அர்ஜூனன் அந்த முதியவரைப் பார்த்து நாங்கள் என்ன உதவி செய்ய வேண்டுமோ சொல்லுங்கள் செய்கின்றோம் என்றான். அதற்கு அந்த முதியவர் நீங்கள் இருவரும் பண்டைய காலத்து ரிஷிகளாகிய நரனும் நாராயணனும் ஆவீர்கள். இந்த யுகத்தில் நீங்கள் இருவரும் அர்ஜுனனாகவும் கிருஷ்ணனாகவும் அவதரித்து இருக்கின்றீர்கள். இந்த வனத்தை எரித்து சாம்பலாக்க நீங்கள் இருவரும் எனக்கு துணை புரிய வேண்டும் என்று கூறினார். பயங்கர பிராணிகளுக்கு இருப்பிடமாக இருக்கும் இந்த வனத்தை அழிப்பதன் அவசியத்தை கிருஷ்ணர் அர்ஜூனனிடம் கூறினார். அர்ஜுனன் அந்த முதியவரைப் பார்த்து தாங்கள் இந்த வனத்தை எரித்து அழிக்கும் போது இந்திரன் கொடுக்கும் மழையை தடுக்க எங்களால் இயலும். ஆனால் அதற்கேற்ற ஆயுதங்கள் எங்களிடம் தற்போது இல்லை. எங்களுக்கெற்ற ஆயுதங்களை நீங்கள் தேடி தாருங்கள். மழையை நாங்கள் தடுத்து வைத்து இருக்கும் போது நீங்கள் காண்டவ வனத்தை எரித்து தங்கள் பசியை தீர்த்துக்கொள்ளலாம் என்றான்.
அக்னி தேவன் சமுத்திர தேவனை வரவழைத்து அவர்களுக்கு தேவையான ஆயுதங்களை கொடுக்குமாறு கேட்க சமுத்திர தேவனும் ஆயுதங்களை அக்கணமே கொடுத்தான். அர்ஜுனனுக்கு பிரசித்தி பெற்ற காண்டீப வில்லும் அதனோடு எவ்வளவு எடுத்தாலும் குறையாத அம்புகள் நிறைந்த அம்பறாத் தூணிகள் இரண்டும் கிடைத்தது. ஊக்கம் ததும்பும் நான்கு வெள்ளை குதிரைகள் பூட்டிய மேலான ரதம் ஒன்று வந்தது. அந்த ரதத்திலே வானரக்கொடி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. கிருஷ்ணனுக்கு சுதர்சனம் எனும் சக்கராயுதம் ஒன்றும் கௌமோதகீ என்னும் கதாயுதம் ஒன்றும் கிடைத்தது. இந்த ஆயுதங்களை பயன்படுத்தி இரண்டு மூர்த்திகளும் அப்பாழடைந்த வனம் தீக்கிரையான பொழுது மழை பொழியாதபடி பார்த்துக் கொண்டனர். அந்த வானமும் அதிலிருந்த ஐந்துக்களும் அடியோடு அழிந்து போயின.
மாயன் என்னும் அசுரன் ஒருவன் தீக்கு இறையாகும் நெருக்கடியில் இருந்து தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று அர்ஜுனனை வேண்டினான். அதன் விளைவாக அவன் ஒருவன் மட்டும் தப்பிப் பிழைத்தான். அந்த இரண்டு மூர்த்திகள் பழுது பட்டுப் போன காட்டை அளிப்பதற்கு புரிந்த உதவியை முன்னிட்டு அக்னிதேவன் அகமகிழ்ச்சி அடைந்தான்.
ஆதிபருவம் பகுதி இந்த பகுதியுடன் முற்றியது. அடுத்தது சபா பருவம்.