அனுமன் செல்ல முடியாத இடங்களுக்கெல்லாம் தன் உருவத்தை அதற்கேற்றார் போல் மாற்றிக்கொண்டு சென்று தேடி பார்த்தார். இலங்கை நகரம் முழுவதும் தேடி விட்டார். ராவணன் மாளிகை முழுவதும் தேடி விட்டார். சீதை எங்கும் காணவில்லை. என்ன செய்வது என்று அனுமனுக்கு தெரியவில்லை. சீதையை ராவணன் கொன்றிருப்பானோ என்ற சந்தேகம் அனுமனுக்கு வந்தது. இனி என்ன செய்வது சீதையை காணாமல் கிஷ்கிந்தைக்கு திரும்ப முடியாது. எடுத்துக் கொண்ட காரியத்தை முடிக்காமல் திரும்ப செல்வது வீரனுக்கு அழகில்லை. இங்கேயே நமது உயிரை விட்டு விடலாம் என்று எண்ணி மனம் சோர்வடைந்து உயரமான ஓர் இடத்தில் அமர்ந்தார் அனுமன். தூரத்தில் பெரிய மதில் சுவருடன் கூடிய அசோகவனம் கண்ணில் பட்டது. இலங்கை நகரத்திற்கு தொடர்பில்லாமல் தனியாக இருந்தது அசோகவனம். இந்த வனத்தில் சீதை இருக்கலாம் என்று புத்துணர்ச்சி அடைந்தார் அனுமன். அனைத்து தெய்வங்களையும் வணங்கி விட்டு அசோக வனத்திற்குள் குதித்தார் அனுமன். உள்ளே குதித்ததும் அனுமனுக்கு மனதில் ஒரு விதமான மகிழ்ச்சி ஏற்பட்டது. இங்கு நிச்சயம் சீதையை காண்பேன் என்று புத்துணர்ச்சி அடைந்தார். உயரமான மரத்தின் மீது நின்று கொண்டு சீதையை தேட ஆரம்பித்தார். தூரத்தில் ஓர் மரத்தடியில் கண்ணைக் கூசும் வகையில் பேரழகுடன் பெண் ஒருத்தி அமர்ந்திருப்பதை கண்டார். அவரை சுற்றி அகோர வடிவத்துடன் ராட்சசிகள் காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். ராட்சசிகளின் நடுவே தெய்வீகமான முகத்தில் நடுக்கத்துடன் கசங்கி அழுக்கு படிந்த உடையில் பயமும் துயரத்தையும் வைத்துக் கொண்டு அழுததினால் முகம் வாடியிருப்பதையும் கண்டதும் இவரே சீதை என்று முடிவு செய்தார்.
அனுமன் சீதையை பார்த்துவிட்டேன் என்று துள்ளி குதித்தார். அடுத்து என்ன செய்யலாம் என்று சுற்றிலும் பார்த்தார். சீதையை பார்த்த மகிழ்ச்சியில் இருந்த அனுமன் அவரின் நிலையை கண்டதும் மிகவும் துக்கமடைந்தார். அப்போது இருட்டு மறைந்து காலை சூரியன் மெல்ல வெளிவந்தது. வேத மந்திரங்கள் முழங்க ராவணன் எழுப்பப்பட்டான். காலையில் எழுந்ததும் தன் படை பரிவாரங்களுடன் சீதையை பார்க்க ராவணன் வந்தான். இரவில் தூங்கும் பொது கண்டதை விட இப்போது மேலும் பராக்கிரமசாலி போல் ராவணன் அனுமனுக்கு தெரிந்தான். நடப்பவற்றை அறிந்து கொள்ள அனுமன் மரத்து இலைகளுக்கிடேயே தன்னை மறைத்துக் கொண்டார். சீதை ராவணனை கண்டதும் பெரும்காற்றில் மரங்கள் நடுங்குவதை போல நடுங்கினாள். சீதையிடம் ராவணன் பேச ஆரம்பித்தான். அழகியே என்னை கண்டதும் ஏன் நடுங்குகிறாய் நான் உன் மேல் வைத்திருக்கும் அன்பை நீ தெரிந்து கொள். என்னைக் கண்டு பயப்பட வேண்டாம். உன்னுடைய முழுமையான அன்பு என் மீது வரும் வரையில் நான் உன்னை தொட மாட்டேன். உன் விருப்பத்திற்கு மாறாக இங்கு எதுவும் நடக்காது. வீணாக தூக்கத்துடன் இருந்து உன் உடலை ஏன் நீ வருத்திக் கொள்கிறாய். உனக்கு சமமான அழகி இந்த உலகத்தில் வேறு யாரும் இல்லை. நகைகள் வைர வைடூரியங்கள் அணிந்து பட்டு துணிகளை அணிந்து மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டிய நீ ஏன் உன் அழகையும் வயதையும் வீணடித்துக் கொள்கிறாய். நான் இருக்குமிடம் நீ வந்து சேர்ந்து விட்டாய். என்னுடன் சேர்ந்து நீ சகல சந்தோசங்களையம் போகங்களையும் அனுபவித்து மகிழ்ச்சியுடன் இருக்கலாம். நீயே பட்டத்தரசியாக இருந்து என் அந்தப்புரம் முழுவதையும் அதிகாரம் செய்து நீயை தலைவியாக இருக்கலாம். தவத்திலும் செல்வத்திலும் புகழிலும் ராமனை விட நானே மிகவும் மேம்பட்டவன் என்பதை தெரிந்துகொள். காட்டில் மரவுரி தரித்துக் கொண்டு இருக்கும் ஒருவனை இனியும் நம்பாதே. இனி நீ அவனை நீ கண்ணால் பார்க்க முடியாது. அவன் இங்கு வரமட்டான். என் சொல்லை கேட்டால் சகல ஜஸ்வர்யங்களையும் அனுபவிக்கலாம் என்று சீதையிடம் ராவணன் நயத்துடன் கூறினான்.
அனுமன் ராவணன் பேச்சில் மேலும் துள்ளிக்குதித்தார். இவரே சீதை என்பது உறுதியாகி விட்டது என்று ஆனந்தப்பட்டார். ராவணனின் பேச்சிற்கு சீதை தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு பதில் கூறினாள். நீ செய்வது பேசுவது அனைத்தும் தகாத காரியமாக இருக்கிறது. நான் யார் என்பதையும் என் பிறந்த வீடு புகுந்த வீட்டின் வரலாற்றை அறிந்து கொண்டு பேசு. என்னை பற்றிய உன் எண்ணத்தை உடனே மறந்துவிடு. வேறொருவன் மனைவி எப்போதும் உன் மனைவியாக முடியாது. தர்மத்துடன் உன் மனைவிகளுடன் மகிழ்ச்சியாக இருந்து உன் உயிரை காப்பாற்றிக்கொள். இல்லையென்றால் அவமானத்தையும் துக்கத்தையும் நீ விரைவில் அடைவாய் தெரிந்து கொள் என்று மேலும் சீதை பேசினாள்.