ராமர் எப்படியும் நாம் இருக்கும் இடத்தை கண்டு பிடித்து இந்த ராட்சசர்கள் அனைவரையும் அழித்து நம்மை வந்து மீட்பார் என்று மன தைரியத்தில் இருந்த சீதை ராட்சசிகளிடம் பேச ஆரம்பித்தாள். சூரியனை சுற்றி அதனுடைய பிரகாசம் சுற்றி நிற்பது போல் நான் எனது ராமனை சுற்றியே நின்று கொண்டிருப்பேன். நீங்கள் ராமரைப் பற்றிய தவறான தகவல்களை தெரிந்து வைத்துக் கொண்டு பேசுகின்றீர்கள். ஒரு மனித பெண்ணை ஒரு ராட்சசன் விரும்புவது முறையில்லை. ஒரு மனித பெண் எப்படி ராட்சசனுடன் இருக்க முடியும். நீங்கள் சொல்வது அனைத்தும் பாவகரமான வார்த்தைகளாக இருக்கிறது என்றாள். இதனைக் கேட்ட ஒரு ராட்சசி சீதையிடம் பேசி பிரயோஜனம் இல்லை அவளைத் தின்று விடலாம் என்றாள். இன்னொரு ராட்சசி அவள் மார்பை கிழித்து இதயத்தை நான் நின்று விடுகிறேன் என்றாள். ராவணன் சீதை எங்கே என்று கேட்டால் சீதை துக்கத்தில் இறந்து விட்டாள் என்று சொல்லி விடலாம். இதனால் ராவணன் இனி எந்த கவலையும் இல்லாமல் நிம்மதியாக தூங்குவார். இப்போது இவளை நாம் அனைவரும் பங்கிட்டு சாப்பிட்டு மகிழ்ச்சியுடன் இருப்போம் என்று ஒவ்வொரு ராட்சசியும் தனது பங்கிற்கு சீதையின் ஒவ்வொரு பாகமாக சொல்லி தின்று விடுவதாக அவர்களுக்குள் பேசிக் கொண்டார்கள். ராட்சசிகளின் கொடூரமான பேச்சை கேட்ட சீதை ராமரை நினைத்துக் கொண்டாள். தண்ட காருண்ய காட்டில் 14000 ராட்சசர்களை சில கனங்களில் கொன்ற ராமர் ஏன் இன்னும் என்னை மீட்டு போக வரவில்லை நாம் இருக்கும் இடம் இன்னும் அவருக்கு தெரியவில்லையா தெரிந்தால் சும்மா இருப்பாரா என்று நினைத்துக் கொண்டே வாய்விட்டு அழுதாள். சீதையின் அழுகையை கண்டு கொள்ளாத ராட்சசிகள் அவளை பயமுறுத்தி தங்கள் வழிக்கு கொண்டு வந்து விடலாம் என்று எண்ணி சீதையை எப்படி திண்பது என்று சீதை முன்பாக அவளை பயமுறுத்தி பேசிக்கொண்டே இருந்தார்கள்.
ராமரைப் பற்றி சீதை பல வகையில் நினைக்க ஆரம்பித்தாள். ராட்சசன் நம்மை தூக்கி வந்ததும் நாம் அவரை பிரிந்த துக்கத்தில் தவத்தில் ஈடுபட்டு ஆயுளைக் கழித்து விடலாம் என்ற எண்ணத்தில் காட்டில் தவத்தில் அமர்ந்து விட்டாரோ என்று நினைத்தாள். மனம் துக்கத்தில் இருக்கும் போது அமைதியாக தவம் செய்ய முடியாது ஆகவே தவத்தில் இருக்க வாய்ப்பில்லை என்று நினைத்தாள். அதன் பிறகு நம் மீது ராமருக்கு அன்பு குறைந்து விட்டதோ அதனால் நம்மை தேடி வரவில்லையோ என்று நினைத்தாள். நம் மீது ராமர் காட்டும் அன்பு உண்மையானது அவர் நம்மை மறக்க மாட்டார். இப்படி ஒரு எண்ணம் நமக்கு வரக்கூடாது. இந்த எண்ணம் பாவமாகும் என்று நினைத்தாள். அதன் பிறகு ராவணன் நம்மை ஏமாற்றி தூக்கி வந்தது போல் ராமரையும் லட்சுமணனையும் ஏமாற்றி யுத்தம் செய்து கொன்றிருப்பானோ என்று நினைத்தாள். ராமர் மிகவும் அறிவும் வலிமையும் உடைய வீரர். அவருடன் லட்சுமணனும் இருக்கின்றான். அவரை எப்படி ஏமாற்ற நினைத்தாலும் அவரை ஏமாற்றி யுத்தம் செய்து வெற்றி அடைய முடியாது என்று நினைத்தாள். அதன் பிறகு நான் இல்லாத துக்கத்தில் ராமர் இறந்து விட்டாரோ அப்படி இருந்தால் அவர் சொர்க்கத்திற்கு சென்றிருப்பார். நான் அவரை பிரிந்த துக்கத்தில் இன்னும் உயிரோடு இருக்கிறேனே நான் எவ்வளவு பெரிய பாவியாக இருக்கிறேன். இப்போதே எமது உயிரை விட்டுவிட்டு ராமர் இருக்கும் சொர்க்கத்திற்கு சென்று விடலாம் என்று தனது தலை முடியில் மரத்தில் சுருக்குப் போட்டுக் கொண்டு உடலை விட்டு விடலாம் என்று எண்ணினாள். அப்போது திரிஜடை என்ற ராட்சசி அங்கு வந்து ராட்சசிகள் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தாள். சீதையின் முன்பாக அவளை பயமுறுத்தி இப்படி எல்லாம் பேசாதீர்கள் என்று கண்டித்தாள். நான் ஒரு கனவு கண்டேன் கேளுங்கள் என்று சொல்ல ஆரம்பித்தாள்.