கேள்வி: குலதெய்வம் என்பது யாது ? அது தெரியாதவர்கள் அதை தெரிந்துகொள்வது எப்படி ?
இறைவன் அருளால் கூறுவது யாதென்றால் திருமணமான பல ஆண்களைக் கேட்டால் தெரியும் குலதெய்வம் யாரென்று? திருமணமான ஆண்களுக்கெல்லாம் குலதெய்வம் யாரென்றால் மனைவிதான். பல நல்ல குல மங்கைகளுக்கு குலதெய்வம் கணவன்தான். இப்படித்தான் ஆதிகாலத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். இக்காலத்திலும் இப்போதும் சிலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இறைவன் அருளால் பலமுறை கூறியதுதான் சுருக்கமாக கூறுகிறோம் அப்பா.
ஒரு பகுதியில் ஒரு ஊரில் ஒரு நகரத்தில் ஒரு கிராமத்தில் பொதுவான பிரச்சினை துன்பங்கள் இயற்கை சீற்றம் அல்லது கள்வர்களால் துன்பம் வரும்பொழுது அதை எதிர்த்து போராடி உயிரை விட்ட ஒரு சிலரை குலதெய்வமாக காலப்போக்கில் வழிபடுவது அல்லது போரில் கடுமையாக போராடி எதிரியிடம் இருந்து நாட்டை காத்து இறந்த சில வீரர்களையெல்லாம் நடுகல் நட்டு தெய்வமாக கும்பிடுவது ஒரு வழக்கம். இன்னொன்று அதிக அளவு சாத்வீகமாக இறை பக்தியோடும் சிந்தனையோடும் வாழ்ந்து எதிர்பாராமல் மரணமடைந்த சில ஆண்களையும் பெண்களையும்கூட குலதெய்வமாக கும்பிடுவது என்பதுகூட ஒரு தனிப்பட்ட குடும்பத்தின் மரபாக இருந்தது. இதுபோக சிறு சிறு தேவதைகளையும் குலதெய்வமாக இஷ்ட தெய்வமாக வழிபடும் பழக்கமும் இருந்து வருகிறது. எல்லாவற்றையும்விட இறை நம்பிக்கை வேண்டும் பெரிய ஆலயங்களுக்கு சென்று வழிபடுவது என்பது அதிகம் படித்தவர்களுக்கும் ஓரளவு ஞானம் அடைந்தவர்களுக்கும் அந்த காலத்தில் எளிதாக இருந்தது. எளிய மக்களுக்கு பெரிய ஆலயத்தின் உள்ளே செல்வதற்கு தடை போடப்பட்டிருந்த காலம். அவர்கள் இறைவனை வணங்க வேண்டுமே? அவர்களுக்கு தெரிந்த வகையில் பூஜை செய்து தெய்வத்தைக் கொண்டாடினார்கள். இதுதானப்பா குடும்ப தெய்வம். இதுதானப்பா குலதெய்வம். எந்த காரியத்தை துவங்கும் முன்பு இங்கு சென்று அனுமதி கேள். வீட்டிலே பெரியவர்கள் இருந்தால் உத்தரவு கேட்க மாட்டாயா? அதைப்போல் கேள் என்றெல்லாம் பிள்ளைகளுக்கு பாரம்பர்யமாக சொல்லிக் கொண்டே வந்ததால் இப்படியொரு வழிபாடு ஏற்பட்டு விட்டது. எல்லாம் கடந்து பரம்பொருள் ஒன்றுதான் என்று ஒருவன் பத்மாசனமிட்டு அமர்ந்து விட்டால் அவனுக்கு எல்லாம் ஒன்றுதான். அந்த நிலை வரும் வரையில் இதுபோன்ற விதவிதமான வழிபாடுகளும் சடங்குகளும் மனிதனுக்கு தேவைப்படுகிறது. என்ன? அந்த சடங்கிலே பாவங்கள் சேராமல் மனிதன் பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வளவே.
சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் விறகு விற்ற படலம் நாற்பத்தி ஒன்றாவது படலமாகும்.
வரகுண பாண்டியன் மதுரையை சீரும் சிறப்புமாக ஆண்டு கொண்டிருந்தபோது ஏகநாதன் என்னும் வடநாட்டு யாழிசைக் கலைஞன் ஒருவன் வரகுணனின் அரண்மனைக்கு வந்தான். தன் பாட்டிற்கு எதிர்பாட்டுப் பாட பூலோகத்தில் இதுவரை ஒருவர் பிறந்ததுமில்லை இனி பிறக்கப் போகிறதுமில்லை என ஊர் ஊராகச் சொல்லிக் கொண்டு மார்தட்டி செருக்குடன் இருப்பவன். அவன் தன்னுடைய யாழினைக் கொண்டு இசை பாடி அரசவையில் அனைவரின் மனதையும் மயக்கினான். பின்னர் வரகுணனிடம் பலநாடுகளில் யாழிசையில் வெற்றி பெற்று பல பரிசுகளையும் பட்டங்களையும் பெற்றதாக ஆணவத்துடன் கூறினான். வரகுண பாண்டியனும் ஏகநாதனின் இசையைப் பராட்டி அவனுக்கு பல பரிசுகளை வழங்கி தன்னுடைய விருந்தினராக சிலநாட்கள் பாண்டிய நாட்டில் தங்கியிருக்குமாறு கேட்டுக் கொண்டான். ஏகநாதனும் அவனைச் சார்ந்தவர்களும் தங்குவதற்கு அரச மாளிகை ஒன்றை ஏற்பாடு செய்தான். இதனைக் கண்டதும் இந்த உலகில் தன்னை யாரும் இசை வாதில் வெல்ல ஆளில்லை என்ற ஆவண எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது. இதனால் வரகுணனிடம் உங்கள் நாட்டில் என்னுடன் யாழிசைத்து இசைபாடும் வல்லமை இல்லை அப்படி யாராவது இருந்தால் எம்மோடு போட்டியிட்டு பாடசொல் என்றான். அதற்கு வரகுணன் நீங்கள் இப்பொழுது உங்கள் இருப்பிடம் செல்லுங்கள். நான் உங்களுடன் போட்டியிடும் நபரைத் தேர்ந்தெடுத்து உங்களுக்கு நாளை தெரிவிக்கிறேன் என்று கூறி அனுப்பினான். பின்னர் அவையோரிடம் கலந்தாலோசித்த வரகுணன் தன்னுடைய அவையில் இருந்த பாணபத்திரர் என்ற யாழிசைக் கலைஞரை ஏகநாதனிடம் யாழிசைத்து இசைபாடி போட்டியிட ஆணை இட்டான்.
வரகுண பாண்டியனின் ஆணையைக் கேட்டதும் பாணபத்திரர் சொக்கநாதரின் திருவருளோடு இசைப் போட்டியில் கலந்து கொள்கிறேன் என்றார் என்று கூறினார். ஏகநாதனின் சீடர்கள் மதுரை நகரத் தெருக்களில் யாழினை இசைத்து பாடி எல்லோரையும் தன் வசப்படுத்திக் கொண்டிருந்தனர். இதனைக் கண்ட பாணபத்திரர் ஏகநாதனின் சீடர்களே இவ்வளவு அழகாகப் பாடுகிறார்களே. நான் எப்படிதான் இந்த இசைப் போட்டியில் ஏகநாதனை வெல்லப் போகிறேனோ என்று கலக்கத்துடன் நேரே சொக்கநாதரைச் சரணடைந்தார். இறைவா நீங்கள்தான் இக்கட்டிலிருந்து என்னைக் காப்பாற்றி வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று மனமுருக வேண்டினார். சொக்கநாதரும் பாணபத்திரருக்கு உதவ எண்ணம் கொண்டார். வயதான விறகு விற்பவர் போல் வேடம் கொண்டு இடையில் அழுக்காடையும் தலையில் இருக்கும் பிறைச் சந்திரனை அரிவாளாக மாற்றி இடையில் செருகியும் இருந்தார். பழைய யாழினை இடக் கையில் வைத்துக் கொண்டு தலையில் விறகுகளைச் சுமந்தபடி மதுரை நகர வீதிக்குள் நுழைந்தார். விறகு வலை கேட்பவர்களிடம் அதிக விலை கூறி விறகினை விற்காது பொழுதினைப் போக்கினார். மாலை வேளையில் ஏகநாதன் தங்கியிருந்த வீட்டிற்கு அருகில் விறகுக் கட்டினை இறக்கி வைத்து விட்டுத் திண்ணையில் அமர்ந்து சொக்கநாதர் யாழினை மீட்டி பாடினார்.
சொக்கநாதரின் பாட்டினைக் கேட்டதும் ஏமநாதன் வெளியே வந்து விறகு விற்பவர் போல் வந்த சொக்கநாதரிடம் வந்து நீ யார்? என்று கேட்டான். அதற்கு சொக்கநாதர் நான் யாழிசையில் வல்லவராகிய பாணபத்திரனின் அடிமை என்றார். பாணபத்திரரிடம் இசை பயிலும் மாணவர்கள் பலர். அவர்களில் நானும் ஒருவனாக இருந்த போது வயது முதிர்ந்ததால் இசை கற்க தகுதியற்றவன் என்று என்னை பாணபத்திரர் புறந்தள்ளி விட்டார். அதனால் விறகு விற்று பிழைப்பு நடத்துகிறேன். பாணபத்திரரிடம் கற்ற இசையை மறக்காமல் இருக்கும் பொருட்டு நான் அவ்வப்போது பாடுவேன் என்று கூறினார். ஏமநாதன் விறகுஉ விற்பவர் போல் வந்த இறைவரிடம் நீ முன்னர் பாடிய பாடலை இன்னொருதரம் இசையோடு பாடுக என்று கூறினான். இறைவரும் யாழினை மீட்டி பாடத் தொடங்கினார். அவருடைய பாட்டில் ஏமநாதன் உட்பட உலக உயிர்கள் அனைத்தும் மெய் மறந்து ஓவியம் போல் இருந்தனர். ஏமநாதன் தன்னை மறந்து இருக்கையில் இறைவனார் மறைந்தருளினார். பின்னர் உணர்வு வந்த ஏமநாதன் இது சாதாரணப் பாட்டே அல்ல. இது தேவகானம். பாணபத்திரனால் தள்ளப்பட்டவன் இவ்வாறு இசையுடன் பாடினால் பாணபத்திரனின் பாட்டின் திறன் எத்தகையதோ? என்று கூறி கவலையில் ஆழ்ந்தான். இனி நாம் பாணபத்திரனோடு இசைப் போட்டியில் பாடி வெற்றி பெற முடியாது. ஆகையால் இப்போதே இங்கிருந்து புறப்படவேண்டும் என்று எண்ணி தன் கூட்டத்தினருடன் மதுரையை விட்டு வெளியேறினான்.
இறைவனார் பாணபத்திரனின் கனவில் தோன்றி பாணபத்திரரே இன்று யாம் ஏகநானிடம் உன்னுடைய அடிமை என்று கூறி இசைபாடி வென்றோம் அஞ்சற்க என்று கூறினார். இதனைக் கேட்ட பாணபத்திரர் விழித்தெழுந்து மகிழ்ச்சியடைந்தார். பின்னர் விடிந்ததும் திருக்கோவிலுக்குச் சென்று சொக்கநாதரை வழிபட்டு அடியேன் பொருட்டு தங்கள் திருமுடியில் விறகினைச் சுமந்தீர்களோ? என்று கூறி வழிபாடு நடத்தினார். காலையில் அரசவை கூடியதும் வரகுணன் ஏமநானை அழைத்து வாருங்கள் என்று கட்டளையிட்டான். காவலர்கள் ஏமநாதன் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்றனர். ஏமநாதனைக் காணாது அருகில் இருந்தவர்களிடம் விசாரித்த போது ஏமநாதன் நேற்றுவரை இங்கிருந்தான். நேற்று மாலை ஒரு வயதான விறகு விற்பவன் தன்னை பாணபத்திரனின் அடிமை என்று கூறி இசைபாடினான். பின்னர் என்ன நடந்ததோ தெரியவில்லை. ஏமநாதன் நள்ளிரவில் ஓடிவிட்டான் என்று கூறினார்கள். அதனைக் கேட்ட அவர்கள் இந்த செய்தியை வரகுணனிடம் தெரிவித்தார்கள். இதனைக் கேட்டதும் பாணபத்திரர் தன்னுடைய மனக் கவலையை இறைவனாரிடம் தெரிவித்ததையும் இறைவனார் கனவில் கூறியதையும் விளக்கினார். இது சொக்கநாதரின் திருவிளையாடல் என்பதை அறிந்த வரகுணன் பாணபத்திரரை யானைமீது அமர்த்தி மரியாதை செலுத்தினான். பல பரிசுப்பொருட்களை வழங்கினான். தனக்கு அரசன் கொடுத்த வெகுமதிகள் முழுவதையும் அடியாருக்கும் ஆண்டவனுக்காகவுமே செலவிட்டு இன்புற்று வாழ்ந்தார் பாணபத்திரர்.
சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:
தனது திறமைக்கு நிகர் யாரும் இல்லை என்ற செருக்கும் தானே பெரியவன் என்ற ஆணவம் இருக்க கூடாது. அப்படி இருந்தால் அதனை கட்டாயம் இறைவனார் அடக்குவார். ஆகையால் நாம் வாழ்க்கையில் ஆணவம் கொள்ளக் கூடாது என்பதையும் இறைவனை நம்பியவர்கள் கைவிடப்பட மாட்டார்கள் என்பதையும் இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.
கேள்வி: பக்தி மார்க்கத்தின் வழியாக சென்றால் முக்தி. ஞான மார்க்கத்தின் வழியாக சென்றால் மறுபிறவி உண்டு என்பது பற்றி:
இறைவன் அருளால் இப்படியெல்லாம் யாங்கள் கூறவில்லையப்பா. எந்த வழிபாட்டில் எந்த வழிமுறையில் சென்றாலும் உள்ளம் பண்பட்டு பக்குவப்பட்டு உள்ளம் உறுதியோடு நோக்கம் சிதறாமல் இறைவனின் திருவடியை பிடித்துக்கொள்வதுதான் நோக்கம் பிற விஷயங்கள் எனக்கு முக்கியமல்ல. என் கடமைகளை செய்வேன். என்னால் முடிந்த நன்மைகளை பிறருக்கு செய்வேன். பிறர் செய்கின்ற தீமைகளையெல்லாம் எனது பாவக்கழிவாக எண்ணுவேனே தவிர அவர்கள் மீது நான் சினம் கொள்ள மாட்டேன் என்று எவனொருவன் உறுதியோடு இருக்கிறானோ அவன் எந்த வழியில் வந்தாலும் அவனுடைய முக்தி நிலை என்பது உறுதியாகும்.
சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம் நாற்பதாவது படலமாகும்.
வரகுணன் சீரும் சிறப்புமாக மதுரை நீதிநெறி பிறழாமல் ஆட்சி செய்து வந்தான். அதேநேரத்தில் சொக்கநாதரிடம் பேரன்பு கொண்டிருந்தான். ஒருநாள் அவன் வேட்டையாட காட்டிற்குச் சென்றான். இருள் சூழ்ந்த வேளையில் அவன் கனவட்டம் என்ற குதிரையின் மீது அமர்ந்து நாட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது வழியில் தூங்கிக் கொண்டிருந்த அந்தணர் ஒருவர் குதிரையின் காலடியில் சிக்கி இறந்தார். இதனை அறியாத வரகுணன் அரண்மனை திரும்பினான். காட்டில் இருந்த சிலர் இறந்த அந்தணரின் உடலை எடுத்துக் கொண்டு வரகுணனின் வாயிலில் இட்டு நடந்தவற்றை வரகுணனுக்கு கூறினர். தனது குதிரையின் காலடியில் சிக்கி அந்தணர் இறந்ததை அறிந்த வரகுணன் இறந்த அந்தணனைச் சார்ந்தவர்களை வரவழைத்து பொன் பொருள் உதவி செய்ததோடு அந்தணனுக்கு முறைப்படி இறுதி சடங்குகளை நடத்த ஏற்பாடு செய்தான். எனினும் வரகுணனை பிரம்மகத்தி என்னும் பாவம் (கொலைப் பாவம்) பற்றிக் கொண்டது. பிரம்மகத்தி பிடித்த வரகுணன் மிகவும் துன்பத்துக்கு ஆளானான். அதனைப் போக்குவதற்கு நிறைய முயற்சிகள் செய்தான். இறுதியில் பெரியோர்களின் சொல்படி நாள்தோறும் சொக்கநாதரைத் தரிசித்து 1008 முறை வலம் வந்தான். அப்போது ஒருநாள் இறைவனார் அசரீரியாக பாண்டியனே நீ அஞ்சாதே காவிரி நாட்டைச் சார்ந்த சோழன் உன்னுடன் போரிட வருவான். அப்போது நீ அவனை புறங்காட்டி ஓடச்செய்வாய். நீ சோழனைத் தொடர்ந்து சென்று அவனது எல்லையில் உள்ள திருவிடைமருதூரை அடைவாய். அங்கே உன்னுடைய பிரம்மகத்தியை யாம் நீக்குவோம். என்று திருவாய் மலர்ந்தருளினார்.
சொக்கநாதரின் அசிரிரீ வாக்கைக் கேட்ட வரகுணன் மகிழ்ந்து சோழனின் வருகைக்காக காத்திருந்தான். இறைவனாரின் கூற்றுப்படி சோழன் பாண்டியனின் மீது படையெடுத்து வந்தான். வரகுணனும் சோழனை எதிர்த்து போரிட்டு அவனை விரட்டிச் சென்றான். திருவிடைமருதூர் வந்ததும் மகாலிங்கத்தை வழிபடுவதற்காக வரகுணன் கோவிலின் கிழக்கு வாயில் வழியாக திருகோவிலுக்குச் சென்றான். வரகுணனைப் பிடித்திருந்த பிரம்மகத்தி கோவிலின் வெளியே தங்கியது. உள்ளே சென்ற வரகுணன் மகாலிங்கத்தை பலவாறு துதித்து வழிபாடு நடத்தினான். அப்போது இறைவனார் பாண்டியனே நீ மேற்கு வாயிலின் வழியாக வெளியேறு. கிழக்கு வாயிலில் பிரம்மகத்தி உன்னை பிடிப்பதற்காக காத்திருக்கிறது என்று திருவாய் அருளினார். வரகுணனும் இறைவனாரின் ஆணைப்படி மேற்கு வாயிலின் வழியே வெளியேறினான். மதுரைக்கு திரும்பிய வரகுணன் சொக்கநாதரை நாள்தோறும் வழிபட்டு வந்தான்.
சிவராத்திரி நாளன்று வேதங்கள் ஆகமங்கள் உள்ளிட்ட நூல்களில் கூறியபடி உலகம் அனைத்திலும் மேம்பட்ட சிவலோகத்தைக் காணும் ஆசை வரகுணனுக்கு ஏற்பட்டது. தன்னுடைய விருப்பத்தை சொக்கநாதரிடம் தெரிவித்து மனமுருக வழிபாடு மேற்கொண்டான். வரகுணனின் விருப்பத்தை நிறைவேற்ற சொக்கநாதர் திருவுள்ளம் கொண்டார். திருநந்தி தேவரை அழைத்து வரகுணனுக்கு சிவலோகத்தை காட்ட ஆணையிட்டார். திருநந்தி தேவரும் சிவலோகத்தை மதுரைக்கு எழுந்தருளச் செய்து வரகுண பாண்டியனின் கண்களுக்கு மட்டும் தெரியும்படி காட்டி அருளினார். இறைவன் இறைவியுடன் இருந்த காட்சியைக் கண்ட வரகுணன் பேரின்பக்கடலில் மூழ்கினான். ஹரி அயனால் அடிமுடி காணப்பெறாத சிவ ஜோதியே கண்டேன் பேறுபெற்றேன் பேறுபெற்றேன் என்று சொல்லி மகிழ்ந்தார். பாண்டியன் வணங்கித் துதி பாடுகையில் கைலாயம் மறைந்து விட்டது. மன்னன் ஆச்சரியமுற்று அருகில் இருப்பவரிடம் தான் கண்ட காட்சிகளைக் கூற அரசே நீரே பாக்கியவான் என அனைவரும் புகழ்ந்தனர். அன்று முதல் மதுரையம்பதி பூலோக சிவலோகம் என்று சிறப்பிக்கப்படுகிறது.
சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:
இறைவனார் தனது அடியவர்களுக்காக செயற்கரும் செயல்களைச் செய்து காட்டுவார் என்பதையும் பிரம்மகத்தி பாவம் பிடித்தவர்கள் தங்களின் பாவத்தைப் போக்கிக் கொள்வதற்கான வழிமுறையையும் இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.
கேள்வி: அனைத்து கோவில்களிலும் கர்ப்பகிரகத்தின் சுவற்றின் மேல் கஜலட்சுமி தாயார் இருப்பதின் தாத்பர்யம்:
ஆதிகாலத்திலே இந்தப் பழக்கம் இல்லையப்பா. இறையருளால் கூறவருவது என்னவென்றால் பிற்காலத்திலே இது ஏற்பட்டது. மனிதர்களுக்கு எந்த நிலையில் சென்றாலும் பொருளாசை என்பது விடாது. பொருளுக்குரிய தெய்வம் அன்னை மகாலட்சுமி என்று தெரிந்து விட்டதால் எல்லா இடங்களிலும் மகாலட்சுமி சின்னத்தை வைத்தால் மங்களமாகவும் பொருள் வரவாக இருக்கட்டுமே? என்றும் அதுபோல் இறையை ஆராதிக்கின்ற பணியை செய்கின்ற எனக்கு பொருள் வரவேண்டும் என்பதற்காகவும் பிற்காலத்திலே ஆலயம் நன்றாக இயங்க அங்கு நிரந்தர பொருள் சேரவேண்டும் என்பதற்காகவும் கூறப்பட்டது. அக்காலத்தில் சில இடங்களில் மகாலட்சுமிக்கு அனுதினமும் யாகமே நடந்ததுண்டு நிறைய பொன் பொருள் சேர்க்கை வேண்டும் நிறைய ஆடு மாடுகள் சேரவேண்டும் என்றெல்லாம். எனவே இவையனைத்தும் உலகியல் நோக்கத்திற்காக மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டது.
சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் மாமனாக வந்து வழக்குரைத்த படலம் முப்பத்தி ஒன்பதாவது படலமாகும்.
மதுரையில் தனபதி என்றொரு வணிகர் வாழ்ந்து வந்தார். அவருடைய மனைவி பெயர் சுசீலை. இத்தம்பதியினருக்கு நீண்ட நாட்கள் குழந்தைப்பேறு வாய்க்கவில்லை. இருவரும் எவ்வவோ அறச் செயல்கள் செய்தும் குழந்தையே பிறக்கவில்லை. அதனால் தனபதி தன் தங்கையின் புதல்வனை தன் பிள்ளைபோல் எண்ணி வளர்த்து அந்தப் பிள்ளையை தத்துப் பிள்ளையாக ஏற்றுக் கொண்டார். ஒரு நாள் அவரது சகோதரி அலட்சியமாக அவர்கள் குழந்தை பாக்கியமில்லாத மலடு என்றும் என்னுடைய பிள்ளையால் தான் உங்களுக்கு இம்மை மறுமைப் பயன்கள் கிடைக்கப் போகிறது என்று கூறினாள். இதனைக் கேட்டதும் தனபதி அடுத்த பிறவியிலாவது பிள்ளைப்பேறு கிடைக்க வேண்டும் என்று எண்ணி காட்டிற்குச் சென்று தவம் மேற்கொள்ள எண்ணினார். ஆகையால் தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் தன்னுடைய தங்கை மகனுக்கு உரிமையாக்கிவிட்டு தன் மனைவியோடு தவம் செய்ய காட்டிற்குச் சென்றார். தனபதி காட்டிற்குச் சென்றதை அறிந்த அவரது பங்காளிகள் அவரது தங்கையை வஞ்சித்து சொத்துக்களை எல்லாம் பறித்துக் கொண்டு அவளை அடித்து விரட்டி விட்டனர். இதனால் தனபதியின் தங்கை செய்வதறியாது திகைத்தாள். இறுதியில் சொக்கநாதரைச் சரணடைந்தாள்.
சொக்கநாதரே என் தமையன் மனம் வருந்தும்படி பேசிய பலனை இப்போது இப்படி அனுபவிக்கிறேன் என்னை மன்னியுங்கள். எல்லோருக்கும் தாயும் தந்தையுமாய் இருப்பவரே என்னுடைய தமையனார் குழந்தைப்பேறு வேண்டி தவத்திற்குச் செல்லும் போது தத்துப் பிள்ளையான எனது மகனுக்கு அவருடைய செல்வங்கள் அனைத்தையும் விட்டு சென்றார். இதனை அறிந்த எங்களது உறவினர்கள் பொய் வழக்கு பேசி சொத்துக்களை அபகரித்துக் கொண்டனர். ஐயனே நான் யாருமில்லாமல் தனியாக இருக்கிறேன். எனக்கு இவன் ஒருவனே புதல்வன். இவனோ நல்லது கெட்டது அறியாத சிறுவன். எங்களுக்கென்று யாரும் இல்லை. இறைவா எங்களை இந்நிலையிலிருந்து காப்பாற்றுங்கள் என்று மனமுருக வழிபட்டாள். பின் சோர்வு மிகுதியால் அங்கேயே கண்ணயர்ந்தாள். அப்போது சொக்கநாதர் அவளுடைய கனவில் தோன்றி பெண்ணே நீ நாளை உன்னுடைய சுற்றத்தாரை உன்னுடைய சொத்துக்களை கேட்டு வழக்காடு மன்றத்திற்கு அழைத்து வா. யாம் இப்பொய் வழக்கினைத் தீர்த்து உம்முடைய பங்கினை உமக்கு அளிப்போம் என்று கூறினார். இறைவனாரின் திருவாக்கினைக் கேட்டதும் திக்கற்றவருக்குத் தெய்வமே துணை என்பது இதுதானோ என்று எண்ணி தன்னுடைய வீட்டிற்கு மகனை அழைத்துக் கொண்டு சென்றாள். மறுநாள் தன்னுடைய உறவினர்களிடம் சென்று தன்னுடைய சொத்துக்களை திருப்பி அளிக்கும்படி கேட்டாள். அவர்கள் அவளையும் அவளுடைய மகனையும் திட்டி அடித்து விரட்டினர். உடனே அவள் அழுதபடியே வழக்காடு மன்றத்திற்குச் சென்று தன்னுடைய சொத்துக்களை உறவினர்களிடமிருந்து திருப்பித் தரும்படி கேட்டாள். வழக்காடு மன்றத்தினர் தனபதியின் உறவினர்களை அழைத்துவர உத்தரவு இட்டனர். வழக்காடு மன்றத்தில் தனபதியின் தங்கைக்கும் உறவினர்களும் வழக்கு நடைபெற்றது. அப்போது இறைவனார் தனபதியின் உருவில் வழக்காடு மன்றத்திற்கு வந்தார். தனபதியைக் கண்டதும் அவருடைய உறவினர்கள் நடுங்கினர்.
இறைவனான தனபதி தன்னுடைய தங்கையையும் மருமகனையும் கட்டிக் கொண்டார். பின்னர் சபையோர்களிடம் என் தங்கையின் வழக்கை ஆராய்ந்து தர்மத்தின் வழியில் நின்று முடிவினைத் தெரிவியுங்கள் என்றார். பின் வழக்காடு மன்றத்தில் இருந்தவர்கள் இருதரப்பினரையும் நன்கு கேட்டறிந்து உறவினர்களின் கூற்று பொய் என்று கூறினர். இதனைக் கேட்டதும் தனபதியின் உறவினர்கள் வந்திருப்பது தனபதியே அல்ல என்றனர். இதனைக் கேட்டதும் இறைவனான தனபதி அவருடைய சொத்துக்களின் விவரம் உறவினர்களின் விவரம் அவர்களின் குடிப்பெயர் உடன் பிறந்தோர் அவர்களின் குணங்கள் அவர்கள் செய்யும் தொழில்கள் ஆகியவற்றை விளக்கமாக எடுத்து உரைத்தார். இதனைக் கேட்டதும் வழக்காடு மன்றத்தினர் இவர் தனபதியே என்றனர். இதனைக் கேட்டதும் தனபதியின் உறவினர்கள் எல்லோரும் இனியும் இங்கிருந்தால் அரச தண்டனைக் கிடைக்கும் என்று கருதி ஒருவர் பின்னர் ஒருவராக வெளியேறினர். பின்னர் வழக்காடு மன்றத்தினர் தனபதியின் சொத்துக்கள் முழுவதும் அவருடைய தங்கை மகனுக்கு உரியது என்று கூறி சாசனம் அளித்தனர். தனபதியான இறைவனார் அந்த சாசனத்தை தனபதியின் தங்கையிடம் கொடுத்தார். பின்னர் எல்லோரும் பார்த்திருக்கும் போது அங்கிருந்து மறைந்தருளினார். இதனைக் கண்ட அங்கிருந்தோர் மாமனாக வந்தது சொக்கநாதரே என்பதை உணர்ந்தனர். இதனை சுந்தரேச பாத சேகர பாண்டியனிடம் தெரிவித்தனர். இறைவனின் திருவிளையாடலை எண்ணி வியந்தார் சுந்தரேச பாத சேகர பாண்டியன். மதுரையை நல்வழியில் ஆட்சி புரிந்து சிறிது காலத்திற்குப் பிறகு தன் மகனான வரகுண பாண்டியனிடம் நாட்டை ஒப்புவித்து இறைவனின் திருவடியை அடைந்தான்.
சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:
தனது தவறை உணர்ந்து அதனை திருத்திக் கொண்டு இறைவனை சரணடைபவர்களை இறைவன் கட்டாயம் காப்பார் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.
சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் உலவாக் கோட்டை அருளிய படலம் முப்பத்தி எட்டாவது படலமாகும்.
மதுரையில் அடியார்க்கு நல்லான் என்னும் வேளாளன் ஒருவன் இருந்தான். அடியவர்களுக்கு தொண்டு செய்வதே அறமாகக் கொண்டதால் அடியார்க்கு நல்லான் என்று பெயர் பெற்றான். அவனுடைய மனைவி தரும சீலை. இப்பெண்மணியும் அறவழியில் நடந்து கணவன் அறவழியில் செல்வதற்கு உதவினாள். தினமும் அடியவர்களுக்கு உணவு கொடுத்துவிட்டு அவர்கள் சாப்பிட்ட பின்பே இருவரும் உணவருந்துவார்கள். அடியார்க்கு நல்லான் தன்னுடைய வேளாண்மையில் விளைந்த பொருட்களில் ஆறில் ஒரு பகுதியை அரசுக்கு வரி செலுத்தி மீதி உள்ளதை சிவனடியார்களுக்கு திருவமுது செய்வித்தல் என்னும் சிறப்பான சேவையை செய்து வந்தான். தன்னுடைய செல்வங்கள் அனைத்தையும் அடியார்களுக்கு திருவமுது செய்விக்க பயன்படுத்தினான். இதனால் நாளடைவில் அடியார்க்கு நல்லானிடம் திருவமுது உண்ணும் சிவனடியார்களின் கூட்டம் பெருகியது. இந்நிலையில் இறைவனார் அடியார்க்கு நல்லான் தன்னுடைய செல்வம் குறைந்த போதிலும் சிவனடியார்க்கு செய்யும் திருவமுது செய்வித்தலை குறையாகக் கொள்ளமாட்டான் என்ற உயர்ந்த பண்பினை உலகுக்கு உணர்த்த விரும்பினார். நாளடைவில் அடியார்க்கு நல்லானின் விளைநிலங்களில் விளைச்சல் குறையத் தொடங்கியது. இதனால் அவனிடம் இருந்த செல்வவளம் குன்றியது. எனினும் அடியார்க்கு நல்லான் பிறரிடம் கடன் வாங்கி சிவனடியார்களுக்கு திருவமுது செய்வித்தான். ஒரு கட்டத்தில் கடனைத் திருப்பிக் கொடுக்காததால் அடியார்க்கு நல்லானுக்கு யாரும் கடன் தரவில்லை. அடியார்க்கு நல்லானும் தரும சீலையும் வறுமையால் சிவனடியார்களுக்கு திருவமுது செய்யவும் இயலாமல் பல நாட்கள் பட்டினி கிடந்தனர். இறுதியில் அடியார்க்கு நல்லான் தன்னுடைய மனைவியான தரும சீலையுடன் சொக்கநாதரின் சந்நிதிக்குச் சென்றான். அப்பனே என்னுடைய விளைநிலங்களில் விளைச்சல் இல்லை. எனவே பிறரிடம் கடன்வாங்கி அடியார்களுக்கு திருவமுது செய்வித்தேன். இப்போது எனக்கு கடன் கொடுப்பவர்கள் யாரும் இல்லை. தயவு செய்து கடன் தருபவர்கள் யாரவது இருந்தால் அவரை எனக்கு காட்டுங்கள். அவரிடம் கடன் பெற்று அடியார்களுக்கு திருவமுது செய்விப்பேன். இல்லையேல் எங்களுடைய உயிரினை விட்டுவிடுவோம் என்று மனமுருகி வழிபட்டான்.
அடியார்க்கு நல்லானின் வழிபாட்டினைத் தொடர்ந்து வானில் இறைவனார் வேளாளனே பயப்பட வேண்டாம். உன் வீட்டில் நெல் உள்ள ஒரு உலவாக்கோட்டை (உலவாக்கோட்டை என்பது 24 மரக்கால் அளவு கொண்ட கொள்கலன் ஆகும். 1 மரக்கால் என்பது 4 படி ஆகும். ) ஒன்றைச் வைத்துள்ளோம். அதிலிருந்து நெல்லை எப்பொழுது எவ்வளவு எடுத்தாலும் அள்ள அள்ளக் குறையாது. அதனைக் கொண்டு அடியவர்களுக்கு திருவமுது செய்விக்கும் தொண்டினையும் பிற தருமங்களையும் செய்து வருவாயாக. இறுதியில் யாம் வீடுபேற்றினை அளிக்கின்றோம் என்று திருவாக்கு அருளினார். அதனைக் கேட்ட அடியார்க்கு நல்லான் மகிழ்ந்து இறைவனாரை பலவாறு துதித்து வழிபாடு மேற்கொண்டு தன்னுடைய மனைவியுடன் தன்வீடு திருப்பினான். அங்கு இறைவனாரின் அருட்கொடையினால் அரிசிக் கோட்டையைக் கண்டான். நாள்தோறும் தன் மனைவியுடன் அதனை முறைப்படி வழிபட்டு அதிலிருந்து உணவுக்குத் தேவையானவற்றைப் பெற்று அடியார்களுக்கு திருவமுது செய்துவித்து நல்ல முறையில் வாழ்ந்து வந்தான். இறுதியில் இறையருளால் வீடுபேறு பெற்றான்.
சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:
தானத்தில் சிறந்தது அன்னதானம். அதனை எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் சிவனுக்கே செய்யும் தொண்டாக எண்ணி செய்தால் இறைவன் அவர்களின் செயலுக்கு துணை நிற்பார் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.
கேள்வி: பரம்பொருள் ஒன்றுதான் என்று கூறுகிறீர்கள். பரம்பொருள் நாராயணன் தமது தோஷம் நீங்க பரம்பொருள் சிவபெருமானை வழிபட்டதாக சில ஆலய வரலாறுகள் கூறுகின்றன. ஆனால் பரம்பொருள் சிவபெருமான் தனது தோஷம் மற்ற இறை வடிவங்களை பூஜித்ததாக உள்ளதா? அப்படியென்றால் சிவபெருமான் தான் உச்சநிலை பரம்பொருள் வடிவமா?
இப்படியும் கதை கூறப்பட்டிருக்கிறது. அப்படியும் கதை கூறப்பட்டிருக்கிறது. முக்கண்ணனாகிய சிவபெருமான் தன்னிடம் உள்ள பிரம்ம கபாலம் நீங்க நாராயணனையும் மகாலட்சுமியையும் அண்டியதாக ஒரு கதை இருக்கிறது. அதைப்போல அடிமுடி காண முடியாமல் சிவனின் திருவடியை மகாவிஷ்ணு தீண்டியதாகவும் ஒரு கதை இருக்கிறது. இவற்றையெல்லாம் தத்துவார்த்தரீதியாக புரிந்து கொள்ள வேண்டும். எந்த உயரத்தில் இருந்தாலும் எல்லோரும் தன்னை தாழ்த்திக் கொள்கிறார்கள், மனிதனும் அவ்வாறுதான் இருக்கவேண்டும் என்றுதான் புரிந்து கொள்ள வேண்டுமே தவிர இருவரின் கருத்து சண்டையாகவும் சச்சரவாகவும் மாறிவிடக் கூடாது.
கேள்வி: பரம்பொருள் சிவபெருமான் லிங்க வடிவமாக இருப்பதன் பொருள் என்ன ?
இறைவனின் கருணையைக்கொண்டு கூறுவது யாதென்றால் லிங்க வடிவிலும் இறைவன் இருக்கிறார் என்று மனிதர்களுக்கு ஒரு பகுதியினர் போதித்திருக்கிறார்கள். அம்பாளைப் பார்த்தாலும் அதுவும் இறைவனின் ஒரு வடிவம்தான். வேறு எந்த வடிவத்தைப் பார்த்தாலும் அதுவும் இறைவனின் வடிவம்தான். இருந்தாலும் கூட லிங்க வடிவத்திற்கு யாங்கள் முன்னரே விளக்கம் கூறியிருக்கிறோம். விளக்கம் அறிந்தவரிடம் இன்னவன் அறிந்து கொள்ளலாம்.