அனுமன் கூறியதை கேட்ட சீதை இவ்வளவு சிறிய வானரமாக இருக்கும் இந்த அனுமன் எப்படி நம்மை தூக்கிக் கொண்டு 100 யோசனை தூரம் இந்த கடலை தாவிச் செல்வார் என்று ஆச்சரியப்பட்டு சந்தேகித்தாள். சீதையின் சந்தேகத்தை உணர்ந்த அனுமன் தனது வலிமையை சீதைக்கு காண்பிப்பதற்காக தனது உருவத்தை மிகவும் பெரிதாக்கிக் காட்டினார். இதைக் கண்ட சீதை பெருமகிழ்ச்சி அடைந்தாள். அனுமனே உனது சக்தியை நான் உணர்ந்தேன். நான் உன்னுடன் வந்தால் கடலைத் தாண்டிக் கொண்டிருக்கும் போது வழியில் யாராவது ராட்சசர்கள் உன்னை தடுத்து யுத்தத்திற்கு அழைப்பார்கள். ஆயுதங்களை நம் மீது வீசி எறிவார்கள். நீ என்னையும் பாதுகாத்துக் கொண்டு யுத்தத்திலும் உனது கவனத்தை செலுத்துவது மிகவும் கடினமாகும். எவ்வளவாக வலிமை மிக்கவனாக இருந்தாலும் யுத்தத்தில் வெற்றி என்பது உறுதியானது அல்ல. உனக்கு ஏதேனும் அபாயம் நேர்ந்தால் நான் இங்கே இருக்கும் செய்தி ராமருக்கு தெரியாமலேயே போகும். ராட்சசர்கள் ஆயுதங்களை உன் மீது எறியும் போது உன் முதுகில் நான் எப்படி தைரியமாய் அமர்ந்திருப்பேன். கடலில் நான் விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. அடுத்தது ராவணன் என்னை வஞ்சகமாக தூக்கிச் சென்றான். நீ என்னை யாருக்கும் தெரியாமல் தூக்கிச் சென்றால் நீயும் வஞ்சகமாக என்னை தூக்கி செல்வது போல் ஆகும். இது முறையானது அல்ல. இது ராமனுடைய வீரத்தை நாம் குறைவு படுத்துவது போலாகும். ராவணனை எதிர்த்து ராமர் போர் செய்து அவனை அழித்து விட்டு என்னை மீட்டால் தான் ராமரின் சத்ரிய குலத்திற்கு கௌரவமாக இருக்கும். நீ சென்று ராமரையும் லட்சுமணனையும் உங்களது வானர சேனைகளையும் இங்கே அழைத்துவா. நான் காத்திருக்கிறேன். ராமருடைய பானங்களால் இந்த இலங்கை அழிந்து ராவணன் எமன் உலகம் அனுப்பப்பட வேண்டும். விரைந்து சென்று வா என்று சீதை அனுமனிடம் கூறினாள்.
அனுமன் சீதையிடம் பேச ஆரம்பித்தார். ராமரிடம் நான் சென்றதும் என்ன சொல்ல வேண்டும் தங்களை கண்டு பேசியதற்கான அடையாளங்கள் என்று நான் எதை சொல்ல வேண்டும் என்று கேட்டார். அதற்கு சீதை ஒரு முறை தண்டகருண்ய காட்டில் ராமர் எனது மடியில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு காகம் என் முதுகில் கொத்திக் கொண்டே இருந்தது. நான் எவ்வளவு விரட்டியும் அது போகவில்லை கல்லைக் கொண்டு அதன் மீது எறிந்தும் போகவில்லை. என்னை மிகவும் துன்புறுத்தியது. முதுகில் காயத்துடன் இருந்த என்னை பார்த்த ராமர் முதலில் சிரித்தார். பின்பு காகம் பறவை அல்ல அது ஒரு ராட்சசன் என்பதை அறிந்து கோபம் கொண்ட ராமர் தனது அம்பை காகத்தின் மீது விட்டார். அம்பு காகத்தை விரட்டியது. ராட்சசன் அம்பிலிருந்து தப்பிக்க வழி இல்லாமல் தனது சுய ரூபத்தை எடுத்து ராமரின் காலில் விழுந்து சரணடைந்து பிழைத்துக் கொண்டான். இச் செய்தியை ராமரிடம் சொல் என்றாள். ராமரின் தம்பி லட்சுமணன் அவருக்கு துணையாக இருப்பதற்காகவே பிறந்தவன். ராமருக்கு நிகரான வலிமையும் சாமர்த்தியமும் உள்ளவன். தன் தந்தை இழந்த துக்கத்தை ராமரின் முகத்தை பார்த்து தீர்த்துக் கொண்டவன். வனத்தில் தன் தாயை மறந்து விட்டு என்னை தாயாக பாவித்து வந்தான். விரைவாக வந்து என் துயரத்தை போக்குவாய் என்று லட்சுமணனிடம் சொல் என்றாள். சிறிது யோசனை செய்த சீதை அனுமனிடம் தர்மத்தை அறிந்த ராமருக்கு என்னை நீ கண்ட அடையாளமாக ஒன்றும் சொல்ல வேண்டாம் அவருக்கே அனைத்தும் தெரியும் எனது வணக்கத்தை மட்டும் சொல் போதும் என்று தன் தந்தை தனக்கு கொடுத்திருந்த சூடாமணி ஆபரணத்தை அனுமனிடம் கொடுத்து அதனை ராமரிடம் கொடுத்துவிடு என்றாள்.
அனுமனிடம் சீதை கேள்வி கேட்டாள். நீ இங்கிருந்து சென்றதும் நான் மீண்டும் பழையபடி துக்கத்திற்கு சென்று விடுவேன். நீ உன் வலிமையால் இந்த கடலை தாண்டி வந்து விட்டாய். ராமரும் லட்சுமணனும் உங்களது வானர படைளும் எப்படி இந்த கடலை தாண்டி வருவார்கள். உனக்கு ஏதேனும் யோசனை இருந்தாள் சொல் நான் சிறிது ஆறுதலுடன் இருப்பேன் என்றாள்.