கந்த சஷ்டி கவசம் வரலாறு

முருகப்பெருமான் புகழ்பாடும் கந்த சஷ்டி கவசம் இயற்றியவர் பாலதேவராய சுவாமிகள். இவர் மிகச்சிறந்த முருக அடியார் கந்த சஷ்டி கவசத்தில் நிறைய சொற்கள் வடமொழியில் இருந்து எடுத்தாளப்பட்டு இருக்கிறது. சஷ்டி கவசப் பாடல்களின் வயது சுமார் 250 ஆண்டுகள் இருக்கலாம் என்றும் கணிக்கப்படுகிறது.

பாலதேவராய சுவாமிகளுக்கு ஒருசமயம் அவர் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை. வாழ்க்கையே வெறுத்துப் போனவர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூருக்கு வந்தார். அவர் அங்கு வந்த நேரம் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது. ஏற்கனவே பாலதேவராய சுவாமிகள் தீவிர முருக பக்தர் என்பதால் அந்த திருவிழாக் காட்சிகளைப் பார்த்து சற்று மனம் மாறினார். திருவிழா முடிந்த பிறகு தற்கொலை செய்து கொள்ளலாம் என்று எண்ணியவர் முருகப் பெருமானை வேண்டி சஷ்டி விரதம் இருக்கத் தொடங்கினார். முதல் நாள் செந்தூர் கடலில் புனித நீராடி முருகனை வழிபட்ட பிறகு கோயில் மண்டபத்தில் கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தார். அவருக்கு முருகப்பெருமான் காட்சி தந்து அருள் புரிந்ததோடு தனக்காக சஷ்டி கவசம் பாடும் திறனையும் அவருக்கு அளித்தார். அடுத்த நிமிடமே பாலதேவராய சுவாமிகள் மனதில் பக்தி வெள்ளமானது பிரவாகம் எடுத்து ஓடியது.

சஷ்டியை நோக்க சரவண பவனர்சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன் என்று துவங்கும் திருச்செந்தூர் திருத்தலத்திற்கான சஷ்டி கவசத்தை முதன் முதலாக எழுதி முடித்தார். அதற்கு அடுத்த 5 நாட்களுக்கு முருகப்பெருமானின் பிற அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை திருத்தலங்களுக்கான சஷ்டி கவசங்களை இயற்றி முடித்தார். 6 சஷ்டி கவசங்களையும் பாலதேவராய சுவாமிகள் இயற்றி முடிந்தபோது அவரை வாட்டி வந்த வயிற்றுவலி முற்றிலும் காணாமல் போய் இருந்தது. கந்த சஷ்டி கவசம் இயற்றுவதற்காகவே தன்னை முருகப்பெருமான் சோதித்து திருவிளையாடல் புரிந்துள்ளார் என்பதை அறிந்த சுவாமிகள் மிகுந்த பரவசம் ஆனார். அழகன் முருகப்பெருமானை ஆனந்தக் கூத்தாடி தொழுதார்.

ஒருவர் சஷ்டி கவசத்தை நாள்தோறும் பாராயணம் செய்து வந்தால் நோய்கள் அண்டாது. மனம் வாடாது. குறைவின்றிப் பதினாறு பேறும் பெற்று நெடுநாள் வாழலாம். நவக்கிரகங்களும் மகிழ்ந்து நன்மை அளித்திடுவார்கள். குழந்தை பாக்கியம் கிட்டும். இப்படி பல பலன்கள் கிட்டும் என்று சஷ்டி கவசத்திலேயே சொல்லப்பட்டுள்ளது.

முருகன் அருள்

ஒரு சிறுவன் அவனது காலில் புண் ஏற்பட்டது சின்னப்புண் தானே என்று அந்தப் பையனும் கண்டு கொள்ளவில்லை நாள் பட்ட அந்தக் காயம் உள்ளூர புரையோடிப் போனதால் அவனுக்கு உள்ளே வலி ஏற்பட்டது வலி தாங்கமுடியாது தவித்த அவனை அவனது பெற்றோர் டாக்டரிடம் காண்பித்தனர். அந்த உள்ளூர் டாக்டர் அவர்களை கண்டபடி திட்டி இப்படியா விட்டு வைப்பது உடனே பட்டணம் போய் காண்பியுங்கள் என்றார். பையனைச் சோதித்த டாக்டர் உதட்டைப் பிதுக்கினார் உள்ளே செப்டிக் ஆகி விட்டது உடனே காலை எடுக்க வேண்டும் இல்லையேல் உயிருக்கே ஆபத்தாகி விடும் என எச்சரித்தனர்.

இந்த காலைக் கொடுத்த கடவுளுக்கு நம்மால் அதற்குப் பிறகு என்ன தரமுடியும் இந்தக் கால் தேயும் வரை அவன் ஆலயத்தை சுற்றுவோம் இவ்வாறு நினைத்தவன் தன் சொந்த ஊரிலுள்ள முருகன் கோயிலுக்கு சென்றான். 108 மற்றும் 1008 என்ற கணக்கெல்லாம் இல்லை. காலை மாலை என தினமும் கணக்கு வழக்கின்றி கோயிலை சுற்றிக் கொண்டே இருந்தான். சில மாதங்களில் யாராலும் நம்ப முடியாத அற்புதமாக ஏன் அந்த டாக்டரே அதிசயப்படும் வகையில் தானே ஆற ஆரம்பித்த புண் இருந்த இடம் தெரியாமல் ஓடி மறைந்தது. இனி என் வாழ் நாள் முழுதும் முருகன் புகழ் பாடுவதிலேயே கழியும். அதுவே என் தொழில். அதுவே என் மூச்சு என்று ஊர் ஊராக பிரசங்கம் செய்யத் தொடங்கினான் அந்தப் பையன். அந்தப் பையன் தன் உடல் தளரும் வரை ஓர் அரை நூற்றாண்டிற்கு மேல் நின்றபடியே முருகன் புகழ் பாடிய திரு முருக கிருபானந்த வாரியார் என அழைக்கப்பட்ட வாரியார் சுவாமிகள்.

பழனி மலை

சங்க இலக்கியங்கள் பழனி மலையை பொதினி என்றே குறிப்பிடுகின்றன. பொதினி என்ற பெயர்தான் பழனி என்று மருவிற்று. பழனி மலை இருக்கும் இடத்தை கல்வெட்டுக்கள் வையாபுரி நாடு என்று குறிப்பிடுகின்றன. இவ்வையாபுரி நாட்டை வையாபுரிக் கோப்பெரும்பேகன் என்ற மன்னன் ஆண்டு வந்துள்ளான். முற்காலத்தில் சித்தர்கள் பலர் வையாபுரி நாட்டில் வாழ்ந்துள்ளனர். தண்டாயுதபாணி ஆலயம் சேரமன்னன் சேரமான் பெருமானால் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. தங்கள் கட்டடக்கலையை பறைசாற்றும் வகையில் பாண்டியர்களும் சோழர்களும் இந்த ஆலயத்தைப் புதுப்பித்து கோபுரங்கள் மண்டபங்கள் கட்டி பல வசதிகள் செய்துள்ளனர். 450 மீட்டர் உயரமான இந்த மலையில் 690 படிகள் உள்ளது. இம்மலை முருகனின் ஆறு படை வீடுகளில் மூன்றாம் படை வீடாகும். புராண காலங்களில் இந்த ஊர் திருஆவினன்குடி என்றும் தென்பொதிகை என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது.

இந்த கோவிலின் இறைவனான முருகப்பெருமான் தண்டாயுதபாணி மற்றும் குழந்தை வேலாயுதர் என அழைக்கப்படுகிறார். இங்குள்ள முருகர் நவபாஷணத்தால் போகரால் செய்யப்பட்டவர். போகர் பழனி மலையில் கடும் தவத்தில் இருக்கும் பொழுது முருகப் பெருமான் அவர் முன் காட்சியளித்து பழனி மலையில் தன்னை மூலவராக வடிவமைத்து விக்கிரகமாகச் செய்து அதை எப்படி பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பதையும் கூறி காரியசித்தி உபாயத்தையும் சொல்லி மறைந்தார். இந்த நவபாஷாண சிலையை வடிப்பதற்கு போகர் எடுத்துக்கொண்ட காலம் ஒன்பது ஆண்டுகளாகும். 4000 திற்கும் மேற்பட்ட மூலிகைகளை கலந்து இந்த நவபாஷாண சிலை செய்யப்பட்டது. 81 சித்தர்கள் போகரின் வழிகாட்டுதலின் படி நவபாஷாண சிலை செய்யும் பணியில் உதவினர். இந்த நவபாஷான சிலை செய்யும் காலத்தில் இயற்கை தன் சீற்றத்தை குறைத்துக் கொண்டு சிலை செய்ய ஏற்றார் போல் சூழ்நிலை அமைத்து சித்தர்களுக்கு உதவி செய்தது.

தண்டாயுதபாணி விக்ரகம் எப்பொழுதும் மிகுந்த சூடாக இருக்கும். ஆதலால் இரவு முழுவதும் அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இந்த நீர் அபிஷேக தீர்த்ததுடன் கலந்து காலை அபிஷேகம் நடக்கும் போது அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் கொண்டு அபிஷேகம் நடைபெருகிறது. மார்கழி மாதத்தில் மட்டும் பன்னீர் உபயோகப்படுத்தப்படுகிறது. இவைகளில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து உடனே அகற்றப்படுகிறது. சந்தனம் பன்னீர் மட்டும் அடி முதல் முடி வரை அபிஷேகம் செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகிறது. இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும். அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால் பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது. இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தனக் காப்பு சார்த்தபடுகிறது. விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தனம் வைக்கப்படும். முன்னொரு காலத்தில் சந்தன காப்பை முகத்திலும் சார்த்திக் கொண்டிருந்தனர். பின்னாளில் இந்த முறை மாற்றப்பட்டது. தண்டாயுதபாணி சிலையில் நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய், தோள்கள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கபட்டது போல் தெளிவாக இருக்கும். முருகன் விக்கிரகத்தில் ஒரு கிளியின் உருவம் இருக்கிறது. பழனி மலைக்கு செல்லும் வழியில் இடும்பனின் சந்நிதி இருக்கிறது. இடும்பனுக்கு அதிகாலையில் முதலில் பூஜைகள் செய்யப்பட்ட பிறகே மலை மீது வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு பூஜைகள் செய்யப்படுகிறது.

இலங்கையில் கண்டி கதிர்காமத்தில் போகர் பெருமானுடைய இயந்திரம்

விக்கிரங்களோ அல்லது சிலையோ எதுவுமே இல்லாத ஆகம விதிகள் பிரகாரம் கட்டப்படாத ஒரு முருகன் கோவில் கதிர்காமம். இக்கோவிலின் ரகசியம் இங்கு உள்ள இயந்திரம் அடங்கிய பெட்டி மட்டுமே. இந்த இயந்திரம் 10000 வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்தது. தமிழில் ஓம் எழுத்துடன் கூடிய ஒரே இயந்திரம்.