நாமதேவர் பண்டரிபுரத்தில் கிருஷ்ணரின் பக்தன். விட்டல விட்டல என்று பாண்டு ரங்கனின் நாமத்தை சொல்லி பஜனைகள் செய்வதையே தனது தொழிலாக வாழ்ந்து வந்தார். பாகவதர் ஒருவர் அவர் இருக்கும் அதே தெருவில் வசித்தவர். இருவரும் பஜனை செய்வதையே தங்கள் தொழிலாக செய்து யாசகம் பெற்று வாழ்ந்து வந்தார்கள். பாகவதற்கு நாம தேவருடன் தொடர்ந்து பஜனைகள் செய்வதற்கு விருப்பம் இல்லாமல் போனது. பஜனைகள் செய்வதால் பயன் ஒன்றும் இல்லை. ஆகவே லட்சுமியை ஆராதணை செய்து மந்தர சித்தி பெற்று பொருள் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் பாகவதற்குக் தோன்றியது. எனவே பாஜனை செய்ய செல்லாமல் எப்போதும் லட்சுமியை ஆராதணை செய்ய ஆரம்பித்தார். கடும் விரதம் உபாசனை மந்த்ரோச்சாடனம் பூஜையெல்லாம் செய்து லட்சுமியின் மனம் கனிய வைத்து அவளிடம் இருந்து ஒரு ஸ்பரிசக்கலை பெற்றுக் கொண்டார். அந்த கல்லின் மூலம் கண்ணில் கண்ட இரும்பு பொருள்களை எல்லாம் தொட்டு தங்கமாக்கினார். வீட்டில் இரும்பு தீர்ந்து போய் தெருவெல்லாம் கிடக்கும் ஆணி கம்பியெல்லாம் எடுத்து வந்து அவை தங்கமாக்கி தனதாக்கிக் கொண்டார். ஆனாலும் அவரது ஆசை பெருகிக் கொண்டே சென்றது. இதனால் நாமதேவருடன் பஜனைக்கு பல மாதங்களாக செல்லாமல் இருந்தார். பாகவதர் பஜனைக்கு வராததை எண்ணி நாமதேவர் மிகவும் வருந்தினார். விட்டலா இதுவும் உன் சித்தம் உன் விளையாட்டு என்று எண்ணிக் கொண்டு அமைதியாக இருந்தார்.
நாமதேவர் மனைவி ராஜாய் பாகவதர் மனைவிக்கு நெருங்கிய நண்பி. இருவரும் ஒன்றாகவே காலையில் சந்திரபாகா நதிக்கு சென்று ஸ்நானம் செய்து நீர் எடுத்துக் கொண்டு வீட்டுக்கு திரும்புவார்கள். ஒரு நாள் ராஜாய் பாகவதரின் மனைவியிடம் சிறிது நாட்களாக புதிய தங்க நகைகளாக அணிந்திருக்கிறாய். புது புடவையாக கட்டி வருகிறாய் எப்படி இதெல்லாம் என்று கேட்டாள். அதற்கு பாகவதரின் மனைவி பாகவதர் பாண்டுரங்கனை வழிபடுவதை விட்டு லட்சுமி குபேரன்னு நிறைய பூஜை மந்திர தந்திரமெல்லாம் செய்து இரும்பை தங்கமாக்கிற ஒரு கல்லை பெற்று விட்டார். அந்த கல்லாலே இரும்பை தொட்டாலே தங்கமாக மாறி விடுகிறது. இந்த செய்தியை யாரிடமும் சொல்லி விடாதே என்றாள். அனைத்தையும் கேட்ட நாமதேவர் மனைவி ராஜாய் எங்களது வீட்டில் வறுமை தாண்டவமாடுகிறது. பணம் சம்பாதிக்காமல் எப்போது பார்த்தாலும் பஜனை பஜனை என்று விட்டலன் நாமம் தான் வீட்டில் கேட்கிறது. நானும் எனது அம்மாவும் தான் தினமும் யாரிடமாவது யாசகம் பெற்று சமையல் செய்கிறோம். ஒரே ஒருநாள் எனக்கு அந்த கல்லை கொடு. வீட்டில் நிறைய துருபிடிச்ச இரும்பு இருக்கு அனைத்தையும் தங்கமாக மாற்றி விட்டு உன்னிடம் திருப்பி தந்து விடுகிறேன். இதனால் என் வீட்டிலும் வறுமை இல்லாமல் இருக்கும் என்று கல்லை கேட்டாள். பாகவதரின் மனைவியும் சம்மதித்து பாகவமருக்கு தெரியாமல் ராஜாய்யிடம் கல்லை கொடுத்தாள். நாமதேவரின் வீட்டில் இருந்த நிறைய ஊசிகளும் இரும்பு துண்டுகளும் தங்கமாயின. இதனை கண்ட நாமதேவர் தன் மனைவி இரும்பை தங்கமாக்குவதை கவனித்து பதறினார். விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டார். பண ஆசை தன் மனைவியையும் பாகவதரைப் போலவவே மாற்றி விடுவதை அறிந்து வாடினார். விட்டலா என்று கத்திக் கொண்டே அந்த மந்திரக்கல்லை ராஜாயிடம் இருந்து பிடுங்கி ஓடிய நாமதேவர் சந்திரபாகா நதியில் வீசி எறிந்தார். நதியின் ஆழத்தில் கல் விழுந்து மறைந்தது.
நாமதேவர் அமைதியாக வீடு திரும்பினார். ராஜாய் பாகவதர் மனைவியை பயத்தினால் அன்று சந்திக்கவில்லை. மறு நாள் வழக்கம் போல பாகவதர் பூஜைக்கு அமர்ந்தார். கல் இருந்த பேழையை கண்ணில் ஒற்றிக்கொண்டு லட்சுமியை பிரார்த்தித்து திறந்தார். உள்ளே கல் இல்லை மனைவியிடம் கேட்டு விசாரித்து உண்மையை தெரிந்து கொண்டார் நெருப்பாக அவளை திட்டி தீர்த்தார். நாமதேவர் வீட்டிற்க்கு வந்து எங்கே என்னுடைய மந்திரக்கல். அதனை உடனே கொடு என்றார். பாகவதரை அமைதிபடுத்திய நாமதேவர் பகவான் மீது செய்யும் பஜனையின் புண்ய பலனைகளை எல்லாம் எடுத்தி கூறி மீண்டும் பாகவதம் செய்ய வருமாறும் இந்த கல் மேல் உள்ள ஆசையை விடுமாறும் எடுத்துக் கூறினார். அதை கேட்கும் நிலையில் பாகவதர் இல்லை. வானுக்கும் பூமிக்குமாக குதித்து கொண்டு வா என் கல்லை என்று நச்சரிக்கவே அது சந்திரபாகா நதியில் போடப்பட்டதை நாமதேவர் சொன்னதும் பாகவதர் நதிக்கு ஓடினார். என் கல் என் கல் அதை இப்போதே தா என்று பித்து பிடிக்காத குறையாக கத்தினார் பாகவதர். நாமதேவரையும் விட்டலனையுமே வாய்க்கு வந்தபடியெல்லாம் தாழ்வாக ஏசினார். விட்டலனை பாகவதர் திட்டுவதை கேட்ட நாமதேவர் வருத்தமடைந்தார். பாகவதரே என்னோடு வாருங்கள் என்று அவர் கையை பிடித்து இழுத்துக் கொண்டு நதிக்குள் இறங்கினார். விட்டலா நான் செய்த தவறினால் இந்த பாகவதர் உன்னையும் திட்டுகிறார். என்னை மன்னித்து விடு. இந்த பாகவதரின் கல் மீண்டும் கிடைக்க அருள் புரியவேண்டும் என்று சொல்லி நதியில் மூழ்கி கைக்கு கிடைத்த கல்லெல்லாம் எடுத்து பாகவதரிடம் கொடுத்தார். உங்களது கல் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். நாமதேவரின் கை நிறைய பெரிய பெரிய மந்திர கற்கள். நாமதேவரின் சக்தியையும் பாண்டுரங்கன் மகிமையையும் இமைக்கும் நேரத்தில் புரிந்துகொண்டார் பாகவதர். கற்களை வாங்கி நதியில் வீசிய பாகவதர் நாமதேவர் காலடியில் விழுந்தார். மீண்டும் விட்டலனின் ஆலயத்தில் நாமதேவரோடு பாகவதர் பஜனைகள் செய்ய ஆரம்பத்தார்.