முத்துத் தாண்டவர் என்பவர் இசைவேளார் குலத்தில் தோன்றியவர். இவர் நீண்ட நாட்களாக நோய்வாய்ப் பட்டிருந்தார். இதனால் தமது தொழிலைச் செய்ய முடியாமல் போனதால் சீர்காழி சிவாலயத்திற்குச் சென்று வணங்கிவிட்டு அங்கேயே தங்கி விடுவார். அங்கு அருள் பாலிக்கும் ஈஸ்வரர் தோணியப்பருக்கு முன் நின்று தேவாரம் திருவாசகம் பாடி வந்தார். உணவுக்கு வருவாய் இல்லாததால் கோயிலில் கிடைக்கும் பிரசாதங்களை வாங்கி உண்டு வந்தார். ஒரு நாள் இரவு முத்துத் தாண்டவருக்கு பிரசாத உணவு கிடைக்கவில்லை. இதனால் ஏற்கெனெவே நலிவுற்றிருந்த அவர் உடல் மேலும் மோசமடைந்தது. ஒரு நாள் சீர்காழி கோயிலில் சிவனை வழிபட்டுத் திரும்புகையில் உடல் தளர்ந்து சிவபெருமானின் பல்லக்குகள் வைத்திருந்த மண்டபத்திற்கு அருகில் வரும்போது தள்ளாடி விழுந்து சிலநொடிகளில் சுய நினைவை இழந்தார். இவர் மயங்கிக் கிடப்பதை கவனிக்காத ஆலய குருக்கள் விளக்கைகளை அணைத்துவிட்டு கோயில் கதவைத் தாழிட்டுச் சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து சுயநினைவு பெற்ற தாண்டவர் தன் நிலையை உணர்ந்து கலங்கினார். உள்ளே கொலுவிருந்த பிரும்மபுரீஸ்வரரை நோக்கிக் கதறி அழுது அரட்டினார். தனக்கு ஆதரவு தய யாருமே இல்லையா என இறைஞ்சி மன்றாடினார். அழுது அழுது சோர்ந்த அவர் மறுபடியும் மயக்கமானார்.
அப்போது ஒரு சிறுமி வந்து எழுப்பினாள். விழித்துப் பார்த்தார் தாண்டவர். குருக்களின் மகள் முன்னே நிற்பதைத் தெரிந்து கொண்டார். தன் கையில் இருந்த பாத்திரத்தில் இருந்த உணவை தாண்டவருக்கு அளித்தாள். அவர் உண்டு முடித்ததும் உமக்கு என்ன குறை என்று வினவினாள். தன் குறையைச் சொல்லி அழுத தாண்டவரைத் தேற்றிவிட்டு நீ சிதம்பரத்துக்குச் செல் அங்கு வீற்றிருக்கும் நடராஜப் பெருமானை நோக்கி ஒவ்வொரு நாளும் ஒரு பாடல் புனை என பணித்தாள். பாடல் புனையவா பாடலுக்கு நான் எங்கே போவேன் என்று புலம்பினார் தாண்டவர். சிதம்பரத்துக் கோயிலில் தினமும் நீ கேட்கும் பக்தர் வாயில் இருந்து வரும் வார்த்தையைத் தொடக்கமாகக் கொண்டு பாடல் புனையுமாறு ஆலோசனை கூறி மாயமாய் மறைந்து விட்டாள் அச்சிறுமி. இவரும் அப்படியே தூங்கிப் போனார். மறு நாள் பொழுது புலர்ந்தது. காலையில் கோயிலைத் திறந்து கொண்டு காவலர்களும், அர்ச்சகர்களும் ஓதுவார்களும் உள் புகுந்தனர். அங்கு அவர்களுக்கு யாரென்றே அடையாளம் தெரியாத ஒருவர் படுத்துக் கிடந்ததைக் கண்டனர். அவன் முகத்தைக் காணும்போது அம்முகத்தில் அலாதியான ஒளி பரவியிருந்தது தெரிந்தது. அப்போது குருக்கள் அவர் முகத்தைத் திருப்பிப் பார்த்து இவர் நம் தாண்டவர் என்றார்.
முந்தைய இரவு சிறுமியாக வந்தது பார்வதி தேவிதான் என்பது இப்போது தாண்டவருக்குப் புரிந்து போனது. அன்னையின் அருளால் நல்முத்தின் சுடரொளி போலத் தோற்றப்பொலிவைப் பெற்ற தாண்டவருக்கு முத்துத்தாண்டவர் என்று பெயரளித்தனர் அங்கிருந்தோர்.
முத்துத்தாண்டவர் அன்னையின் அருள்வாக்குப்படி சிதம்பரத்தை நோக்கிப் பயணமானார். சிதம்பரத்தை அடைந்ததும் அவர் காதில் பூலோக கைலாயகிரி சிதம்பரம் என்ற சொற்கள் விழுந்தது. அவ்வரியையே தொடக்கமாக வைத்து ஒரு பாடலைப் புனைந்தார். அவர் முழுப்பாடலை பாடி முடித்ததும் ஐந்து பொற்காசுகள் அவர் நின்றிருந்த படிக்கருகில் தோன்றின. ஈசன் மனம் கனிந்து அளித்ததை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு ஒவ்வொரு நாளும் அவர் காதில் விழுந்த, பக்தர்களின் முதல் வார்த்தையைக் கொண்டு பாடலொன்றைப் புனைந்தவாறு காலம் தள்ளினார் முத்துத்தாண்டவர்.
ஒரு நாள் அவர் பாடல் புனைய பக்தர்களிடமிருந்து எந்த வார்த்தை வரியும் வெளிப்படவில்லை. என்ன செய்வதென்று அறியாத தாண்டவர் மனதுக்குள் புலம்ப ஆரம்பித்தார். சில மணித்துளிகளுக்குப் பிறகு சும்மா இருக்க மாட்ட பாழாப் போன மனசே கொஞ்சம் பேசாம இரு என்று தனக்குத்தானே தன்னை சொல்லிக் கொண்டார். இந்த வார்த்தைகள் அவர் உள்ளத்துள் மின்னல் வெட்டியது போல ஒரு நினைவு உண்டானது. உடனே பேசாதே நெஞ்சமே என்ற வார்த்தைகளை தொடக்கமாகக் கொண்டு பாடலொன்றைப் புனைந்தார். தன் பாடல் வரிகளுக்கு இனி அடுத்தவரை நம்ப வேண்டாம் என்பதை இறைவன் உணர்த்தினான் என்பதை உணர்ந்து கொண்டார். இதுவும் அவன் உணரச் செய்த விளையாட்டு இது என்பதை உணர்ந்து கொண்டார்.
ஒருமுறை கோயிலுக்குச் செல்கையில் பாம்பு ஒன்று அவரைத் தீண்டிச் சென்று விட்டது, அருமருந்தொன்று தனிமருந்து அம்பலத்தே கண்டேனே என்று தில்லை ஈசனை நோக்கிப் பாடினார். விஷம் தடித்த இடம் தெரியாதபடி உடலை விட்டு நீங்கிப் போனது. பின்னொருநாளின்போது கொள்ளிடத்தில் வெள்ளம் கரை புரண்டோடியது. இதனைக் கண்டு சிதம்பரம் செல்ல முடியாதோ என தவித்துப் போனார். காணாமல் வீணிலே காலம் கழித்தோமே என்று மனமுருகப் பாடினார். பாடலைக் கேட்ட கொள்ளிட ஆறு அவருக்கு இரண்டாகப் பிரிந்து வழி கொடுத்தது. சிதம்பரம் செல்ல வழி பிறந்ததும் தரிசனம் செய்வேனே என்ற பாடலைப் பாட ஆரம்பித்து விட்டார்.
1640 ம் வருடத்தில் ஆவணிப் பூச நாளின்போது மாணிக்க வாசகர் பேறு எனக்குத் தரவல்லாயோ அறியேன் என்று நடராஜரை நோக்கி உருகிப் பாடினார். உடனே நடராஜத் திருமேனியிலிருந்து ஒரு பெரிய ஜோதிப்பிழம்பு புறப்பட்டு வந்து அவரை ஆட்கொண்டது. நாள் தவறாமல் முத்துத்தாண்டவர் பாடிய பல பாடல்கள் பின்னாளில் கிடைக்காமல் போனது. சில பாடல்களே இன்று நம்மிடம் வரை இருக்கிறது. அதில் அறுபது கீர்த்தனங்களும் இருபது பதங்களும் மட்டுமே இன்று நம்மிடம் இருக்கிறது. அவற்றுள் ஆடிக் கொண்டார் அந்த வேடிக்கை காண கண் ஆயிரம் வேண்டாமோ போன்ற பாடலை இன்று அதிகம் பலர் பாடுகின்றனர். இக்கீர்த்தனைகள் நடனத்துக்குப் பெரிதும் உதவுவதால் அதற்கு இதை பயன்படுத்தி வருகின்றனர்.