பகவத் கீதை 4. ஞான கர்ம சந்யாச யோகம் 4-3
நீ என்னுடைய பக்தனும் உற்ற நண்பனும் ஆவாய். ஆகவே அதே பழமையான இந்த யோகம் இன்று என்னால் உனக்கு சொல்லப்பட்டது. ஏனெனில் இந்த யோகம் மிகச் சிறந்தது ரகசியமானது. அதாவது மறைத்துக் காப்பற்றப் பட வேண்டியது.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
நீ என்னை சரணடைந்து எப்போதும் மறக்காமல் நினைத்துக் கொண்டே இருக்கின்ற பக்தனாகவும் சிறந்த நண்பனாகவும் இருக்கின்றாய். உலகம் படைக்கப்பட்ட போது என்னால் சொல்லப்பட்டதும் மிகவும் ரகசியமாக மறைத்து காப்பாற்றப் பட்டதுமாகிய இந்த யோகத்தை நீ பெறத் தகுதி பெற்றவனாகி விட்ட படியால் இன்று நான் உனக்கு சொல்கிறேன். இந்த யோகத்தை இறைவனை சென்று அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களுக்கும் இந்த யோகத்தை கடைபிடிக்க முற்படும் தகுதியானவர்களுக்கு மட்டுமே சொல்லப்பட வேண்டும். தகுதியில்லாதவர்களுக்கோ அல்லது இந்த யோகத்தை ஏளனமோ அவமரியாதையோ செய்பவர்களுக்கு சொல்லக் கூடாது. ஆகவே இதனை மறைத்து ரகசியமாக காப்பாற்ற வேண்டும்.