அனுமன் கூறியதை கேட்ட சுரஸை என்னை தாண்டி யாரும் செல்ல முடியாது இது பிரம்மாவினால் எனக்கு கொடுக்கப்பட்ட வரம் எனது வாய்க்குள் சென்று வெளியே வர முடிந்தால் நீங்கள் செல்லலாம் என்று தனது வாயை திறந்து வைத்துக் கொண்டாள் சுரஸை. அனுமன் தன் உடலை மேலும் பத்து மடங்கு பெரியதாக்கி கொண்டு எனது உடல் செல்லும் அளவிற்கு உனது வாயை திறந்து கொள் என்றார் அனுமன். சிரஸை தன் உடலை அனுமன் உடலை விட இருபது மடங்கு பெரியதாக்கிக் கொண்டாள். சாமர்த்தியசாலியான அனுமன் சில கனத்தில் தனது உடலை கட்டை விரல் அளவிற்கு சிறியதாக்கிக் கொண்டு வேகமாக சுரஸையின் வாய்க்குள் புகுந்து வேகமாக வெளியே வந்து சுரஸையின் முன்பாக நின்றார். ராட்சசியே ராம காரியத்தை முடித்ததும் உனது வாய்க்குள் புகுவேன் என்று முன்பு நான் கொடுத்த உறுதி மொழியை இப்போதே நிறைவேற்றி விட்டேன். பிரம்மாவினால் உனக்கு கொடுத்த வரத்தையும் நான் மீறவில்லை. இப்பொது நான் உன்னை தாண்டி செல்கிறேன் உன்னால் முடிந்தால் என்னை தடுத்துப்பார் என்றார். உடனே சுரஸை தனது சுய உருவத்தை அடைந்து தேவர்கள் உங்களது பராக்கிரமத்தையும் சாமர்த்தியத்தையும் பார்ப்பதற்காக என்னை அனுப்பியிருந்தார்கள். விரைவில் ராம காரியத்தை முடிப்பீர்களாக என்று வாழ்த்தி அனுமன் செல்ல வழி கொடுத்தாள்.
அனுமன் கருடனுக்கு நிகரான வேகத்தில் சென்று கொண்டிருந்தார். அனுமனுக்கு அடுத்த சோதனை வந்தது. ராட்சச பிராணி ஒன்று அனுமனை பார்த்து இன்று உணவு கிடைத்து விட்டது என்று அனுமனின் நிழலைப் பிடித்து இழுத்தது. தன்னை யாரோ பிடித்து இழுப்பது போலவும் தனது வேகம் குறைவதையும் உணர்ந்த அனுமன் தன்னைச் சுற்றிப் பார்த்தார். கடலில் இருக்கும் ஒரு ராட்சச பிராணி தன் நிழலை பிடித்து இழுப்பதை பார்த்தார். இந்த பிராணியை பற்றி சுக்ரீவன் ஏற்கனவே சொல்லியிருப்பது அனுமனுக்கு நினைவு வந்தது. நிழலைப் பிடித்து இழுத்து சாப்பிடும் சிம்ஹிகை என்ற பிராணி என்று தெரிந்து கொண்டு தன் உடலை மேலும் பெரிதாக்கினார். பிராணியும் தன் உடலை பெரிதாக்கிக் கொண்டு அனுமன் உள்ளே செல்லும் அளவிற்கு தனது வாயை திறந்து கொண்டு அனுமனை நோக்கி விரைந்து வந்தது. அனுமன் தன் உடலை சிறியதாக்கிக் கொண்டு மனோ வேகத்தில் பிராணியின் வாய் வழியாக அதன் வயிற்றுக்குள் புகுந்து தனது நகங்களால் வயிற்றை கிழித்து ராட்சச பிராணியை கொன்று வெளியே வந்தார். பிராணி இறந்து கடலில் மூழ்கியது. தனது உடலை பழையபடி பெரியதாக்கி இலங்கை நோக்கி சென்றார். தூரத்தில் மரங்களும் மலைகளும் அனுமனுக்கு தெரிந்தன. இலங்கை வந்து விட்டோம் என்பதை அறிந்தார். இவ்வளவு பெரிய உருவத்துடன் இலங்கை சென்றால் தூரத்தில் வரும் போதே நம்மை கண்டு பிடித்து விடுவார்கள் யாருக்கும் தன்னைப்பற்றி தெரியக்கூடாது என்று எண்ணிய அனுமன் தனது இயற்கையான உருவத்திற்கு மாறி இலங்கையில் உள்ள லம்பம் என்னும் மலை சிகரத்தின் மீது இறங்கினார்.
அனுமன் சுற்றிலும் பார்த்தார். இலங்கையின் வளம் குபேரனின் அழாகபுரியை போல் ஜஸ்வர்யத்தின் உச்சத்தில் இருந்தது. திருகூட மலையில் ராவணனின் கோட்டை தாமரை நீலோத்பலம் என்னும் மலர்களால் அகழி போல சுற்றி அழகுடன் இருந்ததை கண்டார். இலங்கை நகரத்தை விருப்பப்படி உருவத்தை மாற்றிக் கொள்ளும் வலிமையான ராட்சசர்கள் காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். அனுமன் நிதானமாக யோசித்தார். நாம் யார் எங்கிருந்து வந்திருக்கின்றோம் எதற்காக வந்திருக்கின்றோம் என்று யாருக்கும் தெரியாத வகையில் சீதையை தேட வேண்டும் என்று முடிவு செய்தார். பகலில் சென்றால் யார் கண்ணிலாவது பட்டு விடுவோம் என்று இரவு வரை காத்திருந்த அனுமன் மிகவும் சிறிய உருவத்திற்கு மாறினார். இலங்கையின் நகரத்திற்குள் நுழைய முற்பட்டார். இவ்வளவு காவல் இருக்கும் நகரத்திற்குள் புகுந்து எப்படி சீதையை தேடுவது என்ற வருத்தமும் விரைவில் சீதையை பார்க்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியுடன் சென்றார் அனுமன். விரோதியின் கோட்டையின் நுழைவு வாயில் வழியாக செல்லக்கூடாது என்ற யுத்த நியதியின்படி வேறு வழியாக ராம காரியம் நிறைவு பெற வேண்டும் என்று எண்ணி தனது இடது காலை வைத்து இலங்கை நகரத்திற்குள் நுழைந்தார் அனுமன்.