சிற்றரசர்களால் வணங்கப்பட்டு நீதிநெறியுடன் குபேரனைப் போல் அரசாட்சி செய்து வந்தான் பாண்டிய நாட்டை ஆண்ட விக்கிரமபாண்டியன். தன் தந்தையின் உத்தரவுப்படி கோயில் கட்டி வெகு சிறப்பாக தினந்தோறும் பூஜை செய்து வந்தான். நாடும் பிணியற்று சுபீட்சமாக இருந்து வந்தது. எங்கும் மகிழ்ச்சியும் திருவிழா பூஜையும் தொடர்ந்த வண்ணமிருந்தது. அப்போது காஞ்சியை சோழன் மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்குப் பாண்டியன் மீது ஏகப்பட்ட பொறாமை. பாண்டியனை எப்படியாவது வென்றாக வேண்டும் என்றே அவன் மூளை சிந்தித்த வண்ணம் இருந்தது. இதற்காக சக்கியம், கோவர்த்தனம், கிரெளஞ்சம், திரிகூடம், அஞ்சனம், விந்தியம், ஹேமகூடம், காஞ்சி குஞ்சரம் என எட்டு மலைகளிலுமுள்ள எட்டாயிரம் சமணர்களுக்கும் தனித்தனியாக கடிதம் அனுப்பி வரச்செய்தான். அவர்கள் காஞ்சிபுரம் வந்து மன்னனைச் சந்தித்தனர். மன்னன் தலையை மயில்முடி தோகையால் தொட்டு வருடி வாழ்த்தினார்கள். அப்போது அவர்களிடம் நான் பாண்டிய நாட்டை ஜெயிக்க விரும்புகிறேன். விக்கிரம பாண்டியனைப் போரினால் வெல்ல முடியாது என்பது எனக்குத் தெரியும். ஆதலால் ஆபிசாரப் பிரயோகம் செய்வித்துத் தான் விக்கிரமனை வீழ்த்த வேண்டும் என எண்ணியுள்ளேன். பாண்டியனை அழிக்க கைங்கரியம் செய்து உதவீனீர்களானால் நாட்டில் சரி பாதி இராஜ்ஜியத்தை உங்களுக்கு தருகிறேன் என ஆசை வார்த்தைகளால் உயர்த்தினான் சோழன்.
சமணர்கள் சைவர்களின் விரோதிகள். சோழ மன்னன் இவ்வாறு சொன்னதும் அவர்கள் பாலாற்றின் கரையில் கூடி பெரிய பெரிய ஓம சாலைகளையும் ஹோமகுண்டங்களையும் அமைத்தனர். ஹோம குண்டத்தில் நச்சு மரங்களின் கட்டைகளை வார்த்தனர். தீ வளர்த்து வேம்பு எண்ணெயில் தோய்த்த உப்பாலும் நல்லெண்ணெயில் ஊறச்செய்த மிளகாய்களையும் இட்டனர். விலங்குகள் பறவைகள் இவற்றின் ஊனாலும் ஹோமங்களை செய்தனர். யாகத்தின் பலனாய் மேகங்கள் கூடி இடி இடித்தது, இடி புறப்பட்ட இடைவெளியினுல் துதிக்கையில் ஒரு உலக்கையைத் ஏந்திகிக் கொண்டு பெருத்த யானையொன்று பெரும் பிளிறலுடன் தோன்றி வந்தது. யானை அடியெடுத்து நடந்து வந்தபோது பூமியின் பரப்பளவு நடுங்கியது. அது அதன் காதுகளை சிலிர்த்த போது மேகங்கள் கலைந்து அலைந்து விலகின. தந்தங்களால் மலையைப் பிளந்து கொண்ட வண்ணம் யாகசாலையில் ஹோமம் செய்து கொண்டிருந்த சமணர்களின் அருகே வந்து நின்றது. நீ சென்று மதுரையையும் அதன் அரசனையையும் அழித்துவிட்டு வருவாயாக என யானையிடம் ஏவினார்கள் சமணர்கள். மீண்டும் பேரொலியை பிளிறிய வண்ணம் புறப்பட்டது. இச்சத்தத்தினைக் கேட்ட மற்ற மிருகங்கள் மிரண்டு விலகியோட யானை தென் திசை நோக்கி விரைவாக ஓடியது. செய்தியறிந்தான் விக்கிரமன். உடனே ஆலயத்திற்கு ஓடிச் சென்றான். ஈசனிடம் முறைசெய்து வேண்டினான். மகா மேருவை வில்லாக ஆக்கினாய், மகாவிஷ்ணுவை அம்பாக தேர்வு செய்தாய், பூமியைத் தேராக உருக்கிருக்கிக் கொண்டாய், வாசுகியை நாணாக்கினாய், வேதங்கள் நான்கினையும் குதிரைகளாக்கினாய், பிரம்ம தேவனைத் தேர்ப்பாகனாகக் கொண்டாய், இப்படியெல்லாம் செய்து முப்புரத்தையும் எரிக்கப் புறப்பட்ட மகாதேவனே, இத்தனையுடன் புறப்பட்ட உனக்கு சமணர் அனுப்பிய யானை உனக்கொரு பொருட்டா, என்னையும் மதுரை மக்களையும் நீயின்றி எவர் காப்பார்? எனப் பலவாறு வேண்டி தொழுது முறையிட்டழுதான்.
மன்னா என அசரீரி ஒலித்தது. வெளிச்சுவரின் உட்புறம் கீழ் பக்கமாக பதினாறு கால் கொண்ட அட்டாள மண்டபமொன்றை அதிவிரைவில் கட்டி முடி. வில் வீரனாக வந்து நீ கட்டிய அம்மண்டபத்தின் மேலமர்ந்து கொண்டு யாம் யானையை வதை செய்வோம் என அசரீரி கூறக் கேட்கவும் மன்னன் அகமகிழ்ந்தான். உடனடியாக போர்க்கால அடிப்படையில் மண்டபத்தை கட்டி முடித்தான். அதன் மேல்தளத்தில் இரத்தினத்தால் இழைத்த பொற் பீடமொன்றையும் நிறுவி வைத்தான். கருமை நிறத்துடன் சிவப்பு பட்டுடுத்தி பதினாறு வயதோனவனாய் இடுப்பில் கத்தியுடனும் இடக்கையில் நாணேற்றிய வில்லுடனும் வலக்கையில் கூரான அம்பைத் தாங்கியவாறும் காதுகளில் சங்குக் குண்டலங்களுடனும் கழுத்தில் முத்தாரமுமாய் பீட உச்சியில் ஒரு வில் வீரனாகத் தோன்றி நின்றார் இறைவன். எதிரே யானை நெருங்கி வந்து கொண்டிருந்தது. இதனைக் கண்ட சுவாமி விட்ட அம்பு விர்ரென பாய்ந்து யானையின் உயிரை ஒரு நொடியில் மாய்த்தழித்து விட்டது. அந்த இடமே ஆனைமலை எனப் பெயர் பெற்றது. பிரகலாதன் தவம் செய்து சித்தி பெற்ற இடமும் கூட இதுதான். பாண்டியன் வீரன் உருவிலிருந்த ஈசனைப் பலவாறு துதித்து விட்டுப் பட்டென்று ஈசனது இரு கால்களையும் சிக்கென்று பற்றிக் கொண்டான் பாண்டிய மன்னன். எப்பேற்பட்ட சங்கடங்களையும் சட்டென நீக்க இங்கேயே எழுந்தருள வேண்டும் எனவும் விண்ணப்பித்தான். இறைவனும் அப்படியே இருப்பதாக வாக்களித்தார். விக்கிரமபாண்டியன் வேண்டுகோளுக்கிணங்க பதினாறு கால அட்டாள மண்டபத்தில் அட்டாள வீர மூர்த்தியாய் காட்சி கொடுக்கின்றார் சோமசுந்தரப் பெருமான்.]