பீமனுடைய பேச்சு துரியோதனனுக்கு கோபத்தை உண்டு பண்ணியது. துரியோதனன் பீமனைப்பார்த்து வீரன் ஒருவன் இன்னொரு வீரனின் வீரியத்தை போற்றுவான். பீமா கர்ணன் செய்து காட்டிய வித்தைகளை நீ காணவில்லையா. பிறப்பு செருக்கிலும் பதவி செருக்கிலும் நீ மூழ்கி கிடக்கின்றாய். புண்ணிய நதி ஒன்று உற்பத்தியாகும் இடம் மிகவும் சிறுமையானது. அதை முன்னிட்டு அது புறக்கணிக்கப்படுவது இல்லை. ரிஷிகள் பல பேருடைய தோற்றம் மிகக் கீழானது அது விமர்சனத்திற்கு உதவாது. அக்காரணத்தை முன்னிட்டு அவர்களின் மகிமைகள் ஒதுக்கப் படுவதில்லை. நம்முடைய குருமார்களாகிய கிருபாச்சாரியார் துரோணாச்சாரியார் ஆகியோர்களின் பிறப்பை ஆராய்ந்து பார்த்தால் பாராட்டுக்குரிய பெரிய நிலையில் அவர்கள் பிறந்தவர்கள் அல்ல. ஆயினும் அவர்கள் மீது நாம் குருபக்தி வைத்திருக்கிறோம். அவர்களின் கலைத்திறமைகளை நாம் ஏற்று வருகின்றோம். மேலும் உன்னுடைய தந்தையும் உன் சகோதரர்களின் தந்தையும் குரு வம்சத்திற்கு உரியவர்கள் அல்ல. கர்ணனும் தனது போர் வித்தைகளின் மூலம் சத்திரியனே. அவன் ஒரு வீரன் உனக்கு துணிச்சல் இருக்குமானால் உன் தம்பி அர்ஜுனன் அவனோடு போட்டி போடட்டும் என்று துரியோதனன் பீமனைப் பார்த்து கூறினான். அமர்ந்திருந்தவர்களில் பலர் துரியோதனனின் பேச்சை பெரிதும் பாராட்டினர்.
குருமார்கள் ஆகிய கிருபர் துரோணர் மற்றும் பெரியவர்கள் சிலரும் ராஜகுமாரனான அர்ஜுனனுடன் கர்ணனை போட்டியிட அனுமதிக்கவில்லை.. மேற்கு திசையில் சூரியன் மறைந்தான். விளையாட்டு போட்டிகளும் ஒருவாறு முடிவுக்கு வந்தது. கூட்டத்தில் இருந்தவர்கள் கடைசியாக வந்து தன் வில்வித்தையை செய்து காட்டிய கர்ணனை பற்றியே பேசிக்கொண்டு போனார்கள். சற்று முன்பு தலைசிறந்த வீரன் என்று சொல்லிய அர்ஜுனனை அவர்கள் இப்போது மறந்து போயினர். அர்ஜுனன் வில்வித்தையில் சிறந்தவன் என அனைவருக்கும் காட்ட வேண்டுமென்று துரோணாச்சாரியார் எண்ணியிருந்தார் ஆனால் அவர் எண்ணியபடி நிகழவில்லை..
துரோணாச்சாரியார் உள்ளத்தில் ஓர் எண்ணம் ஆழ்ந்து புதைந்திருந்தது. கர்வமே வடிவமாக இருந்த துருபத மன்னனுடைய புகழுக்கு பங்கம் பண்ண வேண்டும் என்பதே அந்த எண்ணமாகும். அதற்கேற்ற காலம் இப்போது வந்தது. ராஜகுமாரர்களுக்கு துரோணர் கொடுத்து வந்த பயிற்சி முடிவற்றது. அவர்கள் அதற்கு தட்சணை செலுத்த வேண்டும் என்பது ஆச்சாரியார் விருப்பமாக இருந்தது. தாராளமாக தட்சணை வழங்க மாணவர்கள் ஆர்வத்துடன் இருந்தார்கள். ஆனால் துரோணர் கேட்ட குரு தட்சணை நூதனமானது. இந்த இளம் வீரர்கள் பாஞ்சால நாட்டின் மீது படையெடுத்துச் சென்று அதை ஆண்டுவந்த துருபதனை பிடித்துக் கொண்டு வர வேண்டும் என்பது அவர் கேட்ட தட்சணையாகும். துரோணர் கேட்ட தட்சணை இளைஞர்களுக்கு பெரிய ஊக்கமாக இருந்தது. அதற்கு காரணம் அவர்களிடம் இருந்த போர் திறமைகளை நடைமுறையில் கொண்டு வருவதற்கும் அனைவரும் தெரிந்து கொள்ளவும் நல்ல சந்தர்ப்பத்தை அது ஏற்படுத்தியது. பெரிய சேனை ஒன்றைத் திரட்டிக்கொண்டு பாஞ்சால நாட்டின் மீது அவர்கள் படையெடுத்துச் சென்றனர். அவர்களின் செயலை வேடிக்கை பார்க்கும் நோக்கில் துரோணரும் சென்றார். பாண்டவ சகோதரர்கள் போகும் வழியில் மற்றொரு முடிவு செய்தனர். போராட்டத்தின் ஆரம்ப நேரத்தில் தாங்கள் ஒதுங்கியிருக்க தீர்மானித்தனர். துரியோதனின் தலைமையில் அவனுடைய சேனைகள் முதலில் போரிட துவங்கும். துரியோதனன் தளர்வுற்று போனால் பின் அர்ஜுனனுடைய சேனை அதற்கு உதவி பண்ண வேண்டும் என்பதே அவர்கள் கையாண்ட போர் திட்டமாகும். துரோணாசாரியாரும் இத்திட்டத்தை ஆமோதித்தார்