சுவேதவன மகாபத்ரகாளியம்மன்

சுவேத வனத்தில் மகாசக்தியாக மகாபத்ரகாளியம்மன் வடக்கு நோக்கி அமர்ந்தபடி அருள்கிறாள். தனது எட்டு கரங்களில் பாசம் சக்கரம் வாள் உடுக்கை கேடயம் கபாலம் ஆகியவற்றை தாங்கி தீயவற்றை அழித்து அருள்பாலிக்கிறாள். உடல் சாய்ந்த நிலையில் வலக்காலைப் பீடத்தின் மீது உயர்த்தி வைத்துக் கொண்டு இடக்காலைத் தொங்க விட்டிருக்கிறார். இடம் சுவேதாரண்யேஸ்வரர் பிரம்மவித்யாம்பிகை திருக்கோயில். திருவெண்காடு மயிலாடுதுறை மாவட்டம்.

சரஸ்வதி தேவி

பத்மாசனத்தில் தலையில் கிரீடத்துடன் காதில் வட்டமான குண்டலங்களுடன் கழுத்து மார்பு தோள்பட்டை கைகள் மற்றும் கால்களில் அலங்கார அணிகலன்களுடன் அமர்ந்திருந்து அருள்பாலிக்கிறாள். இடம் கங்கைகொண்ட சோழபுரம், ஜெயங்கொண்டம்.

ஏகாம்பரநாதர் ஏலவார்குழலி

பார்வதி தேவி சிவபெருமானின் கண்களை மூடிக்கொண்டு அவரது தவத்தை விளையாட்டாக கலைத்தார். இதனால் உலகம் முழுவதும் இருளாக மாறியது மற்றும் உலகின் அனைத்து செயல்பாடுகளும் நின்றது. மிகவும் கோபமடைந்த சிவன் பார்வதிதேவியை பூமியில் பிறந்து மீண்டும் அடையும்படி சபித்தார். வேகவதி ஆற்றின் அருகே உள்ள ஒரு பழமையான மாமரத்தடியில் மணலில் ஒரு லிங்கம் அமைத்து சிவபெருமானை நினைத்து பார்வதி தேவி கடும் தவம் செய்து கொண்டிருந்தாள். அருகில் உள்ள வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சிவலிங்கத்தை மூழ்கடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சிவனிடம் பக்தி கொண்ட பார்வதி தன் உயிரை விலையாகக் கொடுத்தும் லிங்கத்தைப் பாதுகாப்பதற்காகத் தழுவினாள். பார்வதியின் இந்த சைகை சிவபெருமானைத் தொட்டது. அவர் நேரில் வந்து அவளை மணந்தார். இடம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் காஞ்சிபுரம்.

மகிஷாசுரமர்த்தினி

மேற்கு வங்காளத்தின் மன்பூம் என்ற இடத்தில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட 12 ஆம் நூற்றாண்டின் மகிஷாசுரமர்த்தினி சிலை தற்போது மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரமான கொல்கத்தாவுக்கு அருகில் உள்ள செராம்பூர் என்னுமிடத்தில் இந்திய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

கஜலட்சுமி

தாமரை நிறைந்த குளத்தில் கஜலட்சுமி பெரிய தாமரையின் மீது அமர்ந்திருக்கிறாள். தாமரைகளை ஏந்திய இரண்டு கைகளுடன் தலையில் ஒரு அழகான கிரீடம் உள்ளது. அவளுடைய இரண்டு பக்கங்களிலும் கீழே இரண்டு யானைகள் நின்று கொண்டு தும்பிக்கையால் பானைகளில் தண்ணீர் நிரப்பி பானைகளை மேலே நிற்கும் யானைகளிடம் கொடுக்கிறது. மேலே உள்ள இரண்டு யானைகள் அந்த நீரை வாங்கி கஜலட்சுமியின் தலையில் அபிஷேகம் செய்கின்றன. சுற்றிலும் தேவர் தேவதைகள் நின்று இந்த நிகழ்வை கண்கிறார்கள். இந்த கஜலட்சுமியின் சிற்பம் சுமார் எட்டடி அகலமும் பன்னிரண்டு அடி உயரமும் கொண்டது. சிதிலமடைந்த நிலையில் தற்போது உள்ளது. இடம் அஜந்தா எல்லோரா குகைகள் அவுரங்காபாத் மகாராஷ்டிரா.

அஷ்ட புஜ சரஸ்வதி

கல்விக்கு தெய்வமான சரஸ்வதி எட்டு ஆயுதம் கொண்டு அருள்பாலிக்கிறாள். பிரம்மா ஒரு அரக்கனுக்கு கொடுத்த வரத்தின் சக்தியினால் அரக்கன் இந்த உலகத்தை கட்டி வைத்தான். உலகம் இயங்காமல் நின்றது. உலகை மீட்டெடுக்க விருப்பப்பட்ட தெய்வங்கள் சக்தி வாய்ந்த எட்டு தெய்வீக ஆயுதங்களை சரஸ்வதிக்கு கொடுத்தார்கள். ஒரு புலி மீது சென்ற சரஸ்வதி அரக்கனை தோற்கடித்து உலகத்தின் மீதிருந்த கட்டை அவிழ்த்து அரக்கனை அழித்தாள். இடம் கட்சபேஸ்வரர் கோவில், பெரிய காஞ்சிபுரம்.

மகிஷாசுரமர்த்தினி

மகிஷாசுரமர்த்தினி பதினெட்டு திருக்கரங்களுடன் வெவ்வேறு விதமான ஆயுதங்களை ஏந்தி போரில் வென்ற மகிஷன் மீது வலது ஊன்றி கம்பீரமாக காட்சியளிக்கின்றாள். இடம் மகாதேவ் கோவில். பட்டேஸ்வர் சட்டாரா மாவட்டம். மகாராஷ்டிர மாநிலம்.

தசபுஜ துர்க்கை

தச புஜ துர்க்கை வெட்டப்பட்ட எருமையின் உடலில் இருந்து வெளிவரும் அரக்கனின் கழுத்தைப் பிடித்து சூலத்தினால் மார்பைப் பிளக்கும் காட்சி. வாள் கேடயம் அம்பு வில் வஜ்ரம் மணி ஆகிய ஆயுதங்களை வலது இடது கரங்களில் ஏந்தி வலது காலை மகிஷாசுரனின் மேல் வைத்து இடது காலை கீழே வைத்துள்ளார். மடிந்த மகிஷாசுரனின் எருமைத் தலை தனியே துண்டாக கீழே கிடக்க துர்கையின் சிம்ம வாகனமும் பின்னால் இருந்து கடித்து குதற சீறிப் பாய்ந்து வருகிறது. இடம் ஜோத்பூர் மாவட்டம். ராஜஸ்தான்

விஷ்ணுதுர்க்கை

20 கரங்களில் எண்ணற்ற ஆயுதங்களுடன் சம்ஹாரம் செய்யப்பட மகிஷனின் தலை மீது நிற்கும் விஷ்ணுதுர்க்கை. இடம்: ஸ்ரீவனதுர்கை பீடம் இறைவன்காடு வேலூர் மாவட்டம்.