தடாதகைப்பிராட்டியார் – மும்முலை அம்மன்

ஸ்ரீ மீனாட்சி (மூன்று மார்பகங்களுடன்) போர்க்கோலம் பூண்டு திக்விஜயம்  செல்லும் ஒர் அரிய  சிற்பம் இவ்வாலயத்தூணில் அழகுற அமைக்கப் பட்டுள்ளது. இடம்: பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோயில். கொங்கு பகுதியை ஆண்ட விக்கிரம சோழன் காலத்திலும் பின்னர் 12-13 ஆம் நூற்றாண்டு சுந்தர பாண்டியன் காலத்தில் திருப்பணி செய்யப்பட்டு திரு அகத்தீஸ்வரமுடையார் என்ற பெயர் கொண்ட சிவாலயம் பிற்காலத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயிலாகப் புகழ் பெற்றது.

சிவநந்தி துர்கா

சாளுக்கியர்களின் முதல் தலைநகரம் மலபிரபா ஆற்றின் கரையில் அமைந்திருந்தது. இங்கு சிவநந்தி துர்கா கோவில் உள்ளது. கிபி 6 ஆம் நூற்றாண்டில் கட்ட ஆரம்பிக்கப்பட்டு கிபி 12 ஆம் நூற்றாண்டு வரை இக்கோயில் கட்டப்பட்டது. இங்கு 125 க்கும் மேற்பட்ட கோயில்கள் பல்வேறு வடிவங்களில் உள்ளது. இடம் ஐஹோல் கர்நாடகா.

சாமுண்டி

இயமனின் மனைவி என்பதைச் சுட்டுமாறு இவரது திருவடிக்கீழ் எருமைத்தலை செதுக்கப்பட்டுள்ளது. குடைவரைக் காலச் சாமுண்டிகளில் இவரே அளவில் பெரியவர். படியச் சீவி உச்சியில் கொண்டையிட்ட சடைப்பாரமும் மிகப் பெரிய முகமும் கொண்டுள்ள சாமுண்டியின் செவிகளில் சடல குண்டலங்கள் தோள்களை வருடுகிறது. கொண்டையின் முகப்பில் மண்டையோடு உள்ளது. வலக் கையில் சுரைக் குடுவை உள்ளது. இடம் சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருக்கோளக்குடிக் குடைவரை கோவில். தமிழ்நாட்டிலேயே மிக அதிக அளவிலான கல்வெட்டுப் பதிவுகளைக் கொண்டுள்ள ஒரே குடைவரை கோயில் கோளக்குடிதான்.

உமையொரு பாகன்

ஒரு பாதி ஆண்மைக்குரிய திண்மையும் உறுதியும் மறுபாதியில் பெண்மையின் மென்மையும் நளினமும் கொண்ட உமையொரு பாகன். இடம்: அமிர்தகடேஸ்வரர் கோயில். மேலக்கடம்பூர் கடலூர்மாவட்டம்.

யோகினி

64 யோகினிகளில் ஒருவரான யோகினி யமுனை சிதிலமடைந்த நிலையில் இருக்கிறாள். இந்த யோகினி ஒரு ஆமையின் மேல் ஒரு காலையும் அதன் வால் முனையின் மேல் மற்றொரு காலையும் வைத்து தன்னை சமநிலைப்படுத்திக் கொள்வதைக் காணலாம். இந்த யோகினிக்கு நான்கு கைகள் உள்ளன. மிகவும் குறிப்பிடத்தக்க தனிச்சிறப்பான அம்சம் இவளது தலையை சுற்றி சுருண்டு எழும்பியுள்ள ஜடாமுடி தான்.

அமைவிடம்: சௌசாத் யோகினி கோவில் ஹிராபூர் ஒடிசா மாநிலம்.

லலிதை

பிள்ளையார் முருகனுடன் லலிதை சிதிலமடைந்த நிலையில் சிற்பம். தற்போது பிரித்ததானிய அருங்காட்சியகத்தில் உள்ளது. காலம் 11 ஆம் நூற்றாண்டு ஒடிசா கோயிலில் இருந்த சிற்பம்.

வள்ளிமலை வள்ளி

வள்ளி மலைக் கோவிலில் சுப்ரமணியர் குடவறை சன்னதியில் வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார். வள்ளி வேடர் குலத்தில் வளர்ந்ததால் அர்த்த ஜாம பூஜையில் தேனும் தினை மாவும் நைவேத்யமாக படைக்கப்படுகிறது. வள்ளி வாழ்ந்த இடம் என்பதால் அவளது பெயரிலேயே இத்தலம் அழைக்கப்படுகிறது. அடிவாரம் மற்றும் மலைக் கோவிலில் குமரி வள்ளிக்கு தனி சன்னதி இருக்கிறது. இவள் கையில் பறவை விரட்ட பயன்படுத்தும் உண்டி வில் கவண் கல் வைத்திருக்கிறாள். முருகன் வள்ளியுடன் பேசிக்கொண்டிருந்த போது அங்கு நம்பிராஜன் வந்து விட்டார். எனவே முருகன் வேங்கை மரமாக உருமாறி தன்னை மறைத்துக் கொண்டார். இந்த மரமே இத்தலத்தின் விருட்சமாக இருக்கிறது. வள்ளி பாறைச் சிற்பமாக இங்கே அருள் பாலிக்கிறாள். இடம்: வேலூரில் இருந்து 25 கிமீ தூரத்தில் உள்ள வள்ளிமலை.