பக்த துக்காராம் 1608 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் பூனா மாவட்டத்தில் உள்ள தேஹு என்ற கிராமத்தில் பிறந்தார். அவரது குல தெய்வம் பந்தர்பூரின் விதோபா. பின்னாளில் இவர் சாந்த் துக்காராம் மகாராஜ் என்று அழைக்கப்பட்டார். இவர் அபாங்கா எனப்படும் 4500 பக்தி பாடல்களை இயற்றினார். விட்டலருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பக்திப் பாடல்கள் அபங்கா பாடல்கள் ஆகும். கீர்த்தனைகள் மூலம் சமூகம் சார்ந்த வழிபாட்டையும் பிரபலப்படுத்தினார். மகாராஷ்டிராவில் கிருஷ்ணர் வழிபடும் வடிவம் விட்டல ஆகும். வேறு பெயர்கள் பாண்டுரங்கன் விதோபா மற்றும் பண்டரிநாதர் ஆகும். துக்காராம் பல வணிக முயற்சிகளில் ஈடுபட்டார். தனது வாடிக்கையாளர்களிடம் மிகவும் அன்பாகவும் நேர்மையாகவும் இருந்தார். கடன் வாங்கிய பணம் உட்பட தன்னிடம் இருந்த அனைத்தையும் ஏழைகளுக்குக் கொடுத்தார். அதனால் ஆரம்பித்த அனைத்து வியாபாரத்திலும் தோல்வி அடைந்தார். 1629 1630 ஆம் ஆண்டு ஏற்பட்ட பஞ்சத்தின் போது அவரது முதல் மனைவி மகன் மற்றும் மீதமுள்ள சில கால்நடைகள் இறந்தன. இவரது குடும்பத்திடம் கடன் பெற்ற கடனாளிகள் அவருக்குக் கொடுக்க வேண்டிய பணம் பொருள் எதையும் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றினார்கள். மேலும் கடன் கொடுத்தவர்கள் தங்களுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கேட்டு அவரை வற்புறுத்தினார்கள். துக்காராமைக் கடுமையான துன்பங்களுக்கு ஆளாக்கி இறைவன் தன்னை நோக்கி இழுத்துக் கொண்டார். துக்கராமின் வாழ்க்கையில் உண்மையான பணி இந்தக் கட்டத்தில் தொடங்கியது.
துக்காராம் வாழ்க்கையின் வெறுமையில் அமைதியை நோக்கிய பயணத்தில் தனது வீட்டையும் கிராமத்தையும் விட்டு வெளியேறி அருகிலுள்ள பாம்நாத் காட்டில் மறைந்தார். 15 நாட்கள் உணவு தண்ணீர் இல்லாமல் விட்டலரை நினைத்துக் கொண்டு அங்கேயே இருந்தார். 15 வது நாளுக்குப் பிறகு அமைதியின் உணர்வை உணர்ந்தார். அப்போது பகவான் விதோபா அவருக்கு காட்சி கொடுத்து தனது அருளாசியை வழங்கினார். இதற்குப் பிறகு பக்த துக்கராமுக்கு தனது குடும்பத்தினர் மனைவி அல்லது உறவினர்கள் மீது எந்த பாசமும் இல்லாமல் போனது. வீட்டில் இருந்த வியாபாரம் சம்பந்தமான அனைத்து பொருள்கள் கடன் பத்திரங்கள் மற்றும் கணக்கு புத்தகங்கள் அனைத்தையும் சேகரித்து இந்திராயணி நதியில் வீசினார். பின்னர் தனது சொந்தக் கைகளால் பாழடைந்த குடும்பக் கோயிலை மீண்டும் கட்டியெழுப்பினார். அவரது மனதில் நான் கடவுளே உன்னை ஒருபோதும் மறக்கக் கூடாது. இந்த உடல் இறைவனின் பஞ்ச பூதம் என்னும் 5 கூறுகளால் ஆனது. இறைவனைத் தவிர எனக்கு அடைய வேண்டியது ஒன்றும் இல்லை என்ற சிந்தனை ஆழமாகப் பதிந்தது. பின் தனது வாழ்க்கையை இறைவனை சிந்திப்பதிலும் பூஜைகள் செய்வதிலுமே செலவிட்டார். இதன் பலனாக ஒரு நாள் அவரது குரு அவரது கனவில் தோன்றி உபதேசம் வழங்கினார். இதனை துக்காராம் தனது வாழ்க்கையின் மிகப்பெரிய நிகழ்வாக விவரிக்கிறார். தகுதியான எதையும் தான் செய்யவில்லை என்றாலும் சத்குரு ஒரு கனவில் என்னிடம் வந்து மிகவும் கருணை காட்டினார். நான் ஆற்றில் குளிக்கச் சென்ற போது அவர் என்னைச் சந்தித்து என் தலையில் கை வைத்து என்னை ஆசீர்வதித்தார். அவர் தனது பெயர் பாபாஜி சைதன்யா என்று கூறினார். (பாபாஜி சைதன்யா சாந்த் ஞானதேவின் நான்காவது தலைமுறை சீடர் ஆவார்.) மேலும் தனது இரண்டு முந்தைய குருக்களின் பெயர்களை ராகவ சைதன்யா மற்றும் கேசவ சைதன்யா என்று கூறினார். ராமகிருஷ்ண ஹரியின் ஜபத்தைச் செய்ய அவர் எனக்கு அறிவுறுத்தினார் என்றார். இது ஜனவரி 1632 இல் நடந்தது.
துக்காராம் இப்போது தனது வாழ்க்கையை பக்திப் பயிற்சிகளில் அதிகளவில் செலவிடத் தொடங்கினார். ஞானதேவ் நாம்தேவ் மற்றும் ஏக்நாத் போன்ற சிறந்த துறவிகளின் கவிதைகள் மற்றும் படைப்புகளைப் படிப்பது பகவத் கீதை ஸ்ரீமத் பாகவதம் போன்றவற்றைப் படிக்கத் தொடங்கினார். பின்னர் ஒரு நாள் அவர் ஒரு கனவில் பாண்டுரங்கன் தோன்றி அவரை எழுப்பி பக்திப் பாடல்களைப் பாடுமாறு அறிவுறுத்தினார். பாண்டுரங்கனின் அருளால் கவிதைகள் படைக்கும் தெய்வீகக் கலை துக்காராமுக்கு இயல்பாகவே வந்தது. இவரது பாடல்களில் மக்கள் ஈர்க்கத் தொடங்கினர்கள். அவரது புகழைப் பார்த்து சிலர் பொறாமையடைந்தனர். அக்காலத்தைச் சேர்ந்த கற்றறிந்த பிராமணரான ராமேஸ்வர் சாஸ்திரிக்கு இவருக்கு எதிராக ஒரு புகாரை அனுப்பினர்கள். துக்கராமிடம் வந்த ராமேஸ்வர் இவரது கவிதைகள் மற்றும் ஷ்ருதிகளின் கொள்கைகளை விளக்கிச் சொல்லுமாறு கேட்டார். சாஸ்திரி துக்கராமிடம் தனது கவிதைகளில் கொள்கைகளில் அனைத்து மனிதர்களும் சமம். பிறப்பில் உயர்வு தாழ்வு இல்லை என்று விளக்கத்தில் பொருள் கூறினார். இதனை ஏற்றுக் கொள்ளாத ராமேஸ்வர் இனி துக்காராம் பாடல்கள் பாட எந்த உரிமையும் இல்லை. எனவே அவர் கவிதைகள் எழுதுவதை நிறுத்த வேண்டும். இவர் ஏற்கனவே எழுதிய கவிதைகளை இந்திராயினி நதியில் மூழ்கடிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார். அனைத்தும் விட்டலரின் லீலை என்று உணர்ந்த துக்காராம் உடனடியாக தனது வீட்டிலிருந்த அனைத்து கவிதைகளையும் வெளியே கொண்டு வந்து அவற்றை ஒன்றாகக் கட்டி ஒரு பெரிய கல்லை அதனுடன் சேர்த்து மூட்டையாக கட்டி ஆற்றில் எறிந்தார். பாண்டுரங்க பகவானே பாடல்கள் மூலம் மக்களிடையே பக்தியைப் பரப்பும்படி அவருக்குக் கட்டளையிட்டிருந்த படியால் துக்காராம் எதனைப் பற்றியும் கவலைப்படாமல் தனிமையில் தனது கவிதைகளில் கடவுளின் புகழைப் பாடிக்கொண்டிருந்தார். இவ்வாறு தொடர்ந்து 13 நாட்கள் அவர் தண்ணீர் உணவு இல்லாமல் இருந்தார். 14 ஆம் நாளில் துக்கராமின் சீடர்களில் ஒருவரின் கனவில் தோன்றிய பாண்டுரங்கர் ஆற்றுக்குச் செல்லுங்கள். அங்கே துக்கராமின் கவிதைகள் மேற்பரப்பில் மிதப்பதைக் காண்பீர்கள் என்று கூறினார். உடனே அந்த சீடர் தீர்ப்பு கூறிய ராமேஸ்வரரையும் அழைத்துச் சென்று ஆற்றுக்குச் சென்று பார்த்தார். அங்கு கல்லோடு கட்டிய கவிதை மூட்டைகள் மிதந்து கொண்டிருந்தது. அதனை கரைக்குக் கொண்டு வந்தார் சீடர். துக்காராமின் மகிமையை உணர்ந்த ராமேஸ்வர் எத்தனை சிறப்பு வாய்ந்த பாடல்களாக இருந்திருந்தால் இறைவன் துக்காராம் கவிதைகளை 13 நாட்கள் தண்ணீரில் பாதுகாத்திருக்கிறார் என்று எண்ணி துக்காராமை சந்தித்து மன்னிப்பு கேட்டுக் கொண்டு தொடர்ந்து பாடல்கள் எழுதுமாறு கேட்டுக் கொண்டார். ஆனாலும் அவரது மனதில் துக்காராமின் மீது வெறுப்பு இருந்தது. இதனை உணர்ந்த துக்காராம் ராமேஸ்வரின் வார்த்தையை மரியாதைக்குரியதாக கருதி தொடர்ந்து கவிதைகளை எழுதவில்லை.
ஒரு நாள் ராமேஷ்வர் ஒரு முஸ்லிம் பக்கீர் பக்கிரின் தோட்டத்திற்குள் அத்துமீறி நுழைந்தபோது அவர் உடல் முழுவதும் எரியும் உணர்வை உணரத் தொடங்கினார். இந்த நோயின் விரக்தியில் அவர் சாந்த் ஞானேஷ்வரின் சமாதி முன் அமர்ந்து உடல் எரியும் உணர்வு துன்பத்தைப் போக்குமாறு பிரார்த்தனை செய்தார். அன்று இரவில் அவரது கனவில் ஞானேஷ்வர் வந்து விதோபாவின் மிகப் பெரிய பக்தரான துக்காராம் மீது உன் மனதில் வெறுப்பு இருக்கிறது. வெறுப்பை விட்டுவிட்டப் போய் துக்கராமிடம் சரணடை. உன் உடல் துன்பங்கள் அனைத்தும் போய் விடும் என்று அறிவுருத்தினார். காலையில் எழுந்த ராமேஸ்வர் துக்கராமிடம் சென்றால் அவர் தன்னை சபித்துவிடுவாரோ என்று பயந்தார். எனவே அவர் துக்கராமுக்கு மன்னிப்பு கேட்டு ஒரு கடிதம் அனுப்பினார். துக்காராம் அந்த கடிதத்தைப் படித்ததும் ராமேஷ்வருக்கு ஒரு பதிலை அனுப்பினார். மனம் தூய்மையாக இருந்தால் உங்கள் எதிரிகள் கூட உங்கள் நண்பர்களாகி விடுவார்கள். புலிகள் அல்லது பாம்புகள் போன்ற கொடூரமான விலங்குகளால் உங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. விஷம் கூட சொர்க்கத்தின் அமிர்தத்தைப் போல உங்களுக்கு நன்மை பயக்கும். அனைத்து துரதிர்ஷ்டங்களும் மகிழ்ச்சியாக மாறும். மேலும் உடல் எரிவதால் ஏற்படும் துன்பம் கூட மறைந்துவிடும். நீங்கள் உங்களை நேசிப்பது போல் அனைத்து உயிரினங்களையும் நேசிப்பீர்கள். அனைவரிடமும் சமமான பார்வையைப் பெறுவீர்கள். நாராயணன் என் மீது இந்த கருணை காட்டியுள்ளார். அதனால்தான் நான் அனைத்து உயிரினங்களிடமும் இப்படி உணர்கிறேன் என்று பதில் எழுதினார். துக்காராமின் கடிதத்தைப் படித்துக் கொண்டிருந்தபோது உடல் எரிவதால் ஏற்படும் துன்பம் கூட மறைந்துவிடும் என்ற வார்த்தைகளை ராமேஷ்வர் படித்த போது அவரது உடல் அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுபட்டது. இதனால் துக்கராமுக்கு அவர் மிகப்பெரிய அநீதி இழைத்துவிட்டார் என்பது அவருக்கு உறுதியாகப் பதிந்தது. அன்றிலிருந்து ராமேஷ்வர் சாந்த் துக்காராம் மகாராஜின் சிறந்த அபிமானியாகவும் தீவிர சீடராகவும் ஆனார். துக்காராமை சந்தேகித்ததால் தன்னைத்தானே குற்றம் சாட்டி 5 கவிதைகளை எழுதினார் ராமேஸ்வர். இந்த சம்பவத்திற்குப் பிறகு துக்கராமின் பெயரும் புகழும் எங்கும் பரவியது.
மராட்டியத் தலைவர் சிவாஜி மகாராஜ் துக்கராமைச் சந்திக்க வந்து அவருடன் பல நாட்கள் தங்கினார். துக்கராமின் பஜனைகளால் சிவாஜி மகாராஜ் மிகவும் ஈர்க்கப்பட்டு நெகிழ்ச்சியடைந்தார். சிவாஜி தனது ராஜ்யத்தை துறந்து விட்டு பஜனை செய்து துக்கராமைப் பின்பற்ற விரும்பினார். ஆனால் துக்காராம் அவரை அவ்வாறு செய்வதிலிருந்து தடுத்தார். சிவாஜிக்கு தனது குடிமக்களுக்கான கடமையை நினைவூட்டி அறிவுறுத்தினார். கடவுளை உணர உணவையோ தண்ணீரையோ விட்டுவிட்டு காட்டுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. உலக இன்பங்கள் தாங்களாகவே உங்களிடம் வந்தால் அவற்றை எல்லா வழிகளிலும் அனுபவிக்கவும் ஆனால் நம் அனைவரிடமும் வசிக்கும் கடவுளின் பெயரால் மட்டுமே. எதையும் விரும்பாதீர்கள் எதையும் விட்டுவிடாதீர்கள். இது உங்களுக்கு எனது எளிய மற்றும் ஒரே அறிவுரை என்றார். சிவாஜி தனது அரசவைக்கு மகிழ்ச்சியான மற்றும் திருப்தியான மனிதராகத் திரும்பினார். சமர்த் சுவாமி ராம்தாஸ் சிவாஜி மகாராஜின் குருவாக இருப்பார் என்பதை பக்த துக்காராம் உள்ளுணர்வாக அறிந்திருந்தார். இதனால் சுவாமி ராம்தாஸை சிவாஜிக்கு அறிமுகப்படுத்தினார் துக்காராம்.
துக்காராம் ஒருமுறை தேஹுவுக்கு அருகிலுள்ள லோஹாகான் என்ற கிராமத்தில் கீர்த்தனை செய்து கொண்டிருந்தார். அப்போது அவருடன் பஜனை செய்யும் ஒரு பெரிய கூட்டம் இருந்தது. அவர்களில் ஜோஷி என்ற பிராமணர் ஒருவர் இருந்தார். அவர் தனது இறக்கும் நிலையில் இருந்த ஒரே குழந்தையை அதன் தாயிடம் விட்டுவிட்டு பஜனைக்கு வந்தார். குழந்தை இறந்து விட்டது. தாய் மிகவும் துயரமடைந்தாள். அவள் துக்காராம் பஜனையின் போது அவர் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்து இறக்கும் நிலையில் இருந்த குழந்தையைப் பற்றி கூறி தனது கணவர் அலட்சியமாக இருந்தபடியால் குழந்தையின் மரணத்திற்கு அவர்தான் காரணம் என்றும் அவரைக் கடிந்து கொண்டாள். துக்காராம் உடனடியாகக் கடவுளிடம் பிரார்த்தனை செய்து ஒரு பாடலைப் பாடினார். துக்காராம் பாடி முடிக்கும் போது குழந்தை உயிர் பெற்று எழுந்தது. துக்காராம் எப்போதும் பஜனை மற்றும் கீர்த்தனைகளைச் செய்து வந்தார். எதையும் சம்பாதிக்கவில்லை. தன்னையும் தனது குடும்பத்தையும் பராமரிக்கும் பொறுப்பு அவரது மனைவியின் மீது விழுந்தது. துக்காராம் தனது பஜனையில் மிகவும் மூழ்கியிருந்ததால் அவர் தனது உணவை மறந்துவிடுவார். அவரது மனைவி அவரைத் தேடிச் சென்று அவருக்கு உணவை பரிமாறினாள். பெரும்பாலும் அவர் பாம்கிரி மலையில் காணப்பட்டார். துக்கராமின் மனைவி குடும்பத்தை பராமரிப்பதில் பல சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. துக்கராமே அவரது பக்தியையும் தூய்மையையும் பாராட்டியிருக்கிறார்.
துக்கராமின் இறுதி காலத்தில் தனது நண்பர்களிடம் சில நாட்களில் தான் இங்கிருந்து விரைவில் புறப்படுவதாகக் கூறினார். புறப்படுவதற்கு முந்தைய இரவு அவர் ஹரிகதை என்ற ஒரு கீர்த்தனை செய்தார். அதில் ஹரிகதை என்பது மூன்று புனித நதிகள் போன்றது. கடவுள் பக்தர் மற்றும் இறைவனது பெயர் ஆகியவற்றின் சங்கமம் போன்றது. அதைக் கேட்பதன் மூலம் ஒருவரின் அனைத்து பாவங்களும் எரிந்து ஒருவர் சுத்திகரிக்கப்படுகிறார். சுற்றி கிடக்கும் கூழாங்கற்கள் கூட புனிதமாகவும் வழிபாட்டிற்கு தகுதியாகவும் மாறும் என்று பாடியிருந்தார். அவரது இறுதிநாள் நெருங்கி வருவதைக் கேள்விப்பட்டவுடன் முழு கிராம மக்களும் அவரைச் சுற்றி கூடினார்கள். அவர்களிடம் நீங்கள் அனைவரும் குடும்ப வாழ்க்கையின் பொறுப்புகளைச் சுமந்தாலும் பாண்டுரங்கனை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். பந்தர்புரம் உங்களுக்கு மிக அருகில் உள்ளது. அது இந்த பூமியில் உள்ள வைகுண்டம். அங்கு சென்று இறைவனை வணங்குங்கள். மரண நேரத்தில் இறைவனின் நாமம் மட்டுமே உங்களைக் காப்பாற்றும் என்பது எனது அனுபவம். நான் உங்கள் முன் சாஷ்டாங்கமாக விழுந்து இறைவனின் நாமத்தை ஒருபோதும் மறக்க வேண்டாம் என்று கண்ணீருடன் மன்றாடுகிறேன். எப்போதும் பகவான் நாராயணனின் கீர்த்தனை மற்றும் பஜனை செய்யுங்கள். உங்கள் பொருள் நலனைப் பற்றி கவலைப்படாதீர்கள். இறைவன் அதைப் பார்த்துக் கொள்வார். இவை அனைத்தும் நிலையற்றவை. இறைவனின் நாமம் நித்தியமானது. ராமகிருஷ்ண ஹரியின் ஜபத்தைச் செய்யுங்கள் என்ற போதனையைக் கொடுத்தார். துக்கராமை அழைத்துச் செல்ல விஷ்ணு பகவான் ரதத்தை அனுப்பினார். இந்த ரதத்தில் துக்காராமை வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட இடம் இப்போது வைகுந்தநாதன் ஸ்தானக் கோயில் உள்ளது.









