சுலோகம் -103

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-56

துன்பங்கள் நேரும் போது மனம் கலங்காதவன் சுகங்கள் ஏற்படும் போது அவற்றில் சிறிது கூட ஆசைப்படாதவன் விருப்பம் பயம் கோபம் ஆகிய இவற்றை முற்றும் அறுத்தவன் மன உறுதியானவன் என்று சொல்லப்படுகிறான்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

வாழ்க்கையில் துன்பம் ஏற்படும் போது சிறிதும் கலங்காமல் வருத்தப்படாமல் இருப்பவனும் மகிழ்ச்சி ஏற்படும் போது இந்த மகிழ்ச்சி அப்படியே தொடர வேண்டும் என்று அதன் மீது ஆசைப்படாதவனும் இவ்வுலகத்தில் அழியக்கூடிய பொருட்கள் மீது விருப்பம் இல்லாதவனாகவும் இவ்வுலகத்தில் உள்ள எதைக் கண்டும் பயம் இல்லாதவனாகவும் மரணம் என்ற ஒன்று அருகில் வந்தாலும் அதற்கும் பயம் இல்லாதவனாகவும் அகங்காரம் ஆணவத்தின் வெளிப்பாடான கோபம் என்பது இல்லாதவனாகவும் இருப்பவன் எவனோ அவனே மன உறுதியுடையவன் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -102

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-55

சுலோகம் -102

அர்ஜூனா ஒருவன் தன் மனதில் உள்ள ஆசைகள் அனைத்தையும் அறவே துறந்து தனது ஆத்மாவினால் ஆத்மாவிடமே ஆனந்தமாக இருக்கிறானோ அவன் உறுதியான மன உறுதியுடையவன் என்று அழைக்கப்படுகிறான்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

உலகப் பற்றுகள் மற்றும் தனது உறவு முறைகளால் வரும் பந்தம் பாசம் மற்றும் செல்வங்கள் மீது உள்ள பற்று என அனைத்து ஆசைகளையும் முற்றிலும் துறந்தவன். மற்றும் உலக ரீதியாக மகிழ்ச்சி வந்தால் உடனே மகிழ்ச்சி அடையாமலும் துக்கம் வந்தால் உடனே துக்கப் படாமலும் எது நடந்தாலும் மனதை ஒரே நிலையில் வைத்திருப்பவன். மற்றும் புகழ் ஏற்பட்டால் அதனால் மகிழ்ச்சி அடையாமலும் யாரேனும் இகழ்ந்தால் மனம் வருத்தப்படாமலும் மனதை ஓரே நிலையில் வைத்திருப்பவன் எவனோ அவன் ஆத்மா எது ஆத்மா இல்லாதது எது என்ற ஞானத்தை பெறுகிறான். அவனே அனைத்தையும் துறந்தவன் ஆகிறான்.

இன்பம் மகிழ்ச்சி இவை அனைத்தும் வெளியில் இருந்து வருபவையாகும். அவை வந்தவுடன் உடனே சென்று விடும். ஆனால் பேரானந்தம் என்று சொல்லப்படுவது தனக்குள்ளேயே கிடைப்பதாகும். அது உடனே செல்லாது. அந்த பேரின்பத்திலேயே தனக்குள்ளேயே பெற்று மகிழ்ச்சியுடன் இருப்பவன் எவனோ அவனே மன உறுதியுடையவன் என்று அழைக்கப்படுகிறான் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -101

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-54

அர்ஜூனன் கிருஷ்ணரிடம் கேள்வி கேட்கிறான். கேசவா சமாதியில் நிலைபெற்று பரமாத்மாவை அடைந்த உறுதியான அறிவுடையவன் என்ன சொல்வான்? அவன் என்ன செய்வான்? எவ்வாறு நடந்து கொள்வான்? எதனை அடைவான்?

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

கிருஷ்ணர் கூறிய அறிவுரைகளை கேட்ட அர்ஜூனன் மேலும் தனது சந்தேகங்களை கிருஷ்ணரிடம் கேட்கிறான். உறுதியான மன வலிமையாலும் அறிவினாலும் சமாதி நிலை அடைந்தவர்கள் சுற்றி இருப்பவர்களிடம் என்ன பேசுவார்கள். தனது கடமைகளாக அவர்கள் என்ன செய்வார்கள். அவர்கள் இந்த உலகத்தில் எப்படி நடந்து கொள்வார்கள். இறுதியில் அவர்கள் எதனை சென்று அடைவர்கள் என்று கிருஷ்ணரிடம் அர்ஜூனன் கேள்வி கேட்கிறான்.

சுலோகம் -100

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-53

சுலோகம் -100

பல வசனங்களை கேட்டு சஞ்சலமாகிய உனது புத்தி எப்போதும் பரமாத்மாவிடம் அசையாமல் மேலும் திடமாக நிலைபெறுகிறதோ அப்போது யோகத்தை அடைவாய்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

சொர்கத்தை அடையும் வழிகள் என்றும் இந்த உலகின் போகங்கள் செல்வங்கள் அவற்றை அடையும் வழிகள் என்றும் இங்கு பல செய்திகளை கேட்டு கேட்டு புத்தி நிலையில்லாமல் சிதறுகிறது. ஒரு செய்தியை படித்தோ அல்லது வேறு ஒருவர் சொல்வதை கேட்டோ அது நன்மையானதாக மனதிற்கு தோன்றுகிறது. சிறிது நேரத்தில் அதே செய்தி பற்றி வேறொன்றை படிக்கும் போதோ அல்லது வேறு ஒருவர் சொல்வதை கேட்கும் போதோ உடனடியாக அது தவறானது என்று தோன்றுகிறது. மனமானது திடமான முடிவு எடுக்க முடியாமல் தடுமாறுகிறது. இதையெல்லாம் விட்டு இறைவனின் மீது வலிமையான நம்பிக்கையும் இறைவனின் மீது சிந்தனையும் எப்போது திடமாக ஏற்படுகிறதோ அப்போது யோகத்தை அடைந்து விடலாம் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -99

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-52

எப்போது உன்னுடைய புத்தியானது மோகம் என்ற சேற்றை முற்றிலுமாக கடந்து விடுகிறதோ அப்போது நீ கேட்டவை பற்றியும் கேட்கப்படுகிறவை இவை இரண்டிலும் உனக்கு வேதனை ஏற்படுத்தாமல் இவ்வுலக போகங்களில் இருந்து விடுபடும் வைராக்கியத்தை அடைவாய்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

எந்த எதிர்பார்ப்பும் இல்லாத கர்ம யோகத்தை கடைபிடித்து வாழ்ந்தால் தூய்மையான மனம் பிறக்கும். அப்போது உள்ள அறிவைக் கொண்டு மோகம் (மாயையால் நிகழும் மயக்கவுணர்ச்சி) என்னும் சேற்றை கடந்து விட்டால் பரம் பொருளை அறிந்து கொள்ளும் ஞானம் உண்டாகும். இதனால் இது வரை நீ கேட்டவை பற்றியும் இனி கேட்கப்படுபவை பற்றியும் உனக்கு கவலை இருக்காது. இந்த உலக போகங்களில் இருந்து விடுபடும் வைராக்கியத்தை அடைவாய் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -98

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-51

ஞானம் உள்ளவர்கள் தங்களது சமநிலையான புத்தியின் காரணமாக கர்மத்தின் பலனை துறந்து விடுகிறார்கள். இதன் மூலம் பிறப்பு என்ற பந்தத்தில் இருந்து விடுபட்டு ஆனந்தமான மோட்சத்தை அடைகிறார்கள்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

ஞானம் உள்ளவர்கள் தாங்கள் செய்யும் செயல்களில் சரிசமமான மனநிலையில் இருந்து செய்கிறார்கள். இந்த ஞானம் பெற்ற மனநிலையில் செயல்களை செய்வதினால் செயல்களின் பலனான நன்மை தீமை மற்றும் மகிழ்ச்சி துன்பம் போன்ற அனைத்து விதமான பலன்களும் அவர்களை சென்று சேர்வதில்லை. பலன்கள் கன்மங்கள் ஏதும் இல்லாததினால் இந்த பிறவியில் தங்களுக்கான கடமைகள் முடிந்ததம் அவர்கள் உலக பந்தத்தில் இருந்து விடுபட்டு ஆனந்தமான மோட்சத்தை அடைகிறார்கள் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -97

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-50

சமமான மனநிலையில் இருப்பவன் பாவம் மற்றும் புண்ணியத்தை இந்த உலகத்திலேயே விட்டு விடுகிறான். அதிலிருந்து விடுபடுகின்றான். ஆகையால் சமமான மனநிலை என்ற யோகத்தைப் பெற நீ முயற்சிக்க வேண்டும். இந்த யோகம் என்பது செயல்கள் திறம்பட செய்யப்படுவது ஆகும்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

பலனை எதிர்பார்க்காமல் சமமான மனநிலையில் செயல்களை செய்பவனை அச்செயலினால் வரும் பலனான பாவம் புண்ணியம் இரண்டும் அவனை பாதிக்காது. பாவ புண்ணியம் இரண்டும் அவனை நெருங்குவதில்லை. அர்ஜூனா இந்த சமமான மனநிலை என்ற யோகத்தைப் பெற நீ முயற்சிக்க வேண்டும். இந்த யோகம் என்பது செயல்களை திறமையுடன் செய்யப்படுவது ஆகும். இந்த திறமை என்பது என்னவென்றால் செயலை செய்யும் போது இந்த செயலின் பலனான வெற்றி தோல்வி மற்றும் மகிழ்ச்சி துயரத்தில் மனதை வைக்காமல் வெற்றி தோல்விகளையும் மகிழ்ச்சி துயரத்தையும் இறைவனிடத்தில் அர்ப்பணிப்பதும் ஆகும்.

சுலோகம் -96

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-49

சம நிலையில் உள்ள மனதுடன் கூடிய யோகம் என்பதை விடப் பயன் கருதிச் செய்யப்படும் கர்மம் மிகவும் தாழ்ந்தது. ஆகவே அர்ஜூனா சமமான புத்தியில் தஞ்சம் அடைவாய். பலன் மூலம் உந்தப்பட்டு கர்மம் செய்பவர்கள் பரிதாபப்பட வேண்டியவர்களே.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

வெற்றி தோல்வி மற்றும் மகிழ்ச்சி துயரம் என்று எதுவும் இல்லாமல் சமமான மனநிலையில் செய்யப்படும் செயலானது மிகவும் உயர்ந்தது. பலனை எதிர்பார்த்து செய்யப்படும் செயல்கள் மிகவும் தாழ்வானது. ஆகவே அர்ஜூனா சமமான மனநிலையில் எப்போதும் இருந்து செயல்களைச் செய். பலனை எதிர்பார்த்து செயல்களை செய்பவர்கள் மீண்டும் மீண்டும் அதன் பலனை அனுபவிக்க வேண்டி பிறப்பெடுத்துக் கொண்டே இருப்பார்கள். ஆகையால் அவர்கள் மிகவும் பரிதாபப்பட வேண்டியவர்கள் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -95

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-48

அர்ஜூனா பற்றினை நீக்கி வெற்றி தோல்விகளை சரிசமமாக எண்ணி தொழில்களை செய். நடுநிலையான எண்ணத்துடன் தொழில்களை செய்வதே யோகம் எனப்படும்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

எந்த ஒரு செயல் செய்தாலும் அதன் விளைவாக வரும் பலனான வெற்றியையும் தோல்விகயையும் சரிசமமாக எண்ணி தொடர்ந்து செயல்களை செய்து கொண்டே இருக்க வேண்டும். வெற்றி வந்தால் மகிழ்வதும் தோல்வி வந்தால் துயரப்படாமலும் விருப்பு வெறுப்பு இல்லாமல் நடுநிலையான மனதுடன் இருக்க வேண்டும். இவ்வாறு இருப்பது யோகம் எனப்படும் இந்த யோகத்தில் இருந்து நீ உன் கடமையை செய்வாயாக என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -94

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-47

தொழில் செய்யத்தான் உனக்கு அதிகாரமுண்டு. அவற்றின் பயன்களில் எப்போதுமே உனக்கு அதிகாரமில்லை. எனவே அந்தப் பலன்களின் மீது விருப்பம் கொள்ளாதே. இதன் காரணமாக தொழில் செய்யாமலும் இருக்காதே.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

அர்ஜூனா உனக்கு விதிக்கப்பட்ட தொழிலை செய்ய உனக்கு அதிகாரமுண்டு. ஆனால் செய்யும் தொழிலுக்காக பலனை நீ எதிர்பார்த்தால் அதனை நீ அனுபவிப்பவனாக மாறிவிடுவாய் மேலும் அது உன்னை சம்சார பந்தத்தில் பிணைத்து வைத்து விடும். அப்படி நீ இருகக் கூடாது. ஏனென்றால் பலனை எதிர்பார்த்து செயல்களை புரிபவன் அதன் பலனை அனுபவிக்க மீண்டும் மீண்டும் பிறப்பான். இப்போது ஒரு சிந்தனை தோன்றும். செயலை செய்து அதற்கான பலனை எதிர் பார்ப்பதை விட செயலை செய்யாமலேயே இருந்து விடலாமே என்று தோன்றலாம். ஆனால் விதிக்கப்பட்ட தொழிலை செய்யாமல் போனால் அந்த செயலை செய்ய வேண்டி மீண்டும் பிறப்பெடுக்க வேண்டியது இருக்கும். ஆகவே அர்ஜூனா உனக்கு விதிக்கப்பட்ட தொழிலில் எந்த பலனையும் எதிர்பார்ப்பில்லாமல் செய்து முடிப்பாயாக என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.