உமாமகேஸ்வரர்

சிவன் மற்றும் பார்வதிதேவி. உமாமகேஸ்வரர் கோலத்தில் இயல்பாக அமர்ந்துள்ளனர். 5 – 6 ஆம் நூற்றாண்டு. இடம்: பரசுராமேஸ்வரர் கோவில் புவனேசுவர் ஒடிசா மாநிலம்.

பஞ்சலிங்கம்

கங்காதரேஸ்வரர் கோவிலில் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த பஞ்சலிங்கம் உள்ளது. நான்கு புறம் நான்கு சிறிய பாணத்துடனும் நடுவில் ஒரு பெரிய பாணத்துடனும் இந்த சிவலிங்கம் உள்ளது. இடம் தோடாஷிவ்ரா, மாலூர் கோலர் கர்நாடக மாநிலம்.

சிம்மநாதர்

கிழக்கு சாளுக்கிய காலத்தைச் சேர்ந்த சிம்மநாதர். இடம் சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ளது. காலம் 10 ஆம் நூற்றாண்டு.

சட்டைநாதர்

பைரவர்களின் தலைமையை ஏற்றவர். இவருக்கு சட்டைநாதர் என்று பெயர். நின்ற திருக்கோலத்தில் வலது கரம் அபய முத்திரையைக் காட்டி அருள்கிறார். இடது கரத்தில் கபத்தை வைத்திருக்கிறார். இடம் குற்றம்பொருத்தநாதர் கோவில் தலைஞாயிறு திருகருப்பறியலூர் நாகை மாவட்டம்.

கங்காளமூர்த்தி

அறுபத்து மூன்று சிவ திருமேனிகளுள் ஒன்றாக கங்காள மூர்த்தி வடிவம் வணங்கப்படுகிறது. கங்காளம் என்றால் எலும்பு என்று பொருள். சிவபெருமான் வாமனரின் முதுகெலும்பை கையில் தண்டாக மாற்றிக் கொண்ட கோலமே கங்காள மூர்த்தி ஆகும். கங்காளர் வடிவமும் பிச்சாண்டவர் வடிவமும் சில இடங்களில் ஒரே மாதிரியான தோற்றம் போல தோன்றினாலும் அவை வெவ்வேறான வடிவங்களாகும். இடம் கைலாசநாதர் கோவில் காஞ்சிபுரம்.

ஊர்த்துவ தாண்டவம்

தில்லைவனத்தில் ஆடல்வல்லான் தமது ஆனந்த தாண்டவத்தினை மீண்டும் ஒருமுறை நிகழ்த்திட எண்ணினார். இந்நிலையில் பார்வதி தேவி தமது தற்பெருமையினால் சிவனை நாட்டியப் போட்டிக்கு அழைத்தார். இதனை ஏற்றுக் கொண்ட ஆடல்வல்லான் இப்போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் தில்லையை விட்டு விலகி அதன் புறப்பகுதியில் வாழ்ந்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். அந்த நிபந்தனையுடன் முனிவர்கள் தேவர்கள் முன்னிலையில் இருவருக்குமிடையே நாட்டியப் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்வில் ஓர் கர்ண அமைப்பில் சிவன் தமது காலினை விண்ணை நோக்கி உயர்த்தினார். அந்நிலையில் அது போன்ற ஓர் கர்ணத்தைப் பெண் என்ற நிலையில் பார்வதி தேவியினால் நிறைவேற்ற முடியாததால் தலை குனிந்தார். நிபந்தனைபடி பார்வதி தேவி தில்லையின் புறப்பகுதியில் குடியேறினார் என்பது ஊர்த்துவ தாண்டவம் நடைபெற்ற புராண நிகழ்வாகும். இடம் சௌந்தரராஜப்பெருமாள் கோயில். தாடிக்கொம்பு திண்டுக்கல்.