மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -13

நதிக்கு உள்ளே போடப்பட்ட பீமன் விஷத்தின் வீரியத்தால் மயக்கம் கலையாமல் இருந்தான். நீருக்குள் இருக்கும் பாம்புகள் பீமனைத் தீண்டியது. பாம்பின் விஷம் மூலிகையின் விஷத்தை முறித்தது. அதன் விளைவாக பீமன் விழித்தான். ஒரு உதறு உதறி தன் கை கால்களை கட்டியிருந்த கொடிகளை எல்லாம் ஒதுக்கித் தள்ளினான். பிறகு அங்கிருக்கும் விஷப் பாம்புகளை கொன்றான். பாம்புகளில் சில தப்பித்துக் கொண்டு ஆழத்தில் இருந்த நாகலோகத்துக்கு போயின. அங்கு பாம்புக்கு அரசனாக இருந்த வாசுகியிடம் ஒரு மனிதன் செய்த அட்டகாசத்தை எடுத்து விளக்கின. அந்த மனிதனுடைய துணிச்சலைப் பார்க்க வாசுகி குறிப்பிட்ட அந்த இடத்துக்கு வந்தது. இச்செயலை செய்த மானுடன் குந்தியின் மைந்தன் என்பதை வாசுகி அறிந்துகொண்டது. அவனுக்கு அமிர்தத்தை வழங்கி அவனுடைய பலத்தை பன்மடங்கு அதிகப்படுத்தி திருப்பி அனுப்பியது. இதற்குள் எட்டு நாட்கள் சென்றது. கவலையுடன் இருந்த குந்திதேவி ஆனந்த கண்ணீருடன் தன் மகனை வரவேற்றாள். ஆனால் கொடூர தன்மையோடும் குதூகலத்தோடும் இருந்த துரியோதனன் பீமன் திரும்பி வந்ததை பார்த்து ஏமாற்றம் அடைந்தான்.

காலம் சென்ற சந்தனு மன்னன் வேட்டையாட வனத்திற்குச் சென்று இருந்த பொழுது அங்கு சிறுவனும் சிறுமியும் ஆகிய இரட்டையர்களை கண்டான். கவனத்துடன் அவர்களை கொண்டு வந்து பராமரித்து வந்தான். அந்த சிறுவர்களை அவன் கிருபன் என்றும் கிருபி என்றும் பெயர் வைத்து வளர்த்து வந்தான். அந்த கிருபன் பிரசித்திபெற்ற கௌதமருடைய புதல்வன் ஆவார். வில்வித்தையில் அவர் சாமர்த்தியசாலி ஆகையால் கிருபாச்சாரியாரை பீஷ்மர் தனது பேரப்பிள்ளைகளுக்கு வில்வித்தையை பயிற்சி கொடுப்பதற்கு பயன்படுத்திக்கொண்டார் கிருபாச்சாரியார் திருதராஷ்டிரருடைய புதல்வர்கள் பாண்டுவின் புதல்வர்களுக்கு மட்டுமின்றி விருஷ்ணி வம்சத்து அரசகுமாரர்கள் போஜனுடைய புதல்வர்கள் அந்தகனுடைய புதல்வர்கள் ஆகிய ராஜகுமாரர்களுக்கும் பாடசாலையில் பயிற்சி அளித்து வந்தார். அவர்கள் அனைவரும் அதிவிரையில் வில் வித்தையில் நிபுணர்கள் ஆனார்கள். ஆனால் அவர்கள் பெற்ற பயிற்சி போதவில்லை என்று உணர்ந்த பீஷ்மர் தனுர் வேதத்தில் தலை சிறந்த மற்றோர் ஆச்சார்யாரை தேடிக் கொண்டு இருந்தார்.

ஒரு நாள் ராஜகுமாரர்கள் மும்முரமாக பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அருகிலிருந்த ஒரு கிணற்றுக்குள் தற்செயலாக அவர்கடைய பந்து விழுந்தது. அதன் விளைவாக விளையாட்டு திடீரென்று முடிவுக்கு வந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் திகைத்து நின்று கொண்டு இருந்தார்கள். இந்த பிரச்சினையை அகற்றுவதற்கான வில்வித்தை உங்களுக்கு தெரியவில்லையா என்று பக்கத்தில் நின்று நிகழ்ந்ததை எல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் கேட்டார். நாங்கள் எல்லோரும் வில்வித்தகர்களே. ஆனால் வில்லுக்கும் பந்துக்கும் என்ன சம்பந்தம் என்று அந்த மாணாக்கர்களில் ஒருவனான யுதிஷ்டிரன் கேட்டான். வந்திருந்தவர் தான் அணிந்திருந்த மோதிரத்தைக் கழட்டி கிணற்றுக்குள் போட்டார். மோதிரம் பந்து ஆகிய இரண்டையும் வில்வித்தையின் மூலம் எடுக்கலாம் என்றார். ஒரு கையளவு தர்ப்பை புற்களை எடுத்து ஜெபித்து அவைகளை ஒன்றன் பின் ஒன்றாக பந்தின் மீது போட்டார். தர்ப்பைப்புல் ஒன்றன் பின் ஒன்றாக பந்து மேல் ஒட்டிக் கொண்டு ஒரு கயிறு போல் ஆகி அதன் ஒரு நுனி பந்திலும் இன்னொரு நுனி வந்திருந்தவர் கையிலும் இருந்தது. மிகவும் சுலபமாக பந்து மேலே எடுக்கப்பட்டது மோதிரத்தை என்ன பண்ண போகிறீர்கள் என்று இளைஞர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் அந்த அம்பு ஒன்றை எய்தார். அம்பு மோதிரத்தை எடுத்துக் கொண்டு அவரிடம் வந்தது. இதை பார்த்து திகைத்து போன குழந்தைகள் ஓடி சென்று நிகழ்ந்ததை எல்லாம் பீஷ்மரிடம் தெரிவித்தார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.