ராமாயணம் 5. சுந்தர காண்டம் பகுதி – 9

சீதை அனுமனிடம் பேச ஆரம்பித்தாள். வானர உருவத்தில் இருக்கும் உங்களை நான் சந்தேகப்பட்டேன் என்று நீங்கள் வருத்தப்படாதீர்கள். வஞ்சக ராட்சசனால் ஏமாற்றப்பட்டு தூக்கி வரப்பட்டேன். இதனால் எதையும் நம்ப முடியாமல் நான் பயப்படுகிறேன். நீங்கள் எப்படி ராமரை சந்தித்து நட்பு கொண்டீர்கள் விவரமாக சொல்லுங்கள் என்று சீதை அனுமனிடம் கேட்டுக் கொண்டாள். அனுமன் வாலிக்கும் சூக்ரீவனுக்கும் உள்ள பகைமை முதல் கடல் தாண்டி வந்து ராவணனின் அந்தப்புரத்தில் சீதையை தேடி இறுதியில் இந்த அசோக வனத்தில் சீதையை கண்டது வரை அனைத்தையும் சொல்லி முடித்தார். ராமரின் தூதுவன் நான் என்று தாங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று ராமர் தன்னுடைய மோதிரத்தை எனக்கு கொடுத்தார். அதனை தங்களிடம் அளிக்கிறேன் பாருங்கள் அப்போது என் மீது தங்களுக்கு நம்பிக்கை வரும் என்று ராமர் தன்னிடம் கொடுத்த மோதிரத்தை எடுத்து சீதையிடம் கொடுத்தார். சீதை மோதிரத்தை வாங்கி தனது கண்களில் ஒற்றிக் கொண்டாள். அனுமன் மீதிருந்த சந்தேகம் முற்றிலும் போய் அனுமன் மீது சீதைக்கு நம்பிக்கை வந்தது. உன் மீதா நான் சந்தேகம் கொண்டேன் என்று சீதை அனுமனிடம் வருந்தினாள். அனுமன் சீதையிடம் விரைவில் ராமர் விரைவில் இங்கு வந்து ராவணனை அழித்து தங்களை மீட்பார் கவலை வேண்டாம் என்று கூறினார்.

ராமரும் தன்னைப் பிரிந்த துக்கத்தில் இருக்கிறாரே என்று சீதை வருந்தினாள். நீங்கள் ராமரிடம் இருந்து கொண்டு வந்த செய்தி எனக்கு அமிர்தம் கலந்த விஷம் போல் உள்ளது. ராமர் விரைவில் இங்கு வந்து என்னை சந்திப்பார் நான் அவரை பார்க்கப் போகின்றேன் என்று மகிழ்வதா இல்லை ராமர் என்னை நினைத்து துக்கத்துடன் இருக்கிறார் என்று வருத்தப்படுவதா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் ராமர் என்னை மறக்காமல் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்னை தேடிக் கொண்டிருக்கிறார் என்ற செய்தி எனக்கு ஆனந்தத்தை அளிக்கிறது. என்னுடைய செய்தியாக நான் சொல்வதை அப்படியே ராமரிடம் சென்று சொல்லுங்கள் என்று சீதை சொல்ல ஆரம்பித்தாள். இந்த இலங்கையில் ராவணனின் தம்பி விபிஷணன் என்பவன் சீதையை ராமரிடம் சென்று சேர்த்துவிடு இல்லை என்றால் ராட்சச குலம் அனைத்தும் ராமரால் அழியும் என்று ராவணனிடம் எவ்வளவோ அறிவுறை கூறினான். ஆனால் ராவணன் கேட்கவில்லை. எனக்கு பன்னிரண்டு மாத காலம் அவகாசம் அளித்திருக்கிறான். அதில் பத்து மாத காலம் முடிந்து விட்டது. இன்னும் இரண்டு மாத காலம் மட்டுமே உள்ளது. அதற்குள் வந்து ராமர் என்னை மீட்டுச் செல்ல வேண்டும் இல்லை என்றால் ராவணன் என்னை சமைத்து சாப்பிட்டு விடுவதாக சொல்லியிருக்கிறான் என்று சீதை பேசி முடித்தாள்.

அனுமன் சீதையிடம் பேச ஆரம்பித்தாள். இந்த கடலை சில கனத்தில் நான் தாண்டிச் சென்று தங்களின் செய்தியை ராமரிடம் சொல்லி விடுவேன். ராமர் விரைவில் பெரும் சேனையுடன் இலங்கைக்கு வந்து விடுவார் கவலைப்படாதீர்கள். ராவணனோடு சேர்த்து இந்த இலங்கை நகரத்தையே மொத்தமாக தூக்கிக் கொண்டு போய் ராமரிடம் சேர்க்கும் வல்லமை என்னிடம் இருக்கிறது. உங்களுக்கு விருப்பம் இருந்தால் என்னுடைய முதுகில் ஏறி அமர்ந்து கொள்ளுங்கள். இப்போதே இந்த கடலைத் தாண்டிப் போய் ராமரிடம் உங்களை சென்று சேர்த்து விடுவேன். அதற்கான போதிய பலம் என்னிடம் இருக்கிறது. சிறிதும் தங்களுக்கு சந்தேகம் வேண்டாம். உத்தரவிடுங்கள் தாயே இப்பொழுதே இதனை செய்து முடிக்கிறேன். கடலை தாண்டும் போது என்னை தடுக்கும் பலம் இங்கு யாருக்கும் இல்லை. இன்றே தாங்கள் ராமரை சந்தித்து விடலாம் என்றார் அனுமன்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.