ஆவுடையார்

மாணிக்கவாசகரை ஆட்கொள்ள நரியை குதிரையாக்கி குதிரையை மீண்டும் நரியாக்கி காட்டுக்குள் ஓடச் செய்து ஊருக்குள் வெள்ளம் வரச் செய்து வெள்ளத்தை அடைக்க கிழவிக்காக பிட்டுக்கு மண் சுமந்து கரையை அடைக்காமல் போக்கு காட்டி மன்னனால் முதுகில் பிரம்படிபட்டு அது அனைவர் முதுகிலும் வலி பெறச் செய்து கிழவி வந்தி அமைச்சன் மணிவாசகன்; மன்னன் அரிமர்த்தனன் என மூவருக்கும் முக்தி அளித்தார் சிவபெருமான். சிவனின் கையில் நரம்புகள் புடைத்ததுக் கொண்டு இருப்பதைக் காணலாம். இடம் ஆத்மநாத சுவாமி கோயில். திருப்பெருந்துறை. புதுக்கோட்டை மாவட்டம்.

காலசம்ஹாரர்

அறுபத்து மூன்று சிவ திருமேனிகளுள் ஒன்றாக காலசம்ஹாரர் வணங்கப்படுகிறார். காலன் என்று அழைக்கப்படும் யமனை அழித்த சிவ உருவம் கால சம்ஹாரர் எனவும் காலந்தகர் எனவும் அழைக்கப்படுகிறார். இடம்: திருப்பூதீஸ்வரர் கோவில் கொடும்பாளூர். புதுக்கோட்டை மாவட்டம்

தெய்வங்கள்

வராஹர் விநாயகர் திரிமூர்த்தி மகிஷாசுரமர்த்தினி நரசிம்மர். தனியாக மண்டபம் போல் அமைப்பில் சிவலிங்கம். அனைத்து தெய்வங்களும் ஒரே மலையில் செதுக்கப்பட்டுள்ளது. இடம் பாமினி குகைக்கோயில் கர்நாடகா.

ஊர்த்துவ தாண்டவத்தில் சிவபெருமான்

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கம்பத்தடி மண்டபத்தின் கிழக்குப் பகுதியின் தெற்குப் பகுதியில் ஊர்த்துவ தாண்டவரின் சிற்பம் உள்ளது. சிவனுக்கும் காளிக்கும் இடையே யார் சிறந்த நடனக் கலைஞர் என்ற போட்டியின் போது சிவன் தனது வலது காலை நேராகத் தன் தலையின் மட்டத்திற்கு தூக்கி ஊர்த்துவ தாண்டவம் ஆடினார். சிவபெருமானின் இடது காலுக்கு அருகில் அமர்ந்து மத்தளம் இசைக்கும் நந்திதேவர் சிவாம்சத்துடன் கூடியவர் என்பதை விளக்க 2 கைகள் தலைக்கு மேலே உயர்த்தி இறைவனை வணங்கிய நிலையில் அஞ்சலி ஹஸ்தமாகவும் 2 மத்தளம் வாசிக்கும் நிலையிலும் மொத்தம் 4 கரங்களுடன் உள்ளது. வலதுபக்கம் உடன் காரைக்கால் அம்மையார் உள்ளார். இடம்: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மதுரை.

யோக சிவன்

யோக நிலையில் அமர்ந்துள்ள சிவன். இடம் கடம்பவனேஸ்வரர் கோவில். எறும்பூர். விருத்தாச்சலம். முதலாம் பராந்தகசோழன் காலம் (கி.பி 907-953)

அடிமுடி காணா அண்ணல்

அடிமுடி காணா அண்ணாமலையாக இறைவன் நிற்க திருமால் வராக அவதாரம் எடுத்து அவரது பாதத்தை தேட பிரம்மா முடியை காண மேலே சென்ற காட்சி. முற்சோழர் கால கலைப் படைப்பு. இடம்: நற்றுணையப்பர் திருக்கோயில். திருநனிப்பள்ளி நாகை மாவட்டம்.

உமையொரு பாகன்

ஒரு பாதி ஆண்மைக்குரிய திண்மையும் உறுதியும் மறுபாதியில் பெண்மையின் மென்மையும் நளினமும் கொண்ட உமையொரு பாகன். இடம்: அமிர்தகடேஸ்வரர் கோயில். மேலக்கடம்பூர் கடலூர்மாவட்டம்.

நடராஜர் 18 கைகளுடன்

நடராஜர் பதினெட்டு கைகளுடன் தாமரை இலைகளின் விளிம்புடன் தாழ்ந்த பீடத்தில் நிற்கிறார். இரண்டு கைகளிலும் பாம்பை வைத்திருக்கிறார். இடது புறத்தில் மீதமுள்ள கைகள் டமருகம் பாசா ஜெபமாலை அபயமுத்ரா கபாலாம் கோடாரி திரிசூலம் வைத்திருக்கிறார். இரண்டு கைகள் தர்ஜனி மற்றும் வரத முத்திரையில் உள்ளது. நந்தி ஒரு பக்கமும் இன்னொரு பக்கம் விநாயகர் இரண்டு கைகளுடன் உள்ளார். விநாயகருக்கு வலப்புறம் ஒருவர் தரையில் அமர்ந்து இரண்டு மேளம் வாசிக்கிறார். இடம் பாதாமி குகை எண் 1.