தேவி உபாசகர் ஒருவர் செல்வந்தர் ஒருவரிடம் பணம் கடன் வாங்கி குறிப்பிட்ட காலத்தில் திருப்பி தருவதாக பத்திரம் எழுதி கையொப்பம் இட்டிருந்தார். ஆனால் அவரால் குறித்த காலத்தில் கடனை திருப்பி தர இயலவில்லை. ஒரு நாள் அவர் பூஜையறையில் அம்பிகையை தியானித்தவாறு பூஜையில் ஆழ்ந்திருந்தார். அப்போது கடன் கொடுத்த அந்த செல்வந்தர் அவர் வீட்டு வாசலில் வந்து அவர் பெயரை சொல்லி அழைக்க அந்த தேவி உபாசகர் வெளியே வராததால் கோபம் கொண்ட செல்வந்தர் அவரை வாயில் வந்தபடி திட்டி கூச்சல் போட ஆரம்பித்தார். அப்போது உள்ளிருந்து அந்த தேவி உபாசகரின் மனைவி வெளியே வந்து உங்களுக்கு பணம் தானே வேண்டும் கூச்சல் போடாதீர்கள் சிறிது நேரத்தில் பணத்துடன் வருகிறேன் என்று மிடுக்காக சொல்லி விட்டு வேகமாக அங்கிருந்து விரைந்தாள். சிறிது நேரத்தில் சிறு பையுடன் வந்தாள் புன்னகையுடன் அந்த பையை அவரிடம் நீட்டியவாறே இதோ பாருங்கள். இந்த பையில் நீங்கள் கடனாக கொடுத்த பணமும் அதற்குண்டான வட்டியும் உள்ளன. பூஜை முடிந்ததும் நீங்கள் அவர் கையினால் பிரசாதம் பெற்றுக்கொண்டு பின் இந்த பத்திரத்தையும் அவரிடமே கொடுத்து விடுங்கள் என்று புன்னகை மாறாத முகத்துடன் சொல்லி விட்டு உள்ளே சென்றுவிட்டாள். செல்வந்தரும் பத்திரத்துடன் வீட்டுதிண்ணையில் அமர்ந்து கொண்டார்.
சிறிது நேரத்தில் பிரசாத தட்டுடன் வெளியே வந்த அந்த தேவி உபாசகர் அங்கே அமர்ந்திருந்த செல்வந்தரை கண்டு வியப்புடன் உங்களை கவனிக்க வில்லை மன்னியுங்கள் என்று பிரசாத தட்டை நீட்டினார். செல்வந்தர் முதலில் இந்த பத்திரத்தை வாங்கி கொள்ளுங்கள் என்றார். அவரின் வார்த்தைகள் கேட்டு தேவி உபாசகருக்கு ஆச்சரியம். நான் இன்னும் உங்கள் கடனை அடைக்கவில்லையே என்று பரிதாமாக கூறியவரை புன்னகையுடன் ஏறிட்டார் செல்வந்தர். உங்கள் மனைவி சற்று முன்பு வந்து மொத்த கடனையும் அடைத்துவிட்டு பத்திரத்தை உங்களிடம் கொடுக்க சொன்னார் என்றார். ஆச்சரியத்தில் ஆழ்ந்த தேவி உபாசகர் மனைவியை அழைத்து நீ இவரது கடனை அடைத்ததாக கூறுகிறாரே உண்மையா என்று கேட்டார். அந்த அம்மையாரோ திகைப்புடன் நான் பூஜையறையில் உங்களுடன் தானே இருந்தேன். இது எப்படி சாத்தியம்? என்றார். அப்போது பூஜையறையிலிருந்து ஒரு அசரீரி குரல் கேட்டது நான் தான் பணம் கொடுத்தேன். குரல் கேட்டு பூஜையறைக்கு அனைவரும் விரைந்தனர். அங்கே அம்பிகையின் உருவத்தை தவிர வேறு யாரும் இல்லை.
இப்போது அனைத்தும் புரிந்தது தேவி உபாசகருக்கு. கடனை அடைக்க தன் மனைவி உருவில் வந்தது சாட்ஷாத் அம்பிகையே என்றுணர்ந்த அவரின் கண்களில் இப்போது தாரை தாரையாய் கண்ணீர் அருகே திக்பிரமையுடன் அவரது மனைவி. உங்கள் மேன்மை தெரியாமல் தவறாக பேசி விட்டேன் மன்னியுங்கள் என்று செல்வந்தர் அவரின் கால்களில் விழுந்தார். அந்த தேவி உபாசகர் லலிதா சஹஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் எழுதிய பாஸ்கரராயர். அவரின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் இது. தஞ்சை மாவட்டம் திருவாலங்காட்டுக்கு அருகே காவேரி ஆற்றங்கரையில் வசித்தவர். இவர் தஞ்சாவூர் மயிலாடுதுறை மார்க்கத்தில் பாஸ்கர ராயபுரம் என்று ஒரு ஊர் இவர் பெயராலேயே இருக்கிறது.
காசியில் இருக்கும் வைதீகர்கள் உபாசனா மார்க்கத்தை ஏளனம் செய்வதும் குறை கூறுவதும் வழக்கமாக இருந்திருக்கிறது. பாஸ்கர ராயர் பற்றி திரித்துக் கூறி இகழ்ந்து வந்திருக்கின்றனர். இதனை அறிந்த பாஸ்கர ராயர் தாம் வாதம் செய்ய தயார் என்று பிரகடனம் செய்கிறார். பாஸ்கர ராயருடன் வாதம் செய்ய அங்கிருந்த குங்குமாநந்த நாதர் என்னும் யோகியைத் தயார் செய்து அவரை முதன்மையாகக் கொண்டு வாதத்தை தொடங்குகின்றனர் வைதீகர்கள். பல கேள்விகளுக்கும் சிறப்பாக சுலபமாக பதிலளிக்கிறார் பாஸ்கரர். அவரது வாதத் திறமையையும் மந்திர சாஸ்திரத்தில் இருக்கும் திறமையும் எல்லோரும் வியக்கின்றனர். ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமத்தில் இருக்கும் சதுஷ்ஷஷ்டி கோடி யோகினீ பரிசேவிதா (237ஆம் நாமம்) என்பதில் வரும் 64 கோடி யோகினீகள் யார் என்று கேட்கின்றனர். பாஸ்கரரும் அம்பிகையை தியானித்துப் பின்னர் வரிசையாகச் சொல்ல ஆரம்பித்து அந்தந்த யோகினிகளுக்கான பெயர் மந்திரங்கள், சரித்திரங்களை வரிசையாகச் சொல்லச் சொல்ல பிரமித்துப் போய்விடுகின்றனர். அப்போது வைதீகர்கள் தமது தலைவரான யோகி குங்குமாநந்த நாதரிடம் எப்படி இது சாத்தியம் என்று கேட்டார்கள். அவரும் பாஸ்கர ராயர் சாதாரணமானவர் அல்ல. நமது கேள்விகளுக்கு அன்னை பராசக்தியே கிளி உருவில் அவர் தோளில் அமர்ந்து அவர் சார்பில் பதிலளிக்கிறாள் என்று கூறுனார். யோகி வைதீகர்ளுக்கு அந்தக் காட்சியை காண விசேஷ பார்வையையும் அளிக்கிறார். வைதீகர்களும் அன்னையைக் கிளி ரூபமாக தரிசித்து பாஸ்கர ராயரிடம் மன்னிப்புக் கேட்டதுடன் பாஸ்கர ராயரை குருவாக ஏற்று அவரிடம் மந்திரோபதேசமும் பெற்றனர்.