ராமாயணம் 5. சுந்தர காண்டம் பகுதி – 21

ராமர் அனுமனை கட்டியணைத்து பரவசப்படுத்தினார். ராமர் வந்தவர்களிடம் பேச ஆரம்பித்தார். சீதையை எங்கே கண்டீர்கள் எப்படி இருக்கிறாள் பார்த்தவற்றை விவரமாக சொல்லுங்கள் என்னால் பொறுக்க முடியவில்லை சீக்கிரம் என்று அவசரப்படுத்தினார் ராமர். ஜாம்பவான் அனுமனிடம் நடந்தவற்றை நீயை முழுமையாக சொல் என்றார். அனுமன் பேச ஆரம்பித்தார். நூறு யோசனை தூரத்தில் உள்ள இலங்கையில் உள்ள அசோக வனத்தில் ராட்சசிகள் சுற்றிலும் காவலுக்கு நிற்க சீதை ராமா ராமா என்று உச்சரித்தபடி இருக்கிறாள். கொடூர ராட்சசிகள் வார்த்தைகளால் சீதையை பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். தரையில் படுத்து ஒளி இழந்து கவலை படர்ந்த முகத்துடன் துக்கத்துடன் இருக்கிறாள் சீதை என்று கடற்கரையில் கிளம்பியதில் ஆரம்பித்து இலங்கையை எரித்தது வரை அனைத்தையும் விவரமாக கூறினார். சீதை ராமருக்கு சொன்ன செய்தியை சொல்லி அவள் கொடுத்த சூடாமணியை ராமரிடம் கொடுத்தார் அனுமன். சீதையிடம் விரைவாக தங்களுடன் வருவேன் என்று சமாதானம் சொல்லி விட்டு வந்திருக்கிறேன் என்று சொல்லி முடித்தார் அனுமன்.

ராமர் சூடாமணியை பார்த்து மகிழச்சியில் பரவசமடைந்தார். சுக்ரீவனிடம் பேச ஆரம்பித்தார் ராமர். யாராலும் செய்ய முடியாத காரியத்தை அனுமன் செய்து முடித்திருக்கின்றான். சீதைக்கு ஆறுதல் சொல்லி அவளின் உயிரை காப்பாற்றி விட்டு வந்திருக்கின்றான். இங்கே அவள் உயிருடன் இருக்கிறாள் என்ற செய்தியை என்னிடம் சொல்லி என் உயிரை காப்பாற்றி இருக்கின்றான். இதற்கு பிரதிபலனாக அனுமனுக்கு நான் என்ன செய்து திருப்திப்படுத்த முடியும் என்று தெரியவில்லை என்று சொல்லி ஆனந்த கண்ணீர் விட்டார் ராமர். ராவணனையும் அவனது ராட்சச கூட்டத்தையும் அழிக்க கடலைத் தாண்டி செல்ல வேண்டும். இது ஒர் பெரும் காரியம். இந்த கடலை எப்படி தாண்டப் போகிறோம். உன்னுடைய சேனைகள் எப்படி கடலைத் தாண்டும் என்று கவலையில் மூழ்கினார் ராமர்.

ராமரின் கவலையை பார்த்த சுக்ரீவன் பேச ஆரம்பித்தார். நீங்கள் மனத்தளர்ச்சி அடையாதீர்கள். சோகத்தை மறந்து சத்ரியனுக்குரிய தைரியத்துடன் இருங்கள். உங்களுக்கு ஏன் சந்தேகம் எனது வலிமை மிக்க வீரர்கள் இருக்கிறார்கள். உங்களுக்காக மகிழ்ச்சியுடன் உயிரையும் கொடுக்க காத்திருக்கிறார்கள். மனக்கவலையை தள்ளி வைத்து விட்டு வானர வீரர்களின் சக்தியை வைத்து எப்படி கடலை தாண்டலாம் என்று உங்களின் நுண்ணறிவை பயன்படுத்தி ஆராய்ந்து சொல்லுங்கள். உங்கள் உத்தரவு எதுவாக இருந்தாலும் அதனை சிற்ப்பாக செய்து முடிக்கிறோம். உங்களையும் லட்சுமனணையும் கடலைத் தாண்டி இலங்கை கொண்டு போய் சேர்ப்பது எங்களுடைய காரியம் அதனை சிறப்பாக செய்து முடிப்போம். நீங்கள் இலங்கை சென்று ராவணனை வென்று சீதையுடன் திரும்பி வருவீர்கள் இதனை உறுதியாக நம்புங்கள் என்று ராமரை உற்சாகப்படுத்தினான் சுக்ரீவன்.

ராமர் அனுமனிடம் இலங்கையின் அமைப்பையும் அங்கு உள்ள பாதுகாப்பு அமைப்பையும் சொல்லுமாறு கேட்டார். அதற்கு அனுமன் கடலை தாண்டி செல்லும் வழி, இலங்கை நகரத்தின் அமைப்பு, ராவணின் கோட்டையை சுற்றி இருக்கும் அகழியின் பாதுகாப்பு அமைப்பு, மக்கள் ராவணனின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை, அவர்களின் செல்வம், அங்கு உள்ள ராட்சசர்களின் வலிமை, சேனைகளின் பலம், இலங்கையின் பாதுகாப்புக்கு நிற்கும் ராட்சசர்கள் மற்றும் இலங்கை எதிரிகள் எளிதில் நுழைய முடியாதபடி அரண் அமைத்து ராவணன் பாதுகாத்துக் கொண்டிருக்கிறான் என்று அனைத்தையும் அனுமன் விவரமாக ராமரிடம் கூறினார். இவ்வளவு பெரிய பாதுகாப்பு அரணை அழித்து உள்ளே செல்லும் வல்லமை பெற்ற அங்கதன் ஜாம்பவான் பனஸன் நீலன் நளன் போன்ற நிகரற்ற வீரர்கள் இருக்கிறார்கள். இவர்கள் கடலைத் தாண்டி அங்கு செல்லும் வல்லமை பெற்றவர்கள். பெரும் வானர படையும் தயாராக இருக்கிறது. தாங்கள் உத்தவு கொடுங்கள் அனைத்தையும் அழித்து நாசம் செய்து விடுகிறோம் என்றார் அனுமன். ராமர் சுக்ரீவனுடன் ஆலோசித்து யுத்தத்தில் வெற்றி தரும் முகுர்த்தமான உத்தர பங்குனி நட்சத்திரத்தன்று கடற்கரை நோக்கி அனைவரும் புறப்பட முடிவு செய்தார்கள்.

ராமாயணம் 5. சுந்தர காண்டம் பகுதி – 20

அனுமன் தொடர்ந்து பேசினார். இப்போதே நாம் அனைவரும் இலங்கை சென்று ராவணனையும் அவனது ராட்சச கூட்டத்தையும் அழித்து விட்டு சீதையை மீட்டு ராமரிடம் கொண்டு போய் சேர்த்து விடாலாமா என்று உங்களது யோசனையை சொல்லுங்கள். இதனை செய்ய நமக்கு வலிமையும் சக்தியும் இருக்கிறது. ஜாம்பவானாகிய உங்கள் ஒருவரின் வலிமையே போதும் ராட்சச கூட்டத்தை அழிக்க இதற்கு மேல் வாலியின் குமாரன் அங்கதன் இருக்கிறான். மிகவும் பராக்கிரம சாலிகளான பனஸன் நீலன் இருவர் இருக்கிறார்கள். பிரம்மாவிடம் வரங்களை பெற்ற அசுவினி குமாரர்கள் மயிந்தன் த்விவிதன் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் தனியாகவே சென்று ராட்சசர்களை அழிக்கும் திறமை பெற்றவர்கள். இப்போது அனைவரும் ஒன்று கூடி இருக்கின்றோம். நாம் அனைவரும் சென்று சீதையை மீட்டு ராமரிடம் சேர்த்து அவர்களை இருவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துவோம். இப்போது நாம் என்ன செய்யலாம் நீங்கள் சொல்லுங்கள் என்று அனுமன் பேசி முடித்தார். இதைக் கேட்ட அங்கதன் கோபத்துடன் கொதித்தெழுந்தான். நான் ஒருவனே போதும் ராவணனையும் இந்த ராட்சசர்கள் கூட்டத்தையும் அழித்து விடுவேன். அப்படியிருக்க நாம் இத்தனை வீரர்களும் இருக்கின்றோம். இத்தனை நாட்கள் கழித்து சீதையை அழைத்துப் போகாமல் ராமரிடம் வெறும் கையுடன் திரும்பிச் செல்வது சரியில்லை. இலங்கை சென்று எதிர்ப்பவர்களை அழித்து விட்டு சீதையை மீட்டுச் செல்வோம் என்று அங்கதன் கூறினான். அதற்கு ஜாம்பவான் அன்புக்குரிய யுவராஜனே இது சரியில்லை நாம் ராமரிடம் சென்று நடந்தது அனைத்தையும் சொல்லுவோம். பின்பு அவரின் உத்தரவுப்படி செய்வோம் என்றார். இதனைக் கேட்ட அங்கதன் அனுமன் உட்பட அனைவரும் ஜாம்பவான் மிகவும் அறிவும் அனுபவமும் உள்ளவர் அவர் சொன்னால் அது சரியாக இருக்கும் என்று அவரின் கூற்றை ஆமோதித்து கிஷ்கிந்தைக்கு விரைந்து கிளம்பினார்கள்.

அனுமன் உட்பட அனைத்து வானர கூட்டமும் கிஷ்கிந்தைக்கு வந்து சேர்ந்தார்கள். அரண்மனைக்கு செல்லும் வழியில் சுக்ரீவனின் நந்தவனம் இருந்தது. இதனை கண்ட வானரக் கூட்டம் பல நாள் கழித்து நாம் நாட்டிற்கு வெற்றியுடன் திரும்பி வந்து விட்டோம் என்ற மகிழ்ச்சியில் நந்தவனத்தில் புகுந்து அங்கிருந்த தேனையும் பழத்தையும் சாப்பிட்டு வெற்றிக் களிப்புடன் கூத்தாடினார்கள். அங்கிருந்த காவலர்கள் எவ்வளவு தடுத்தும் அவர்கள் கேட்காமல் தங்கள் விருப்பப்படி வெற்றி கொண்டாட்டத்தை தொடர்ந்து செய்தார்கள். சிலர் மகிழ்ச்சியில் தோட்டத்தை நாசம் செய்தார்கள். இவர்கள் செய்த ஆட்டத்தை பார்த்த ததிமுகன் என்ற காவலாளி சுக்ரீவனிடம் சென்று நந்தவனத்தில் நடப்பவற்றை கூறினான். தெற்கே சென்ற வானர கூட்டம் திரும்பி வந்து விட்டார்கள். நமது தோட்டத்தை நாசம் செய்து அக்கிரமாக நடந்து கொள்கின்றார்கள். எவ்வளவு தடுத்தும் கேட்கவில்லை. காவல் காக்கும் வானரங்களை உதாசீனப்படுத்தி செடி கொடிகளை நாசமாக்கி விட்டார்கள். அவர்களை உடனே தாங்கள் தண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். செய்தியை கேட்ட சுக்ரீவன் அங்கதன் தலைமையில் சென்ற வானர கூட்டம் காரிய சித்தி அடைந்து விட்டார்கள் அதனாலேயே வெற்றி களிப்பில் இப்படி செய்கிறார்கள் என்பதை உணர்ந்து அனுமனையும் அங்கதனையும் உடனே ராமர் இருக்கும் இடத்திற்கு அழைத்து வாருங்கள் என்று உத்தவிட்டான் சுக்ரீவன். சீதை இருக்குமிடம் தெரிந்து விட்டது என்று லட்சுமணனுக்கு செய்தியை சொல்லி அனுப்பினான் சுக்ரீவன்.

ராமர் தனக்கு வந்த செய்தியை கேட்டதும் அவரது காதில் அமிர்தம் சுரப்பது போல் இருந்தது. ராமரும் லட்சுமணனும் இருக்கும் இடத்திற்கு சுக்ரீவன் வந்து சேர்ந்தான். அனுமன் அங்கதன் ஜாம்பவனும் ராமர் இருக்குமிடம் வந்தார்கள். இவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்று அவர்களை பேசுவதை கேட்க ராமர் ஆர்வமாக இருந்தார். முதலில் ராமரை வணங்கிய அனுமன் உடனே தெற்குப் பக்கம் திரும்பி வணங்கி கண்டேன் சீதையை என்றார். அனுமனது இச்செயலானது முதலில் தெற்கே சீதை உயிருடன் நலமாக இருக்கிறாள் என்பதை சொல்லாலும் ராட்சசர்களிடம் அகப்பட்டு இத்தனை நாட்கள் கழித்தும் பதிவிரதையாக இருக்கிறாள் என்பதை சொல்லாமல் தனது செயலால் குறிப்பில் உணர்த்தியது அனுமனின் சாமர்த்தியத்தையும் அறிவுக் கூர்மையையும் ராமருக்கு உணர்த்தியது.

ராமாயணம் 5. சுந்தர காண்டம் பகுதி – 19

அனுமன் அசோகவனத்தில் சிம்சுபா மரத்தடியில் சீதை அமர்ந்திருப்பதை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். சீதையிடம் சென்று தனது வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு தாயே தாங்கள் நலமாக இருப்பதை கண்டேன். இப்போது இலங்கையில் நடந்தது அனைத்தும் தாங்கள் அறிவீர்கள். அனைத்தும் தங்களின் சக்தியினால் என்பதை உணர்கிறேன். உங்களால் நெருப்பு சுடாமல் நான் காப்பற்றப்பட்டேன் இது எனது பாக்கியம் என்றார். அதற்கு சீதை உன்னால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை. சீக்கிரம் எனது ராமனை அழைத்து வர வேண்டும். இது உன் ஒருவனால் மட்டுமே செய்ய முடியும். என்றாள். விரைவில் சுக்ரீவன் தலைமையில் ஆயிரக்கணக்கான வானரத்துடன் ராமரும் லட்சுமணனும் விரைவில் வந்து சேருவார்கள். விரைவில் நீங்கள் அயோத்திக்கு திரும்பிச் செல்வீர்கள். நான் விரைவில் சென்று வருகிறேன் என்ற அனுமன் அங்கிருந்து கிளம்பினார்.

அனுமன் இலங்கை கடற்கரையின் மிகப்பெரிய மலை ஒன்றின் மீது ஏறி நின்று வில்லில் இருந்து செல்லும் அம்பு போல அங்கிருந்து ஆகாயத்திற்கு தாவினார் அனுமன். தூரத்தில் மகேந்திரகிரி மலை தெரிந்ததும் கடற்கரைக்கு அருகே வந்து விட்டோம் என்பதை உணர்ந்து வெற்றிக்காண கர்ஜனை செய்தார் அனுமன். ஆகாயத்தில் கருடன் பறந்து வருவதைப் போல கர்ஜனை செய்து கொண்டு அனுமன் வருவதைப் பார்த்த வானரங்கள் அனுமன் வந்து விட்டார் என்று ஆரவாரம் செய்தார்கள். இது வரையில் கவலையும் கண்ணீருமாக இருந்த வானரங்கள் அடங்காத மகிழ்ச்சியோடு குதித்தார்கள். அப்போது ஜாம்பவான் அனுமன் வெற்றியுடன் திரும்பி வருகிறான். அதனாலேயே இவ்வாறு கர்ஜனை செய்கின்றான் என்றார். அனைவரும் மரங்களிலும் குன்றுகளில் ஏறி அனுமன் ஆகாயத்தில் பறந்து வருவதைப் பார்த்துக் கொண்டே மகிழ்ச்சியுடன் நின்றார்கள். ஆகாயத்திலிருந்து கீழே பார்த்த அனுமன் மலைகள் குன்றுகள் மரங்கள் எல்லாம் வானரங்கள் நிறைந்து நிற்கும் காட்சியை பார்த்து மகிழ்ந்த அனுமன் கீழே இறங்கினார்.

அனுமனைப் பார்த்த மகிழ்ச்சியில் வானரங்கள் அனுமனை சுற்றி நின்று ஒன்றுகூடி ஆரவாரம் செய்தார்கள். ஜாம்பவான் அனுமனை வரவேற்றார். சீதை எப்படி இருக்கிறாள். அவளின் மனநிலை உடல் நிலை எப்படி இருக்கிறது. ராவணன் அவளிடம் எப்படி நடந்து கொள்கிறான். பார்த்தவற்றையும் நடந்தவற்றையும் அப்படியே சொல். சீதையை கண்ட மகிழ்ச்சியான செய்தியை அனைவரும் அனுபவிக்க காத்திருக்கிறோம். நீ சொல்பவற்றை வைத்து அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்து முடிவு செய்யலாம் என்று ஜாம்பவான் அனுமனிடம் கூறினார். அதற்கு அனுமன் கிளம்பியதில் இருந்து கடலைத் தாண்டும் போது வந்த ஆபத்தில் இருந்து சொல்ல ஆரம்பித்து இலங்கையை எரித்தது வரை அனைத்தையும் கூறினார். தன் வாலில் ராட்சசர்கள் பற்ற வைத்த நெருப்பில் இருந்து சீதை தன்னை காப்பற்றியதை திகைப்புடன் சொன்ன அனுமன் சீதை தன்னிடம் சொன்ன வார்த்தைகளை சொல்லும் போது மட்டும் அனுமனின் கண்களில் நீர் வடிந்தது. ராவணனைப் பற்றி சொல் என்று ஜாம்பவன் கேட்டார்.

அனுமன் பேச ஆரம்பித்தார். நெருப்பே நெருங்க முடியாத சீதையை யாராவது தூக்கிச் செல்ல வேண்டும் என்று அருகில் சென்றிருந்தால் கூட அவர்கள் சாம்பலாகிப் போயிருப்பார்கள். ஆனால் ராவணன் சீதையை தூக்கிச் செல்லும் போது அவனுக்கு ஒன்றும் ஆகவில்லை. அவ்வளவு தவ பலனை வைத்திருக்கும் வலிமையானவன் அவன். சீதையை தூக்கிச் சென்றதில் ராவணனுடைய தவ பலன்கள் சற்று குறைந்தாலும் இன்னும் சிறிது தவ பலன் அவனை காத்துக் கொண்டிருக்கிறது. அதனால் வலிமையுடன் இருக்கின்றான். சீதை நினைத்தால் இந்த ராவணனை நெருப்பால் பொசுக்கி இருப்பாள். அப்படி செய்தால் ராமரின் மதிப்பு குறைந்துவிடும் என்றும் ராமர் தன்னுடைய வலிமையால் ராவணனை வென்று அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் நடப்பது அனைத்தையும் சகித்துக் கொண்டு அமைதியாக இருக்கிறாள் என்றார்.

ராமாயணம் 5. சுந்தர காண்டம் பகுதி – 18

அனுமனை ராட்சச வீரர்கள் அரண்மனையை விட்டு வெளியே அழைத்து வந்து தெருக்கள் வழியாக இழுத்துச் சென்றார்கள். ராட்சச கூட்டம் சுற்றி நின்று அனுமனை திட்டியும் பரிகாசம் செய்தும் கோசம் போட்டும் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள். ராவணன் உத்தரவிட்டபடி வாலில் நெருப்பை வைக்கட்டும் அதன் பிறகு நமது சக்தியை இந்த ராட்சசர்களுக்கு காண்பிக்கலாம் என்று அனைத்தையும் பொறுத்துக் கொண்ட அனுமன் அமைதியாக இருந்தார். அனுமனின் வாலில் எண்ணைய் தடவிய துணியை சுற்றி நெருப்பை வைத்து இழுத்துச் சென்றார்கள் ராட்சசர்கள். அசோகவனத்தில் சீதைக்கு பாதுகாப்பாக நின்ற ராட்சசிகள் சீதையிடம் உன்னிடம் பேசி விட்டு சென்ற அந்த வானரத்தின் வாலில் நெருப்பை பற்ற வைத்து தெரு தெருவாக இழுத்துச் செல்கிறார்கள் என்று சொல்லி சிரித்தார்கள். சீதை அவளருகே அக்னியை மூட்டினாள். அக்னியே நான் செய்த புண்ணியம் ஏதேனும் இருந்தால் நான் உண்மையான பதிவிரதையாக இருந்தால் அனுமனை நெருப்பின் வெப்பம் தாக்காமல் குளிர்ச்சியுடன் இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தாள்.

அனுமனுக்கு தனது வாலில் உள்ள நெருப்பின் வெப்பம் தாக்காமல் குளிர்ச்சியாகவே இருந்தது. அனுமன் சிந்திக்க ஆரம்பித்தார் நெருப்பு வைக்கப்பட்ட துணி எரிகிறது ஆனால் நமது வால் குளிர்ச்சியாக இருக்கிறது தன் தந்தை வாயு பகவானுக்கு மரியாதை செய்ய அக்னி பகவான் தன்னை சுடவில்லை என்று எண்ணிய அனுமன் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று எண்ணினார். தன்னை பரிகாசம் செய்த ராட்சசர்களின் மீது அனுமனுக்கு கோபம் அதிகரித்தது. தன்னை கட்டியிருக்கும் கயிற்றை உதறி அறுத்தார். தனது உருவத்தை பெரிதாக்கினார். எரியும் வாலுடன் ஒவ்வொரு மாளிகையாக குதித்து தாவி வாலில் உள்ள நெருப்பை ஒவ்வொரு மாளிகைக்கும் வைத்தார். பெரும் காற்று நெருப்பிற்கு உதவி செய்தது. ஒவ்வொரு மாளிகையும் முழுமையாக எரியத் தொடங்கியது. சிறிது நேரத்தில் இலங்கை நகரமே வானளவு நெருப்பில் எரிந்தது. ராட்சசர்கள் அனைவரும் கதறிக்கொண்டே ஓடினார்கள். தனது வாலில் உள்ள நெருப்பை கடல் நீரில் அனுமன் அணைத்துக் கொண்டார்.

அனுமன் உயரமான திருகூட மலை மேல் ஏறி நின்று எரியும் இலங்கையை பார்த்து மகிழ்ந்தார். உடனே நாம் தவறு செய்து விட்டோமோ என்று எண்ணிய அனுமன் திடுக்கிட்டு அதிர்ந்தார். எவ்வளவு சாமர்த்தியமும் வலிமையும் நம்மிடம் இருந்தாலும் கோபத்தை அடக்க முடியாமல் மதியிழந்து விட்டோமே என்று எண்ணினார். இந்த இலங்கை நகரத்தில் பெரும் தீயை உண்டாக்கி விட்டோம். இந்த நெருப்பில் சீதையும் எரிந்து போயிருப்பாளே. சீதையை ராட்சசர்கள் கொல்வதற்கு முன்பாகவே நாம் கொன்று விட்டோம். கோபத்தில் நாம் செய்த செயல் ராம காரியத்தையும் நாசம் செய்து விட்டதே நம்மைப் போன்ற மூடன் பாவி இந்த உலகத்தில் யாரும் இருக்க மாட்டார்கள் என்று தன்னை தானே திட்டிக் கொண்டு துக்கத்தில் இருந்தார் அனுமன். இனி இந்த உலகத்தில் வாழ நமக்கு தகுதி இல்லை. இங்கேயே நமது உயிரை விட்டு விடலாம் என்று முடிவு செய்தார் அனுமன். அப்போது நல்ல சகுனங்கள் அனுமனுக்கு தென்பட்டது. உடனே சிந்திக்க ஆரம்பித்தார். தனது வாலில் உள்ள நெருப்பு நம்மை சுடாத போது அற நெறி தவறாமல் சத்தியத்தை கடைபிடிக்கும் ராமரின் மனைவி சீதையை நெருப்பு எப்படி சுடும். கற்புக்கரசியாக இருக்கும் சீதை இந்த நெருப்பில் அழிந்திருக்க மாட்டார். சீதை நலமாக இருப்பார் என்று அனுமன் நினைத்துக் கொண்டிருக்கும் போது ஆகாயத்தில் இரண்டு வானவர்கள் பேசிக் கொண்டு சென்றது அனுமனுக்கு கேட்டது.

அனுமன் இலங்கையில் இந்த அற்புதமான செயலை செய்திருக்கிறார். இலங்கையில் சீதை இருக்கும் இடம் தவிர மற்ற அனைத்து இடங்களும் பற்றி எரிகிறது. அனுமன் வாழ்க அனுமனின் பராக்கிரமம் வாழ்க என்று சொல்லிக் கொண்டே சென்றார்கள். அனுமனுக்கு அப்போதுதான் புரிந்தது. சீதையின் புண்ணியத்தால் தான் நமது வாலில் இருந்த நெருப்பு நம்மை சுடவில்லை. நம்மை சுடாத நெருப்பு அவரை எப்படி சுடும் சீதை நலமாக இருக்கிறார். நாம் பிழைத்தோம் ஒரு முறை சீதையை பார்த்து விட்டு பிறகு செல்லலாம் என்று முடிவெடுத்த அனுமன் அசோகவனத்திற்கு மீண்டும் சென்றார்.

ராமாயணம் 5. சுந்தர காண்டம் பகுதி – 17

அனுமன் மேலும் பேச ஆரம்பித்தார். நான் வானர அரசன் சுக்ரீவனிடம் இருந்து வந்திருக்கும் தூதுவன் என்று சொல்லியும் என்னை கயிற்றால் கட்டி வைத்து எனக்கு ஆசனம் தராமல் நிற்க வைத்து பேசிக் கொண்டிருக்கின்றீர்கள். இந்திரஜித்தின் பிரம்மாஸ்திரத்தினால் நான் வீழ்ந்து விட்டேன் நான் கைதி என்று நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள். இந்திரஜித்துக்கு வரம் கொடுத்த பிரம்மா எனக்கும் சிரஞ்சீவி என்ற வரத்தை கொடுத்திருக்கின்றார். பிரம்மாவின் வரத்திற்கு கட்டுப்பட்டு நான் இவ்வளவு நேரம் அமைதியாக இருந்தேன். இப்போது எனக்குரிய ஆசனத்தை நானே ஏற்படுத்திக் கொள்கிறேன் என்று அனுமன் தன்னுடைய வாலை பெரியாக்கி சுருட்டி ஆசனம் செய்து அதன் மேல் அமர்ந்து பேச ஆரம்பித்தார். தசரதரின் மூத்த குமாரன் ராமர் தனது தந்தையின் சத்தியத்தை காப்பாற்ற வனவாசம் மேற்கொண்டார். அப்போது ஒரு ராட்சசன் வஞ்சகமாக ஏமாற்றி அவரது மனைவி சீதையை தர்மத்திற்கு விரோதமாக தூக்கிச் சென்று விட்டான். ராமர் சீதையை தேடிக் கொண்டிருக்கும் நேரத்தில் சுக்ரீவனிடம் நட்பு கொண்டார். யாராலும் அழிக்க முடியாத வலிமை பொருந்திய வாலியை ராமர் வதம் செய்து சுக்ரீவனுக்கு அரச பதவியை பெற்று தந்தார். ராமரின் கட்டளைப்படி சுக்ரீவன் சீதையை தேட உலகம் முழுவதும் தனது வானர படைகளை அனுப்பி வைத்தார். இந்த இலங்கையில் சீதையை தேடி நான் வந்தேன். இங்கு சீதையை கண்டேன். நீங்கள் சீதையை அபகரித்து வந்தது தர்மத்துக்கு விரோதமான செயல் என்று உங்களுக்கு தெரியும். உங்களின் இந்த செயலால் ராமர் மற்றும் வானர கூட்டத்தின் பகையை சம்பாதித்துக் கொண்டீர்கள். உடனடியாக ராமரிடம் மன்னிப்பு கேட்டு சீதையை அவரிடம் ஒப்படைத்து சரணடைந்து விடுங்கள். இல்லையென்றால் ராமர் மற்றும் அவரது தம்பி லட்சுமனணின் அம்புகள் மற்றும் வானர கூட்டத்தினால் இந்த ராட்சச கூட்டம் மொத்தமும் அழிந்து போகும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் என்றார் அனுமன்.

அனுமனின் பேச்சினால் கோபமடைந்த ராவணன் இந்த வானரத்தை கொன்றே விட வேண்டும் என்று முடிவு செய்தான். அவனது கண்கள் கோபத்தில் துடித்தது. அனுமன் மேலும் பேச ஆரம்பித்தார். புத்திமான்கள் தர்மத்துக்கு எதிராக செயல்பட்டு தங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்திக் கொள்ள மாட்டார்கள். தங்களின் இந்த செயலால் இத்தனை நாட்கள் நீங்கள் செய்த தவங்கள் எல்லாம் அழிந்து போகும். உங்களுடைய தவ பலன்களின் வலிமை எல்லாம் ராமரின் முன்பு தோற்றுப் போகும். நீங்கள் பிழைக்க இப்போது ஒரு வழி மட்டுமே உள்ளது. ராமரை சரணடைவதை தவிர வேறு வழி இல்லை. சிந்தித்துப் பார்த்து உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள். ராம தூதுவனான எனது சொல்லை மதித்து நல்வழியில் சென்று பிழைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி முடித்தார் அனுமன்.

அனுமனிடம் நிறுத்து உனது பேச்சை என்று கர்ஜனை செய்த ராவணன் இந்த வானரத்தை முதலில் கொல்லுங்கள் என்று கத்தினான். தூதுவனை கொல்வது தவறாகும். இதுவே ராஜ நீதி எனவே இந்த வானரத்தை கொல்ல வேண்டாம் என்று சபையில் இருந்த ராவணனின் தம்பி விபீஷணன் கூறினான். அதற்கு ராவணன் எனது மகன் அஷன் உட்பட நம்முடைய சேனாதிபதிகள் மற்றும் ராட்சச சேனைகள் பலரை இந்த வானரம் கொன்றிருக்கிறான். பாப காரியத்தை செய்த இந்த வானரத்தை கொல்வதில் தவறு ஒன்றும் இல்லை என்றான். அதற்கு விபிஷணன் இந்த வானரம் குற்றம் செய்தவனாக இருந்தாலும் அனைத்தும் பிறருடைய ஏவலினால் செய்திருக்கிறான். ஏவியவர்களை விட்டுவிட்டு தூதுவனாக வந்தவனை தண்டிப்பதில் எந்த பயனும் இல்லை. அந்த வானரத்தை அனுப்பியவர்களை தண்டிப்பதற்கு ஏற்ற வழியை தேடுங்கள். இந்த வானரத்தை உயிருடன் அனுப்பினால் மட்டுமே அவர்களிடம் சென்று சீதை இங்கிருக்கும் செய்தியை சொல்லுவான் இந்த வானரம். செய்தி கேட்டதும் அவர்கள் அனைவரும் நம்மை தாக்க இங்கே வருவார்கள். அவர்களை நம்முடைய பலத்தினால் தண்டிக்கலாம். இப்போது தண்டிக்க எண்ணினால் இந்த வானரத்தின் அங்கம் எதையாவது ஊனப்படுத்தி விடுங்கள் என்று சொல்லி முடித்தான் விபிஷணன். இந்த யோசனைக்கு ஒப்புக் கொண்ட ராவணன் வானரத்தின் லட்சண உறுப்பான வாலில் நெருப்பை வைத்து வெளியே துரத்தி விடுங்கள். வால் எறிந்து வால் இல்லாமல் அவலட்சணமாக இருக்கட்டும் என்று தனது சேவகர்களுக்கு ராவணன் உத்தரவிட்டான்.

ராமாயணம் 5. சுந்தர காண்டம் பகுதி – 16

அனுமன் மயக்கமடைந்தது போல் பாசாங்கு செய்கிறார். அப்படியே விட்டால் இந்த வானரம் திடீரென்று எழுந்து நம்மை தாக்கக் கூடும். அவரை உடனே கயிற்றால் கட்டி விடலாம் என்று ஒரு ராட்சசன் கூறினான். அருகில் இருந்த ராட்சசர்கள் அனைவரும் அமோதித்து ஒரு பெரிய கயிற்றை கொண்டு வந்து அனுமனை கட்டினார்கள். மந்திர பிரம்மாஸ்திரத்தினால் கட்டப்பட்டு இருப்பவர்களை தூலப்பொருளான கயிறு கொண்டு கட்டினால் பிரம்மாஸ்திரம் செயலற்றுப் போகும் என்பதை அறிந்திருந்த இந்திரஜித் வானரத்தை கயிரால் கட்டாதீர்கள் என்று கத்தினான். ராட்சசர்கள் வெற்றி முழக்கத்தில் போட்ட கூச்சலில் தூரத்தில் நின்றிருந்த இந்திரஜித் சொன்னது யார் காதிலும் விழவில்லை. ராட்சசர்கள் அனுமனை கட்டியதை தடுக்க முடியாமல் தவித்த இந்திரஜித் நம்முடைய பிரம்மாஸ்திரம் வீணாகப் போய் விட்டதே விரைவில் இந்த வானரம் எழுந்து யுத்தம் செய்ய வந்து விடுவான். மீண்டும் வானரத்தின் மீது பிரம்மாஸ்திரத்தை பிரயோகிக்க முடியாதே என்று மிகவும் வருத்தப்பட்டான்.

அனுமன் தன்னை கட்டிய பிரம்மாஸ்திரம் அவிழ்ந்து போனதை உணர்ந்தார். சாதாரண கயிற்றினால் கட்டப்பட்டிருப்பதை பார்த்த அனுமன் தன் வலிமையால் ஒரு கனத்தில் இந்த கயிற்றை அறுத்து விடலாம். ஆனால் கயிற்றை அறுக்காமல் நாம் இப்படியே இருப்போம். இவர்கள் நம்மை ராவணனிடம் அழைத்துச் செல்வார்கள். அவனிடம் பேசுவதற்கு நமக்கு வாய்ப்பு கிடைக்கும். இதனை பயன்படுத்திக் கொண்டு ராவணனை சந்தித்து அவனை பயமுறுத்தி வைக்கலாம் என்று அனுமன் அமைதியாக இருந்தார். ராட்சசர்கள் தனது கைகளினால் அனுமனை அடித்தும் திட்டியும் பரிகாசம் செய்து கொண்டே ராவணனின் அரண்மனை வரை இழுத்துச் சென்றார்கள். ராவணனை பயமுறுத்தியே ஆக வேண்டும் என்று அனைத்தையும் அனுமன் பொறுத்துக் கொண்டார்.

அனுமனை ராவணன் முன்பு கொண்டு போய் நிறுத்தினார்கள். ராவணன் பட்டுப் பீதாம்பரமும் கண் கூசும் ஆபரணங்களுடன் ரத்தின கீரீடத்துடனும் அரசவையில் கம்பீரமாக ஒரு மலை போல் அமர்ந்திருந்தான். ராட்சசர்களின் இவ்வளவு நேரம் செய்த கொடுமைகளில் அமைதியாக இருந்த அனுமன் ராவணனை பார்த்ததும் சீதைக்கு அவன் செய்த கொடுமைகள் ஞாபகம் வந்தது பெருங்கோபம் கொண்டு சித்திக்க ஆரம்பித்தார் அனுமன். எழிலுடனும் பராக்கிரம சாலியாக இருக்கும் இந்த ராவணன் தர்மத்தில் இருந்து விலகாமல் இருந்து சத்தியத்தை கடைபிடித்திருந்தால் தேவலோகத்தில் இருப்பவர்கள் கூட இவனுக்கு ஈடாக மாட்டார்கள். ராவணன் தான் பெற்ற வரங்களையும் மேன்மையையும் தவறான காரியங்கள் செய்து அனைத்தையும் இழந்து விட்டானே என்று அவன் மீது பரிதாப்பட்டார் அனுமன். ராவணன் தன் மந்திரிகளிடம் யார் இந்த வானரம் இலங்கைக்குள் எதற்காக வந்தான் என்று விசாரியுங்கள் என்று உத்தரவிட்டான். மத்திரிகளில் ஒருவரான பிரஹஸ்தன் என்பவன் அனுமனிடம் வந்து வானரனே யார் நீ? எதற்காக இங்கே வந்தாய்? வானர வேடம் அணிந்து வந்திருக்கின்றாயா? உன்னை அனுப்பியது யார்? இந்திரனா இல்லை குபேரனா வேறு யாராவது உன்னை ஏவினார்களா? உண்மையை சொல்லி விட்டால் இங்கிருந்து நீ உயிரோடு தப்பிக்கலாம் மறைக்காலம் சொல் இல்லையென்றால் இங்கிருந்து உயிருடன் செல்ல முடியாது என்றான்.

அனுமன் பேச ஆரம்பித்தார். இந்திரனாவது குபேரனாவது யாரும் என்னை அனுப்பவில்லை. வேடம் அணிந்து கொண்டும் நான் இங்கு வரவில்லை. வானர அரசனான சுக்ரீவனின் தூதுவனாக நான் இங்கே வந்தேன். ராட்சச அரசனான ராவணனை பார்க்க விரும்பினேன். அதற்கு சரியான அனுமதி எனக்கு கிடைக்காது என்பதை அறிந்தேன். அதற்காக வனத்தை அழித்தேன். என்னை கொல்ல வந்தவர்களை நான் அழித்தேன். இப்போது உங்கள் முன்பு நின்கின்றேன். உங்களுக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். வானர அரசன் சுக்ரீவன் ராவணனை தன் சகோதரனாக பாவித்து உங்களின் நலத்தை விசாரிக்கச் சொன்னார் என்ற செய்தியை முதலில் உங்களிடம் சொல்லி விடுகின்றேன் என்றார்.

ராமாயணம் 5. சுந்தர காண்டம் பகுதி – 15

அனுமன் அஷனை கொன்ற பிறகு வழக்கம் போல் அசோக வனத்தின் மதில் சுவற்றின் மீது அமர்ந்து கொண்டார். தேவர்களுக்கு நிகரான ராவணனின் புதல்வன் அஷன் கொல்லப்பட்ட செய்தி அறிந்த இந்திரன் அனுமனைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். பல முனிவர்களும் தேவர்களும் ஆகய வழியாக வந்து அனுமனைப் பார்த்து வாழ்த்தி விட்டுச் சென்றார்கள். ராவணனால் அழைக்கப்பட்ட இந்திரஜித் தன் தம்பி அஷன் ஒரு வானரத்தால் கொல்லப்பட்டான் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தான். விரைவாக அரசவைக்குள் வந்து ராவணனின் முன் வந்து நின்று தனது வணக்கத்தை தெரிவித்தான். ராவணன் இந்திரஜித்திடம் பேச ஆரம்பித்தான். இந்திரனுக்கு சமமான வீரன் நீ. எல்லா அஸ்திரங்களையும் நன்றாக பயின்று அதனை அடைந்திருக்கிறாய். நம்மை எதிர்த்த தேவர்களையும் அசுரர்களையும் யுத்தத்தில் வென்று இருக்கின்றாய். பிரம்மாவை தவம் செய்து பூஜித்து அவரிடமிருந்து பிரம்மாஸ்திரம் பெற்று இருக்கின்றாய். உன்னை எதிர்த்து யுத்தம் செய்யக் கூடியவர்கள் இந்த உலகத்தில் யாரும் இல்லை. அறிவில் சிறந்த நீ காரியங்களை சரியாக யோசித்து செய்வதில் உனக்கு நிகர் யாருமில்லை. அசோக வனத்தில் ஒரு வானரம் நம்மை எதிர்த்துக் கொண்டு இருக்கிறது. தேவர்களின் சூழ்ச்சியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். நான் அனுப்பிய கிங்கரர்கள் ஜமாலி நம்முடைய சேனாதிபதிகள் 5 பேர் உனது அருமை தம்பி அஷன் அத்தனை பேரும் அந்த வானரத்தால் கொல்லப்பட்டார்கள். நீ தான் அந்த வானரத்தை வெல்லும் வல்லமை கொண்டவன். அந்த வானரத்தை நமது சேனைகளின் பலத்தால் வெல்ல முடியாது. அந்த வானரத்தின் அறிவாற்றலையும் வல்லமையையும் பராக்கிரமத்தையும் சிந்தித்து பார்த்து உன்னுடைய தவ பலத்தை உபயோகித்து சிறந்த அஸ்திரத்தை பயன்படுத்தி கைது செய்து இங்கே வெற்றியுடன் திரும்பி வா என்று சொல்லி இந்திரஜித்தை அனுப்பி வைத்தான் ராவணன். இந்திரஜித் தந்தையே வலம் வந்து ஆசி பெற்றுக்கொண்டு நான்கு சிங்கங்கள் பூட்டிய தேரில் நின்று வில்லின் நானை இழுத்து சப்தம் செய்து அசோக வனத்தை நோக்கிச் சென்றான். அவன் பின்னே ராட்சச சேனைகள் பெரும் கூட்டமாக வந்தார்கள்.

அனுமனுக்கு தூரத்தில் ஒரு கூட்டம் வருவது தெரிந்தது மீண்டும் யுத்தம் செய்வதற்கு தயாரானார். இந்திரஜித் தன்னுடைய வில்லில் அம்பு மழை பொழிந்தான். அனைத்து அம்புகளில் இருந்தும் அனுமன் லாவகமாக தப்பினார். சில அம்புகள் அனுமன் மீது பட்டாலும் அந்த அம்புகளால் அனுமனின் வஜ்ரம் போன்ற உடம்பை துளைக்க முடியவில்லை. இந்திரஜித் விட்ட அம்புகள் அனைத்தும் பயனற்றுப் போனது. ராட்சசர்கள் ஏற்படுத்திய பேரிகை நாணோசை சத்தங்களுக்கு எதிராக அனுமனின் கர்ஜனை சத்தம் பெரிதாக இருந்தது. இருவருக்கிடையிலும் நடந்த யுத்தம் இருவரின் சாமர்த்தியத்தையும் வலிமையையும் காட்டியது. யுத்தம் நீண்டு கொண்டே சென்றது. இந்திரஜித் சிந்திக்க தொடங்கினான். எத்தனை அம்புகள் விட்டாலும் இந்த வானரத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. தந்தை சொன்னது முற்றிலும் சரியே. நமது தவத்தினால் பெற்ற அஸ்திரத்தை உபயோகித்து இந்த வானரத்தை அடக்க வேண்டும் என்று முடிவு செயதான். பிரம்மாவிடம் இருந்து பெற்ற பிரம்மாஸ்திரத்தை அனுமன் மீது எய்தான் இந்திரஜித். பிரம்மாஸ்திரம் அனுமனை செயல் இழக்கச் செய்து கீழே தள்ளியது.

அனுமன் நம்மை கட்டியது பிரம்மாஸ்திரம் என்பதை தெரிந்து கொண்டார். பிரம்மா தனக்கு அளிந்த சிரஞ்சீவி பட்டத்தையும் அந்தநேரம் அவர் சொல்லிய செய்திகளையும் ஞாபகம் செய்து கொண்டார். ஒரு முகூர்த்த நேரம் மட்டுமே இந்த அஸ்திரம் நம்மை கட்டி வைக்கும் அதன் பிறகு செயலற்றுப் போகும் இதனால் நமக்கு எந்த ஆபத்தும் இல்லை. இந்த ஒரு முகூர்த்த நேரத்தில் இந்த ராட்சசர்களால் என்ன செய்ய முடியும் பார்க்கலாம் என்று பிரம்மாவின் பிரம்மாஸ்திரத்திற்கு கட்டுப்பட்டு தரையில் விழுந்து அமைதியாக இருந்தார். அனுமன் கீழே விழுந்து செயலற்றுப் போய் விட்டார் என்று அறிந்த ராட்சசர்கள் அனுமனுக்கு அருகில் வந்து சூழ்ந்து கொண்டு இந்திரஜித்தை புகழ்ந்தும் அனுமனை தின்று விடுவோம் என்றும் கோசம் போட ஆரம்பித்தார்கள்.

ராமாயணம் 5. சுந்தர காண்டம் பகுதி – 14

அனுமன் பிடிக்க வந்த ராட்சசர்களின் கூட்டத்தை ராவணனின் ஐந்து சேனாதிபதிகள் வழி நடத்திக் கொண்டு வந்தார்கள். அனுமனை பல வகையான ஆயுதங்கள் கொண்டு தாக்கினார்கள். ராட்சசர்களின் எந்த ஆயுதத்தாலும் வஜ்ராயுதம் போல் இருந்த அனுமனை கட்டுப்படுத்த முடியவில்லை. அனுமன் வழக்கம் போல் மரங்களை வேரோடு பிடுங்கி அவர்கள் மீது எறிந்தும் பெரிய பாறைகளை தூக்கி வீசியும் சிலரை கால்களால் மிதித்தும் கொன்றார். சேனாதிபதிகள் வந்த தேரின் மீது குதித்து தேரை பொடிப் பொடியாக்கினார். ஐந்து சேனாதிபதிகளும் இறந்தனர். அவர்களுடன் வந்திருந்த ராட்சசர்களில் உயிர் பிழைத்தவர்கள் பயந்து ஓடி வீட்டார்கள். அனுமன் மீண்டும் அசோகவனத்தின் மதில் சுவற்றின் மீது அமர்ந்து கொண்டார்.

அனுமனை பிடிக்கச் சென்ற ஐந்து சேனாதிபதிகளும் இறந்து விட்டனர் என்ற செய்தி ராவணனுக்கு சிறிது பயத்தை கொடுத்தது. ஒரு தனி வானரம் எப்படி இவ்வளவு பலமுடனும் பராக்கிரமத்துடனும் இருக்கின்றான். தலை சிறந்த சேனாதிபதிகளையும் வீரர்களையும் கொன்றது சாரணமான நிகழ்வு அல்ல. தேவர்கள் ஏதோ சூழ்ச்சி செய்திருக்கின்றார்கள் என்று ராவணன் கவலையுடன் இருந்தாலும் தன் கவலையை முகத்தில் காட்டாமல் சிரித்த முகத்துடன் அனுமனை பரிகாசம் செய்து சிரித்தான். தன் சபையில் இருப்பவர்களை சுற்றிப் பார்த்தான். ராவணனின் மகன் அஷன் மிக உற்சாகமாக எழுந்து நின்றான். அந்த வானரத்தை நான் தனியாக சென்று பிடித்து வருகின்றேன் எனக்கு உத்தரவு கொடுங்கள் என்று ராவணனிடம் கேட்டான். யுத்தத்திற்க்கு பயப்படாமல் தைரியமாக முன் நின்ற தன் வீர மகனைப் பார்த்து பெருமை கொண்ட ராவணன் அனுமனை பிடித்து வர அனுமதி கொடுத்தான். தேவர்களுக்கு சமமான வாலிப வீரனான அஷன் தான் தவம் செய்து பெற்ற தன்னுடைய எட்டு குதிரைகள் பூட்டிய தங்க ரதத்தில் ஏறி அசோக வனத்தை நோக்கி சென்றான். சாதாரண வானரத்துடனே போர் புரியப்போகின்றோம் சில கனத்தில் அந்த வானரத்தை பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் இருந்தான் அஷன். அவனுடன் மிகப்பெரிய ராட்சச படைகள் பின்னே சென்றது.

அனுமனின் பெரிய உருவத்தையும் இவ்வளவு பெரிய ராட்சச படைகளை கண்டும் பயமில்லாமல் நின்ற அனுமனின் கம்பீரத்தையும் கண்ட அஷன் தன்னுடைய வீரத்திற்கு சரி சமமான விரோதியுடனே யுத்தம் செய்ய போகின்றோம் என்று மகிழ்ந்த அஷன் அந்த வானரத்தை பிடிக்க சிறிது நேரமாகும் போலிருக்கிறதே என்று எண்ணினான். இருவருக்கும் இடையில் கடும் யுத்தம் நடந்தது. அஷன் அனுமனின் மீது எய்த அம்புகள் மேகங்களின் கூட்டம் போல் கிளம்பி மலை மேல் மழை பொழிவது போல இருந்தது. அனுமனுடைய வஜ்ரம் போன்ற உடம்பை அஷனின் அம்புகளால் ஒன்றும் செய்ய இயலவில்லை. ஆகாயத்தில் மேகங்களுக்கு நடுவில் பறப்பது போல் அம்புகளுக்கு இடையில் சென்ற அனுமன் அஷனை தாக்கினார். ராட்சச படைகளை பறந்து தாக்கி சிதறடித்தார். ராவணனின் குமாரனாகிய அஷனின் சாமர்த்தியம் வீரம் பொறுமை ஆகிவற்றை கண்ட அனுமன் இவ்வளவு சிறிய வயதில் பெரிய வீரனாக இருக்கின்றானே இவனை கொல்ல வேண்டுமா என்று வருத்தப்பட்டு விளையாட்டாக யுத்தம் செய்து நேரத்தை கடத்தினார். ராட்சசர்களுடைய பலம் பெருகிக் கொண்டே சென்றது. இறுதியில் அனுமன் அஷனை கொன்று விடலாம் என்று மனதை உறுதிப்படுத்திக் கொண்டு அஷனுடைய தேரின் மேல் குதித்தார். தேர் பொடிப்பொடியானது. குதிரைகள் இறந்தது. தனியாக தரையில் நின்ற அஷன் தன்னுடைய வில்லுடனும் கத்தியுடனும் ஆகாயத்தில் கிளம்பி அனுமனை தாக்கினான். இருவருக்கும் இடையிலான போர் ஆகாயத்தில் நடந்தது. அஷனுடைய எலும்புகளை உடைத்து உடலை நசுக்கி கொன்றார் அனுமன். அஷன் வானரத்தால் கொல்லப்பட்டான் என்ற செய்தி அறிந்ததும் ராவணன் இதயம் துடித்தது. கோபத்தில் கத்தினான் தன் உள்ளத்தை ஒரு நிலையில் வைத்துக்கொள்ள முடியாமல் இந்திரனுக்கு சமமான வீரனான இந்திரஜித்தை அழைத்தான்.

ராமாயணம் 5. சுந்தர காண்டம் பகுதி – 13

அனுமன் அசோகவனத்து மதில் சுவற்றின் மேல் அமர்ந்திருப்பதை கண்ட ராட்சசர்கள் அனுமனை தாக்க முற்பட்டார்கள். அனுமன் ராட்சசர்களை கண்டதும் அசோகவனத்தின் வாயில் கதவில் இருந்த பெரிய இரும்பு கட்டையை பிடுங்கி எதிர்கொண்ட ராட்சசர்கள் அத்தனை பேரையும் எதிர்த்து யுத்தம் செய்தார். மரங்களை வேரோடு பிடுங்கி அவர்களின் மீது எறிந்தார். வந்திருந்த ராட்சசர்களை ஒருவர் பின் ஒருவராக அழித்து விட்டு மீண்டும் அசோகவனத்தின் மதில் சுவற்றின் மேல் அமர்ந்து கொண்டு வாழ்க ராமர் வாழ்க லட்சுமணன் வாழ்க சுக்ரீவன் என்று கர்ஜனை செய்த அனுமன் ராட்சசர்களை உங்களுக்கு அழிவு காலம் வந்து விட்டது. எங்களது பகைவர்களான உங்களை அழிக்க வந்திருக்கின்றேன். ஆயிரம் ராவணன்கள் இருந்தாலும் இப்போது என்னிடம் யுத்தம் செய்ய வரலாம். என்னை எதிர்க்க வரும் அனைவரையும் அழிக்க நான் தயாராக நிற்கின்றேன். உங்கள் நகரத்தை இப்பொழுது அழிக்க போகின்றேன் என்று இலங்கை நடுங்கும்படி அனுமன் கர்ஜித்தார். வானரத்தை பிடிக்கச் சென்ற ராட்சசர்கள் அனைவரும் இறந்து விட்டார்கள் என்ற செய்தியை கேட்ட ராவணன் மிகுந்த கோபத்துடன் கொதித்து எழுந்து கர்ஜனை செய்ய ஆரம்பித்தான். ராட்சசர்களின் நிகரற்ற வீரனான பிரகஸ்தனுடைய மகனான ஜம்புமாலி என்பவனை அழைத்து அந்த வானரத்தின் கொட்டத்தை அடக்கிவிட்டு வா என்று உத்தரவிட்டான் ராவணன். ஜம்புமாலி ராட்சசன் கவசம் அணிந்து கொண்டு தனது கொடூரமான ஆயுதங்களுடன் அசோகவனம் கிளம்பினான்.

அனுமன் அருகில் இருக்கும் பெரிய மண்டபத்தின் மேலே ஏறி நின்றார். பெரிய உருவத்தில் இருந்த அனுமன் நிற்பது இலங்கையின் மேல் ஆகாயத்தில் ஒரு பொன்மயமான மலைத்தொடர் இருப்பது போல் இருந்தது. இலங்கையை அழிக்க வந்திருக்கிறேன் என்று கர்ஜனை செய்த அனுமனின் சத்தம் நகரத்தின் எட்டு திசைகளிலும் எதிரொலித்தது. அனுமனின் சத்தத்தை கேட்ட பல ராட்சசர்களின் உள்ளம் நடுங்கியது. அந்த பெரிய மண்டபத்தில் காவல் காத்துக் கொண்டிருந்த ராட்சசர்கள் அனுமன் மீது பல பயங்கர ஆயுதங்களை தூக்கி எறிந்து தாக்கினார்கள். அனுமன் மண்டபத்தின் தூணாக இருந்த தங்கத்தினால் செய்யப்பட்டு வைரத்தினால் அலங்கரிக்கப்பட்ட தூணை பிடுங்கி எதிர்த்த ராட்சசர்களின் மீது எறிந்தான். தூணை எடுத்ததும் பெரிய மண்டபம் கீழே இடிந்து விழுந்தது. தாக்கிய ராட்சசர்கள் அனைவரும் அழிந்தனர். இஷ்வாகு குலத்தின் ராஜ குமாரன் ராமரின் பகையை ராவணன் சம்பாரித்துக் கொண்டான். அதன் விளைவாக என்னைக் காட்டிலும் வலிமையான வானரர்கள் சுக்ரீவன் தலைமையில் வரப் போகின்றார்கள் உங்களையும் உங்கள் நகரத்தையும் அழிக்கப் போகின்றார்கள் என்று அனுமன் கர்ஜனை செய்தார். அனுமனின் சத்தத்தில் பல ராட்சசர்கள் ஓடி ஒளிந்தனர்

அனுமன் இருக்கும் இடத்திற்கு ஜம்புமாலி தனது படைகளோடு வந்து சேர்ந்தான். பெரிய கோவேறு கழுதைகள் பூட்டிய தேரில் ஆயுதங்களுடன் வந்திருக்கும் ராட்சசனை பார்த்த அனுமன் தாக்குதலுக்கு தயாரானார். தேரிலிருந்த ஜம்புமாலி அனுமன் மீது அம்புகளை எய்தான். ஒரு அம்பு அனுமனின் உடம்பை தாக்கி லேசாக ரத்தம் வந்தது இதனால் கோபமடைந்த அனுமன் அருகில் இருந்த பெரிய கல்லை எடுத்து ஜம்புமாலி மீது எறிந்தார். அதிலிருந்த ஜம்புமாலி மீண்டு வருவதற்குள் ஒரு பெரிய ஆச்சா மரத்தை வேரோடு பிடுங்கி தேரின் மீது வீசினார். தேர் இருந்த இடம் தெரியாமல் பொடிப் பொடியாய் போனது. உடன் வந்த ராட்சச வீரர்கள் அனைவரையும் அழித்தார் அனுமன். ஜம்புமாலியின் பெரிய ராட்சச உடம்பு நசுங்கி கை கால் தலை என அடையாளம் தெரியாமல் அனைத்தும் தரையோடு தரையாக பிண்டமானது. யுத்தத்தின் முடிவில் ஜம்புமாலி இறந்த செய்தி ராவணனுக்கு தெரிவிக்கப்பட்டது. வலிமையான வீரன் ஜம்புமாலி இறந்த செய்தியை கேட்ட ராவணன் திகைத்தான். வந்திருக்கும் வானரம் ஒரு மிருகம் போல் தெரியவில்லை. ஏதோ புதிதாக தெரிகின்றது. என்னுடைய பழைய பகைவர்களான தேவர்களின் சதியாக இருக்க வேண்டும் ஒரு புது வகையான பிராணியை உருவாக்கி இங்கு அனுப்பியிருக்கிறார்கள். இந்த வானரத்தை கட்டாயம் பிடித்து என் முன் கொண்டு வர வேண்டும் என்று தனது வலிமையான ராட்சச வீரர்களையும் அவர்களுக்கு துணையாக பெரும் சேனையையும் அனுப்பினான் ராவணன். பெரிய ராட்சசர்களின் கூட்டம் பெரும் படைகளாக அசோக வனம் நோக்கி சென்றார்கள்.

ராமாயணம் 5. சுந்தர காண்டம் பகுதி – 12

அனுமன் அசோகவனத்தின் மதில் மேல் அமர்ந்து சிறிது நேரம் யோசித்தார். ராமனிடம் சென்று சீதை இருப்பிடம் பற்றிய செய்தியைச் சொல்லி அனைத்து வானர படைகளுடன் இலங்கைக்கு வரும் வரை சீதை சுகமாக இருக்க வேண்டும். சீதையை யாரும் துன்புறுத்தக் கூடாது இதற்கு என்ன செய்யலாம் என்று சிந்தனை செய்தார். செல்வத்திலும் சுக போகத்திலும் இருக்கும் ராட்சசர்களிடம் சமாதான வழியில் பேசிக் கொண்டிருக்க முடியாது. ராவணன் எப்பொழுதும் போல் கர்வம் கொண்டவனாக தினந்தோறும் வந்து சீதையை துன்புறுத்துவான். ராவணனுக்கும் அவனுடைய ராட்சசர்கள் கூட்டத்திற்கும் பயத்தை உண்டாக்கி விட வேண்டும். அப்படி செய்தால் ராவணனும் ராட்சசிகளும் சீதையை எந்த விதத்திலும் துன்புறுத்த மாட்டார்கள். சீதையை கண்டு பயப்படுவார்கள். நான் இப்போது இங்கு வந்தது கூட ராவணனுக்கு தெரியாது. நாம் வந்து சென்ற அடையாளத்தை ஏற்படுத்தி விட்டு பயத்தை உண்டாக்கி விடலாம் என்று எண்ணினார். இந்த காரியத்தை சிறிது நேரத்தில் முடித்து விட்டு விரைவில் ராமரிருக்கும் இடம் செல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தார் அனுமன். உடனே தனது உருவத்தை பெரிய வடிவமாக்கி கொண்டார். அசோகவனத்தை நாசம் செய்ய ஆரம்பித்தார். மரங்களை வெட்டி வீசினார். கொடிகளை நாசம் செய்து குவியல் போன்று வைத்தார். அலங்காரங்கள் அனைத்தையும் உடைத்து எறிந்தார். மிக ரம்மியமான அழகுடன் இருந்த அசோகவனம் இப்போது தன் அழகை முற்றிலும் இழந்தது. அங்கே இருந்த மான்களும் பறவைகளும் பயந்து ஓடி அசோகவனத்தை விட்டு வெளியேறின. தூங்கிக் கொண்டிருந்த ராட்சசிகள் சத்தம் கேட்டு எழுந்தார்கள். என்ன நடக்கிறது என்று காரணம் தெரியாமல் திகைத்தார்கள். அனுமன் நந்தவனத்தை அழித்து விட்டு மதில் மேல் ஏறி அமர்ந்தார்.

அனுமன் தன் உடலை மேலும் பெரிதாக்கி ராட்சசிகளை நிலைகுலைய வைத்தார். அனுமனின் பெரிய உடலைக் கண்ட ராட்சசிகள் பயந்து நடுங்கினார்கள். ராவணனிடம் சொல்வதற்காக சில ராட்சசிகள் ஓடினார்கள். சீதையிடம் சென்ற சில ராட்சசிகள் அசோகவனத்தை அழித்து விட்டு கோட்டையின் மதில் சுவரில் ஒரு பெரிய வானரம் அமர்ந்திருக்கிறது. இந்த வானரம் இங்கு எப்படி வந்தது. உனக்குத் தெரிந்திருக்க வேண்டும். இந்த வானரம் உன்னிடம் ஏதாவது பேசியதா மறைக்காமல் உள்ளபடி சொல் பயப்படாதே என்றார்கள். ராட்சசிகள் சொல்லும் பெரிய உருவம் அனுமனாக இருக்குமோ என்று யோசித்த சீதை பார்க்காமல் நாம் ஒன்றும் சொல்ல முடியாது இவர்கள் நம்மை ஏமாற்றுவதற்காக எதாவது சொன்னாலும் சொல்லலாம் என்று முடிவுக்கு வந்து ராட்சசிகளிடம் பேச ஆரம்பித்தாள். இந்த ராட்சசர்கள் உலகத்தில் நடப்பவைகள் எல்லாம் மாய ஜாலமாக இருக்கிறது. இங்கு இருக்கும் ராட்சசர்கள் எல்லாம் அவர்கள் விருப்பம் போல் தங்கள் உருவத்தை மாற்றிக் கொள்கிறார்கள். வந்திருப்பது உங்கள் ராட்சச இனத்தை சேர்ந்தவனாக இருக்கலாம் உங்கள் நகரத்தில் உள்ளவர்களை பற்றி உங்களுக்கு தான் தெரியும் எனக்கு ஒன்றும் தெரியாது என்றாள்.

அனுமன் ராட்சசர்கள் வரட்டும் அவர்களை ஒரு வழி செய்து விடலாம் என்று மதில் சுவற்றில் சுகமாக அமர்ந்திருந்தார். ராவணனிடம் சென்ற ராட்சசிகள் அசோகவனத்தை ஒரு பெரிய வானரம் அழித்து விட்டு ராட்சசிகளை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. சீதையை சுற்றி இருக்கும் மரங்கள் கொடிகளை மட்டும் அந்த வானரம் ஒன்றும் செய்யவில்லை. சீதையிடம் அந்த வானரம் ஏதாவது தகவல் சொல்ல வந்திருக்குமோ என்று சந்தேகமாக இருக்கிறது. சீதையிடம் கேட்டுப் பார்த்தோம் அவர் எனக்கு தெரியது என்று சொல்லி விட்டார். அந்த வானரத்தை அழிக்க தக்க ஆட்களை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். தன் சுகபோகத்திற்காக உருவாக்கப்பட்ட அசோகவனம் அழிந்து விட்டது என்ற செய்தியை கேட்ட ராவணன் மிகவும் கோபம் கொண்டான். தனது ராட்சச வீரர்களிடம் அந்த வானரத்தை பிடித்துக் கொண்டு வாருங்கள் என்று கட்டளையிட்டான் ராவணன். இரும்பு உலக்கைகள் கத்தி மற்றும் பலவிதமான கொடுர ஆயுதங்களுடன் ராட்சச வீரர்கள் அனுமனை பிடிக்க அசோகவனத்திற்கு விரைந்து சென்றார்கள்.