போதேந்திர சரஸ்வதி சுவாமிகள் போதேந்திராள் என்றும் அழைக்கப்பட்டார். கிபி 1610 இல் கன்வ கோத்திரத்தில் பிறந்தார். அவரது தந்தை கேசவ பாண்டுரங்க யோகி. தாய் ஸ்ரீமதி சுகுணா பாய். இவர் பிறந்ததும் புருஷோத்தமன் என்ற நாமத்தை வழங்கினார்கள். காஞ்சி காமகோடி மடத்தின் 58 வது பீடாதிபதியான விஸ்வாதிகேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் உதவியாக இருந்து வந்தார் பாண்டுரங்கன். ஒரு நாள் மடத்துக்கு பாண்டுரங்கன் புறப்படும் போது நானும் வருவேன் என்று புருஷோத்தமன் அடம் பிடித்தான். எனவே ஐந்தே வயதான புருஷோத்தமனை ஸ்ரீமடத்திற்கு அழைத்துச் சென்றார். பீடாதிபதியைக் கண்டவுடன் குழந்தை நமஸ்காரம் செய்தது. சுவாமிகளும் அதனுடைய தெய்வீகத் தன்மையைப் புரிந்துக் கொண்டு இந்தக் குழந்தை இங்கேயே இருந்து எல்லாம் படிக்கட்டும் என்று சொல்லிவிட்டார். அன்றுமுதல் புருஷோத்தமன் காஞ்சி மடத்திலேயே வளர்ந்து வந்தாலும் தினமும் பெற்றோர்களை சந்தித்து நமஸ்காரம் செய்து ஆசிகளை பெறுவார். உபநயனம் வேதம் வேதாந்தம் இவைகளை திறம்படக் கற்றார். அனைத்தும் கற்ற பிறகு ராம நாம ஜபம் சிறந்தது என்று அறிந்தார். அன்று முதல் 1,08,000 நாம நாமத்தை ஜெபிப்பதாகச் சங்கல்பம் எடுத்துக் கொண்டு தினமும் ஜெபித்தார்.
காஞ்சி காமகோடி பீடத்தின் 58 ஆவது பீடாதிபதி விஸ்வாதிகேந்திர சரஸ்வதி சுவாமிகள் 1638 ஆம் ஆண்டு புருஷோத்தமனுக்கு ஸ்ரீ ஆத்ம போதேந்திர சரஸ்வதி என்று பெயர் கொடுத்து இளைய பீடாதிபதி ஆக்கினார். கபீர்தாஸ், துளசிதாஸ், மீரா பாய், ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மஹாபிரபு, ஸ்ரீ நாம தேவா, ஸ்ரீ ஏக்நாத் மற்றும் ஸ்ரீ சமர்த்த ராமதாஸ் ஆகியோரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி ராமா நாமத்தைப் பரப்பும்படி ஸ்ரீ போதேந்திராளுக்குக் கட்டளையிட்டார். போதேந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சி காமகோடி மடத்தின் 59 ஆவது பீடாதிபதி ஆனார். ஶ்ரீ ராம நாம பாராயணத்தின் பலனை சாதாரண மக்களும் அடைந்து உய்ய வேண்டும். அதுவே இந்த கலியுகத்தில் மோட்ச சாதனம் என்று மக்கள் அறிய வேண்டும் என்பதற்காக 1685 ஆம் ஆண்டில் காஞ்சி பீடத்தை தனது இளைய பீடாதிபதிக்கு விட்டுவிட்டு பீடத்தையும் துறந்து சந்நியாசியாக கிராமம் கிராமமாகச் சென்று நாம பிரசாரம் செய்து வந்தார். அவரது குருவின் ஆணையின்படி ராம நாம சித்தாந்தம் செய்து அது மோட்சத்தை கொடுக்கும் என்று சொல்லி அதற்கு ஆதாரமாக நாம பிரபாவத்தை நிரூபிக்கும் விதமாக எட்டு கிரந்தங்களை அவர் செய்துள்ளார். தஞ்சாவூரின் அருகே பல கிராமங்களை ராம நாம ஜெபம் செய்யும் கிராமங்களாகவும் மாற்றியிருந்தார்.
ஒரு சமயம் மன்னார் குடியின் அருகே உள்ள பெரம்பூர் என்ற கிராமத்தில் தங்கி இருந்தார் போதேந்திரர். அப்போது ஒருவர் இவரது தேஜசையும் காம்பீரத்தையும் கண்டு இவர் ஒரு உண்மையான மகாத்மா என்று உணர்ந்து வணங்கி நின்றார். நிமிர்ந்து பார்த்தார் சுவாமிகள். சுவாமிகள் எமது இல்லத்தில் உணவி சாப்பிட வேண்டும் என்றான். சுவாமிகள் அவரை ஏற இறங்கப் பார்த்தார். நான் எங்கும் உணவு சாப்பிட செல்வதில்லை. எமக்கு என்று விதிமுறைகளை வைத்திருக்கிறேன் என்றார். நீங்கள் உணவுவு சாப்பிட உறுதியாக வர வேண்டும். அதற்கு நான் என்ன செய்ய வேண்டுமோ சொல்லுங்கள் அப்படியே செய்கிறேன் என்றான். அதற்கு சுவாமிகள் நான் ராம நாம உணவுக்குத்தான் வருவேன் என்றார். புரியவில்லையே சுவாமி என்றான். ராமநாம ஜபத்தை செய்பவர்கள் வீட்டில் மட்டுமே உணவு சாப்பிட வேண்டும் என்று விதிமுறை வைத்திருக்கிறேன். நீ செய்வாயா என்றார். சுவாமிகள் நீங்கள் எனக்கு அந்த மந்திரத்தை உபதேசம் செய்யுங்கள் உறுதியாக ஜபம் செய்ய ஆரம்பித்து விடுகிறேன் என்றான்.
ராமநாம உபதேசம் அவருக்கு செய்துவிட்டு நாளை உனது வீட்டிற்கு உணவிற்கு வருகிறேன் என்று வாக்கு கொடுத்தார் சுவாமிகள். மறுநாள் ஒரு பெரிய சந்நியாசி உணவிற்கு வருகிறார் என்று உறவினர்கள் நண்பர்கள் என்று வீடு திருவிழா போல் காணப்பட்டது. சுவாமிகள் வந்ததும் பூர்ண கும்பம் கொடுத்து பூஜைகள் செய்தனர். பிறகு உணவிற்கு இலை போடப்பட்டது. சுவாமிகள் அமர்ந்ததும் அங்குள்ளவர்களை கவனித்தார். 3 வயது நிரம்பிய ஒரு சிறு குழந்தை தாயின் பின்னால் நின்று கொண்டு எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. சுவாமிகள் குழந்தைக்கும் ஒரு இலை போடுங்கள் குழந்தையும் எம்மோடு சாப்பிடட்டும் என்று சொல்லி விட்டுக் குழந்தையை இங்கே வா குழந்தாய் என்று அழைத்தார். குழந்தை எந்தச் சலனமும் இன்றி அவரைப் பார்த்துக் கொண்டிருந்தது. ஒன்று வர வேண்டும் அல்லது வரமாட்டேன் என்று சொல்ல வேண்டும். தலையையாவது அசைக்க வேண்டும். சலனமே இன்றிப் பார்த்துக் கொண்டிருந்த குழந்தையை ஒன்றும் புரியாமல் பார்த்துவிட்டு மீண்டும் இங்கே வா குழந்தாய் என்றழைத்தார் சுவாமிகள். அழைத்தவர் சுவாமிகளை வணங்கிவிட்டுச் சொன்னார். சுவாமி அவனுக்குக் காதும் கேக்காது. வாயும் பேசமாட்டான் அவனுக்கு தாங்கள் சொல்வது எதுவும் புரியாது என்றார். சுவாமிகள் கண்ணிலிருந்து கண்ணீர் ஆறாய்ப் பெருகியது. அதைக் கண்டதும் அழைத்தவர் சுவாமி நீங்கள் மகா ஞானி அனைத்தும் தெரிந்தவர் உங்களது கண்களில் இருந்து கண்ணீர் வரக் கூடாது. சந்நியாசி கண்ணீர் பூமியில் விழுந்தா பூமிக்கே ஆகாது. எங்க வினை நாங்க அனுபவிக்கறோம். தயவு செய்து உணவை சாப்பிடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
சுவாமிகள் அன்று காலைதான் ஒருவன் நாம நாமத்தைச் சொன்னாலும் கேட்டாலும் ஒரே பலன். எனவே நாமம் வாயில் வரா விட்டாலும் கூட பரவாயில்லை. யாராவது சொல்வதைக் கேட்டாலும் போதும். அந்த ஜீவனுக்கு நற்கதி நிச்சயம். காதுகளை பகவான் மூடி வைக்கவில்லை. எனவே யாரோ சொல்லும் நாமம் தானாய்க் காதில் விழுந்தாலும் போதும் என்று உபன்யாசம் செய்திருந்தார் சுவாமிகள். காதும் கேட்காது வாயும் பேசாது என்றால் தனது சித்தாந்தத்திலிருந்து இவனைப் போன்ற ஜீவன்கள் தப்பி விடுவார்களே அவர்களுக்கு நற்கதி கிட்டாமல் போய்விடுமோ என்று மிகவும் வருந்தி அந்த குழந்தைக்காக மானசீகமாக பிரார்த்தனை செய்தார் சுவாமிகள். அவருக்குள்ள நியமப்படி உணவை ஏழு கைப்படி மட்டும் சாப்பிட்டு கிளம்பிவிட்டார் சுவாமிகள். சுவாமிகளை வழி அனுப்புவதற்காக அவரோடு வீட்டிலிருந்தோர் அனைவரும் வீதி முனை வரை சென்றார்கள். வீட்டில் அந்தக் குழந்தை தனியாக விடப்பட்டான். குழந்தைக்கோ பசி வயிற்றைக் கிள்ளியது. காலையிலிருந்து சந்நியாசி உணவருந்த வருவதால் வேலைப்பணியில் அவனுக்கு யாரும் உணவு கொடுக்கவில்லை. சுவாமிகள் உணவு சாப்பிட்ட இலையில் அவர் 7 கைப்பிடி சாப்பிட்டது போக மீதி அத்தனையும் அப்படியே இருந்தன. பசியினால் குழந்தை இலையிலிருந்த பதார்த்தங்களை எடுத்து உண்ண ஆரம்பித்தான். சுவாமிகளை வழியனுப்பிவிட்டு வந்த பார்த்தவர்களுக்கு தாங்கள் பார்ப்பது கனவா நினைவா என்று ஒன்றும் புரியவில்லை. அவர்கள் கண்ட அந்த அற்புத காட்சி. வீட்டின் கூடத்தில் அந்தக் குழந்தை இரண்டு கைகளையும் உயரத் தூக்கிக் கொண்டு நர்த்தனம் செய்து கொண்டே மதுரமான குரலில் ராம நாமத்தை இசைத்துக் கொண்டிருந்தான். இந்த சம்பவம் 1662 ஆம் ஆண்டில் நடந்தது. ஒரு உண்மையான ஞானி உண்ட அமுது அவரது ஸ்பரிசம் அவரது பிரார்த்தனை வாக்கு பார்வை அனைத்துமே மிகவும் புனிதமானவை. ஒருவருக்கு ஞானத்தை வழங்கவும் கர்ம வினைகளை முற்றிலும் அழித்து அகற்றவும் ஞானிகளுக்கு மகான்களுக்கும் சாத்தியம்.
போதேந்திரருக்குக் குழந்தைகள் என்றால் அளவில்லாத மகிழ்ச்சி. கோவிந்தபுரத்திற்கு அருகிலுள்ள காவேரியில் தினமும் நீச்சல் அடித்து சாகசங்களைச் செய்து காட்டிக் குழந்தைகளை மகிழ்விப்பார். ஒரு கோடைக்காலத்தில் 1692 ஆம் ஆண்டு பிரஜோத்பதி ஆண்டு புரட்டாசி மாத முழு நிலவு நாளில் போதேந்திரர் தஞ்சாவூர் அருகே உள்ள கோவிந்தபுரத்தில் காவேரி நதிக்கரையில் போதேந்திரர் ஆற்று மணலிலே ஒரு குழியைத் தோண்டி அதிலே அமர்ந்து கொண்டு சிறுவர்களைப் பார்த்து இதை மண்ணால் மூடிவிட்டு செல்லுங்கள். நாளை வந்து தோண்டிப் பாருங்கள். பிறகு நான் வருகிறேன் என்றார். குழந்தைகளும் விபரீதம் தெரியாமல் மண்ணைப் போட்டு மூடிவிட்டு சென்று விட்டார்கள். போதேந்திரரைக் காணவில்லை என்று ஊர் மக்கள் சொன்ன பிறகு தான் குழந்தைகள் அவர்களிடம் நடந்ததைச் சொன்னார்கள். குழந்தைகள் காட்டிய இடத்தை தேடி தோண்ட ஆரம்பித்தார்கள். அப்போது ஒரு அசரீரீ கேட்டது. நான் இங்குதான் மண்ணிலே ராம நாமத்தை ஜெபித்துக் கொண்டிருக்கிறேன். என்னைத் தொந்தரவு செய்ய வெண்டாம். இதற்கு மேலே ஒரு பிருந்தாவனம் அமைத்து ஆராதனை செய்யுங்கள் என்று ராம நாமத்திலே ஐக்கியமாகி விட்டார். இது அவருடைய ஜீவசமாதியாகும். சிறிது வருடத்தில் காவேரி வெள்ளத்தில் பராமரிப்பு இன்றி இந்த இடம் மறந்து மறைந்து போனது. 1803 ஆம் ஆண்டில் மருதநல்லூர் சத்குரு சுவாமிகள் இங்குள்ள நீரில் இருந்து ராம நாமம் ஒலிப்பதைக் கேட்டு தனது சீடரான சரபோஜி மன்னரிடம் சொல்லி நதியைத் திசை திருப்பச் செய்து அந்த இடத்தைக் கண்டுபிடித்தார். இன்றும் இந்த ஜீவசமாதிக்கு ஆராதனை நடந்து கொண்டிருக்கிறது. இப்போதும் ஸ்ரீ போதேந்திராள் அதிஷ்டானத்தில் சுவாமிகளின் ராம நாமம் தகுதியானவர்களுக்கு கேட்டுக் கொண்டே இருக்கிறது. இவர் எழுதிய பகவன்நாம ரசோதயம், பகவன்நாம ரஸார்ணவம், பகவன்நாம ரஸாயனம் போன்ற நூல்கள் புகழ் பெற்றவை.



