ராமாயணம் 5. சுந்தர காண்டம் பகுதி – 1

ராம காரியமாக செல்லும் அனுமன் வானரங்களிடம் பேசினார். இலங்கை செல்லப் போகிறேன். அங்கு சீதையை காணவில்லை என்றால் அங்கிருந்து தேவலோகத்திற்கு தாவிச் சென்று தேடுவேன். அங்கும் இல்லை என்றால் சீதையை தூக்கிச் சென்ற ராவணனை கட்டி இழுத்துக் கொண்டு வருவேன். தேவைப்பட்டால் இலங்கை மொத்த நகரத்தையும் பெயர்த்தெடுத்து வந்து விடுவேன் என்றார். தன்னை கருடனாகவே பாவித்துக் கொண்டு ராம பாணத்தில் இருந்து வேகமாக வெளியேரும் அம்பு போல் அனுமன் வேகமாக தாவினார் அனுமன். அனுமன் ஆகாயத்தில் செல்லும் வேகத்தில் அங்கிருக்கும் மேகக்காற்று எழுப்பிய சத்தங்கள் பெருங்கடலை நடுங்கச் செய்தது. சூழ்நிலைக்கு ஏற்ப சாமர்த்தியமும் அறிவும் சிந்தனை வேகமும் கொண்ட அனுமனுக்கு வழியில் சில சோதனைகள் வந்தது. வானவீதியில் செல்லும் அனுமனை முனிவர்கள் வாழ்த்தினார்கள்.

ராம காரியமாக செல்லும் அனுமனை பார்த்த கடலரசன் அனுமனுக்கு உதவி செய்ய எண்ணினார். கடலின் நடுவில் அனுமன் இளைப்பாறிச் செல்வதற்கான ஏற்பாடுகளை செவ்வோம் இதனால் அனுமன் மேலும் புத்துணர்ச்சியுடன் செல்வார் என்று எண்ணினார். தனது கடலுக்குள் இருக்கும் மைனாகம் என்னும் மலையிடம் தண்ணிருக்குள் இருந்து மேலே வந்து அனுமனுக்கு உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டார். கடலரசன் கேட்டுக் கொண்டதால் மைனாகம் என்னும் மலை தண்ணீரில் இருந்து விரைவாக மேலே இருந்து வந்தது. கடலுக்கு நடுவே தானாக மேலெழுந்து வரும் மலையைப் பார்த்து இந்த மலை நமக்கு நடுவே ஒர் இடையூறாக இருக்கிறது என்று எண்ணிய அனுமன் மிகவும் வேகத்தோடு அந்த மலையை மேகத்தை தள்ளுவது போல தள்ளினார். அனுமனால் தள்ளப்பட்ட மலையானது அனுமனின் வேகத்தை அனுபவப்பூர்வமாக உணர்ந்து பெரிதும் ஆச்சரியமும் ஆனந்தமும் அடைந்தது. மலை வடிவில் இருந்து மனித உருவத்தை பெற்று அனுமனிடம் பேசத் தொடங்கியது.

ராம காரியமாக செல்லும் தங்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் கடலரசன் என்னை வெளியே வருமாறு கேட்டுக் கொண்டார். இங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டுப் பிறகு செல்லுங்கள் என்றது மைனாகம் மலை. அதற்கு அனுமன் உங்கள் வரவேற்பினால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். ஆனால் எனக்கு இங்கு தங்குவதற்கு நேரம் இல்லை. நான் இங்கு தங்கிச் சென்றால் ராம காரியம் மேலும் தாமதமாகும். நான் விரைவாக செல்ல வேண்டும். உங்களை எனது வேகத்தால் தள்ளியதாலும் இங்கு தங்க மறுப்பதாலும் என் மீது கோபம் கொள்ளாதீர்கள் என்று மலையை கடந்து சென்றார் அனுமன். அனுமனின் பராக்கிரமத்தை பார்த்த தேவர்கள் மேலும் அனுமனின் வலிமையையும் சாமர்த்தியத்தையும் பார்க்க விரும்பினார்கள். அதனால் நாகமாதாவான சுரஸையிடம் ராம காரியமாக அனுமன் கடலை தாண்டிக் கொண்டிருக்கிறார் அவர் செல்லும் வழியில் சென்று இடையூறு செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள். அதற்கு நாகமாதா சுரஸையும் சம்மதித்து அனுமன் தாண்டிக்கொண்டிருக்கும் இடத்திற்கு சென்றாள்.

ராம காரியமாக செல்லும் அனுமனின் முன்பாக கொரமான பெரிய ராட்சச உருவத்தை எடுத்த நாகமாதா சுரஸை அனுமனை தடுத்து நிறுத்தினாள். வானர வீரனே இன்று தெய்வங்களின் அருளால் எனக்கு நீ உணவாக கொடுக்கப் பட்டிருக்கிறாய். உன்னை சாப்பிடப் போகிறேன் எனது வாய்க்குள் நீயாக சென்றுவிடு என்றாள். அவளை வணங்கிய அனுமன் ராம காரியமாக இப்பொழுது நான் இலங்கைக்கு சென்று கொண்டிருக்கிறேன். நான் இங்கு உனக்கு ஒரு சத்தியம் செய்து கொடுக்கின்றேன். இலங்கையில் சீதையை கண்டதும் அச்செய்தியை ராமரிடம் சொல்லி விட்டு மீண்டும் உன்னிடம் வந்து உனது விருப்பப்படி வாய்க்குள் செல்கிறேன். இப்பொழுது ராம காரியத்துக்கு செய்யும் உதவியாக எனக்கு வழி விடுவாயாக என்று கேட்டுக் கொண்டார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.