இன்னொரு நாள் பழங்காலத்துப் பண்புகளுக்கு ஏற்ப பரிட்சை ஒன்றை துரோணர் ராஜகுமாரர்களுக்கிடையே நடத்தினார். துரியோதனனை துரோணாச்சாரியார் தம்மிடம் அழைத்தார். இவ்வுலகில் தேடிப்பார்த்து நல்லவன் ஒருவனைக் கண்டு பிடித்து தம்மிடம் அழைத்து வரும்படி உத்தரவு பிறப்பித்தார். அதே முறையில் பாண்டவ சகோதரர்களுள் மூத்தவனாகிய யுதிஷ்டிரனை தம்மிடம் அழைத்து அவனிடம் மற்றொரு உத்தரவை பிறப்பித்தார். இவ்வுலகில் தேடிப்பார்த்து கெட்டவன் ஒருவனை தம்மிடம் அழைத்து வருமாறு உத்தரவு பிறப்பித்தார். சில நாட்கள் கழித்து திரும்பி வந்த துரியோதனன் தனக்கு வாய்த்த அனுபவத்தை துரோணரிடம் தெரிவித்தான். பரந்த இவ்வுலகில் தான் தேடிப்பார்த்தும் நல்லவர் ஒருவருமே இல்லை என்று தன்னுடைய அனுபவமாக துரோணரிடம் தெரிவித்தான். அடுத்ததாக யுதிஷ்டிரன் திரும்பி வந்தான். உலகம் முழுவதும் தேடிப் பார்த்துவிட்டு உலகில் கெட்டவர் ஒருவர் கூட இல்லை என்று துரோணரிடம் தெரிவித்தான்.
துரியோதனன் யுதிஷ்டிரன் ஆகிய இருவருமே ஒரே ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும் ஒரே குருவிடம் கல்வி பயின்றவர்கள். இருவரும் ஒரே உலகத்தில் தேடிப் பார்த்தார்கள். துரியோதனன் கண்ணுக்கு நல்லவன் யாருமே தென்படவில்லை யுதிஷ்டிரன் கண்ணுக்கு கெட்டவர்கள் யாரும் தென்படவில்லை. மனதில் தீய எண்ணம் இருப்பவனுக்கு எங்கும் தீமையே காட்சி கொடுக்கின்றது. மனதில் நன்மை நிறைந்தவனுக்கு எங்கு பார்த்தாலும் நன்மையே தெரிகின்றது என்பதை துரோணர் ராஜகுமாரர்களுக்கு சொல்லி நன்மையை மட்டுமே நினைக்க வேண்டும் என்று பாடம் நடத்தினார்.
அதிரதன் என்னும் பெயர் படைத்திருந்த தேர்ப்பாகன் ஒருவன் இருந்தான். அவனுக்கு ராதை எனும் மனைவி இருந்தாள். இருவரும் இன்புற்று வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் காலை அதிரதன் நதியில் கங்கா ஸ்நானம் செய்து கொண்டிருந்தான். அப்போது அழகிய பெட்டகம் ஒன்று மிதந்து வந்தது. அதில் தெய்வீகம் திகழும் குழந்தை ஒன்று இருந்தது. தேர்ப்பாகன் அக்குழந்தையை தன்னுடைய குழந்தையாக சுவீகாரம் பண்ணி கொண்டான். அக்குழந்தைக்கு கர்ணன் என்று பெயரிட்டான். வளர்ந்த கர்ணன் சூதபுத்ரன் என்றும் அழைக்கப்பட்டான். சூதபுத்ரன் என்னும் சொல் தேரோட்டியின் மகன் என பொருள்படும். ராதையின் வளர்ப்பு குழந்தையாக இருப்பதினால் அவனுக்கு ராதேயன் என்னும் பெயரும் ஏற்பட்டது. அவனுக்கு வயது அதிகரித்துக் கொண்டு வந்த பொழுது தந்தையின் தொழிலான தேர் ஓட்டுவதில் அவனுடைய நாட்டம் குறைந்து போயிற்று. கல்வியிலும் யுத்தப் பயிற்சியிலும் அவனுக்கு நாட்டம் அதிகரித்து வந்தது.
அஸ்தினாபுரத்தில் தனுர்வேத பாடசாலை ஒன்று இருக்கிறது என்று அவன் கேள்விப்பட்டான். வில்வித்தையில் ஆர்வமாக இருந்த கர்ணன் பாடசாலையில் ஆசிரியராக இருந்த துரோணரை நேரில் சென்று சந்தித்து யுத்த கல்வியை கற்றுத்தருமாறு பக்திபூர்வமாக தன்னுடைய வேண்டுகோளை தெரிவித்தான். ஊக்கமும் அறிவும் மிக படைத்திருந்த இச்சிறுவனுடைய பெற்றோர் பற்றிய வரலாற்றை துரோணர் விசாரித்தார். கர்ணன் தேரோட்டி ஒருவருடைய மகன் என தெரியவந்ததும் இப்பாடசாலையில் மாணாக்கனாக அவனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவனை புறக்கணித்தார். தோல்வியடைந்த கர்ணன் துயரத்துடன் தன் வீட்டிற்கு திரும்பி வந்தான்.