சீதை தொடர்ந்து ராவணனிடம் பேசினாள். ராமர் ராட்சசன் ஒருவனை அழித்து விட்டார் என்ற பயத்தில் தானே அவர்கள் இல்லாத நேரம் பார்த்து என்னை நீ தூக்கிக் கொண்டு வந்தாய். அவர்களுக்கு முன்பாக உன்னால் நான் இருக்கும் இடத்திற்கு அருகில் கூட உன்னால் வர முடியாது. இதுவே உன்னுடைய வீரம் என்பதை நான் தெரிந்து கொண்டேன். நீ என்னிடம் கூறிய உன்னுடைய செல்வங்கள் ஜஸ்வர்யங்கள் போகங்கள் என ஒன்றும் எனக்கு தேவை இல்லை. அவற்றை வைத்து நீ எனக்கு ஆசை காட்ட வேண்டாம். இதனால் உனக்கு ஒரு பயனும் இல்லை. நான் சக்கரவர்த்தியின் திருமகன் ராமருக்கு உரியவள். ராமரை விட்டு நான் விலக மாட்டேன். உனக்கு ஒரு நல்ல அறிவுரை சொல்கிறேன் கேட்டுக்கொள். முதலில் ராமரிடம் சென்று மன்னிப்பு கேட்டு என்னை அவரிடம் ஒப்படைத்து விட்டு அவரின் கோபத்தில் இருந்து தப்பித்துக் கொள். ராமர் உன்னை மன்னிப்பார். அவரை சரணடைந்து அவருடைய அன்பை பெற்றுக் கொள். சரணடைந்தவர்களை அவர் ஒன்றும் செய்ய மாட்டார். உன்னை சுற்றி இருப்பவர்களில் உனக்கு நல்ல புத்தி சொல்கின்றவர்கள் ஒருவர் கூட இல்லையா? ஏன் இவ்வாறு கெட்ட காரியங்கள் செய்து உனக்கு கெடுதலை உண்டாக்கிக் கொண்டு உன்னை நம்பி இருக்கும் மக்களுக்கும் அழிவை தேடிக் கொடுக்கிறாய். அரசன் ஒருவன் தன் மனதை கட்டுப்படுத்திக் கொள்ளாமல் போனால் அவனுடைய நாடும் நகரமும் செல்வமும் சீக்கிரம் அழிந்து போகும். உன்னுடைய பொறுப்பை புரிந்து கொண்டு உன்னுடைய எண்ணத்தை விட்டுவிட்டு உன்னையும் உன் அரசையும் காப்பாற்றிக்கொள் இல்லையென்றால் ராம லட்சுமணர்களின் அம்பு சீக்கிரமே இந்த இலங்கையை அழிக்கும் என்று சொல்லி முடித்தாள்.
சீதை பேசியதில் கோபமடைந்த ராவணன் கர்ஜனையுடன் பேசினான். உன் மீது நான் வைத்திருக்கும் அன்பே உன்னை இப்போது காப்பாற்றியது. இல்லை என்றால் நீ பேசிய பேச்சிற்கு உன்னை கொன்றிருப்பேன். உனக்கு நான் கொடுத்த காலம் முடிய இன்னும் 2 மாதம் மட்டுமே இருக்கிறது ஞாபகம் வைத்துக்கொள். அதற்குள் நீ சம்மதிக்கவில்லை என்றால் ஏற்கனவே நன் சொன்னது போல் என் சமையல் அறையில் உன்னை எனது சமையல் கலைஞர்கள் சமைத்து விடுவார்கள் ஜாக்கிரதை என்று கத்தினான். ராவணனுடைய கோபம் அதிகரித்ததை கண்ட அவனது மனைவிகளில் ஒருத்தியான தான்யமாலி என்பவள் ராவணனிடம் உங்களை அடையும் பாக்கியம் இந்த மானிட பெண்ணிற்கு இல்லை. இவள் அப்படி ஒன்றும் அழகு இல்லை. இவளது பேச்சிற்கு நீங்கள் ஏன் கோவப்படுகின்றீர்கள் வாருங்கள் நாம் செல்லலாம் என்று வற்புறுத்தி ராவணனை அழைத்தாள். ராவணன் சீதையை காவல் காக்கும் ராட்சசிகளிடம் எப்படியாவது இவளை நீங்கள் என் வழிக்குக் கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டு அங்கிருந்து கிளம்பி தனது மாளிகைக்கு திரும்பினான்.
சீதையை சுற்றி ராட்சசிகள் நின்று கொண்டார்கள். ராவணன் முன்பு தைரியமாக பேசிய சீதை சுற்றி நெருங்கி நிற்கும் ராட்சசிகளின் அகோர உருவங்களை கண்டு பயந்து நடுங்கினாள். ராட்சசிகள் சீதையிடம் பேச ஆரம்பித்தார்கள். உலகம் முழுவதும் புகழும் வீரரான ராவணன் உன்னை விரும்பும் பொழுது நீ வேண்டாம் என்ற சொல்வாய் மூட பெண்ணே. ராவணனை யார் என்று தெரிந்துகொள். பிரம்மாவின் புத்திரரான புலஸ்த்திய பிரஜாபதியினுடைய பேரன் ராவணன். விச்ரவஸ் ரிஷியின் மகன். அவர் சொல்படி கேட்டு நடந்து கொள் இல்லை என்றால் உன்னை கொன்று விடுவார்கள் என்றாள் ஒரு ராட்சசி. இன்னோரு ராட்சசி தேவர்களை எல்லாம் யுத்தம் செய்து துரத்தியடித்த வெற்றி வீரன் ராவணன் உன்னை தேடி வருகின்றார். சூரியனும் அக்னியும் வாயுவும் கூட ராவணனை கண்டு பயப்படுவார்கள். ராவணனுக்கு சமமான வீரன் இந்த உலகத்தில் ஒருவரும் இல்லை இது உனக்கு தெரியவில்லையா? தானாகவே ஒரு பாக்கியம் உன்னை வந்து சேருகிறது அதை வேண்டாம் என்று நீ சொல்வது மடத்தனமாக இருக்கிறது. கர்வப்பட்டு அழிந்து போகாதே அவர் சொல்படி நீ கேட்காவிட்டால் நீ பிழைக்க மாட்டாய் என்றாள். ஒவ்வோரு ராட்சசிகளாக மாற்றி மாற்றி சீதையிடம் பேசிக்கொண்டே இருந்தார்கள். ராவணனைப் பற்றி பெருமையாகவும் ராமரை சிறுமைப்படுத்தியும் தங்களால் இயன்ற வரை அமைதியாகவும் சில நேரங்களில் பயமுறுத்தியும் பேசினார்கள். இறுதியில் ஒருத்தி சொல்ல வேண்டியது அனைத்தையும் சொல்லி விட்டோம் இனி உன்னுடைய விருப்பம் என்று கூறினார்கள்.