அக்கா மகாதேவி 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு கன்னடப் பெண் துறவி மற்றும் கவிஞர். 1150 ஆம் ஆண்டு முதல் 1175 வரை வாழ்ந்த அவர் ஷிமகோடா மாவட்டத்தில் உள்ள பானவாசி நகரின் அருகில் இருந்த உடுதாடி எனும் கிராமத்தில் அன்னம்மா பிரபு மற்றும் கின்னாரி பொம்மையா என்பவர்களுக்கு மகளாகப் பிறந்தவர். இருவரும் சிவநெறிப்படி மகளை வளர்த்தனர். சிவவழிபாடு இவர் வாழ்க்கைநெறி ஆகியது. அவர் தனது இளமைப் பருவத்தை வழிபாட்டில் கழித்தார். விளையாட்டுக்களில் அதிக கவனம் செலுத்தியது இல்லை. மாறாக ஏதாவது எழுதிக் கொண்டே இருப்பார். இளம் வயதிலேயே அவர் ஆன்மீக நாட்டம் கொண்டவராகவே இருந்தார். சிவகாமாச்சாரியார் என்பவரிடம் கல்வி பயின்ற அக்கா மகாதேவி சிறு வயதிலேயே கவிதைகளை எழுதுவார். சிவலிங்கத்தை வணங்கித் துதிப்பார். ஸ்ரீ சைலம் என்னும் ஊரைப் பற்றியும் அங்கு உறையும் இறைவன் சென்ன மல்லிகார்ச்சுனனைப் பற்றி கேள்விப்பட்டார். பின்பு சென்ன மல்லிகார்ஜுனாவை அதிகம் ஆராதித்துக் கொண்டே இருப்பார். பிறந்ததில் இருந்து இவரின் வளர்ப்பு பற்றி அதிக செய்திகள் கிடைக்கவில்லை என்றாலும் அவர் தன்னுடைய தாயாரின் அரவணைப்பில்தான் பெரிய பெண்ணாகும் வரை வளர்ந்ததாக தெரிகின்றது. அக்கா மகாதேவி சில கன்னட புராணக் கதைகளில் அவரைப் பற்றிக் குறிப்பிடுகையில் அவர் பார்வதியின் ஒரு ரூபமே எனக் கூறி இருந்தாலும் அவரது சன்யாச வாழ்க்கைக்கு முன்னர் வாழ்ந்த வாழ்கை வரலாறு குறித்த செய்திகள் எதுவும் எழுத்து வடிவில் எழுதி வைக்கப்படவில்லை. அவர் சன்யாசி ஆகி வீர சைவர்கள் குழுவில் சேர்ந்த அவரைப் பற்றிய செய்திகள் அனைத்துமே வாய் மொழிக் கதைகளாகவே இருந்து உள்ளன.
அக்கா மகாதேவி பெரிய பெண்ணானதும் அவருடைய பெற்றோர்கள் அவளுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார்கள். ஆனால் அதை அவள் ஏற்கவில்லை. அவள் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கவே விரும்பினாள். அந்த ஊரில் இருந்த தனவந்தர் ஒருவர் அவள் மீது ஆசை கொண்டு அவளை மணக்க விரும்பினார். அவளுடைய பெற்றோர்களும் அவருடன் அவளை திருமணம் செய்து வைக்க விரும்பினார்கள். ஆனால் அக்க மகாதேவி அதை ஏற்கவில்லை. தன்னுடைய மானசீகக் கணவர் சென்ன மல்லிகார்ஜுனாதான் என்றே உறுதியாகக் கூறினாள். தன்னுடைய பெற்றோர்களிடம் மீரா எப்படி கிருஷ்ணரையே தன்னுடையக் கணவராக ஏற்று இருந்தாரோ அப்படித்தான் தனது கணவர் சென்னமல்லிகார்ஜுனாதான் என்றே அவர் கூறி வந்துள்ளார்.
அந்நாளில் அவ்வூரையாண்ட கெளசிகன் என்ற மன்னன் உலாப் போகும்போது அக்கா மகாதேவியைக் கண்டு அவள் அழகில் மயங்கி மணம் செய்து கொள்ள விரும்பினான். அரசனிடம் இந்த உடம்பு மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் பாத்திரம். எலும்புகளினால் செய்யப்பட்ட ஒரு பெட்டி. இது சீழ் மற்றும் துர்நாற்றம் கொண்டது. இதை ஏன் விரும்புகிறீர்கள் இறைவனை நினையுங்கள் என்று அறிவுறை கூறினாள். இதனை கண்டு கொள்ளாத அரசன் அவள் மணத்துக்கு ஒப்புக் கொள்ளாவிடில் பெற்றோர் உயிரிழக்க நேரிடும் என்று மிரட்டினான். அதனால் சில நிபந்ததனைகளுடன் அக்கா மகாதேவி அரசனை மணக்க ஒப்புக் கொண்டார். தம் வழிபட்டுக்குத் தடை விதிக்கக் கூடாதென்றும் தடை ஏற்படுமானால் மூன்று முறை பொறுத்துக் கொள்வேன். அதன் பின் உங்களை விட்டு பிரிந்து விடுவேன் என்று நிபந்தனை விதித்தாள். அரசன் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள திருமணம் நிறைவேறியது. ஆனால் அக்கட்டுப்பாட்டின்படி அரசனால் நடக்க முடியவில்லை. எனவே அக்கா மகாதேவி அரண்மனையை விட்டு வெளியேறினார். கெளசிகன் தொட்ட ஆடைகளையும் களைந்துவிட்டு கூந்தல் உடலினை மறைக்கக் கலியாண நகரம் சேர்ந்தார். வீட்டை விட்டு வெளியேறும் முன்னர் தான் ஒரு சன்யாசினியாக போக விரும்புவதாக தன்னுடைய பெற்றோர்களிடம் கூறினார். அவர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தாலும் அவளை அவர்களால் தடுக்க முடியவில்லை. இளம் வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறியவர் பல இடங்களிலும் சுற்றித் திரிந்தபடி சிவபெருமானின் பெருமைகளை பரப்பி வந்தார். பசவண்ணர் முதலிய வீரசைவ அடியார்கள் உள்ள அனுபவ மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார்.
மகாதேவி நிர்வாணமாக வந்தபோது அவளை மனநலம் பாதிக்கப்பட்டவரோ என்று மிகவும் சந்தேகத்துடன் வரவேற்றார்கள். அப்போதைய வீரசைவத்தின் தலைவரான அல்லாமா பிரபு இளமை மலரும் பெண்ணே ஏன் இங்கு வந்தாய்? உங்கள் பெற்றோரைப்பற்றி அல்லது கணவரைப்பற்றி சொல். இல்லையென்றால் இங்கு அமர்ந்து பிரார்த்தனை செய்துவிட்டு போய்விடுங்கள் என்றார். மகாதேவி பதிலளித்தாள். இந்த உலகில் உள்ள அனைவருமே என்னுடைய பெற்றோர்கள்தான். ஒருவருக்கு ஒருவர் என்று எனக்கு கணவனாக சேர்ந்தவர் சென்ன மல்லிகார்ஜுனாவுடன்தான். அனைத்து நட்சத்திரங்களும் கோள்களும் பார்த்துக் கொண்டே இருக்க என்னுடைய குருநாதர் வந்து என் கையைப் பற்றிக் கொண்டார். லிங்கமான சிவனே மணமகனாகியது. நானோ அங்கு மணமகள் ஆனேன். ஆகவே என் கணவர் சென்ன மல்லிகார்ஜுனா. அவரை தவிர எனக்கு இந்த உலகில் வேறு எந்த உறவும் இல்லை என்றார். அல்லாமா பிரபு அவளை நீண்ட நேரம் விசாரித்து பின்பு சன்யாசி என்று ஒப்புக் கொண்டார். உடல் தோற்றத்தில் இவள் பெண் ஆனால் இவளின் மனம் கடவுளுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று அனைத்து வீரசைவர்களும் மகாதேவியின் பெருமையை அறிவித்தார். அல்லாமா பிரபுவின் வழிகாட்டுதலின் கீழ் அக்கா மகாதேவி தனது தவங்களை தொடர்ந்தார். அங்கு உள்ள சன்யாசிகளுடன் தம் இறை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
அக்கா மகாதேவியின் பக்தியைக் கண்ட வீர சைவ துறவிகளான பசவண்ணா சென்ன பசவண்ணா அல்லமா பிரபு கென்னாரி பொம்மையா போன்றவர்கள் அவளை புகழ்ந்து எழுதி உள்ளார்கள். அக்கா மகாதேவி தன்னைப் பற்றிக் கூறிக் கொள்கையில் தன்னுடைய வெளித் தோற்றம் மட்டுமே பெண் இனத்தை சேர்ந்தது. ஆனால் தன்னுடைய ஆத்மாவும் தானும் சிவனை சேர்ந்தவள் என்றே கூறிக் கொண்டார். ஒரு முறை அக்கா மகாதேவி ஒரு கூட்டத்தில் அல்லமா பிரபுவின் ஆன்மீகக் கேள்விகளுக்கு எல்லாம் சற்றும் தாமதிக்காமல் சரியான பதில் தந்ததைக் கண்டவர்கள் அவரை அக்கா என அழைக்கலாயினர். மகாதேவி என்ற பெயர் பின்பு அக்கா மகாதேவி என்று அழைக்கப்பட்டார். வீர சைவ நெறியைக் கடைப்பிடித்த அக்கா மகாதேவியின் பாசுரங்கள் கன்னட மொழியில் தமக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்தன. வசனா எனப்படும் முறையில் எழுதப்பட்ட அக்கா மகாதேவியின் பாசுரங்கள் கன்னட பெரும் கவிகளான பசவன்னா சென்னா பசவன்னா கின்னாரி பொம்மையா சித்தாராமைய்யா அல்லமாபிரபு தாசிமைய்யா ஆகியோரின் பாசுரங்களை ஒத்தவையாக இருந்தன. இவர் மொத்தம் 430 வசனா பாசுரங்களை இயற்றினார். சிவனின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட அக்கா மகாதேவி அவரையே தனது உளமார்ந்த கணவனாகப் பாவித்துக் கொண்டார்.
அக்கா மகாதேவி சன்யாசினியாக மாறிய அவர் ஆடைகள் அணியாத நிர்வாண நிலையிலேயே இருந்தார். கடவுளின் அருளினால் அவளுடைய உடம்பு முழுவதையுமே நீண்டு வளர்ந்து இருந்த அடத்தியான தலைமுடி ஒரு உடுப்பு போல மறைத்து வைத்தே இருந்தது என்பதே அவர் எந்த அளவுக்கு தெய்வீக சக்தி பெற்று இருந்தார் என்பதை விளக்கும். அக்கா மகாதேவி பார்வதியின் ஒரு அவதாரம் என்றும் சாப விமோசனம் அவர் பூமியில் வந்து பிறந்து இருந்தார் எனவும் ஒரு கிராமிய கதையும் உள்ளது.
அக்கா மகாதேவி 12 ஆம் நூற்றாண்டில் பெண்களின் விடுதலையில் பெரும் பங்காற்றினார். அங்கும் இங்கும் நடந்த ஆன்மீக விவாதங்களில் கலந்து கொண்டு தன தரப்பு வாதங்களை ஆன்மீகத்தின் பக்கம் எடுத்து உரைத்து ஆன்மீகப் பாதைக்கு வலு சேர்த்தார். பல இடங்களிலும் சுற்றிக் கொண்டு இருந்தவர் சென்ன மல்லிகார்ஜுனாவை போற்றித் துதித்த வண்ணமே இருந்தார். ஸ்ரீசைலம் பகுதியில் சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவில் இருந்த சென்னமல்லிகார்ஜுனா ஆலயம் இருந்த காட்டுக்குள் சென்று அங்கிருந்த குகையில் தங்கி தவம் செய்தவாறு தனிமையிலேயே இருந்தார். அங்கு சில காலம் இருந்தப் பின் அவர் பானவாசிக்கே வந்து தங்கினார். அவர் புகழ் கன்னட நாடெங்கும் பரவியது. அந்த குகை தற்போது அக்கா மகாதேவி குகை எனப்படுகின்றது. அவருடைய முக்கியமான பணிகளில் ஒன்றாக ஜாதி பேதங்களை உடைப்பது. உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதத்தை ஒழிப்பதுமாக இருந்தது. ஒரு பெண்ணாக இருந்து அவர் அவற்றை பெருமையுடன் அனைத்து எதிர்ப்புக்களையும் தாண்டி செய்துள்ளார். அவர் 400 க்கும் மேற்பட்ட கவிதைகளை இறைவன் மீது இயற்றி உள்ளார்.
சென்ன மல்லிகார்ஜுனா பற்றிய அவரின் கவிதை:
அம்மா கேள் நான் அவரை நேசிக்கின்றேன்
அவர் இந்த உலகில் உள்ளவர்களில் ஒருவர் மட்டுமே அவர்
அவருக்கு இறப்பும் இல்லை பிறப்பும் இல்லை
அவருக்கு ஜாதியோ பேதமோ ஒன்றும் இல்லை
அவர் எங்கும் நிறைந்தவர் உருவமற்றவர் மாறாதவர்
நம் எண்ணத்திற்கும் அப்பாற்பட்ட அழகைக் கொண்டவர்
இந்த உலகில் உள்ள அனைத்துமே முடிவாக அழிந்து விடுபவை
எனக்கு அவர்களில் ஒருவரும் வேண்டாம்
என்னுடைய நாயகனாக என்றுமே இருக்க உள்ளவர்
ஒன்றே ஒருவரான சென்ன மல்லிகார்ஜுனா மட்டுமே.
பிச்சைப் பாத்திரத்தில் உணவு போட கிராமங்களே உள்ளன
தாகம் எடுத்தால் குடிப்பதற்கு கிணறுகளும் குளங்களும் உள்ளன
படுத்து உறங்கவோ பாழடைந்த ஆலயங்களும் உள்ளன
ஆனால் என்னுடைய இதயத்துக்கு துணை இருக்க
சென்னமல்லிகார்ஜுனா மட்டுமே இருக்கின்றார்.
தன்னுடைய நிர்வாண நிலையைப் பற்றி எழுதிய ஒரு கவிதை இது
இந்த உலகமே ஆண்டவனின் கண்களாக உள்ள போது
அவர் இந்த உலகில் உள்ள அனைத்தையும் பார்த்துக் கொண்டே உள்ள போது
நீ உன்னிடம் உள்ள எதை நீ அவரிடம் மறைக்க நினைக்கின்றாய்.
பட்டு மற்றும் நகைகளின் மினுமினுப்பின் கீழ் என்னை என்ன மறைக்க விரும்புகிறீர்கள்?
முட்டாள்கள் நான் மல்லிகைப் பெருமானின் காலை ஒளியை உடையாக உடுத்தும் போது என்னால் வெட்கப்பட முடியாது.
இறைவனை அடைய எண்ணம் கொண்டவர்களுக்கு இவரின் அறிவுரைகள்:
அகந்தை கூடாது. பசிக்கும் போது பிச்சை எடுத்து உண்ண வேண்டும். ஏரி குளங்களில் உள்ள நீரைக் குடித்துக் கோயில்களில் படுத்து உறங்க வேண்டும். மாயை உலகம் என்ற வடிவத்தில் எல்லோரையும் மயக்குகிறது. இதிலிருந்து விடுபட ஒரு குருவை அணுக வேண்டும். குருவே உய்யும் நெறி காட்டுவார்.
வீரசைவர்களால் 20000 க்கும் மேற்பட்ட கவிததைகள் இயற்றப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 300 அக்கா மகாதேவி இயற்றியுள்ளார். இன்றைய ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீ சைலத்தில் இறைப் பேரொளியுடன் கலந்து மகாசமாதியாகிவிட்டதாக நம்பப்படுகின்றது.