சந்தனு மன்னனும் அவனது மனைவியும் பரஸ்பரம் நன்கு நேசித்து வாழ்ந்து வந்தார்கள். மகாராணி ஒருத்தியிடம் இருக்கவேண்டிய அடக்கமும் மாண்பும் அந்த மாதரசியிடம் மிளிர்ந்து இருந்தது. காலம் எப்படி கடந்து போயிற்று என்பதை அறியாதவர்களாக தம்பதிகள் இன்புற்று வாழ்ந்து வந்தனர். நாளடைவில் அரசி விபரீதமான செயலொன்றேச் செய்ய ஆரம்பித்தாள். அரசனுக்கும் தனக்கும் பிறந்த ஒவ்வொரு குழந்தையையும் தூக்கிச் சென்று கங்கா நதியில் வீசி எறிந்து விட்டு திரும்பி வந்தாள். அரண்மனை திரும்பிய அவள் பெரிய கடமை ஒன்றை நிறைவேற்றி விட்டவள் போல அரசனிடம் புன்னகைத்தாள். அரசி புரிந்து வந்த இந்தப் பாதகச் செயலை பார்த்து சந்தனு மன்னன் திகிலடையலானான். ஆனால் போட்ட நிபந்தனையின்படி அவளை ஒன்றும் கேட்காமல் இருந்தான். இதைப் பற்றி கேட்டால் அது விபரீதமாக போய்விடக் கூடும் என்று அமைதியாக தனக்குள்ளே சிந்தனை பண்ணிக் கொண்டிருந்தான். தனக்குப் பிறந்த ஏழு குழந்தைகளை அவள் கொன்று விட்டாள். எட்டாவதாக பிறந்த குழந்தையை அவள் கங்கைக்குள் போடப் போன பொழுது அச்செயலை சகிக்க சந்தனு மன்னனுக்கு இயலவில்லை.
அரசியே நீ ஏன் அரக்கத்தனம் படைத்தவள் போல உன் குழந்தையை கொலை செய்கிறாய்? தயவு செய்து இந்த 8 வது குழந்தையாவது காப்பாற்று என்றான். அதற்கு அரசி மன்னரே நீங்கள் எனக்கு கொடுத்த வாக்குறுதியை மீறி விட்டீர்கள். இப்போது உங்களது அன்பு என் மீது இல்லை குழந்தையின் மீது செல்கிறது. ஆகவே நான் செல்கிறேன். நான் செல்வதற்கு முன்பு நான் யார் என்பதையும் நான் ஏன் இந்த செயலை செய்கிறேன் என்பதையும் உங்களுக்கு எடுத்து விளக்குகின்றேன் கேளுங்கள். நான் கங்காதேவி மண்ணுலகில் பிறந்து சிறிது காலம் நான் உங்களுக்கு மனைவியாக இருக்க வேண்டும் என்பது பிரம்ம தேவன் இட்ட சாபம். தேவதையாக நான் அந்த நிலைமையை அறிகிறேன். நில உலகத்தவராகிய நீங்கள் அதை அறியவில்லை.
விண்ணுலகில் இருக்கும் எட்டு வசுக்கள் வசிஷ்ட மகரிஷி இல்லாத வேளையில் அவருடைய ஆசிரமத்திற்குள் நுழைந்து நந்தினி என்னும் பசுவை திருடிச் சென்று விட்டனர். ஆசிரமத்திற்கு திரும்பி வந்த வசிஷ்டர் தனது யோக வலிமையால் குற்றவாளிகள் யார் என்பதை கண்டு கொண்டார் அந்த வசுக்கள் 8 பேரும் உலகத்தில் மானிடராக பிறக்க வேண்டும் என்று அவர் சபித்தார். அந்த சாபம் மாற்ற முடியாதது. அந்த எட்டு வசுக்களும் மண்ணுலகில் நான் அவர்களுக்கு தாயாக வேண்டும் என்றும் அதிவிரைவில் இந்த உலக வாழ்க்கையில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்றும் என்னிடம் பரிந்து வேண்டிக் கொண்டார்கள் அதன் படியே நான் அவர்களில் 7 பேருக்கு விமோசனம் கொடுத்து விட்டேன். எட்டாம் குழந்தை இந்த உலகில் நீடித்து வாழ்ந்து செயற்கரிய பல செயல்களைச் செய்வான். ஆகையால் அவனை வழி அனுப்ப மாட்டேன். மற்றொரு காரியத்தைச் செய்வேன். அரிதிலும் அரிதாக இருக்கின்ற அஸ்திர சாஸ்திர வித்தைகள் பலவற்றை இவனுக்கு பயிற்றுவித்து உங்களிடம் ஒப்படைப்பேன் என்று சொல்லிவிட்டு அந்த குழந்தையை கையில் எடுத்துச் சென்று விட்டாள். இந்த குழந்தை தான் மகாபாரதத்தில் வரும் பீஷ்மர் ஆவார்.