விஸ்வகர்மா பொற்கொல்லர் மரபில் வந்த பரிபூரணஆசாரி பிரகதாம்பாள் என்ற தம்பதிகளுக்கு மகனாய்ப் பிறந்தார் வீரபிரம்மேந்திரர். அவர் பிறந்த அன்றே அவர் தந்தை இறந்து விட்டார். அதனால் மிகுந்த கலக்கமெய்தினாள் பிரகதாம்பாள். ஒரு முனிவரிடம் குழந்தையை ஒப்படைத்த அவள் தான் வாழ விரும்பாமல் தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். முனிவர் அந்த அழகிய குழந்தையைக் கனிவோடு பார்த்தார். எவ்விதம் அந்த தெய்வீகக் குழந்தையை வளர்ப்பது என சிந்தனையில் ஆழ்ந்தார். இறைவன் கட்டளையேபோல அவரைத் தேடிவந்தார்கள் இருவர். வீரபோஜர் வீரபாப்பம்மா என்ற அவ்விருவரும் அந்தக் குழந்தையைத் தாங்கள் வளர்ப்பதாக உறுதி கூறி வாங்கிச் சென்றார்கள். வீரபிரம்மத்தைப் பதினான்கு வருடம் மிகப் பாசத்துடன் வளர்த்தார்கள் அவர்கள். அப்போது வீரபிரம்மத்தின் வளர்ப்புத் தந்தை காலமாகிவிட்டார். பிறந்த போதே தந்தையையும் பின் தாயையும் இழந்தது இப்போது வளர்ப்புத் தந்தையையும் இழந்தது வீரபிரம்மேந்திரரை சிந்தனையில் ஆழ்த்தின. தத்துவ ஞானத்தில் தோய்ந்தது அவர் மனம். தம் வளர்ப்புத் தாயிடம் தமக்கு வற்றாத ஆன்மிகத் தேடல் இருப்பதால் அந்த வழியில் வாழ்க்கை நடத்தப்போவதாகக் கூறி பிரியாவிடை பெற்று வீட்டை விட்டு வெளியேறினார்.
கால்போன போக்கில் நடந்தார். எங்கெல்லாம் கோவில்கள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் அமைதியாக நெடுநேரம் தியானம் செய்தார். இந்த வாழ்வின் பொருள் என்ன என்றறியும் தீராத ஆவல் அவருக்கிருந்தது. அவர் போகாத கோவில் இல்லை. ஒருநாள் இரவு வீரபிரம்மேந்திரர் பனகானபள்ளி என்ற அழகிய சிறு கிராமத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கே அச்சம்மா என்பவளின் வீட்டுத் திண்ணை காலியாக இருந்தது. அதில் படுத்து உறங்கினார். காலை கதவைத் திறந்து வெளியே வந்து திண்ணையைப் பார்த்தாள் அச்சம்மா. யாரோ ஒரு பையன் உறங்குகிறானே? உறங்கும்போதும் அவன் முகத்தில் தென்பட்ட ஒளி அச்சம்மாவை வசீகரித்தது. அந்தப் பையன் மேல் அவளுக்குத் தாயன்பு பெருகியது. அவன் எழுந்ததும் யாரப்பா நீ என்று விசாரித்தாள் அவள். அவன் தான் ஓர் அநாதை என்றும் ஊர் ஊராகச் சுற்றி வருவதாகவும் தெரிவித்தான். எனக்கு நான் வளர்க்கும் மாடுகளை மேய்க்க ஒருவன் தேவை. இனி இங்கேயே இரு என்று கண்டிப்பு கலந்த பிரியத்தோடு சொல்லி அவனுக்கு உணவளித்தாள் அச்சம்மா. இப்படியாக வீரபிரம்மேந்திரர் அச்சம்மாவின் மாடுகளை மேய்க்கும் தொழிலிலில் ஈடுபடுத்தப்பட்டார்.
வீரபிரம்மேந்திரர் மாடுகளைச் சுற்றி ஒரு மிகப்பெரிய வட்டக் கோடு வரைந்து விடுவார். மாடுகள் அந்தக் கோட்டுக்குள்ளிருந்து புல் மேய்ந்து கொண்டிருக்கும். அதைக் கடந்து செல்லாது. மாடுகள் அவரைப் பெரிதும் நேசித்தன. மாடுகள் புல்மேயும் தருணத்தில் வீரபிரம்மேந்திரர் கால ஞானம் என்ற எதிர்காலத்தைப் பற்றிச் சொல்லும் நூலை எழுதலானார். பனையோலையில் முட்களால் எழுதப்பட்டதே அந்த நூல். ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக அந்த நூலை எழுதிவந்தார் அவர். இப்படியாகக் காலம் போய்க்கொண்டிருந்த போது ஒருநாள் மாடுகளை அடித்துச் சாப்பிடும் எண்ணத்தில் காட்டிலிலிருந்து ஒரு புலி அங்கு வந்தது. ஆனால் வீரபிரம்மேந்திரர் கிழித்த கோட்டினுள்ளே செல்ல இயலாமல் புலி தத்தளித்துத் திரும்பிச் சென்றது. இதைப் பார்த்தார்கள் சில இடையர்கள். அவர்கள் அச்சம்மாவிடம் சென்று இந்தத் தகவலைச் சொன்னார்கள். அச்சம்மா வியப்படைந்தாள். ஏற்கெனவே வீரபிரம்மேந்திரரின் முகத்தில் தென்பட்ட தெய்வீக ஒளி அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தது. தவிர அவர் ஏதோ தொடர்ந்து எழுதி வருவதையும் அவள் அறிவாள்.
வீரபிரம்மேந்திரர் வீடு திரும்பியதும் அச்சம்மா அவரிடம் தன்னை மன்னிக்குமாறு வேண்டினாள். அவர் பெரிய மகான் என்பதைத் தாம் இப்போது தான் அறிந்ததாகவும் அவரை மாடு மேய்க்கும் தொழிலிலில் ஈடுபடுத்தியது பெரும் தவறு என்றும் அவள் கண்ணீர் உகுத்தாள். ஏதோ ஒரு தொழில் செய்து எல்லாரும் வாழ வேண்டியது தான். கண்ணனே மாடு மேய்த்தவன் தான். அது ஒன்றும் இழிவான தொழில் அல்ல என்று கூறி அவளை சமாதானப் படுத்தினார் வீரபிரம்மேந்திரர். அச்சம்மா அவர் எழுதிவரும் நூல் என்னவென்று விசாரித்தாள். எதிர்காலத்தில் நடக்கப்போவதைத் தான் கணித்து எழுதி வருவதாக அவர் தெரிவித்தார். எதிர்காலத்தில் என்னென்ன நடக்குமென்று எனக்கு ஓரளவாவது சொல்ல இயலுமா என்று அச்சம்மா கேட்டாள். வீரபிரம்மேந்திரர் நகைத்துக்கொண்டே சில விஷயங்களைச் சொன்னார். அவற்றில் சில:
புண்ணிய நதிகள் வற்றிவிடும். கடல் பொங்கி நகருக்குள் நுழையும். அதனால் அதிகம் பேர் உயிரிழப்பார்கள். கணவனை மட்டுமே மணந்து வாழும் பத்தினிப் பெண்களின் எண்ணிக்கை குறையத்தொடங்கும். ஆண்கள்- பெண்கள் இரு தரப்பாரிடமும் ஒழுக்கம் கெடும். இந்தியாவில் ஜனத்தொகைப் பெருக்கம் அதிகமாவதால் குழந்தை பிறப்பதை செயற்கை முறையில் தடுக்கப் பார்ப்பார்கள். பெரியோருக்கு அடங்கி சிறியோர் நடந்தது போகும் காலம் மாறி சிறியோருக்கு அடங்கி பெரியோர் நடக்க நேரிடும். புண்ணியத் தலங்களில் வாழ்பவர்கள் ஆண்டவனுக்கு அஞ்சி வாழாமல் ஆண்டவன் பெயரால் மோசடி செய்து வஞ்சித்து வாழ்வார்கள்.’ இதையெல்லாம் கேட்ட அச்சம்மா மிகுந்த வியப்படைந்தாள். அவரையே தன் குருவாக ஏற்றாள் அச்சம்மா. தனக்கு உபதேசம் வழங்குமாறு வேண்டினாள். வீரபிரம்மேந்திரர் அவளுக்குச் சிவ மந்திரத்தை உபதேசித்து, அதை ஓயாமல் ஜெபித்து வருமாறு பணித்தார். பொருள் மேல் உள்ள ஆசையை விட்டு விட்டு ஆன்மிகப் பணிகளில் நாட்டம் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அச்சம்மாவின் மனம் வீரபிரம்மேந்திரரின் உபதேசங்களால் ஞானம் அடைந்தது. மெல்ல மெல்லப் பற்றுகள் அவளை விட்டு விலகத் தொடங்கின. இல்லறத்தைத் துறந்து துறவியானாள் அவள். தன் சொத்தையெல்லாம் செலவிட்டு ஏகாந்த மடம் என்றொரு மடம் நிறுவினாள். அதில் வாழ்ந்தபடி வீரபிரம்மேந்திரரின் கொள்கைகளை மக்களிடையே பரப்பிவரலானாள். அச்சம்மாவின் வாழ்க்கை இனி அவ்விதமே தொடரும் என அறிவித்த வீரபிரம்மேந்திரர், அவளிடம் விடைபெற்று மீண்டும் பல்வேறு தலங்களுக்கு யாத்திரை செல்லலானார்.
ஆந்திரவில் இருக்கும் போலேரம்மா என்ற புகழ்பெற்ற அம்மன் கோவிலுக்குச் சென்றார் அவர். அங்கு சிலர் போலேரம்மா புனித யாத்திரைக்கு அவரிடம் நன்கொடை கேட்டனர். நன்கொடை தருவது கட்டாயமென்று அவரை அச்சுறுத்தினர். இப்போது என்னிடம் பணம் எதுவுமில்லையே, பிறகு கிடைத்தால் தருகிறேன் என்றார். பின் தன் சுருட்டுக்கு நெருப்புக் கேட்டார் அவர்களிடம். அவர்கள் நன்கொடை தராத அவருக்கு நெருப்புத் தர மறுத்தனர். அவர் போலேரம்மா கோவிலுக்கு வெளியே வந்துநின்றார். உள்ளே சந்நிதியை உற்றுப் பார்த்தார். போலேரம்மா என் சுருட்டுக்குக் கொஞ்சம் நெருப்பு கொடு என்று கேட்டார். மறு நிமிடம் போலேரம்மா சந்நிதியிலிருந்து ஒரு தணல் காற்று வெளியில் புறப்பட்டு வந்தது அவரது சுருட்டைக் கொளுத்தியது சரி சரி நெருப்பு போதும் என்று அவர் சொன்னதும் மீண்டும் கருவறைக்கே சென்று மறைந்தது அந்தத் தணல். இந்த அதிசயத்தைப் பார்த்தவர்கள் வியப்பின் உச்சிக்கே சென்றார்கள். அவரது காலில் விழுந்து மன்னிப்பு வேண்டினார்கள். அவர்கள் அனைவருமே அவரின் அடிய வர்களானார்கள். இப்படி மெல்ல மெல்ல வீரபிரம்மேந்திரரின் அடியவர் எண்ணிக்கை நாள் தோறும் பெருகத் தொடங்கியது.
காலப்போக்கில் அவர் தமது பொற்கொல்லர் மரபில் தோன்றிய கோவிந்தம்மா என்ற பெண்ணை மணந்தார். இல்லறம் துறவறம் இரண்டும் சம மதிப்புடையவை தான் என்று அவர் அடிக்கடிச் சொல்வது வழக்கம். தம் இல்லற வாழ்வில் ஐந்து மகன்களையும் ஒரு மகளையும் பெற்றார். தம் குடும்ப உறுப்பினர் அனைவரையும் ஆன்மிகவாதிகளாக மாற்றினார். அனைவருடனும் இணைந்து ஆன்மிகப் பணியாற்றி வந்தார். தாம் ஜீவசமாதி அடைய எண்ணி குடும்பத்தாரிடம் அறிவித்தார் வீரபிரம்மேந்திரர். குடும்பத்தார் கண்கலங்கினர். யாக்கை நிலையற்றது இதன் மேல் பற்று வைக்காதீர்கள் என்று போதித்தார். பின் சமாதிக்குழியில் இறங்கி நிஷ்டையில் அமர்ந்தார். எனக்கு இறப்பில்லை என்பதால் என் மனைவி தன் சுமங்கலிலிக் கோலத்தை மாற்றத் தேவையில்லை என்று அறிவித்தார். சமாதியின் மேலே பலகை போட்டு சமாதி மூடப்பட்டது.
பத்து மாதங்கள் சுழன்றோடின. இன்னுமா அவர் உயிரோடிருப்பார்? அவர் மனைவிக்கேன் சுமங்கலிலிக் கோலம் என்று சிலர் விமர்சித்தனர். மூத்த பிள்ளை மனம் நொந்து தாயிடம் விளக்கம் கேட்டார். மக்களுக்கு அறிவில்லை. அவர்களின் அழிவுக்காலம் நெருங்கி விட்டதால் இப்படியெல்லாம் பேசுகிறார்கள். என் கணவர் எனக்கிட்ட கட்டளைப்படியே நான் சுமங்கலிலிக் கோலத்தில் இருந்து வருகிறேன் என்றார் தாயார். மகனுக்குச் சமாதானம் ஏற்படவில்லை அவன் ஆக்ரோஷத்தோடு ஒரு கடப்பாரையை எடுத்து வந்து சமாதியை இடித்துத் திறந்து பார்த்தான். அங்கே சலனமே இல்லாமல் யோக நிஷ்டையில் கம்பீரமாக வீற்றிருந்தார் வீரபிரம்மேந்திரர். சமாதியை இடித்த மூத்த மகனின் கைகள் நடுக்கத்தில் வெலவெலத்தன. அவனை கண்திறந்து பார்த்த வீரபிரம்மேந்திரர் சமாதியைத் திறந்த தோஷம் விலகப் பரிகாரம் செய்யச் சொல்லி மீண்டும் சமாதியை மூடச் சொன்னார். இந்த அதிசயத்தைப் பார்த்த ஊர்க்காரர்கள் வீரபிரம்மேந்திரரின் மனைவியிடம் மன்னிப்புக் கேட்டனர். மனைவியையும் பக்தியோடு கும்பிடத்தொடங்கினார்கள். ஆந்திராவில் கந்தி மல்லையபள்ளி என்ற இடத்தில் இருக்கிறது சித்த புருஷரான வீரபிரம்மேந்திரரின் ஜீவசமாதி.