ராமாயணம் 5. சுந்தர காண்டம் பகுதி – 7

ராமர் சூரியனைப் போல் திவ்ய பிரகாசமாக ஒளி வீசிக் கொண்டு இலங்கைக்கு வந்து ராவணனை அழித்து அவனை எமலோகத்திற்கு அனுப்புவதையும் ராவணனை சார்ந்திருக்கும் அவனது ராட்சசர்கள் அனைவரும் அவலட்சணமான துணிகளை உடுத்திக்கொண்டு அவலட்சணமான நிலையில் எமனால் இழுத்துச் செல்வதையும் ராமர் ஒரு யானை மீது பட்டத்து மகாராணி போல் சீதையை அழைத்துச் செல்வதையும் கனவாக கண்டேன். இந்த சீதை மிகவும் புண்ணியவதி. இவளிடம் இப்படி நீங்கள் பேசிக் கொண்டிருந்தால் விரைவில் நாம் அழிந்து போவோம். அவளிடம் நல்ல விதமாக பேசி அவளுடைய அருளை கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினாள். பயந்த ராட்சசிகள் அனைவரும் சீதையை விட்டு விலகி நின்றார்கள். திரிஜடை ராட்சசி பேசியதை கேட்ட சீதை உடனடியாக மனம் மாறி தனது உயிரை விடும் எண்ணத்தை மாற்றிக் கொண்டு தைரியமடைந்தாள்.

அனுமன் மரத்தின் மீதிருந்து அனைத்தையும் பார்த்துக் கொண்டு பல வகையில் சிந்தனை செய்தார். சீதை இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்டோம். இது ராட்சசர்களுடைய நகரம் இங்கு காவல் மிகவும் பலமாக இருக்கிறது. இப்போது நாம் இங்கிருந்து ராமர் இருக்குமிடம் சென்று சீதை இருக்குமிடத்தை அவரிடம் சொல்லி அதன் பிறகு ராமர் லட்சுமணர்கள் இங்கு வருவதற்குள் சீதை துக்கம் தாளாமல் தன் உயிரையே விட்டு விட்டால் என்ன செய்வது எனவே சீதையிடம் ராமன் விரைவில் வருவார் அவரது உத்தரவின் படியே உங்களை தேடி அனுமனாகிய நான் வந்திருக்கிறேன் என்ற செய்தியைச் சொல்லிவிட்டு நாம் இங்கிருந்து செல்லலாம் என்று முடிவு செய்தார் அனுமன். யாருக்கும் தெரியாமல் சீதையிடம் சென்று எப்படி பேசுவது என்று சிந்தனை செய்தார் அனுமன். காவல் காக்கும் ராட்சசிகள் அனைவரும் தூங்க ஆரம்பித்தார்கள். இதுவே நல்ல சமயம் என்று சீதையின் அருகில் செல்லலாம் என்று நினைத்தார். ஆனால் சீதையின் முன்பாக திடீரென்று ஒரு வானரம் சென்று பேச ஆரம்பித்தால் ராவணன் ஏதோ ஏமாற்று வேலை செய்கின்றான் என்று நம்மை கண்டு பயத்தில் கத்தி கூச்சலிட்டால் ராமர் கொடுத்த மோதிரத்தை காண்பிக்க முடியாமலே போய்விடும். சீதையை சுற்றி தூங்கிக் கொண்டிருக்கும் ராட்சசிகள் அனைவரும் வந்து விடுவார்கள். அவர்களை யுத்தம் செய்து சமாளிக்கலாம். ஆனால் மேலும் பல ராட்சசர்கள் வருவார்கள் அனைவரையும் நமது வலிமையால் சமாளித்து விடலாம். ஆனால் இவ்வளவு ராட்சசர்களை எதிர்த்து யுத்தம் செய்து சோர்வு ஏற்பட்டாலோ உடலுக்கு ஏதேனும் காயங்கள் ஏற்பட்டாலோ மீண்டும் இங்கிருந்து நூறு யோசனை தூரம் தாண்ட முடியாமல் போய்விடும். இதனால் ராமருக்கு சீதை இருக்குமிடத்தை சொல்ல முடியாமல் போகும். எனவே ராமரின் தூதன் நான் என்பதை முதலில் சீதைக்கு புரிய வைத்துவிட வேண்டும் என்று எண்ணி ஒரு வழியை கண்டுபிடித்து அதனை செயல்படுத்த ஆரம்பித்தார். மரத்தின் மீது இருந்து ராம நாமத்தை சத்தமாக செபிக்க ஆரம்பித்தார். ராமருடைய சரித்திரத்தையும் குணங்களையும் சீதை கேட்கும்படி மெதுவான குரலில் தசரதருடைய குமாரர் ராமர் என்று ராமப்பற்றி சொல்ல ஆரம்பித்து சீதையை தேடி வந்திருப்பது அனுமன் என்று முடிக்கும் வரையில் கூறினார் அனுமன்.

அனுமனின் வார்த்தைகளில் மகிழ்ச்சி அடைந்த சீதை யாருடைய குரல் இது என்று சுற்றிலும் தேடினாள். ஒருவரும் அவளது கண்களுக்கு தெரியவில்லை. மரத்தின் மீது பார்த்தாள். ஓரு வானரம் மட்டும் மரத்தில் மறைந்திருப்பதை கண்டாள். காதில் விழுந்த வார்த்தைகளும் கண் முன்பே தெரியும் வானரமும் நமது கனவாக இருக்கும் என்று யூகித்தாள் சீதை. ஆனால் இப்போது விழித்து விட்டோமே இன்னும் இந்த வானரம் கண்ணுக்கு தெரிகிறதே என்று குழப்பமடைந்தாள். சில கனங்களில் தெளிவடைந்த சீதை இது கனவல்ல நிஜம் தான் என் காதில் விழுந்த சொற்கள் உண்மையாக இருக்கட்டும் என்று அனைத்து தெய்வங்களையும் வணங்கினாள். என் ராமரிடம் இருந்து தூதுவன் வந்திருக்கின்றான் இது உண்மையாக இருக்க வேண்டும் என்று அனுமனுக்கு தனது வணக்கத்தை தெரிவித்தாள் சீதை.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.