அனுமன் நகரத்திற்குள் தனது இடது காலை வைத்ததும் இலங்கை நகரத்தை காவல் காத்துக் கொண்டிருந்த அதிதேவதை அனுமனின் முன்பு வந்து யார் நீ என்று இறுமாப்புடன் அதட்டலாக கேட்டாள். அதற்கு அனுமன் நான் சாதாரண வானரன் இந்த நகரத்தின் அழகை கண்டு ரசித்துப் பார்க்க வந்தேன். ஆசை தீர இந்த நகரத்தை சுற்றிப் பார்த்து விட்டு திரும்பிச் சென்று விடுவேன் என்று கூறினார். என்னை மீறி இந்த நகரத்திற்குள் யாரும் செல்ல முடியாது என்னை வெற்றி பெற்றால் மட்டுமே செல்ல முடியும் என்றாள் அதிதேவதை. அனுமன் நான் உள்ளே செல்வேன் என்னை தடுக்க நீ யார் என்று கேட்டார். அனுமனின் கேள்வியால் கோபமடைந்த அதிதேவதை அனுமனை ஒர் அடி அடித்தாள். இதனால் கோபம் கொண்ட அனுமன் அதிதேவதை ஒரு பெண் என்பதால் தனது இடக்கையால் லேசாக குத்தினார். அனுமனின் லேசான குத்தில் கீழே சுருண்டு விழுந்தாள் அதிதேவதை. கலங்கிப் போன தேவதை தனது இறுமாப்பை அடக்கிக் கொண்டு பார்க்கிரமம் உடையவரே இந்த இலங்கையை பாதுகாத்துக் கொண்டிருக்கும் அதிதேவதை நான். ஒரு முறை பிரம்மாவிடம் ஒரு கேள்வி கேட்டிருந்தேன். அதற்கு பிரம்மா எப்பொழுது ஒரு வானரன் தனது பராக்கிரமத்தினால் உன்னே அடக்குகின்றானோ அப்பொழுது ராட்சசர்களுக்கு அழிவு காலம் வந்து விட்டது என்பதை உணர்ந்து கொள் என்று கூறியிருந்தார். அதன்படி இப்பொழுது நீங்கள் உங்கள் பராக்கிரமத்தினால் என்னை அடக்கி விட்டீர்கள். இதனால் ராட்சசர்களுக்கு அழிவு காலம் வந்து விட்டது என்பதை உணர்ந்து கொண்டேன். இப்போது நீங்கள் உங்கள் விருப்பப்படி இந்த இலங்கை நகரத்திற்குள் சென்று உங்கள் காரியத்தை சாதித்துக் கொள்ளலாம் என்று அனுமதி கொடுத்தாள்.
அனுமன் நகரத்திற்குள் காலை வைத்ததும் எதிரியின் தலை மீது தன் காலை வைப்பது போலிருந்தது அனுமனுக்கு. குபேரனின் நகரத்திற்கு இணையாக அழகுடனும் செல்வச் செளிப்புடனும் இருந்தது நகரம். மாளிகைகள் வீடுகள் அனைத்தும் தங்கத்தாலும் நவரத்தினங்களாலும் ஜொலித்தது. வீதிகள் அனைத்தும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நகரத்திற்குள் கொடூரமான வடிவத்துடன் வில் அம்பு கத்தி என்று பல விதமான ஆயுதங்களையும் வைத்துக்கொண்டு கவசத்துடன் வீரர்கள் பலர் நகரத்தை காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். மக்கள் அகோரமாகவும் பல நிறங்களையும் பல வடிவங்ளையும் கொண்டவர்களாகவும் இருந்தார்கள். ஒவ்வோரு மாளிகையாக அனுமன் தேடிக்கொண்டே வந்தார். எங்கும் சீதையை பார்க்க முடியவில்லையே என்று அனுமன் வருத்தமடைந்தார்.
அனுமன் விண்ணையே முட்டும் அளவிற்கு பெரிய மாளிகை ஒன்றை கண்டார். அங்கு ராவணனின் பறக்கும் புஷ்பக விமானம் இருந்தது. இந்த விமானம் பிரம்மாவிடம் இருந்து குபேரன் பெற்றிருந்தான். அதை ராவணன் கொண்டு வந்து வைத்திருந்தான். புஷ்பக விமானத்தை பார்த்த அனுமன் இது ராவணனின் மாளிகையாக இருக்கும் என்று எண்ணி இங்கு சீதை இருக்கலாம் என்று ராவணனின் மாளிகைக்குள் நுழைந்தார். சமைக்கும் இடம் உணவருந்தும் இடம் என்று ஒவ்வொரு அறையாக சென்று பார்த்தார் எங்கும் சீதையை காணவில்லை. பெண்கள் மட்டும் இருக்கும் அறைக்கு அவர்களின் அனுமதி இல்லாமல் செல்லக்கூடாது என்ற தர்மத்தையும் மீறி பெண்களின் அறைக்குள்ளும் சென்று பார்த்தார் அங்கும் சீதை இல்லை. ஓர் அறையில் தங்கத்தினாலும் வைரத்தினாலும் செய்யப்பட்ட ஒரு கட்டிலில் ஓர் மலை போல் ஒர் ராட்சசன் படுத்திருந்தான். அவனுடைய ரூபத்தை கண்டு அனுமன் ஒரு சில கனம் பிரம்மித்து நின்று பார்த்தார். யானையின் தும்பிக்கை போன்ற கைகளும் மார்பில் விஷ்ணுவின் சக்ராயுதம் மற்றும் இந்திரனின் வஜ்ராயுதத்தால் தாக்கப்பட்ட வடுவும் இந்திரனின் ஐராவதன் யானையின் தந்தம் குத்தப்பட்ட தழும்புடன் இருப்பதை பார்த்த அனுமன் படுத்திருப்பது ராவணன் உன்பதை தெரிந்து கொண்டார். அனுமன் சுற்றிலும் பார்த்தார் பல பெண்கள் அந்த அறையில் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் தலைவி போல் இருந்த பெண்ணின் அழகும் முக லட்சணமும் அவை சீதையாக இருக்குமோ என்று அனுமனுக்கு சந்தேகம் வந்தது. அடுத்த கனம் இது என்ன மடமை சீதையை தவறாக நினைத்து விட்டோமே ராமரை பிரிந்த சீதை துக்கத்தில் இவ்வளவு நகைகளை அணிந்து கொண்டு ராவணனின் அந்தப்புரத்திலா தங்கியிருப்பாள். இது சீதை கிடையாது என்று முடிவு செய்தார்.