முருகன் 11 தலை 22 கைகளுடன் அருள்மிகு சுவாமிநாத சுவாமி என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இராமநாதபுரம் குண்டுக்கரை பகுதியில் இக்கோவில் உள்ளது. சூரபத்மனை வதம் செய்வதற்கு முன்பு முருகன் இத்தலத்துக்கு வந்த முருகனுக்கு 11 தலை 22 கைகள் இருந்ததாக தல வரலாறு சொல்கிறது. அதே வடிவில் விஸ்வரூபம் எடுத்த நிலையில் முருகன் தரிசனம் தருகிறார். மற்ற கோயில்களில் எல்லாம் பிரணவ மந்திரத்தின் பொருள் கூற முருகன் சிவனின் மடியில் அமர்ந்திருப்பது போல சிலை இருக்கும். ஆனால் இத்தலத்தில் தகப்பன் சுவாமியான முருகன் குன்றின் மீது அமர்ந்து பிரணவ மந்திரத்திற்கு பொருள் சொல்ல சிவன் அதை நின்று கேட்கும் நிலையில் அமைந்துள்ளது. முருகனே சிவன் சிவனே முருகன். இருவரும் ஒருவரின்றி வேறில்லை என்பதற்கேற்ப இங்கு தகப்பன் சுவாமி குன்றின் மீது அமர்ந்து அருள்பாலிப்பது மிகச்சிறப்பான அம்சமாகும். கோயிலுக்குள் 18 திருக்கரத்துடன் கூடிய 7 அடி உயர துர்க்கை சிலையும் உள்ளது.
300 ஆண்டுகளுக்கு முன் ராமநாதபுரத்தில் வாழ்ந்த பாஸ்கர சேதுபதி குண்டுக்கரை முருகன் கோயிலுக்கு தினமும் வந்து வழிபாடு செய்வார். ஒருமுறை இவர் சுவாமிமலை சென்று தரிசனம் செய்து விட்டு திரும்பி வந்த போது இவரது கனவில் சுவாமிமலை முருகன் தோன்றி குண்டுக்கரை முருகன் கோயிலில் உள்ள பழைய முருகன் சிலையை எடுத்து விட்டு புதிதாக முருகனை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தால் உனக்கும் உனது மக்களுக்கும் நன்மை உண்டாகும் என கூறி மறைந்தார். ராமநாதபுரம் வந்த பாஸ்கர சேதுபதியும் கனவில் முருகன் கூறியபடி குண்டுக்கரை சென்று அந்த கோயிலிலிருந்த பழைய முருகன் சிலையை அகற்றி விட்டு புதிதாக முருகன் சிலை பிரதிஷ்டை செய்தார். சுவாமி மலையானின் பெயரான சுவாமிநாதன் என்று பெயர் சூட்டினார்.