சக்குபாய்

பாண்டுரங்கனின் பக்தர்களான கங்காதர் ராவ் கமலாபாய் தம்பதி பண்டரிபுரத்தில் வசித்தனர். அவர்களின் மகள் சக்குபாய். சிறுமியான அவள் மணல் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்தாள். அந்த வழியாகத் தம்பூராவுடன் முதியவர் ஒருவர் பாடியபடி வந்தார். அவரது கால் இடறி மணல் வீடு சிதறியது. சக்குபாய் அவரைத் திட்டினாள். மன்னிப்பு கேட்டும் அவளது கோபம் தீரவில்லை. உன் கோபம் தணிய நான் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டார். தம்பூராவை எனக்கு தர வேண்டும் என்றாள். முதியவர் தம்புராவை கொடுத்ததோடு அதை எப்படி இசைக்க வேண்டும் என்றும் சொல்லிக் கொடுத்து ஓம் நமோ நாராயணாய மந்திரத்தை சிறுமியின் காதில் ஓதி இதனை செபிக்குமாறு தெரிவித்தார். அன்று முதல் விளையாட்டில் மனம் செல்லாமல் மந்திரம் செபிப்பதிலேயே அவளின் மனம் ஈடுபட்டது. திருமணம் செய்தால் இவள் மனம் மாறுவாள் என நினைத்தனர் பெற்றோர். டில்லியைச் சேர்ந்த மித்ருராவ் திருமணம் செய்து கொண்டார். எப்போதும் சக்குபாய் தியானத்தில் இருப்பதும் மந்திரம் ஜபிப்பதும் மாமியாருக்கு பிடிக்கவில்லை. ஒருமுறை மாமியார் தன் மகனிடம் இவளை இருட்டு அறையில் கட்டிப்போடு என நிர்பந்தம் செய்தாள். தயக்கத்துடன் மித்ருராவும் மனைவியைக் கயிற்றால் கட்டி வைத்தார். அப்போது துறவி வடிவத்தில் தோன்றிய பாண்டுரங்கன் பிச்சை கேட்டு தெருவில் சென்றார். அவரை பார்த்தார் மித்ருராவ். அருகில் வந்த துறவி வருந்தாதே மகனே என் மந்திர சக்தியால் உன் பிரச்னை தீரும் என்றார். மனைவியின் நோயை உங்களால் தீர்க்க முடியுமா எனக் கேட்டார் மித்ரு ராவ். குணப்படுத்துவேன். இப்போதே ஆற்றங்கரைக்கு அழைத்து வா என்றார் துறவி. மனைவியுடன் சென்றார் மித்ரு ராவ். ஆற்றில் குளிக்கச் சொல்லிய பிறகு நல்ல மருமகளாக இருப்பதே பெண்ணுக்கு அழகு என அறிவுரை சொன்னார். அதன் பின் சக்குபாயிடம் நல்ல மாறுதல் ஏற்பட்டதை கண்ட மித்ருராவ் மகிழ்ச்சி அடைந்தார்.

பாண்டுரங்கன் கோவிலுக்கு சிலர் சென்று கொண்டிருந்தனர். அவர்களுடன் செல்ல சக்குபாயும் விரும்பினாள். ஆனால் அதற்கு மித்ருராவ் சம்மதிக்கவில்லை. சண்டை ஆரம்பமானது. கோபமடைந்த மித்ரு ராவ் சக்குபாயை துாணில் கட்டி வைத்தார். இதுவும் பாண்டுரங்கனின் லீலையே சக்குபாய் என பிரார்த்தனையில் ஈடுபட்டாள். சிறிது நேரத்தில் அவள் முன் மற்றொரு சக்குபாய் வந்தாள். பகவானே சக்குபாயாக காட்சியளித்தார். கட்டை அவிழ்த்து விட்டு பண்டரிபுரம் சென்று தரிசித்து வா என்றாள். அவளும் மகிழ்வுடன் புறப்பட்டாள். சக்குபாய்க்கு பதிலாக பகவான் துாணில் கட்டுண்டு விட்டார். பண்டரிபுரத்தில் சக்குபாய் தரிசித்தாள். பஜனை கோஷ்டியுடன் பாடினாள். பக்தியில் திளைத்ததால் குடும்பத்தையே மறந்தாள். வீட்டுத் துாணில் கட்டிருந்த சக்குபாய் சுவாமி என்னை மன்னியுங்கள். நான் இனி உங்கள் சொல்படி நடப்பேன். என்னை அவிழ்த்து விடுங்கள் என கணவரிடம் கெஞ்சினாள். கட்டை அவிழ்த்து விட்டார். அன்று முதல் சக்குபாய் (பகவான்) கணவருக்கும் மாமியாருக்கும் பணிவிடை செய்தாள். நாட்கள் கடந்தன.

பண்டரிபுரத்தில் இருந்த சக்குபாய் குடும்பத்தை மறந்து பக்தியில் ஈடுபட்டாள். பூக்களைப் பறித்து மாலையாக்கி பகவானுக்கு தினமும் சாத்தினாள். ஒரு நாள் பூப்பறிக்கும் போது பாம்பு தீண்ட மயங்கி விழுந்தாள். அங்கு இருப்பவர்கள் ஆபத்தான நிலையில் சக்குபாய் கிடக்கும் செய்தியை கணவரான மித்ருராவிடம் தெரிவித்தனர். அதே நேரம் வைத்தியராக தோன்றிய பகவான் விஷத்தை முறிக்க பச்சிலை கொடுத்து சக்குபாயைக் காப்பாற்றினார். அவளின் முன் சக்குபாயாக காட்சியளித்து நடந்தவற்றை நினைவுபடுத்தினார். தன் சுயரூபத்தை சக்குபாய்க்கு காட்டி வருந்தாதே வீட்டிற்கு செல் எல்லாம் நன்மையாக முடியும் என்று மறைந்தார். பண்டரிபுரத்திற்கு வந்த மித்ருராவ் சக்குபாயைக் கண்டதும் எங்கே என்ன செய்கிறாய் என ஆவேசமாகக் கேட்டார். உண்மையை சொன்னாள் சக்குபாய். இத்தனை நாளும் வீட்டு வேலைகளைச் செய்தவர் பகவான் என்ற உண்மையை அறிந்த மித்ருராவ் ஆச்சரியத்தில் சிலை போல நின்றார். தவறை உணர்ந்த அவர் மனைவியிடம் மன்னிப்பு கேட்டதோடு தனது குருவாகவும் ஏற்றார். அன்று முதல் இருவரும் பாண்டுரங்கனை வழிபட்டு முக்தி அடைந்தனர்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.