மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -9

சத்யவதி கூறியபடி வியாசரை வரவேற்கும் முறை அடுத்தபடியாக அம்பாலிகாவுக்கு வந்தது. கரடுமுரடாக தென்பட்ட அந்த உருவத்தை பார்த்து அவள் முகம் வெளுத்துப் போய்விட்டது. அதன் விளைவாக அவளுக்கு பிறந்தவன் நிறத்தில் வெளுத்து இருந்தான். அவன் பாண்டு என அழைக்கப்பட்டான். முதல் மகன் கண் தெரியாதவனாக இருக்கும் படியால் அம்பிகாவுக்கு மற்றொரு மகப்பேறு தரும் படி வியாசரிடம் சத்தியவதி வேண்டிக் கொண்டாள். வியாசரும் அதற்கு சம்மதித்தார். ஆனால் அந்த ஏற்பாட்டுக்கு இணங்காத மருமகள் தனக்கு பதிலாக தன்னுடைய அழகிய பணிப்பெண் ஒருத்தியை அனுப்பி வைத்தாள். வியாசரிஷியின் தெய்வீக பாங்கை கருத்தில் கொண்டு அந்த பெண் பக்திபூர்வமாக அவரை வரவேற்றாள். மூன்றாம் மகனாகிய விதுரன் அவளால் பெற்று எடுக்கப்பட்டான். அவனிடத்தில் ஞானம் நிறைந்து இருந்தது. ஆனால் ராஜரீதி அவனிடம் அமையவில்லை.

வியாசர் தம் தாய் சத்தியவதியிடம் இத்தகைய செயலுக்காக தம்மை மீண்டும் அழைக்க வேண்டாம் என்று வேண்டிக் கொண்டார். இதற்கு சத்தியவதியும் ஒப்புக்கொண்டார். இவ்வாறு அமைந்த மூன்று குழந்தைகள் சிறுவர்களாக இருந்தார்கள். ஆகையால் பீஷ்மர் அவர்களின் பிரதிநிதியாக இருந்து அரசாங்க காரியங்களைக் கவனித்தார். மேலும் குழந்தைகளின் கல்வி விஷயத்திலும் அவர் கருத்தைச் செலுத்தினார். கல்வி ஆட்சிமுறை போர்த்திறமை போருக்கு உரிய ஆயுதங்களை கையாளுதல் ஆகிய கலைகள் அனைத்தையும் பீஷ்மர் அவர்களுக்கு புகட்டி வந்தார். தர்மத்தின் பாங்குகள் அனைத்தும் அவர்களுக்கு புகட்டினார். நாடு முழுவதும் மன திருப்தி ஓங்கியிருந்தது.

காந்தார நாட்டு ராஜ குடும்பத்தில் இருந்து திருதராஷ்டிரனுக்கு திருமணம் செய்து வைக்க பீஷ்மர் விதுரருடன் ஆலோசனை செய்தார். கண் தெரியாமல் இருந்த ராஜகுமாரன் ஒருவனுக்கு தன்னுடைய மகளை திருமணம் செய்து கொடுக்க அந்த நாட்டு அரசனாகிய சுபலன் முதலில் தயங்கினான். பின்பு ராஜரீதியையும் மற்ற விஷயங்களையும் கருத்தில் கொண்டு தன் செல்வியை அவ்வரசனுக்கு விவாகம் செய்து வைத்தான். தனக்கு அமைய இருக்கும் அரசன் பிறவியில் இருந்தே கண் தெரியாதவன் என்பதை அறிய வந்த ராஜகுமாரியான காந்தாரி தன் கண்களை தானே துணியால் கட்டிக்கொண்டு பார்வையற்றவளாக இருக்க தீர்மானித்தாள். தனக்கு அமையும் கணவருடைய பாணியிலேயே தானும் பார்வையற்று இருப்பதே சரியானது என அவள் தீர்மானம் செய்து கொண்டாள். சகுனி என்பவன் காந்தாரியின் சகோதரன் அவன் மிகவும் மகிழ்வுடன் தன் உடன் பிறந்தவளான காந்தாரியை குரு வம்சத்தின் தலைமை பட்டணமான அஸ்தினாபுரத்திற்கு அழைத்துச் சென்றான்.

திருதராஷ்டிரன் கண் தெரியாத காரணத்தினால் அரசனாக சிம்மாசனத்தில் வீற்றிருக்க தகுதியற்றவன் ஆனான். ஆகையால் பீஷ்மர் இரண்டாவது சகோதரனாகிய பாண்டுவை நாட்டிற்கு அரசனாக்கினான். மேலும் நாட்டை ஆண்டு வந்த பாண்டு அரசனுக்கு மணமுடித்து வைக்க பீஷ்மர் தீர்மானம் பண்ணினார். அப்போது நிகழ்ந்த சுயம்வரமொன்றில் குந்தி என்ற இளவரசி பாண்டு மன்னனே தன் கணவனாக மாலை சூட்டி ஏற்றுக்கொண்டாள். இந்த நிகழ்ச்சி பீஷ்மருக்கு மகிழ்ச்சியை உண்டு பண்ணியது. சில காலத்திற்கு பிறகு பாண்டுவிற்கு இரண்டாவது மனைவியாக மாத்ரி என்பவளை பீஷ்மர் திருமணம் செய்து வைத்தார். மத்திர நாட்டு மன்னனாகிய சல்லியனுக்கு அவள் தங்கையாவாள்.

Related image

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -8

சத்தியவதி இதுவரை ரகசியமாக வைத்திருந்த பழைய நிகழ்ச்சி ஒன்றை இப்போது துணிந்து பீஷ்மரிடம் தெரிவித்தாள். அவள் மங்கைப் பருவத்தில் இருந்த பொழுது யமுனா நதியைக் கடப்பதற்கு பராசர மகரிஷிக்காக படகை ஓட்டும் அவசியம் ஏற்பட்டது என்றும் அப்போது மேலோன் ஒருவன் பிறக்க ஏற்ற காலம் என்று மகரிஷி தெரிவித்தார். இதற்கு தானும் இணங்கியதால் பூலோகம் பெறுவதற்கரிய குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தை பிறந்ததும் மகரிஷி தன் தவ வலிமையால் என்னை மீண்டும் கன்னியாக்கி விட்டார். அக்குழந்தை அதிவிரைவில் வளர்ந்து ஒரு ரிஷி ஆனான். கிருஷ்ண த்வைபாயனர் என்னும் பெயருடன் காட்டிலேயே அக்குழந்தை வளர்ந்து. அவன் நான்கு வேதங்களையும் முறையாக வகுத்து வைத்தான். ஆகையால் வேதவியாசர் என்னும் பெயர் அவனுக்கு வந்தது. தன்னை அவன் பிரிந்து போன பொழுது வாக்கு ஒன்றை கொடுத்திருந்தான். கஷ்டமான நேரங்களில் நெருக்கடி வருகின்ற பொழுது தன்னை பற்றி நினைத்தால் தாயின் முன் தோன்றுவேன் என்று சொல்லிவிட்டு போனான். அந்த வியாசர் தன் வழியிலே விசித்திரவீரியனுக்கு மூத்தவன் ஆகின்றான். அந்த வியாசரை அழைக்க வேண்டும் என்று சத்தியவதி சொன்னாள். பீஷ்மர் அதற்கு முழு சம்மதம் கொடுத்தார். குடும்ப பிரச்சினை நீக்கி வைப்பதற்கு அந்த நேரத்தில் அதுவே தலை சிறந்த உபயாமாக இருந்தது.

வியாசர் காட்டில் வேத சாஸ்திரத்தில் ஆழ்ந்து மூழ்கியிருந்தார். நிறை ஞானியான அவர் தன் தாய் தன்னை அழைக்கிறார் என்று அறிந்துகொண்டார். அக்கணமே யோக சித்தியால் தாயின் முன் பிரசன்னமானார். நெடுங்காலத்திற்கு பிறகு தாயும் சேயும் சந்தித்ததில் இருவருக்கிடையில் புளகாங்கிதம் உண்டாயிற்று. இந்த இன்ப நுகர்ச்சி அடங்கிய பொழுது தன்னை அழைத்ததன் காரணம் என்ன என்று மகன் தாயிடம் கேட்டார். தனக்கு ஏற்பட்டிருந்த நெருக்கடியை தாய் விரிவாக எடுத்து விளக்கினாள். விதவைகளான அம்பிகாவையும் அம்பாலிகாவையும் வயதில் இளையவர்கள். குடும்ப விருத்திக்காக மகப்பேறு அவர்களுக்குத் தேவையாய் இருக்கிறது. ஆகையால் அவர்களுக்கு கர்ப்பதானம் செய்து வைக்கும் படி வியாசரிடம் தாய் வேண்டிக்கொண்டாள். இக்குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடியை வியாச ரிஷியும் நன்கு அறிந்து கொண்டார். தன் தாயின் எண்ணத்தை நிறைவேற்றி வைக்கவும் அவர் சம்மதித்தார்.

ஆனால் அதற்கிடையில் மற்றொன்றே அவர் எடுத்துரைத்தார். காட்டில் வளர்ந்து ஜடாமுடியுடன் இருக்கும் ரிஷியாகிய தாம் அதற்கேற்ற ராஜ உடலமைப்பை பெற ஒரு வருட காலம் தேவை என்று கூறினார். சத்தியவதி தனக்கு ஏற்பட்டிருந்த நெருக்கடியை எடுத்து விளக்கினாள். நாடு அரசன் இல்லாமல் நெடுநாள் வைத்து இருக்கலாகாது ஆகையால் உடனே தன்னுடைய கோரிக்கையை நிறைவேற்றி வைக்க வேண்டும் என்று கூறினாள். ஆகையால் வியாசரும் தன் தாயின் வேண்டுதலை நிறைவேற்றி வைக்க சம்மதித்தார்.

சத்யவதி தன்னுடைய மருமகள்கள் இருவரிடம் தனித்தனியே அனைத்தையும் எடுத்துரைத்தாள். இருவரும் நாணத்துடன் அதற்கு சம்மதம் கொடுத்தார்கள். தன்னுடைய அறையில் முதல் மருமகள் அம்பிகா காத்திருந்தாள். அப்போது அவள் அறைக்கு ஜடாமுடியுடனும் தாறுமாறான தாடியுடனும் எதையும் துளைத்துக் கொண்டு போகும்படியான கூர்மையான கண்களுடனும் ஓர் உருவம் வந்தது. அத்தகைய உருவத்தைப் பார்த்ததும் ராஜகுமாரி மிக பயந்து போனாள். வியாசரிஷி தன்னை விட்டுப் பிரிந்து போகும் வரையில் அவள் தன்னுடைய கண்களை இறுக மூடிக் கொண்டாள். அவளுடைய மடமையை முன்னிட்டு அவளுக்கு கண் தெரியாத மகன் ஒருவன் பிறப்பான் என்று சொல்லிவிட்டு வியாசர் சென்றார். வியாசர் சொன்னபடியே குரு வம்சத்திலே கண் தெரியாத திருதராஷ்டிரன் என்னும் மன்னன் பிறந்தான்.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -7

நண்பர்களும் உறவினர்களும் சத்தியவதியுடன் சேர்ந்து கொண்டு பீஷ்மரிடம் திருமணம் செய்து கொள்ளுமாறும் அரச பதவியை ஏற்குமாறும் வலியுறுத்தினர். தேவவிரதனாகிய பீஷ்மர் முன்பு சிம்மாசன பதவியையும் இவ்வாழ்க்கை இன்பத்தையும் துறந்ததினால் சத்யவதி சந்தனு மன்னனை மணந்தாள். அன்றைய சூழ்நிலை அப்படி இருந்தது. இன்று சூழ்நிலை அறவே மாறிப் போயிருந்தது. எந்த சத்தியவதியின் பொருட்டு தேவவிரதன் அரச பதவியையும் இவ்வுலக இன்பத்தையும் ஒதுக்கித் தள்ளினாரோ இன்று அதே சத்தியவதி தங்கள் குடும்ப நலனை முன்னிட்டு தேவவிரதனாகிய பீஷ்மர் சிம்மாசனத்தில் ஏறியாக வேண்டும் என்றும் மணந்து கொண்டு இல்வாழ்க்கை இன்பத்தையும் அனுபவிக்க வேண்டும் என்று வற்புறுத்தினாள்.

சாதாரண சூழ்நிலையில் மைந்தன் ஒருவன் பெற்றோருடைய நலனுக்காக ஏதேனும் ஒரு பதவியை விட்டுக் கொடுக்கவும் திரும்பவும் அவர்களுடைய ஆணைப்படி அப்பதவியை ஏற்கவும் செய்யலாம். ஆனால் பீஷ்மருடைய நிலைமை முற்றிலும் வேறானது பெற்றோரின் நலனுக்காக அவர் தீவிரமான விரதம் எடுத்துக் கொண்டிருந்தார். அந்த விரதம் உயிர் வாழ்ந்திருப்பதை விட மேலானது.

பீஷ்மர் சத்தியவதியை பார்த்து தாயே பெற்றோருக்காக வேண்டியே ராஜ பதவியையும் உலக இன்பதையும் துறந்தேன். பின்பு தாயின் ஆணைக்கு உட்பட்டு இந்த விரதத்தில் இருந்து விலகுவது நல்ல மகனுடைய செயலாக இருக்கலாம். ஆனால் என் விஷயம் அத்தகையது இல்லை இந்த விரதத்தில் இருந்து விலகுவது முறையாகாது. இந்த விரதத்திலிருந்து விலகுவதும் பொய்மையில் வாழ்வதும் ஒன்று தான். நான் சத்திய மார்க்கத்தை கடைப்பிடிக்கிறேன் விண்ணுலகிலும் மண்ணுலகிலும் எந்த காரணத்தை முன்னிட்டும் நான் சத்திய மார்க்கத்தில் இருந்து விலக மாட்டேன். பஞ்சபூதங்கள் அவர்களின் செயல்களில் இருந்தும் ஒருவேளை விலகலாம். ஆனால் நான் சத்தியத்திலிருந்து விலகமாட்டேன் என்றார். மைந்தன் பூண்டிருந்த தீர்மானம் எவ்வளவு புனிதமானது என்பதை நெருக்கடியில் தவித்துக்கொண்டிருந்த தாய் சத்தியவதி அறிந்து கொண்டாள்.

குடும்பத்தின் பிரச்சினை சம்பந்தமாக தன்னை வாட்டிய துயரத்தில் இருந்து தன்னைக் காப்பாற்றுவதற்கு வேறு ஏதேனும் வழிகளை கண்டுபிடிக்க வேண்டுமென்று பீஷ்மரிடம் சத்தியவதி வேண்டினாள். இருவரும் அதில் ஆழ்ந்து தனது கருத்தைச் செலுத்தினர். அந்த நெருக்கடி சம்பந்தமாக பல பெரியோர்கள் சில நெறிகளை வழங்கி இருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு புலப்பட்டது. மகப்பேறு இல்லாத விதவை ஒருத்தி காலம் சென்ற தன் கணவனுக்கு வாரிசு வேண்டுமென்று உடல் உணர்வை தாண்டியுள்ள சான்றோன் ஒருவனுடன் சேர்ந்து மகப்பேறு பெறலாம் என்னும் நியதி உள்ளது. எனவே அந்த முடிவுக்கு இருவரும் வந்தனர்.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -6

பண்டைக் காலத்தில் பாரத கண்டத்தில் மன்னர்கள் இரண்டு விதமான முறைகளில் மணம் புரிந்து கொண்டனர். ஒன்று சுயம்வரம் முறை. அதன்படி ராஜகுமாரி ஒருத்தி தன் கணவனை தானே தேர்ந்தெடுத்துக் கொள்வாள். ராஜகுமாரியை மணந்து கொள்ள விரும்பும் ராஜகுமாரர்கள் ஒன்று கூடி தங்களுடைய திறமைகளையும் பராக்கிரமத்தையும் காட்டுவார்கள். மணந்து கொள்ள இருக்கும் ராஜகுமாரி அந்த ராஜகுமாரர்களில் தனக்கு பிடித்தமானவருக்கு மாலை சூட்டுவாள். இரண்டாவது முறை வெறும் கேள்வி அளவில் இருந்தது. நடைமுறையில் அதை யாரும் பார்த்ததில்லை. அந்த முறைப்படி போட்டிபோட வந்துள்ள ராஜகுமாரர்கள் ஒருவரோடு ஒருவர் யுத்தம் புரிந்து கொள்வார்கள். அவர்களில் வெற்றி பெற்ற ராஜகுமாரன் ராஜகுமாரியை அபகரித்துக் கொண்டு போய் திருமணம் செய்து கொள்வான்.

காசியை ஆண்டு வந்த அரசனுக்கு அம்பா அம்பிகா அம்பாலிகா என்ற மூன்று பெண்கள் இருந்தனர். அவர்களுக்கு மணமுடிக்கும் காலம் வந்தது. அப்போது திருமணம் செய்யும் வழக்கத்திலிருந்த சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தங்களுடைய திறமைகளைக் காட்டிக் கொள்வதற்கு ராஜகுமாரர்கள் பலர் வந்திருந்தனர். அக்கூட்டத்திற்கு பீஷ்மரும் வந்திருந்தார். இவர் எதற்காக இங்கு வந்திருக்கிறார் என்ற எண்ணம் பலர் உள்ளத்தில் எழுந்தது. அவர் ஒப்பற்ற போர் வீரன் என்பதில் ஐயமில்லை. ஆயினும் அவர் வயதில் சற்று முதிர்ந்தவன். ஆயுட்காலம் முழுவதும் பிரம்மச்சரியம் அனுஷ்டிக்கும் விரதமிருப்பவர். அத்தகையவர் இங்கு ஏன் வந்திருக்கிறார் என்று பலர் எண்ணினர்.

அப்போது பீஷ்மர் அங்கிருக்கும் அரசர்களைப் பார்த்து வேந்தர்களே இந்த கன்னிகைகள் மூவரையும் நான் தூக்கிக் கொண்டு செல்லப் போகிறேன். குரு வம்சத்து அரசனாகிய என் சகோதரன் விசித்திரவீரியனுக்கு இம்மூவரும் மனைவிமார்கள் ஆவார்கள். இதற்கு ஆட்சேபனை செய்கின்றவர்கள் என்னுடன் போர் புரியலாம் என்றார். சுயவரத்திற்கு வந்திருந்த ராஜகுமாரர்கள் ஒன்று கூடிப் பாய்ந்து வல்லமையுடன் பீஷ்மரை எதிர்த்தார்கள். ஆனால் அந்த எதிர்ப்பு பயன்படவில்லை. வீரமும் பராக்கிரமும் நிறைந்த பீஷ்மர் அவர்கள் அனைவரையும் விரட்டிவிட்டு மூன்று பெண்களையும் தனது தலைநகரான அஸ்தினாபுரத்திற்கு தூக்கிச் சென்றுவிட்டார். சகோதரிகளில் மூத்தவளாகிய அம்பா என்பவள் பீஷ்மரிடம் வந்திருந்த ராஜகுமாரர்களில் சௌபால நாட்டு அரசனாகிய சால்வன் என்னும் அரசனை மணந்து கொள்ள ஏற்கனவே தீர்மானித்திருக்கிறேன் எனது கற்பை காத்தருளும்படி பரிந்து வேண்டுகின்றேன் என்றாள். பீஷ்மரும் சத்தியவதியும் அவளுடைய விஷயத்தை எண்ணிப் பார்த்தார்கள். சௌபால நாட்டு அரசனாகிய சால்வனிடம் கொண்டு போய் சேர்க்கும் படி ஏவலாளர்களைக் கொண்டு தக்க ஏற்பாடு செய்தார்கள். மற்ற சகோதரிகள் அம்பிகாவும் அம்பாலிகாவும் முறைப்படி விசித்திரவீரியனுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். விசித்திரவீரியன் அல்ப ஆயுள் படைத்தவனாக இருந்தான். குழந்தை பெறுவதற்கு முன்பே அவன் பரகதி அடைந்து விட்டான். ராஜவம்சம் ஒன்றுக்கு ஏற்படுகின்ற துர்பாக்கியங்களுள் ஒன்று குலநாசம் அது மிகக் கொடியது. அந்த வம்சத்திற்கு இந்த ஆபத்து உண்டாயிற்று. மிக துயரத்தில் இருந்த சத்யவதி பீஷ்மரிடம் விதவைகளாக இருக்கும் ராஜகுமாரிகளை மணந்து அரச பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு கூறினாள்.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -5

தேரோட்டி கூறிய அனைத்தையும் கேட்ட தேவவிரதன் தேரோட்டியிடம் அந்த செம்படவர் தலைவன் இருக்கும் இடத்திற்கு தன்னை அழைத்து செல்லுமாறு கூறினான். தேரோட்டி செம்படவர் தலைவனிடம் அழைத்துச் சென்றான். செம்படவர் தலைவன் தேவவிரதனை வரவேற்று அவனிடம் நானும் என் குடும்பமும் பாக்கியம் பெற்று உள்ளோம் என்றும் அரச குடும்பம் எங்கள் மீது அதிக அபிமானம் வைத்திருக்கிறது என்றும் கூறினார். அதற்கு தேவவிரதன் என் சிற்றன்னையை என் தந்தையாகிய அரசனிடம் அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன் என்றான். அதற்கு செம்படவர் தலைவன் நிபந்தனைகளை நிறைவேற்றினால் நீங்கள் எதிர்பார்க்கிற சிற்றன்னையை அழைத்துச் செல்லலாம் என்றான். நீங்கள் விதிக்கும் நிபந்தனையை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்று தேவவிரதன் கூறினான். அதற்கு செம்படவர் தலைவன் இளவரசராக இருக்கும் தாங்களுக்கு ஆட்சி செய்யும் அதிகாரம் இருக்கும் போது தங்களை ஒதுக்கி வைத்துவிட்டு என் பேரன் எவ்வாறு சிம்மாசனத்தில் அமர முடியும் என்று கூறினான்.

எனது தந்தையாருக்கும் சிற்றன்னைக்கும் பிறக்கும் என்னுடைய எதிர்கால தம்பிக்கு சிம்மாசனத்தின் உரிமையை விட்டுக் கொடுக்கிறேன் என்று தேவவிரதன் அவரிடம் உறுதி அளித்தான். அதற்கு செம்படவர் தலைவர் நீங்கள் பரந்த மனப்பான்மை படைத்து இருக்கின்றீர்கள் ஆனால் தங்களுடைய மகனும் பேரனும் அரசாங்க உரிமைகளை கேட்பார்கள். அப்போது எனது பேரனால் என்ன செய்ய முடியும் என்று கூறினார். அதற்கு தேவவிரதன் இந்த நேரம் முதல் என்னுடைய ஆயுள் காலம் முழுவதிலும் திருமணம் செய்யாமல் பிரம்மச்சரியத்தை அனுஷ்டிக்கும் விரதம் எடுக்கின்றேன் என்று உறுதியளித்தான். இக்கடினமான விரதத்தை எடுக்கின்றேன் என்று அவரிடம் கூறியபோது விண்ணுலகில் இருந்து தேவர்கள் அவர் மீது பூமாரி பொழிந்து பீஷ்மன் பீஷ்மன் என்று கர்ஜித்தார்கள். மானுடன் ஒருவன் கடினமான விரதம் எடுத்து அதை நிறைவேற்றுகிறான் என்பதே அந்தப் பதத்தின் பொருள் ஆகும். அந்த நொடியிலிருந்து தேவவிரதன் பீஷ்மன் என்று பெயர் பெற்றான்.

செம்படவர் தலைவனுடைய அனுமதியின் பேரில் பீஷ்மன் தன் சிற்றன்னை சத்தியவதியை அரண்மனைக்கு அழைத்துச் சென்று தன் தந்தையிடம் ஒப்படைத்தான். தன் மகன் செய்த செயற்கரிய செயலை சந்தனு மன்னன் கேள்விப்பட்டான். தேவவிரதனைத் தவிர வேறு எந்த மனிதனும் இத்தகைய அரிய பெரிய தியாகத்தை செய்ய முடியது என்று வியந்தான். அதனால் தன் மைந்தனுக்கு தந்தை ஓர் வரத்தைக் கொடுத்தார். அந்த வரத்தின் படி பீஷ்மன் அனுமதித்தால் ஒழிய மரணம் பீஷ்மரை அணுகாது.

சத்யவதியானவள் உபரிசரவசு என்னும் வேந்தனுடைய மகள் என்பதையும் செம்படவன் அவருடைய வளர்ப்புத் தந்தை என்பதையும் அந்த மன்னன் அறிந்தான். எனவே அவள் ஒரு சத்திரிய பெண் ஆகிறாள். எனவே வேத விதிப்படி வேந்தன் அவளை விவாகம் செய்து கொண்டான். திருமணம் செய்த சிறிது நாட்களில் சித்திராங்கதன் விசித்திரவீரியன் என்னும் பெயர் படைத்த இரண்டு மகன்களை சத்தியவதி பெற்றெடுத்தாள். அதன் பிறகு சிறிது காலத்தில் சந்தனு மன்னன் பரகதி அடைந்தான். தம்பிகளை காப்பாற்றும் பொறுப்பை பீஷ்மர் ஏற்றுக் கொண்டார். சித்திராங்கதனை பீஷ்மர் அரசனாக்கினார். அப்பதவியை ஏற்ற சிறிது காலத்திற்குள் அவனைப் போலவே பெயர் பெற்ற சித்திராங்கதன் எனும் பெயர் படைத்திருந்த கந்தர்வன் ஒருவனால் சித்திராங்கதன் கொல்லப்பட்டான். அதனால் ஆட்சி நடத்த அரசன் வேண்டும் என்று இளைய சகோதரனாகிய விசித்திரவீரியனை அரசனாக்கினார் பீஷ்மன். அவன் வயதில் சிறியவன் ஆதலால் அவனுடைய பிரதிநிதியாக பீஷ்மர் நாட்டை ஆண்டு வந்தார். அந்த அரசனுக்கு ஏற்ற மனைவி ஒருத்தியை பீஷ்மர் தேடினார்.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி – 4

சந்தனு மன்னனின் வார்த்தையை கேட்ட அப்பெண் ஒழுக்கம் என்பது என்ன என்பதை பற்றி அரசனிடம் விளக்கினாள். பெண் ஒருத்தியிடம் இப்படி பேச்சை எடுப்பது தவறு என்றும் அதற்கு பதிலாக அவளுடைய தந்தையிடம் தெரிவிப்பது தான் முறை என்றும் அவள் ஞாபகப்படுத்தினாள். அவளின் பேச்சில் பண்பும் உண்மையும் புதைந்திருப்பதை மன்னன் அறிந்தான். செம்படவர் தலைவனான அப்பெண்ணின் தந்தையிடம் சந்தனு மன்னன் உங்களது மகளை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று தனது கருத்தை தெரிவித்தான். அதற்கு செம்படவர் தலைவன் கன்னியான எமது பெண்ணுக்கு திருமணம் செய்ய வேண்டும். என்னுடைய செல்விக்கும் திருமணம் அவசியமாகிறது. எங்களை ஆண்டு வரும் மன்னன் அவளுக்கு கணவனாக அமைவது அவளுடைய பாக்கியம். ஆனால் அவளை உங்களுக்கு திருமணம் செய்து கொடுப்பதற்கு முன்பு நான் உங்களிடமிருந்து வாக்குறுதி ஒன்றை பெற விரும்புகிறேன் என்றான். அதற்கு சந்தனு மன்னன் நியாயமான வாக்குறுதி எதையும் அளிக்க நான் ஆயத்தமாக இருக்கின்றேன் என்றான். எமது பெண்ணுக்கும் உங்களுக்கும் மகனாய் பிறப்பவன் உங்களை தொடர்ந்து சிம்மாசனத்தில் மன்னனாக இருப்பான் என்ற உறுதி மொழியை நீங்கள் கொடுத்தால் எமது பெண்ணை தங்களுக்கு திருமணம் செய்து வைக்க சம்மதிக்கின்றேன் என்றான் செம்படவர் தலைவன்.

சந்தனு மன்னன் மிக அழகாய் இருக்கின்ற அப்பெண்ணிடம் காதலில் மயங்கி மூழ்கியிருந்தான். ஆயினும் இந்த நிபந்தனைக்கு அவன் இசையவில்லை. இவனது நிபந்தனையை ஏற்றுக் கொண்டால் தேவவிரதனை ஒதுக்கி வைத்தாக வேண்டும். இந்த செயலில் ஈடுபட அவன் தயாராக இல்லை. திகைத்துப்போன சந்தனு மன்னன் தன் காதல் தோல்வியடைந்ததால் தனது அரண்மனைக்கு திரும்பிச் சென்றான். அங்கு அந்த பெண்ணின் மீதான காதலினால் அவனுடைய மனம் பாதிக்கப்பட்டு உடல் நிலை உறுதி குன்றியது. ஆனால் தன் துயரத்தை அவன் தன்னுடனே வைத்திருந்தான். இதைப்பற்றி அவன் யாரிடத்தும் எதுவும் பேசவில்லை.

தன் தந்தை உடல் நிலையிலும் மனநிலையிலும் உறுதி குன்றி வந்ததை தேவவிரதன் அறிந்துகொண்டான். தேவவிரதன் தன் தந்தையிடம் சென்று இதற்குக் காரணம் என்ன என்று பணிவுடன் கேட்டான். அதற்கு சந்தனு மன்னன் என் ஆருயிர் செல்வா கவலையுற்ற நான் ஒடுங்கி இருக்கிறேன் என்பது உண்மை. நீ எனக்கு ஒற்றை மகன். எப்பொழுதும் நீ போர் விஷயங்களிலேயே ஈடுபட்டவனாய் இருக்கின்றாய். மண்ணுலக வாழ்கை உறுதி அற்றது. போர் முனையோ தவிர்க்க முடியாதது. போரில் உனக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேரிட்டால் அது நம் குடும்பத்தின் துர்பாக்கியம். ஒற்றை மகப்பேறு ஒருநாளும் மகப்பேறு ஆக மாட்டாது என்று நூல்கள் கூறுகின்றன. குடும்ப வளர்ச்சியையும் விரிவையும் முன்னிட்டு நான் கவலையுடன் இருக்கின்றேன்.

தேவவிரதன் மிகப்பெரிய நுண்ணறிவாளி. தந்தை கூறியதில் ஓரளவு உண்மை இருந்தது அவனுக்கு புரிந்தது. ஆனால் முழுவிவரம் தன்னிடமிருந்து மறைத்து வைக்கப் பட்டிருக்கின்றது என்பதை அவன் உணர்ந்தான். எனவே தந்தையின் தேர்ப்பாகனை அணுகினான். தந்தையின் துயரத்திற்கு காரணம் என்ன என்று தேர்ப்பாகனிடம் வற்புறுத்தி கேட்டான். செம்படவர் தலைவனின் மகளை காதலித்து அவளை மணமுடிக்க பெண்ணின் தந்தையிடம் கேட்டபோது அவரது தந்தை கூறியவற்றை உள்ளபடி எடுத்து கூறினான் தேரோட்டி.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி – 3

கங்காதேவி இவ்வாறு சொல்லிவிட்டுச் சென்றதும் அவள் கூறியது சந்தனு மன்னனின் மனதில் ஆழமாகப் பதிந்தது. அதன் விளைவாக அவன் தவ வாழ்க்கையில் ஈடுபடத் தீர்மானித்தான். கிட்டத்தட்ட ஒரு முனிவன் போல வாழ்ந்து வந்த மன்னன் தன்னுடைய நாட்டை நீதியுடனும் அன்புடனும் ஆண்டு வந்தான். காலமும் அதிவேகமாக கடந்து போய்க்கொண்டே இருந்தது. சந்தனு மன்னன் ஒருநாள் தன்னந் தனியாக கங்கை கரை ஓரத்தில் உலாவிக் கொண்டிருந்தான். அப்போது அவன் அழகிய ஓர் இளைஞனை சந்தித்தான். அந்த இளைஞனின் செயல்கள் அனைத்தும் வேந்தன் கவனத்தைக் கவர்ந்தது. அந்த இளைஞனின் தெய்வீக பேரழகு அவனை வசப்படுத்தியது. இதற்கெல்லாம் மேலாக அவனுடைய வில் அம்பு விளையாட்டில் தனித்தன்மை மிளிர்ந்தது. அம்புகளைக் கொண்டு பெருக்கெடுத்து ஓடிய கங்கா நதியை ஓடவிடாமல் அணை போட்டு தடுத்தான். அத்தருணத்தில் அங்கு தேவதை போன்ற பெண் ஒருத்தி வந்தாள். அவள் யாரென்று சந்தனு மன்னனுக்கு அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது அவள் மன்னனிடம் நான் கங்காதேவி இவனுடைய தாய் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். இந்த இளைஞன் நதியில் மூழ்கடிக்கப்படாமல் காப்பாற்றப்பட்ட உன்னுடைய எட்டாவது மகன் என்றாள். அதைக் கேட்ட மன்னனின் மனதில் முன்பு நிகழ்ந்து போன செயல்கள் ஞாபகத்திற்கு வந்தன. அதன் விளைவாக அவன் பிரமித்து நின்றான்.

தேவவிரதன் என்னும் பெயர் பெற்ற இவன் நம்முடைய செல்வன் ஆவான். முன்பு கூறியபடி இதுவரை அனைத்து பயிற்சிகளையும் கொடுத்து இவனை வளர்த்து இருக்கின்றேன். பரசுராமரிடமிருந்து வில் வித்தையை பயின்று இருக்கின்றான். வில் வித்தையில் இவன் தன் குருவான பரசுராமருக்கு சமமானவன் ஆவான். வசிஷ்ட மகரிஷியிடமிருந்து இவன் வேதங்களையும் வேத அங்கங்களையும் வேதாந்தத்தையும் கற்று இருக்கின்றான். தேவகுருவாகிய பிரகஸ்பதி அசுரர்களின் குருவாகிய சுக்கிராச்சாரியார் என்னென்ன கலைகளையும் சாஸ்திரங்களையும் கற்று இருக்கின்றார்களோ அவைகள் அனைத்தையும் இந்த இளைஞன் கற்று இருக்கின்றான். யுத்தம் செய்வதிலும் ஆட்சி செய்வதிலும் வல்லமை படைத்த வீரன் இவன். நமது மைந்தனாகிய இவனை தான் திரும்பவும் மனமுவந்து தங்களிடம் ஒப்படைக்கின்றேன் ஏற்றுக் கொள்ளுங்கள் என அவள் அந்த இளைஞனை சந்தனு மன்னனிடம் ஒப்படைத்து விட்டு சென்று விட்டாள்.

சந்தனு மன்னன் தேவவிரதால் தானும் தன்னுடைய நாடும் பாக்கியம் பெற்றதாக உணர்ந்தான். மகிழ்ச்சியுடன் தேவவிரதனை தன் அரண்மனைக்கு அழைத்துச் சென்றான். தக்க காலத்தில் தேவவிரதனுக்கு யுவராஜனாக பட்டாபிஷேகம் செய்து வைத்தான். அந்த இளைஞனிடம் இருந்த திறமைக்கும் அறிவுக்கும் ஆற்றலுக்கும் ஏற்றவாறே பித்ரு பக்தியும் அவனிடத்தில் தலைசிறந்து திகழ்ந்தது. அமைதியாக நான்கு ஆண்டுகள் கடந்து போயின. அதன் பிறகு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. சந்தனு மன்னன் யமுனை நதி அருகே உலாவிக் கொண்டிருந்தான். அப்பொழுது ஒரு இடத்தில் சொல்ல இயலாத அளவிற்கு இனிமை நிறைந்த நறுமணம் கமழ்வதை உணர்ந்தான். அது எங்கிருந்து வருகிறது என்பதை சந்தனு மன்னன் நுணுக்கமாக ஆராய்ந்து நறுமணம் வரும் திசையை நோக்கி சென்றான். யமுனை நதி அருகே ஒரு தீவிலே செம்படவ வேந்தன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனுடைய செல்வியின் பெயர் சத்தியவதி. முனிவர் ஒருவர் வழங்கிய வரத்தின் விளைவாக அந்த நறுமணம் அவளிடம் இருந்து வந்து கொண்டிருந்தது அந்த மங்கையை பார்த்த உடனே மன்னன் அவள் மீது காதல் கொண்டான். அவள் இருந்த இடம் ஒரு குடிசையாக இருந்ததை அவன் பொருட்படுத்தவில்லை. இத்தனை நாள் தவநெறியில் ஈடுபட்டிருந்த வேந்தன் இப்போது காதல் கொண்டு தன்னை மணந்து கொள்ளவேண்டும் என்று சிறிதும் தயங்காமல் அந்தப் பெண்ணிடம் வேண்டினான்.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி – 2

சந்தனு மன்னனும் அவனது மனைவியும் பரஸ்பரம் நன்கு நேசித்து வாழ்ந்து வந்தார்கள். மகாராணி ஒருத்தியிடம் இருக்கவேண்டிய அடக்கமும் மாண்பும் அந்த மாதரசியிடம் மிளிர்ந்து இருந்தது. காலம் எப்படி கடந்து போயிற்று என்பதை அறியாதவர்களாக தம்பதிகள் இன்புற்று வாழ்ந்து வந்தனர். நாளடைவில் அரசி விபரீதமான செயலொன்றேச் செய்ய ஆரம்பித்தாள். அரசனுக்கும் தனக்கும் பிறந்த ஒவ்வொரு குழந்தையையும் தூக்கிச் சென்று கங்கா நதியில் வீசி எறிந்து விட்டு திரும்பி வந்தாள். அரண்மனை திரும்பிய அவள் பெரிய கடமை ஒன்றை நிறைவேற்றி விட்டவள் போல அரசனிடம் புன்னகைத்தாள். அரசி புரிந்து வந்த இந்தப் பாதகச் செயலை பார்த்து சந்தனு மன்னன் திகிலடையலானான். ஆனால் போட்ட நிபந்தனையின்படி அவளை ஒன்றும் கேட்காமல் இருந்தான். இதைப் பற்றி கேட்டால் அது விபரீதமாக போய்விடக் கூடும் என்று அமைதியாக தனக்குள்ளே சிந்தனை பண்ணிக் கொண்டிருந்தான். தனக்குப் பிறந்த ஏழு குழந்தைகளை அவள் கொன்று விட்டாள். எட்டாவதாக பிறந்த குழந்தையை அவள் கங்கைக்குள் போடப் போன பொழுது அச்செயலை சகிக்க சந்தனு மன்னனுக்கு இயலவில்லை.

அரசியே நீ ஏன் அரக்கத்தனம் படைத்தவள் போல உன் குழந்தையை கொலை செய்கிறாய்? தயவு செய்து இந்த 8 வது குழந்தையாவது காப்பாற்று என்றான். அதற்கு அரசி மன்னரே நீங்கள் எனக்கு கொடுத்த வாக்குறுதியை மீறி விட்டீர்கள். இப்போது உங்களது அன்பு என் மீது இல்லை குழந்தையின் மீது செல்கிறது. ஆகவே நான் செல்கிறேன். நான் செல்வதற்கு முன்பு நான் யார் என்பதையும் நான் ஏன் இந்த செயலை செய்கிறேன் என்பதையும் உங்களுக்கு எடுத்து விளக்குகின்றேன் கேளுங்கள். நான் கங்காதேவி மண்ணுலகில் பிறந்து சிறிது காலம் நான் உங்களுக்கு மனைவியாக இருக்க வேண்டும் என்பது பிரம்ம தேவன் இட்ட சாபம். தேவதையாக நான் அந்த நிலைமையை அறிகிறேன். நில உலகத்தவராகிய நீங்கள் அதை அறியவில்லை.

விண்ணுலகில் இருக்கும் எட்டு வசுக்கள் வசிஷ்ட மகரிஷி இல்லாத வேளையில் அவருடைய ஆசிரமத்திற்குள் நுழைந்து நந்தினி என்னும் பசுவை திருடிச் சென்று விட்டனர். ஆசிரமத்திற்கு திரும்பி வந்த வசிஷ்டர் தனது யோக வலிமையால் குற்றவாளிகள் யார் என்பதை கண்டு கொண்டார் அந்த வசுக்கள் 8 பேரும் உலகத்தில் மானிடராக பிறக்க வேண்டும் என்று அவர் சபித்தார். அந்த சாபம் மாற்ற முடியாதது. அந்த எட்டு வசுக்களும் மண்ணுலகில் நான் அவர்களுக்கு தாயாக வேண்டும் என்றும் அதிவிரைவில் இந்த உலக வாழ்க்கையில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்றும் என்னிடம் பரிந்து வேண்டிக் கொண்டார்கள் அதன் படியே நான் அவர்களில் 7 பேருக்கு விமோசனம் கொடுத்து விட்டேன். எட்டாம் குழந்தை இந்த உலகில் நீடித்து வாழ்ந்து செயற்கரிய பல செயல்களைச் செய்வான். ஆகையால் அவனை வழி அனுப்ப மாட்டேன். மற்றொரு காரியத்தைச் செய்வேன். அரிதிலும் அரிதாக இருக்கின்ற அஸ்திர சாஸ்திர வித்தைகள் பலவற்றை இவனுக்கு பயிற்றுவித்து உங்களிடம் ஒப்படைப்பேன் என்று சொல்லிவிட்டு அந்த குழந்தையை கையில் எடுத்துச் சென்று விட்டாள். இந்த குழந்தை தான் மகாபாரதத்தில் வரும் பீஷ்மர் ஆவார்.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி – 1

தாய்நாடு பண்டைய காலத்தில் ஆரியவர்த்தம் என்னும் பெயருடன் இருந்தது. நல்லவர்கள் உடைய நாடு என்பது அதன் பொருள் ஆரியன் என்னும் சொல் ஒரு இனத்தையோ சாதியையோ குறிக்காது. பண்பட்டவன் என்பது அதன் பொருள். அய்யன் ஐயா ஐயர் ஆரியன் ஆகிய சொற்கள் ஒரே கருத்திற்கு உரியவையாகும் இன்றைக்கு ஆரியவர்த்தம் என்னும் சொல் இலக்கியத்தில் மட்டுமே கையாளப்படுகிறது பேச்சுவார்த்தையில் பின்னுக்குப் போய் விட்டது. இந்த ஆர்ய வர்த்தத்திலே பண்டை காலத்தில் சூரிய வம்சம் சந்திர வம்சம் என்னும் இரண்டு வம்சத்தவர்கள் தலைசிறந்த பாங்கிலே நாட்டை ஆண்டு வந்தார்கள் மகாபாரதம் நூல் சந்திர வம்சத்தை பற்றியதாகும்.

பரதன் என்னும் பெயர் தாங்கிய பேரரசன் ஒருவன் இருந்தான். இவன் துஷ்யந்தனுக்கும் சகுந்தலைக்கும் பிள்ளையாகப் பிறந்தவன் பண்புகள் பலவும் வாய்க்கப் பெற்றவனாக இருந்த காரணத்தை முன்னிட்டே இந்த நாடு நாளடைவில் பாரதம் என்னும் பெயர் பெற்றது. பரதனுடைய சந்ததியினர் அனைவரும் பாரதர்கள் என அழைக்கப்பட்டார்கள் அந்த வழி முறையிலேயே குரு என்னும் பெயர் தாங்கிய மற்றொரு பேரரசன் இருந்தான். அவனுடைய வம்சத்தை சேர்ந்தவர்கள் நாளடைவில் குருக்கள் என அழைக்கப்பட்டனர். கௌரவர்கள் என்னும் பெயரும் அதே அடிச் சொல்லிலிருந்து வந்தது குருசேத்திரம் என்னும் இடமும் குரு என்னும் இந்த கோமகனை முன்னிட்டு வந்தது.

குரு வம்சத்தில் வந்த வேந்தர்களில் சந்தனு என்பவன் மிகத் திறமை வாய்க்கப் பெற்றவன். தன்னுடைய முற்பிறப்பிலே இவன் சூரிய வம்சத்தை சேர்ந்த இக்ஷ்வாகு வம்சத்திற்குரியவனாய் இருந்தான். அதே வம்சத்தில் தான் ஸ்ரீராமனும் பிறப்பெடுத்து இருந்தான். சந்தனு தனது பழைய பிறவியிலே அவனுக்கு பெயர் மகாபிஷன் என்பதாகும். சொர்க்கத்திலே மகாபிஷன் நெடுநாள் வாழ்ந்திருந்தான் அங்கு அப்போது நிகழ்ச்சி ஒன்று நடந்தது. தேவர்கள் பலர் ஒன்று கூடி விருந்து ஒன்று வைத்திருந்தார்கள் அந்த விருந்தில் மகாபிஷனும் கங்காதேவியும் இடம் பெற்றிருந்தனர் விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது காற்றடித்து கங்காதேவியின் மேலாடை அப்புறப்படுத்தியது. இந்த சந்தர்ப்பத்தில் பண்பை அடிப்படையாகக் கொண்டிருந்த தேவர்கள் எல்லோரும் தங்களுடைய கண் பார்வையை வேறுபக்கம் திருப்பிக் கொண்டார்கள் ஆனால் மகாபிஷன் மட்டும் அப்படிச் செய்யவில்லை இந்த இக்கட்டில் அவன் கங்காதேவியை பார்த்த வண்ணம் இருந்தான் இருந்தான் அவன் அப்படி செய்தது பெரும் பிழையாகும். சிருஷ்டி கர்த்தாவாகிய பிரம்மதேவன் அப்பிழைக்கு ஏற்ப சாபம் ஒன்றை கொடுத்தார். கங்காதேவியும் மகாபிஷனும் மண்ணுலகில் மானிடராகப் பிறந்து அக்கர்மத்தை முடித்தாக வேண்டும் என்பது அச்சாபமாகும். இதுவே சந்தனு மன்னனின் பூர்வஜென்ம வரலாறு இதை பற்றி அவனுக்கு இப்பிறவியில் ஒன்றும் தெரியாது.

குரு வம்சத்தை சேர்ந்த சந்தனு மன்னன் தன் நாட்டை நன்கு ஆண்டு வந்தான் ஒரு நாள் அவன் கங்கா நதி கரையில் உலாவிக் கொண்டிருந்தான். அப்போது அழகான பெண்ணொருத்தியை அங்கு கண்டான். அப்போதே அங்கு அவள் மீது காதல் கொண்டான். சிறிதேனும் தயங்காது உன்னை மணந்து கொள்கின்றேன் என்று தன் கருத்தை அவளிடம் தெரிவித்தான். அவளை மணந்து கொள்வதற்கு அவள் என்ன நிபந்தனை விதித்தாலும் அதற்கு உட்பட்டு நடப்பதாக அரசன் உறுதி கூறினான். தன்னை மணப்பதற்கு நிபந்தனைகள் என்னென்ன என்று அந்தப் பெண் கூறினாள். அப்பெண்ணின் பெற்றோர் யார் என்று கேட்கக் கூடாது என்பது முதல் நிபந்தனை. நல்லதோ கெட்டதோ அவளுடைய செயல் எதுவாக இருந்தாலும் அது குறித்து அவன் பேசக்கூடாது என்பது இரண்டாவது நிபந்தனை. எக்காரணத்தை கொண்டும் அவள் மீது கோபித்துக் கொள்ளக்கூடாது என்பது மூன்றாவது நிபந்தனை. அவளுக்கு அதிருப்தி உண்டாகும் படியான செயல் எதையும் செய்ய கூடாது என்பது நான்காவது நிபந்தனை. இந்த நான்கு நிபந்தனைகள் ஏதேனும் ஒன்றை அவன் மீறினால் அக்கணமே அவள் அவரிடமிருந்து விலகிக் கொள்வாள். நிறைவேற்றுவதற்கு மிகக் கடினமான இந்த நிபந்தனைகளை காதலில் மயங்கி போன சந்தனு மன்னன் ஏற்றுக்கொண்டான். அவர்கள் இவ்விருவரும் மணந்துகொண்டு இன்புற்று வாழ்ந்து வந்தார்கள்.