மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -26

தன்னுடைய பாஞ்சால நாட்டின் மீது குருவம்சத்து ராஜகுமாரர்கள் போர்தொடுக்க வந்து கொண்டு இருக்கிறார்கள் என்ற செய்தி துருபதன் காதுக்கு எட்டியது. அத்தகைய எதிர்ப்புக்கு காரணம் என்ன என்று அந்த வேந்தனுக்கு விளங்கவில்லை. தன்னுடைய சகோதரர்களின் உதவியுடன் தன்னை எதிர்த்து வந்தவர்களை சிரமப்பட்டு முறியடித்து கடைசியாக கௌரவர்களை அவன் வென்று விட்டான். இந்த நெருக்கடியில் அர்ஜுனன் தன்னுடைய போர் தந்திரத்தை கையாண்டான். தன்னுடைய தமையனான யுதிஷ்டிரனை பின்னால் இருக்கும் படி செய்து ஏனைய நான்கு சகோதரர்களுடன் துருபதன் மீது போர் தொடுத்து அவனை சிறைபிடித்து துரோணரிடம் கொண்டு வந்து சேர்த்தான்.

துரோணாச்சாரியாரின் திட்டம் இப்பொழுது பலித்து விட்டது. துருபத மன்னன் துரோணாச்சாரியாருக்கு இப்போது அடிமையானான். துரோணர் துருபதனைப்பார்த்து இளமைப்பருவத்தில் நாம் தோழர்களாக இருந்த பொழுது உன் தந்தையின் ராஜ்யம் உன்னுடைய ஆட்சிக்கு வரும்போது அதில் சரிபாதியை எனக்கு தருவதாக நீயே மனமுவந்து பல தடவை கூறி இருக்கின்றாய். நீ பதவிக்கு வந்தபிறகு நான் உன்னுடைய ராஜ்ஜியத்தில் பங்குக்கு வரவில்லை. என்னுடைய வறுமை நோயை களைந்து எனக்கு ஏதாவது உதவி செய்து வைக்கும்படி உன்னை வேண்டினேன். அரசனுக்கும் ஆண்டிக்கும் இடையே நட்பு சாத்தியப்படாது என்று என்னை விரட்டினாய். இப்பொழுது உனக்கு சொந்தம் என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை. உயிரும் கூட உன்னுடையது இல்லை. நீதி முறைப்படி உன்னை நான் கொல்ல முடியும். ஆயினும் அஞ்சாதே உன்னுடைய உயிரை நான் எடுக்க மாட்டேன். அதற்கு பதிலாக என்னால் வெல்லப்பட்ட ராஜ்ஜியத்தின் சரி பாதியை உனக்குத் தந்து விடுகிறேன். இளமையில் நாம் இருவரும் கொண்டிருந்த நட்பை இனி சம அந்தஸ்தில் இருந்து கொண்டு இருவரும் பேணி வருவோம் என்றார். அவருடைய பரந்த மனப்பான்மையை எண்ணி துருபதனும் தன் இளமைப் பருவ நண்பனை கட்டி தழுவி கொண்டான்.

துருபத மன்னனும் துரோணாச்சாரியாரும் பரஸ்பரம் நட்பு பூண்டனர். ஆயினும் துருபதனுடைய மனதில் குறை ஒன்று உறுத்திக் கொண்டிருந்தது. தான் அடைந்த தோல்வியும் அவமானமும் அவனுடைய உள்ளத்தில் இருந்து அகலவில்லை. தோற்கடித்தவரோ தனுர் வேதத்தில் பரமாச்சாரியார் ஆவார். அவரை எதிர்த்து வெற்றி கொள்ள முடியாது. தான் அடைந்திருந்த இழிவுக்கு ஈடு செய்யும் வழி தேடி துருபத மன்னன் கடும் தவத்தில் ஈடுபட்டான். அதன் விளைவாக தவசக்தியில் பன்மடங்கு மேல் நிலைக்கு வந்து துரோணரை எப்படி வெல்வது என்று தெரிந்து கொண்டான். அதன்படி துரோணரை வெல்ல அரியதொரு யாகம் வளர்ப்பதற்க்கான புரோகிதன் ஒருவனை நாடெங்கிலும் தேடி அலைந்தான். அத்தகைய புரோகிதர் ஒருவரும் அரசனுக்கு அகப்பட்டான். அவன் செய்த யாகத்தின் பலனால் திருஷ்டத்யும்னன் என்னும் மைந்தனும் திரௌபதி என்னும் மகளும் பிறந்தார்கள். திருஷ்டத்யும்னன் துரோணாச்சாரியார்க்கு சிஷ்யன் ஆனான். எதிர்காலத்தில் துரோணாச்சாரியாரை அழிப்பதற்கும் இவனே முக்கியமானவன் ஆகிறான். அர்ஜூனன் வில்வித்தைக்கு விஜயன் என பெயர் பெற்றவன். அவனது திறமையை பாராட்டி செல்வி திரௌபதியை அர்ஜுனனுக்கு மணம் செய்து கொடுத்து பாண்டவர்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வது அடுத்தபடியாக துருபதனின் திட்டம் ஆகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.