காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்சுவரர் கோவில் வரலாற்றை விளக்கும் தூணில் உள்ள சிற்பம். ஒரு முறை சிவபெருமான் கைலாசத்தில் யோகத்தில் இருந்த போது பார்வதி தேவி ஈசனின் இரண்டு கண்களை விளையாட்டாக மூடினாள். இதனால் கிரகங்கள் இயங்கவில்லை. சூரியன் உதிக்கவில்லை. உலகம் இருண்டு இயக்கம் நின்றது. நிலைமையைக் கண்ட பார்வதிதேவி தான் பெரும் தவறு செய்து விட்டோம் என்பதை உணர்ந்து சிவனிடம் மன்னிப்பு வேண்டினாள். ஈசனோ செய்த தவறுக்குத் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும் என்று கூறி பூலோகத்தில் பெண்ணாகப் பிறந்து தன்னை நோக்கிக் கடுந்தவம் செய்தால் விமோசனம் கிடைக்கும் என்றார். அம்பாள் தவம் செய்ய ஏற்ற இடத்தைக் கேட்க ஈசன் காஞ்சிபுரம் ஸ்தலத்திற்குப் பார்வதிதேவியை அனுப்பினார். ஏலவார்குழலி என்ற பெயரில் காஞ்சிபுரத்தில் வந்து மாமரத்தின் அடியில் மணலால் லிங்கத்தைப் பிடித்து வைத்து அக்னியின் நடுவில் நின்றபடி தவம் செய்தாள். அவளது தவத்தின் வலிமையைச் சோதிக்க எண்ணிய சிவபெருமான் தன் தலையில் சூடிக் கொண்டிருக்கும் கங்கையை தேவி தவம் செய்யும் இடத்தில் பாயுமாறு செய்தார். கங்கை வெள்ளமாகப் பாய்ந்து வர தான் பிடித்து வைத்திருந்த லிங்கம் கரைந்து விடும் என்று அஞ்சிய தேவி லிங்கத்தை மார்போடு அணைத்துக் கொண்டாள். அம்பாளின் பக்தியில் மகிழ்ந்த சிவ பெருமான் தேவிக்குக் காட்சி தந்து அவள் பாவத்தை மன்னித்து அருளி திருமணம் செய்து கொண்டார். இடம் காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில்.