர்கள் அஸ்தினாபுரம் வந்த பொழுது அனந்தத்துடன் வரவேற்றனர். திரும்பி வந்த பாண்டவர்கள் பாட்டனாராகிய பீஷ்மர் பெரியப்பாவாகிய திருதராஷ்டிரரிடமும் வீழ்ந்து வணங்கினர். அவர்களும் அந்த இளைஞர்களை அன்புடன் வரவேற்றனர். ஒரு நல்ல நாளன்று துதிஷ்டிரனுக்கு பொருத்தமான முறையில் பட்டாபிஷேகம் இனிதாக நிறைவேறியது.
திருதராஷ்டிரன் தன்னுடைய தம்பியின் மைந்தனாகிய பாண்டவர்களை குரு வம்சத்து முன்னோர்களின் தலைமைப்பட்டனமாய் இருந்த காண்டவப் பிரஸ்தம் என்னும் நகருக்கு அனுப்பி வைத்தான். காண்டவப் பிரஸ்தம் இப்போது மிகவும் பழுதடைந்து இருந்தது. அதை புதுப்பித்து பாண்டவர்களின் புதிய தலைமை பட்டிணமாக வைத்துக் கொள்ளும்படி யுதிஷ்டிரனிடம் ஆணை பிறப்பித்தான். அவன் அந்த உத்தரவை ஏற்றுக்கொண்டான். இனி பாண்டவர் கௌரவர்களுக்கு எந்தவிதமான சச்சரவும் நேராது என்பது பெரியவர்களுடைய நோக்கமாய் இருந்தது. பாகம் பிரித்தது பாண்டவர்களுக்கு பிரதிகூலமான முறையிலேயே இருந்தது. கிருஷ்ணரும் இதற்கு சம்மதம் கொடுத்தார்.
காண்டவப் பிரஸ்தம் நகரத்தை புதுப்பிக்கும் இந்த பெரிய திட்டத்தை நிறைவேற்றி வைக்கும் படி இந்திரன் விஸ்வகர்மாவை நியமித்தான். அதிவிரைவில் அழகான பட்டணம் ஒன்று உருவாக்கப்பட்டது காண்டவப் பிரஸ்தம் என்ற பெயர் இப்போது இந்திரப்பிரஸ்தம் என்று புதிய பெயர் பெற்றது. புதிய பட்டணத்திலே ஆட்சிமுறை ஒழுங்காக அமைக்கப்பட கிருஷ்ணர் அனைத்து பணிகளையும் செய்தார். புதிய நகருக்கு அனைத்து தேவைகளையும் நிறைவேற்றி விட்ட பிறகு அவர்களிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டு துவாரகைக்கு புறப்பட்டுச் செல்ல கிருஷ்ணன் தயாரானன். குந்திதேவியிடம் விடைபெற வந்தபொழுது கிருஷ்ணனிடம் குந்திதேவி வேண்டுதல் ஒன்று வைத்தாள். எப்பொழுதும் பாண்டவர்களுக்கு அனுக்கிரகமாக இருக்க வேண்டும் என்று அவள் வேண்டினாள். கிருஷ்ணரும் அதற்கு சம்மதித்து புறப்பட்டுச் சென்றார்.
திரிலோக சஞ்சாரியான நாரத மகரிஷி இந்த புதிய நகரத்தை பார்வையிடவும் பாண்டவர்களை விசாரிக்கவும் அங்கே வந்தார். ஐந்து சகோதரர்களும் முறையாக அவருக்கு வரவேற்பையும் வழிபாடுகளையும் செய்தார்கள். திரௌபதி பணிவுடன் அவரை வணங்கி வரவேற்றாள்.. திரௌபதி அந்தப்புரத்திற்கு சென்றதும் பாண்டவர்கள் ஐவருக்கும் நாரத மகரிஷி எச்சரிக்கை ஒன்று செய்தார். முற்றிலும் ஒட்டி உறவாடும் உங்களுக்கு இடையில் பிளவு உண்டாவதற்கு காரணமாயிருப்பது திரௌபதி மட்டுமே. இந்த கடினமான பிரச்னையை முன்னிட்டு உங்களுக்கிடையில் மன வேற்றுமை இல்லாது இருந்தால் மண்ணுலகும் விண்ணுலகும் ஒன்று கூடி எதிர்த்தாலும் உங்களை யாராலும் வெற்றி பெற இயலாது என்று புத்திமதி புகட்டிய பிறகு நாரத மகரிஷி அங்கிருந்து புறப்பட்டுப் சென்றார். அதன் பிறகு சகோதரர்கள் வியாசர் முன்பு கூறிய அறிவுறைப்படி ஐவரும் தங்களுக்கிடையில் உடன்படிக்கை ஒன்று செய்துகொண்டனர் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு ஒருவர் என்ற முறைப்படி திரௌபதியோடு வாழ்ந்திருத்தல் வேண்டும். இந்த உடன்படிக்கையை மீறுபவர்கள் ஒரு வருடம் நாட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்று தங்களுக்குள் பேசி முடிவு செய்து கொண்டார்கள்.