சுலோகம் -93

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-46

எல்லாப் பக்கங்களிலும் நிறைந்த நீர் நிலையை அடைந்த பிறகு சிறிய நீர் நிலைகளினால் எவ்வள்ளவு பயன் இருக்கிறதோ பிரம்மத்தை தத்துவ ரீதியாக உணர்ந்த பிராமணனுக்கு அனைத்து வேதங்களினாலும் அவ்வளவு பயன் தான் கிடைக்கும்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

தண்ணீர் தாகம் கொண்ட ஒருவனுக்கு எவ்வளவு பெரிய நீர் நிலைகள் கிடைத்தாலும் தாகம் தீரும் அளவிற்கே தண்ணீர் தேவைப்படும். தண்ணீர் குடித்து தாகம் தீர்ந்ததும் அவனுக்கு பெரிய மற்றும் சிறிய கிணறு குளம் போன்றவைகள் தேவைப்படாது. அது போலவே மோட்சத்தை தேடும் ஒருவனுக்கு வேதங்களில் எவ்வளவு கருத்துக்கள் இருந்தாலும் மோட்சத்திற்கு செல்லத் தனக்கு தேவையானதை மட்டுமே எடுத்துக் கொள்வான். மீதி உள்ளதை பற்றி நினைக்க மாட்டான் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -92

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-45

அர்ஜுனா வேதங்கள் மூன்று குணங்களின் செயல்களான போகங்களையும் அவற்றின் சாதனை முறைகளையும் தெளிவாக சொல்கின்றன. நீ இந்த மூன்று குணங்களையும் கடந்தவனாக இருப்பாயாக. போகங்களிலும் அவற்றின் சாதனங்களிலும் பற்று கொள்ளாதவனாக இரட்டைகளாக வரும் நன்மை தீமை இருள் வெளிச்சம் சுக துக்கம் போன்றவற்றிற்று ஆட்படாதவனாக நித்யப் பொருளான பரமாத்மாவிடம் நிலை பெற்று லோக சேமத்திற்காக பொருள் சேர்ப்பது அதனை காப்பாற்றுவது என்பதை விரும்பாதவனாக தனக்கு வசப்பட்ட மனமுடையவனாக ஆகக்கடவாய்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

சாத்விகம் இராஜசம் தாமசம் என்ற மூன்று குணங்களை வேதங்கள் சொல்கின்றன. மனிதனுக்கு மனிதன் குணம் மாறுபடும். இவை அனைத்தும் சாத்விகம் இராஜசம் தாமசம் குணங்கள் என்ற மூன்று வகைக்குள் அடங்கிவிடும்.

  1. சாத்வீக குணம் – மனிதனுக்கு ஞான ஒளியையும் நன்மார்க்கத்தில் விருப்பத்தையும் அளிக்கிறது.
  2. ரஜோ குணம் – ஆசை பற்று முதலிய குணங்களை அளித்து கர்மங்களில் ஈடுபடத் தூண்டுகிறது.
  3. தாமசகுணம் – மயக்கம் சோம்பல் உறக்கம் முதலியவற்றை ஏற்படச் செய்கிறது.

மனிதனாக பிறந்தவன் ஏதேனும் ஒரு காரியம் செய்து ஏதேனும் ஒரு வித அனுபவம் பெற்றிருப்பான். இந்த அனுபவத்தில் முக்குணங்களின் கலவை அல்லது ஒரு குணமாவது நிச்சயமாக இருக்கும். இதனை தவிர்க்க முடியாது. இந்த உடலினாலும் அல்லது அதன் மூலம் செய்யப்படும் எந்த ஒரு செயலினாலும் வரும் பயன்கள் நம்முடையது அது நமக்கு வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இருக்க வேண்டும். இதன் பயனாக மனிதர்களுக்கு இரட்டையாக வரும் மகிழ்ச்சி துயரம் மற்றும் விருப்பு வெறுப்பு இவற்றிற்கு ஆட்படாமல் சரிசமமான மனதுடன் எதனாலும் பாதிக்கப்படாமல் இருக்கலாம். இதன் பயனாக நித்யப் பொருளான பரம்பொருளை இடைவிடாமல் சிந்தனை செய்து கொண்டு அதிலேயே மனம் அசையாமல் நிலைத்து நிற்கலாம். அதன் பயனாக உலக பொருள்களின் மீது பற்றோ அதனை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமோ இருக்காது.

மனம் புத்தி புலன்கள் இவை மூன்றும் நம் வசத்தில் இல்லாதவரை இவை நமக்கு எதிரிகளாக இருக்கின்றன. இவற்றை தன் வசப்படுத்தியவன் மட்டுமே தன்னை கட்டுப்படுத்தியவன் ஆவான். ஆகவே அர்ஜூனா உன் மனம் புத்தி புலன்களை கட்டுப்படுத்தி உனக்கு வசப்பட்ட மனமுடையவனாக மாறுவாய் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -91

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-44

இவர்கள் தங்களின் பேச்சு மற்றும் செயல்களினால் தங்கள் அறிவை இழந்து நிற்கிறார்கள். மேலும் மேலும் சொர்க்கத்தை அனுபவிப்பதிலேயே ஆவலுடன் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட அறிவற்றவர்களின் மனம் ஒரு நிலைப்பட்டு அவர்களுக்கு கர்ம யோக புத்தி உண்டாக வாய்ப்பே இல்லை.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

இவ்வாறான பேச்சு மற்றும் செயல்களினால் தங்களின் சுய சிந்தனையை விட்டு அறிவை இழந்து நிற்பார்கள். அனுபவிக்கும் சுகமே சொர்க்கம் என்று பந்தம் பாசம் ஆகியவற்றை அனுபவிப்பதிலேயே ஆர்வத்துடன் இருப்பார்கள். இவ்வாறு இருப்பவர்களுக்கு மனம் ஒரு நிலைப்படாது. இவர்களுக்கு கர்ம யோகத்தைப் பற்றிய அறிவும் புத்தியும் வருவதற்கு வாய்ப்பு இல்லை.

சுலோகம் -90

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-43

இவர்கள் உலகியல் இன்பத்தில் திளைத்தவர்களாகவும் சொர்க்கத்திற்கு செல்வதில் மட்டுமே ஆர்வம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள். மீண்டும் மீண்டும் பிறவி அளிக்கவல்லதும் கர்மங்களில் தொடர்ந்து ஈடுபட வைப்பதும் ஆகிய பேச்சுக்களை மட்டுமே பேசுவார்கள். மேலும் தங்களுக்கு இன்பத்தையும் போகத்தையும் கொடுக்கும் செயல்களையே செய்து வருவார்கள்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

இல்லறமே நல்லறம் என்ற வரிகளின் உள் விளக்கத்தை தெரிந்து கொள்ளாமல் வரிகளின் விளக்கத்தை மட்டும் வைத்துக் கொண்டு இதுவே சிறந்தது இதனை அனுபவித்தால் சொர்க்கத்திற்கு சென்று விடுவோம் என்று நினைத்துக் கொண்டு பாசம் பந்தம் ஆகியவற்றிற்குள் சிக்கி அந்த சுகத்தை அனுபவித்துக் கொண்டு மீண்டும் மீண்டும் பிறவி அளிக்கும் கர்மங்களிளேயே ஈடுபட்டுக் கொண்டு அதனைப் பற்றி மட்டுமே பேசுவார்கள்.

சுலோகம் -89

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-42

வேதங்களின் வரிகளில் உழன்று சொர்க்கத்தை விட சிறந்த பலன் வேறு இல்லை என்று சாதிப்பார்கள். இவர்கள் மலர்களைப் போன்று அழகாக பேசி தங்களது கருத்துக்களை தவிர மற்றவைகள் அனைத்தும் தவறானவை என்று சொல்வார்கள்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

வேதங்களில் யாகம் செய்வதினால் கிடைக்கும் பலன்களைப் பற்றி முழுமையாக சொல்லப்பட்டுள்ளது. அதன் உண்மையான உள் விளக்கம் மோட்சம் அடைவதை மட்டுமே கொண்டிருக்கும். ஆனால் பலர் வேத வரிகளின் உட்கருத்தை புரிந்து கொள்ளாமல் வேதங்களில் உள்ள வரிகளில் உள்ள வார்த்தையின் விளக்கத்தை மட்டும் புரிந்து கொண்டு இதனைச் செய்தால் இந்த சக்தி கிடைக்கும் இதன் வழியாக சொர்க்கத்திற்கு செல்லலாம் அங்கு மேலும் சுகவாசியாக வாழலாம் என்ற எண்ணத்தில் பலனை எதிர்பார்த்து இருப்பார்கள். தங்களது இந்த கருத்து மட்டுமே சரியானது மற்றவை அனைத்தும் தவறானது என்று வேதத்தின் வரிகளை மட்டுமே ஆதாரமாக கொண்டு மற்றவைகள் அனைத்தும் தவறானவை என்று மலர்களைப் போன்று அழகாக பேசுவார்கள்.

சுலோகம் -88

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-41

குரு வம்சத்தில் வந்தவனே இந்த கர்ம யோகத்தில் உறுதியான புத்தி ஒன்று தான் இருக்கிறது. இந்த கர்ம யோகத்தில் மனதை நிலை நிறுத்தாமல் உள்ளவர்களுக்கு அறிவு பல வழிகளிலும் பாய்கிறது. இது முடிவில்லாததாக இருக்கிறது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

கர்ம யோகத்தின் வழியில் எதிர்பார்ப்பில்லாத செயலை செய்யும் போது அவனது புத்தி ஒரே குறிக்கோளுடன் செயல்பட்டு அது அவனை மோட்சத்திற்கு அழைத்து செல்கிறது. ஆனால் குறிப்பட்ட பலன்களை எதிர்பார்த்து செயலை செய்யும் போது புத்தியானது ஒரே சிந்தணை குறிக்கோளுடன் இருப்பதில்லை. புத்தியானது தனது சிந்தனைகளையும் முடிவுகளையும் அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்கிறது. இது முடிவில்லாமல் நீண்டு கொண்டே இருக்கிறது.

சுலோகம் -87

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-40

கர்ம யோகத்தின் மூலம் தொடங்கப்பட்ட முயற்சிக்கு அழிவில்லை. இந்த முயற்சியில் பாவங்கள் ஏற்படுவதில்லை. இந்த கர்ம யோகம் என்ற தர்மத்தை சிறிதளவு கடைபிடித்தால் கூட இந்த தர்மமானது சம்சார பந்தம் என்ற பிடியில் இருந்து காப்பாற்றும்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

கர்ம யோகம் என்பது செய்கின்ற செயல்களில் பலனை எதிர்பார்க்காமலும் வருகின்ற பலன் மீது பற்று வைக்காமலும் தொடர்ந்து செயலாற்றுதல் ஆகும். கர்ம யோகத்தை கடைபிடிக்க ஆரம்பித்த சாதகர் அதனை தொடர்ந்து செய்யாமல் விட்டு விட்டாலும் ஆரம்பத்தில் செய்த கர்மத்தின் பலனானது அழிவதில்லை. அது சாதகரின் உள்ளத்தில் விதை போல் ஊன்றி நின்று சாதகரை மீண்டும் இந்த யோகத்தை செய்ய உந்துதலை கொடுத்துக் கொண்டே இருக்கிறது. இந்த கர்ம யோகத்தை சரியாக செய்யும் போது ஏதேனும் தெரியாமல் தவறு செய்துவிட்டாலும் கூட பாவங்கள் ஏற்படாது. இந்த கர்ம யோகத்தின் தர்மமானது சம்சார பந்தம் என்னும் பிடியிலிருந்து காப்பாற்றி மோட்சத்திற்கு அழைத்துச் செல்லும்.

சுலோகம் -86

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-39

சுலோகம் -86

பார்த்தனே இது வரை உனக்கு ஆத்ம ஞானம் பற்றி கூறினேன். இனி கர்ம யோக வழியில் சொல்கிறேன். நீ இந்த புத்தியோடு கூடியவனாகி கர்ம பந்தத்தை விலக்கி விடுவாய்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

ஆத்ம ஞானம் என்பது பரம்பொருளுக்கும் ஜூவனுக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றிய ஞானம் ஆகும். ஆத்ம ஞானம் மோட்சம் பெறுவதற்கான ஒரு வழியாகும். இந்த ஆத்ம ஞானத்தைத் தெரிந்து கொண்ட பின்னர் இதன் வழியாக மோட்சம் அடைவதற்கான கர்மங்களை சரியாக செய்வதில் புத்தியை பயன்படுத்த வேண்டும். இதுவரையில் ஆத்ம ஞானம் பற்றி உனக்கு விளக்கமாக கூறினேன். நீ தெரிந்து கொண்ட இந்த ஆத்ம ஞானத்தின் வழியாக கர்ம யோகத்தில் உனது புத்தியை எவ்வாறு செலுத்த வேண்டும் என்று இனி கர்ம யோகம் பற்றி கூறுகிறேன். கர்ம பந்தம் என்பது கர்மம் மூலம் உண்டாகும் சம்சாரப் பிடிப்பு ஆகும். இதனையும் நீ அறிந்து கொண்ட பின்னர் கர்மத்தினால் உண்டாகும் விளைவுகள் குறித்து நீ கவலைப் படமாட்டாய் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -85

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-38

வெற்றி தோல்விகளையும் லாப நஷ்டங்களையும் சுக துக்கங்களையும் சமமாகக் கருதய பின் யுத்தம் செய். இவ்விதம் நீ யுத்தம் செய்வதால் உனக்கு எந்த பாவமும் வந்து சேராது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

இந்த யுத்தத்தை நான் செய்கிறேன் என்ற எண்ணம் இல்லாமலும் இந்த யுத்தத்தில் வெற்றி பெற்றால் இந்த ராஜ்யமும் சுகமும் கிடைக்கும் என்ற எண்ணம் இல்லாமலும் இந்த யுத்தத்தில் எதிர்த்து வரும் உறவினர்களையும் நண்பர்களையும் நான் கொல்கிறேன் என்ற எண்ணம் இல்லாமலும் இந்த யுத்தத்தின் பலன்கள் சுகமானதாக இருந்தாலும் துக்கமானதாக இருந்தாலும் இரண்டையும் சமமாக கருதுவேன் என்ற எண்ணத்தை வரவழைத்து அதன் பின் யுத்தம் செய். இவ்வாறு யுத்தம் செய்வதனால் உனக்கு எந்த விதமான பாவமும் வந்து சேராது என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -84

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-37

இந்த யுத்தத்தில் நீ கொல்லப்பட்டால் சொர்க்கத்தை அடைவாய். இல்லை என்றால் இந்த பூமியை ஆட்சி செய்வாய். ஆகையால் யுத்தம் செய்ய துணிந்து எழுந்து நில்

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

இந்த தர்ம யுத்தத்தை நீ செய்யும் போது கொல்லப்பட்டால் சொர்க்கத்திற்கு செல்வாய். இந்த தர்ம யுத்தத்தை நீ செய்யும் போது வெற்றி பெற்று விட்டால் இந்த பூமியை ஆட்சி செய்வாய். இரண்டில் எது நடந்தாலும் அது உனக்கு நன்மையானதே. ஆகவே துணிந்து நின்று இந்த யுத்தத்தை செய் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.