குழந்தைகள் கூறியவைகள் அனைத்தையும் கேட்ட பீஷ்மர் வந்திருப்பவர் துரோணாச்சாரியார் என்பதை யூகித்தார். ஆகவே தானே நேரில் சென்று அவரிடம் பேசினார் பேசியதில் அவர் தான் துரோணாச்சாரியார் என்பதை உறுதி செய்தார். தக்க மரியாதையுடன் அவரை அரண்மனைக்கு வரவேற்றார் பீஷ்மர். பின்பு ராஜகுமாரர்களுக்கு ஆச்சாரியார் ஆக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். துரோணாச்சாரியார் அதற்கு சம்மதம் கொடுத்தார். பீஷ்மருக்கு மட்டில்லா மகிழ்ச்சி உண்டாயிற்று. எனெனில் அக்காலத்தில் துரோணாச்சாரியாருக்கு நிகரான வில்வித்தைக்காரர் அப்போது யாரும் இல்லை.
பிரசித்தி பெற்ற பரத்வாஜ மகரிஷிக்கு பிள்ளையாகப் பிறந்தவர் துரோணர். இவர் வேதங்களை எல்லாம் கற்று உணர்ந்த பின்பு தனுர் வேதத்தைக் கற்க ஆரம்பித்தார். அக்கலையிலும் நிபுணன் ஆனார். துரோணாச்சாரியார் இளைஞனாக கல்வி கற்றுக்கொண்டிருந்த பொழுது பாஞ்சால நாட்டு இளவரசனோடு நெருங்கிய நண்பனாக இருந்தார். ஆஸ்ரம வாசத்தில் இருவருடைய நட்பு மிகவும் நெருங்கிய நட்பாக உருவெடுத்தது. இருவரும் மகிழ்ச்சியாக இருந்த பல வேளைகளில் இளவரசர் துரோணாச்சாரியாரிடம் தான் ராஜாவாக பட்டம் சூட்டிய பின்பு தன்னுடைய செல்வங்களை தாராளமாக தருவதாக கூறிவந்தான். ஆண்டுகள் பல சென்றன.
கௌதமரின் புதல்வியும் கிருபாச்சாரியாரின் சகோதரியுமான கிருபியை துரோணர் மணந்து கொண்டார் அவர்களுக்கு அசுவத்தாமன் என்னும் மகன் பிறந்தான். தனுர் வேதத்தில் வில்வித்தைகளின் நுணுக்கமான பலவற்றை கற்றுக்கொள்ள துரோணாச்சாரியார் விரும்பினார், அதன் படி மகாவித்துவான் பரசுராமரை குருவாக வேண்டி அணுகினார். பரசுராமரும் துரோணாச்சாரியாரை சீடராக ஏற்றுக்கொண்டு தனுர் வேதத்தின் வில் வித்தைகள் அனைத்தையும் அவருக்கு கற்றுக்கொடுத்தார். அனைத்தையும் கற்றுக்கொண்ட துரோணாச்சாரியார் ஆயுத பிரயோகங்களின் அற்புத மூர்த்தியாகி வீடு வந்து சேர்ந்தார். போர் நிபுணனாகிய அவருக்கு வறுமையோடு போர் புரிய தெரியவில்லை. பரம ஏழையாக இருந்தார்.
துரோணாச்சாரியாரின் குழந்தை அசுவத்தாமன் பசும்பாலை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறான். ஆனால் அவற்றை அவன் குடித்தது கிடையாது. ஒரு கவளம் பாலையாவது சுவைத்து பார்க்க வேண்டும் என்றும் தனக்கு பசும்பால் வேண்டும் என்றும் அஸ்வத்தாமன் தனது தாயிடம் கெஞ்சி கேட்டுக் கொண்டான். மகனின் பரிதாபநிலை தாய் கிருபியின் உள்ளத்தை உருக்கியது. இந்த நெருக்கடியில் துரோணாச்சாரியாருக்கு தன் இளமைப்பருவ பாஞ்சாலகுறிச்சி இளவரசன் ஞாபகத்திற்கு வந்தான். அப்போது அவர் கிருபியிடம் பாஞ்சால நாட்டு அரசன் துருபதன் தன்னுடைய இளம் வயது பள்ளி தோழன். அரசன் ஆனதும் தனக்கு செல்வங்கள் தந்து உதவி செய்வதாக பல முறை கூறியுள்ளான். ஆகவே நாம் மூவரும் பாஞ்சால நாட்டிற்கு செல்வோம் அங்கு நமது வறுமை முற்றிலும் நீங்கும் என்று சொன்னார். மூவரும் பாஞ்சால நாட்டிற்கு வந்து சேர்ந்தனர்.