அனுமன் சீதையிடம் பேச ஆரம்பித்தார். தாயே நான் ஒருவன் தான் இந்த கடலை தாண்டக் கூடியவன் என்று எண்ணி விடாதீர்கள். சுக்ரீவனின் வானரப் படையில் உள்ளவர்கள் அனைவரும் பல யோசனை தூரம் தாண்டி பறந்து செல்லும் சக்தியை பெற்றிருக்கிறார்கள். என்னை விட சாமர்த்தியசாலியாக இருப்பார்கள். இந்த கடலை தாண்டுவது வானரப் படைகளுக்கு ஒரு பெரிதான காரியமில்லை. என்னை விட பலசாலிகளும் சாமர்த்தியசாலிகள் ஆகாய மார்க்கமாக பறந்து செல்பவர்களும் ஆயிரக்கணக்கில் எங்களிடம் இருக்கிறார்கள் தங்களுக்கு ஒரு சந்தேகமும் வேண்டாம். எனது முதுகில் ராமர் லட்சுமணன் இருவரையும் அமர்த்திக் கொண்டு விரைவில் இங்கு தாவி வந்து விடுவேன். ராமரும் லட்சுமணனும் விரைவில் வில் அம்புடன் இலங்கையின் எல்லையில் நிற்பார்கள். இந்த செய்தி தங்களின் காதுகளுக்கு வந்து சேரும். ராவணனையும் அவனை சார்ந்தவர்களையும் அடியோடு ராமர் லட்சுமனணும் அழிப்பதை பார்ப்பீர்கள். வானர சேனைகள் குதித்து கூத்தாடி இந்த இலங்கை நகரத்தை அழிப்பதை பார்ப்பீர்கள். தைரியமாக இருங்கள் என்று சீதையை வணங்கி நான் செல்கிறேன் எனக்கு அனுமதி அளியுங்கள். அதற்கு முன்பாக எனக்கு ஒரு விண்ணப்பம் இருக்கிறது அதற்கும் அனுமதி கொடுங்கள் என்று கேட்டார் அனுமன். அதற்கு சீதை என்ன என்று கேட்டாள்.
அனுமன் சீதையிடம் இந்த அசோகவனத்தில் உங்களின் இந்த அவலநிலையே கண்ட பின்பு நான் அப்படியே செல்ல விரும்பவில்லை. தங்களை கொடுமைப்படுத்தும் ராட்சசிகளை அழிக்க என் கைகள் துடிக்கின்றன. தயவு செய்து தாங்கள் இதற்கு அனுமதி கொடுங்கள் என்றார். ஆனால் சீதையோ உனது கோபம் அர்த்தமில்லாதது. ராவணன் இட்ட கட்டளையை நிறைவேற்றுவது ராட்சசிகளின் கடமை. தங்கள் கடமையை அவர்கள் செய்கிறார்கள். இவர்களை தண்டிப்பது முறையாகாது என்று கூறினாள். தாயே ராவணனின் கட்டளையாக இருந்தாலும் இவர்கள் செய்தது தவறு தானே அதற்காக அவர்களுக்கு தண்டனை அளிக்க வேண்டாமா என வாதிட்டார். அதற்கு சீதை அனுமனே நீ சொல்வது போல் தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என்றால் முதலில் ராமரையும் என்னையும் உன்னையும் கூட தண்டிக்க வேண்டும் என்றாள் சீதை. திடுக்கிட்ட அனுமன் ராமர் என்ன தவறு செய்தார் என கேட்டார். ராவணன் என்னும் கொடிய ராட்சசனிடம் பதிவிரதையான தன் மனைவி சிக்கியிருக்கிறாள். அவளுக்கு ஆபத்து இருக்கிறது என்று தெரிந்தும் காலம் தாழ்த்தாமல் ஓடிவந்து என்னை காப்பாற்றாமல் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு தன்னுடைய ஆட்களை அனுப்பி தேடிக்கொண்டு காலம் கடத்திக் கொண்டிருக்கிறாரே இது அவர் செய்த குற்றமல்லவா என சீதை பதிலளித்தாள்.
அனுமன் திகைத்து சீதையின் பதிலை அமோதித்துக் கொண்டு பதிவிரதையான தாங்கள் என்ன தவறு செய்தீர்கள் என்று கேட்டார். எந்த பெண்ணும் தன் கணவரைப் பற்றி அடுத்தவரிடம் குறை கூறக்கூடாது. ஆனால் தற்போது உனக்கு புரிய வைக்க வேண்டும் என்ற காரணத்திற்காக ராமரைப் பற்றி உன்னிடம் நான் குறை சொல்கிறேன். இது நான் செய்த தவறு தானே என்றாள். மேலும் திகைத்த அனுமன் நான் என்ன தவறு செய்தேன் என்று கேட்டார். அரசன் இட்ட பணியைச் செய்வது ராட்சசிகளின் கடமை. அதனைச் செய்து கொண்டிருக்கும் ராட்சசிகளை தண்டிக்க வேண்டும் என்று நீ நினைத்தது குற்றம். தவறு செய்யாதவர்களே இவ்வுலகில் இல்லை. தவறு செய்வது மனித இயல்பு. அதை உணர்ந்து மனம் வருந்தி அதை திருத்திக் கொள்வதே சிறந்த மனிதனின் அடையாளம் என்றாள் சீதை. இதைக் கேட்ட அனுமன் தனது கோபத்தை விட்டு ராட்சசிகளை துன்புறுத்தாமல் சீதையை வணங்கி அவளிடம் இருந்து விடைபெற்றான். நான் உயிரோடு இருக்கிறேன் என்ற செய்தியை ராமர் லட்சுமணனிடம் சொல்லி விரைவாக அவர்களை இங்கே அழைத்துவா உனக்கு ஜெயம் உண்டாகட்டும் என்று வாழ்த்தி அனுமனுக்கு அனுமதி கொடுத்தாள் சீதை. அங்கிருந்து கிளம்பினார் அனுமன்.