ராமரின் மனைவி சீதை இவர் தானா என்று உறுதிப்படுத்திக் கொள்வதற்காக மரத்தின் மீதிருந்து கீழே இறங்கி வந்த அனுமன் சீதையை வணங்கி சீதையிடம் கேள்வி கேட்டார். தாயே மானிடப் பெண்ணாக இருக்கும் உங்களின் முகம் கண்ணிருடன் இருக்கின்றது. நீங்கள் யார்? இந்த வனத்தில் ராட்சசிகளுக்கு நடுவில் ஏன் இருக்கின்றீர்கள் என்று தயவு செய்து சொல்லுங்கள். ராமரிடம் இருந்து ராவணனால் தூக்கி வரப்பட்ட சீதை தாங்கள் தானா என்று கேட்டார் அனுமன். அனுமனின் பேச்சில் மகிழ்ந்த சீதை நான் தான் சீதை விதேஹ ராஜனுடைய மகள் ராமரின் மனைவி. பன்னிரண்டு வருட காலம் சகல சுகங்களையும் ராமருடன் அயோத்தியில் அனுபவித்தேன். 13 ஆம் வருடம் தசரத சக்கரவர்த்தி ராமருக்கு பட்டாபிஷேகம் செய்ய எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். அப்போது கைகேயி தன் மகனுக்குப் பட்டம் சூட்ட வேண்டும் என்றும் ராமரைக் காட்டுக்கு அனுப்ப வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். அதன்படி நாங்கள் காட்டுக்குள் பன்னிரண்டு வருட காலம் வனவாசம் வந்தோம். அப்போது ராவணன் எங்களை வஞ்சகம் செய்து என்னை பலாத்காரமாக தூக்கி வந்து இங்கே சிறை வைத்திருக்கிறான். ராவணனின் சொல்படி நான் கேட்க வேண்டும் என்று எனக்கு பன்னிரண்டு மாத காலம் அவகாசம் கொடுத்திருக்கின்றான். இந்த காலம் முடிய இன்னும் இரண்டு மாதங்களே இருக்கிறது அது முடிந்தவுடன் அவன் என்னை கொன்று விடுவான் என்று சொல்லி முடித்தாள் சீதை.
ராமர் வரும் வரையில் சீதையின் துயரத்தை போக்கி அவருக்கு தைரியம் கொடுக்க வேண்டும் என்று அனுமன் சீதையிடம் பேச ஆரம்பித்தார். தாயே வீரர்களுக்கு எல்லாம் வீரரான தசரத சக்கரவர்த்தியின் திருமகன் ராமர் உங்களுக்கு தன்னுடைய நலத்தை சொல்லி அனுப்பினார். அவருடைய அன்பு தம்பியான லட்சுமணன் உங்களை இடைவிடாது நினைத்து துயரப்பட்டு கொண்டிருக்கின்றார். தன்னுடைய வணக்கத்தை உங்களுக்கு சொல்லி என்னை அனுப்பினார். ராம லட்சுமணர்களின் பெயர்களை கேட்டதும் சீதையின் உள்ளம் மகிழ்ச்சியால் பொங்கியது. அடுத்த கனம் சீதையின் மனதில் வந்திருப்பது ராவணனாக இருக்குமோ என்று பயம் வந்தது. அனுமனின் பேச்சில் நம்பிக்கை இழந்த சீதை நம்மை ஏமாற்றுவதற்காக ராவணன் உருவத்தை மாற்றிக் கொண்டு வந்திருக்கின்றானா என்று நினைத்து அவளது மனம் தடுமாறியது. வந்திருப்பது ராமரின் தூதுவனா இல்லை ராவணனா என்று கேள்விக்கு விடை தெரியாமல் குழப்பத்தில் அனுமனை பார்க்காமல் திரும்பி அமர்ந்து கொண்டாள். இதைக் கண்ட அனுமன் கைகூப்பியபடி சீதையின் அருகில் சென்றார். உடனே சீதை பேச ஆரம்பித்தாள். நான் ஏமாந்தேன். முன்பு தண்டகாருண்ய வனத்தில் ராமருடன் இருக்கும் போது சந்நியாசி வேடத்தில் வந்து என்னை ஏமாற்றி தூக்கிக் கொண்டு வந்தாய். இப்போது வானர வேடத்தில் வந்து ஏதேதோ பேசி என்னை வருத்துகிறாய் ராவணா இது உனக்கு நல்லதல்ல. துக்கத்தில் இருக்கும் என்னை மாயங்கள் செய்து தொந்தரவு செய்யாதே விலகிப்போ என்று மௌனமானாள் சீதை.
ராமனிடமிருந்து சீதையை ராவணன் ஏமாற்றி தூக்கி வந்ததால் சீதை பயத்தில் இருக்கிறார் என்பதை உணர்ந்த அனுமன் அவளின் பயத்தையும் சந்தேகத்தையும் போக்க வேண்டும் யோசித்து மீண்டும் சீதையிடம் பேசினார். பூமியில் ஆளும் அரசர்கள் அனைவரும் தலைவனாக மதிக்கும் ராமர் அனுப்பிய தூதுவன் நான். எனது பெயர் அனுமன். வானரங்களின் அரசனான சுக்ரீவனுடைய ராஜ்யத்தில் மந்திரியாக இருக்கிறேன். ராமருடைய உத்தரவின் பேரில் பல மலைகள் குகைகளிலும் தங்களை தேடி இறுதியில் எனது பராக்கிரமத்தால் நூறு யோசனை தூரம் கடலைத் தாண்டி குதித்து இந்த இலங்கையில் இறங்கினேன். நான் ராம தூதுவன் தாயே என்னை சந்தேகிக்க வேண்டாம். எனது வார்த்தையே நம்புங்கள் என்று அனுமன் கண்களில் நீர் ததும்ப சீதையிடம் கூறினார். அனுமன் பேசிய பேச்சு சீதைக்கு தைரியமும் நம்பிக்கையும் தந்தது.