ஏலவார்குழலி

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்சுவரர் கோவில் வரலாற்றை விளக்கும் தூணில் உள்ள சிற்பம். ஒரு முறை சிவபெருமான் கைலாசத்தில் யோகத்தில் இருந்த போது பார்வதி தேவி ஈசனின் இரண்டு கண்களை விளையாட்டாக மூடினாள். இதனால் கிரகங்கள் இயங்கவில்லை. சூரியன் உதிக்கவில்லை. உலகம் இருண்டு இயக்கம் நின்றது. நிலைமையைக் கண்ட பார்வதிதேவி தான் பெரும் தவறு செய்து விட்டோம் என்பதை உணர்ந்து சிவனிடம் மன்னிப்பு வேண்டினாள். ஈசனோ செய்த தவறுக்குத் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும் என்று கூறி பூலோகத்தில் பெண்ணாகப் பிறந்து தன்னை நோக்கிக் கடுந்தவம் செய்தால் விமோசனம் கிடைக்கும் என்றார். அம்பாள் தவம் செய்ய ஏற்ற இடத்தைக் கேட்க ஈசன் காஞ்சிபுரம் ஸ்தலத்திற்குப் பார்வதிதேவியை அனுப்பினார். ஏலவார்குழலி என்ற பெயரில் காஞ்சிபுரத்தில் வந்து மாமரத்தின் அடியில் மணலால் லிங்கத்தைப் பிடித்து வைத்து அக்னியின் நடுவில் நின்றபடி தவம் செய்தாள். அவளது தவத்தின் வலிமையைச் சோதிக்க எண்ணிய சிவபெருமான் தன் தலையில் சூடிக் கொண்டிருக்கும் கங்கையை தேவி தவம் செய்யும் இடத்தில் பாயுமாறு செய்தார். கங்கை வெள்ளமாகப் பாய்ந்து வர தான் பிடித்து வைத்திருந்த லிங்கம் கரைந்து விடும் என்று அஞ்சிய தேவி லிங்கத்தை மார்போடு அணைத்துக் கொண்டாள். அம்பாளின் பக்தியில் மகிழ்ந்த சிவ பெருமான் தேவிக்குக் காட்சி தந்து அவள் பாவத்தை மன்னித்து அருளி திருமணம் செய்து கொண்டார். இடம் காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில்.

மகிஷாசுரமர்தினி

எருமை வடிவில் உள்ள அரக்கனை அழிக்கும் துர்கை. உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த இச்சிலை தற்போது அமெரிக்காவில் பிலடெல்பியா கலை அருங்காட்சியகத்தில் உள்ளது. காலம் 8 ஆம் நூற்றாண்டு.

ஜைன யக்ஷினி சக்ரேஸ்வரி தேவி

ஸ்ரீ ரிஷவநாத தீர்த்தங்கரரின் தேவி ஷாஷனாதேவி ஆவார். பொன்னிறமான இவர் இருபது கரங்களுடன் ஒவ்வொரு கரத்திலும் ஒரு ஆயுதத்தை ஏந்திக் காட்சியளிப்பார். மேல் இரு கரங்களில் இரண்டு சக்கரங்களை ஏந்தியவாறும் திரிசூலம், வஜ்ரம், வாள், கோடரி, சக்கு, சக்கரம், மணி, வில், அம்பு, கயிறு, யானைத் தேகம் அக்ஷரமாலை மற்றும் கமண்டலம் ஆகியவற்றை ஏந்தியவாறு அருள்பாலிக்கிறாள். இத்தேவதையின் வாகனம் கழுகு.

கலிங்கத்தின் காந்திரஷ்ருங்கா என்பது அதிகம் அறியப்படாத ஜெயின் பாரம்பரிய பல பழங்கால பொருட்கள் உள்ள தளம். அங்கு தான் இத்தேவதை அமர்ந்துள்ளார்.

சிம்மவாகினி

துர்காதேவி சிங்க வாகனத்தின் மீது அமர்ந்தபடி சிம்மவாகினியாக காட்சி அளிக்கிறாள். தற்போது இச்சிலை நேபாள நாட்டின் காத்மாண்டு நகரில் தேசிய அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பம் 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது.

கௌரி

அன்னை பார்வதி கௌரி என்ற பெயரில் ஒற்றைக் காலில் தவம் செய்யும் சிற்பம். இடம்: கௌரி குண்டம் உத்தராகண்ட் மாநிலம்.

கஜலட்சுமி

கஜலட்சுமி தேவியின் வித்தியாசமான சிற்பம். தாமரை பீடத்தில் இரு பக்கங்களிலும் பணிப் பெண்கள் இருக்கிறார்கள். இரு யானைகள் கலச நீரை அபிஷேகம் செய்ய பத்மாசனத்தில் அமர்ந்துள்ளார் கஜலட்சுமி. இடம் ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோவில் அரியலூர்.

யோகினி உல்கா

அன்னை பராசக்தி தன்னுடைய உடலில் இருந்து 8 யோகினிகளை தோற்றுவித்தார். அந்த 8 யோகினிகளும் தலா 8 பேர் வீதம் 64 யோகினிகளாக மாறினர். சக்தி வழிபாட்டில் மிக முக்கியமான பரிவார தேவதைகளாக விளங்குபவர்கள் இந்த 64 யோகினிகள். அதில் ஒருவர் யோகினி உல்கா என்று இவரை வடநாட்டில் அழைக்கின்றனர். நான்கு கைகளுடனும் இரண்டு கைகளில் வாள் மற்றும் கேடயத்துடனும் இரண்டு கைகள் உதட்டில் குவித்து விசில் சத்தம் கொடுப்பது போலவும் அமைந்துள்ளது. இவளை மகாலட்சுமியின் அம்சமாகவும் அவரின் வாகனமாக ஆந்தை செல்லப் பறவையாகவும் வாகனமாகவும் வட இந்தியாவில் வழிபட்டு வருகிறார்கள். நம் நாட்டில் மத்திய பிரதேசத்தில் இருந்த இந்த பழமையான சிற்பம் தற்போது அமெரிக்கா டெக்சாஸில் உள்ள சான்அன்டோனியோ அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. காலம் 10 முதல் 11 ஆம் நூற்றாண்டு.

மானசாதேவி

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட நாகராஜனான வாசுகியின் தங்கையும் ஜரத்காரு முனிவரின் மனைவியுமான மானசாதேவி. இடம் லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி மியூசியம் ஆஃப் ஆர்ட்.