காளி மரச்சிற்பம்

எட்டு கரங்களைக் கொண்ட காளி தேவி ஈசனுக்கே உரியதான சந்திரப்பிறைக் கொண்ட கிரீடத்தை அணிந்துள்ளார். இங்கே இவள் தீயவற்றை அழிக்க கோபத்துடன் பார்க்கும் கண்கள் மற்றும் கோரைப் பற்களுடன் காட்சியளிக்கின்றாள். தேவி அணிந்துள்ள காதணிகளில் வலது காதில் சிங்கத்தையும் இடது காதில் யானையையும் அணிந்திருக்கிறாள். ஒவ்வொரு கைகளிலும் அரிவாள் வில் அம்பு ஈட்டி மண்டை ஓடு சுடர்விடும் ரத்தினம் என்று தமிழில் அறியப்படும் அரிவாள் வடிவ பலி வாள் ஏந்தியிருக்கிறாள். 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மரத்தில் செதுக்கப்பட்ட காளி தேவியின் சிலை தற்போது அமெரிக்கா நாட்டின் நியூயார்க் நகரம் மெட்ரோபாலிட்டன் கலை அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

சரஸ்வதிதேவி

மணல் கல்லிலான முப்பெரும் தேவியர்களின் ஒருவரான சரஸ்வதிதேவியின் சிற்பம். நேபாளத்தை சேர்ந்த இந்த சிற்பம் 10 மற்றும் 11 நூற்றாண்டை சேர்ந்தது. தற்போது இருக்கும் இடம்: வால்டர்ஸ் கலை அருங்காட்சியகம். பால்டிமோர் ஆசிய கலை அருங்காட்சியகம் சான்பிரான்சிஸ்கோ.

வாராஹிதேவி

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் பெர்ஹாம்பூருக்கு அருகில் பூர்ணகிரி மலைத் தொடரில் அமைந்துள்ள ஆதி சக்தி பீடமாக விளங்கும் தாராதாரிணி கோயிலில் அன்னை வாராஹிதேவி. நான்கு கரங்களில் பின் இருக்கரங்களில் சங்கு சக்கரம் ஏந்திய படியும் சாந்தமே உருவாக கையில் குழந்தையுடன் அன்னை காட்சியளிக்கின்றாள்.

லலிதாசனத்தில் சிவனும் பார்வதியும்

புதுக்கோட்டை மாவட்டம் 7ஆம் நூற்றாண்டில் மன்னன் நந்திவா்ம பல்லவன் காலத்தில் குன்றாண்டார் கோவில் குடைவரைக் கோவிலாக கட்டப்பட்டது. இக்கோயில் திருக்குன்றக்குடி என்றும் அழைக்கப்படும். கோவிலின் வலதுபுறத்தில் உள்ள அடிவாரத்தில் சிவபெருமானும் உமையம்மையும் லலிதாசனத்தில் அமர்ந்து அருள் பாலிக்கிறார்கள்.

ஏலவார்குழலி

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்சுவரர் கோவில் வரலாற்றை விளக்கும் தூணில் உள்ள சிற்பம். ஒரு முறை சிவபெருமான் கைலாசத்தில் யோகத்தில் இருந்த போது பார்வதி தேவி ஈசனின் இரண்டு கண்களை விளையாட்டாக மூடினாள். இதனால் கிரகங்கள் இயங்கவில்லை. சூரியன் உதிக்கவில்லை. உலகம் இருண்டு இயக்கம் நின்றது. நிலைமையைக் கண்ட பார்வதிதேவி தான் பெரும் தவறு செய்து விட்டோம் என்பதை உணர்ந்து சிவனிடம் மன்னிப்பு வேண்டினாள். ஈசனோ செய்த தவறுக்குத் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும் என்று கூறி பூலோகத்தில் பெண்ணாகப் பிறந்து தன்னை நோக்கிக் கடுந்தவம் செய்தால் விமோசனம் கிடைக்கும் என்றார். அம்பாள் தவம் செய்ய ஏற்ற இடத்தைக் கேட்க ஈசன் காஞ்சிபுரம் ஸ்தலத்திற்குப் பார்வதிதேவியை அனுப்பினார். ஏலவார்குழலி என்ற பெயரில் காஞ்சிபுரத்தில் வந்து மாமரத்தின் அடியில் மணலால் லிங்கத்தைப் பிடித்து வைத்து அக்னியின் நடுவில் நின்றபடி தவம் செய்தாள். அவளது தவத்தின் வலிமையைச் சோதிக்க எண்ணிய சிவபெருமான் தன் தலையில் சூடிக் கொண்டிருக்கும் கங்கையை தேவி தவம் செய்யும் இடத்தில் பாயுமாறு செய்தார். கங்கை வெள்ளமாகப் பாய்ந்து வர தான் பிடித்து வைத்திருந்த லிங்கம் கரைந்து விடும் என்று அஞ்சிய தேவி லிங்கத்தை மார்போடு அணைத்துக் கொண்டாள். அம்பாளின் பக்தியில் மகிழ்ந்த சிவ பெருமான் தேவிக்குக் காட்சி தந்து அவள் பாவத்தை மன்னித்து அருளி திருமணம் செய்து கொண்டார். இடம் காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில்.

மகிஷாசுரமர்தினி

எருமை வடிவில் உள்ள அரக்கனை அழிக்கும் துர்கை. உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த இச்சிலை தற்போது அமெரிக்காவில் பிலடெல்பியா கலை அருங்காட்சியகத்தில் உள்ளது. காலம் 8 ஆம் நூற்றாண்டு.

ஜைன யக்ஷினி சக்ரேஸ்வரி தேவி

ஸ்ரீ ரிஷவநாத தீர்த்தங்கரரின் தேவி ஷாஷனாதேவி ஆவார். பொன்னிறமான இவர் இருபது கரங்களுடன் ஒவ்வொரு கரத்திலும் ஒரு ஆயுதத்தை ஏந்திக் காட்சியளிப்பார். மேல் இரு கரங்களில் இரண்டு சக்கரங்களை ஏந்தியவாறும் திரிசூலம், வஜ்ரம், வாள், கோடரி, சக்கு, சக்கரம், மணி, வில், அம்பு, கயிறு, யானைத் தேகம் அக்ஷரமாலை மற்றும் கமண்டலம் ஆகியவற்றை ஏந்தியவாறு அருள்பாலிக்கிறாள். இத்தேவதையின் வாகனம் கழுகு.

கலிங்கத்தின் காந்திரஷ்ருங்கா என்பது அதிகம் அறியப்படாத ஜெயின் பாரம்பரிய பல பழங்கால பொருட்கள் உள்ள தளம். அங்கு தான் இத்தேவதை அமர்ந்துள்ளார்.

சிம்மவாகினி

துர்காதேவி சிங்க வாகனத்தின் மீது அமர்ந்தபடி சிம்மவாகினியாக காட்சி அளிக்கிறாள். தற்போது இச்சிலை நேபாள நாட்டின் காத்மாண்டு நகரில் தேசிய அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பம் 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது.