அம்மை காண ஆனந்த நடனம் புரியும் ஆடல்வல்லான்

ஆடல்வல்லான் சிவகாமி காண உயிர்களுக்கு அருள் வழங்க ஆனந்த தாண்டவம் புரிந்ததை தத்ரூபமாக செதுக்கியுள்ளனர். மேற்புறத்தில் சுடர்களுடன் திருவாச்சி. ஜடாமகுடத்துடன் விரிசடையில் வலதுபுறம் வானிலிருந்து இறங்கும் வணங்கிய நிலையில் கங்கை இடப்புறத்தில் பிறை நிலவு. உடுக்கையும் தீயும் வலது இடது பின்கரங்களில் ஏந்தி அபய கரத்துடன் தூக்கிய திருவடியைப் பற்றிக்கொள் என்று காட்டி ஆணவமாகிய முயலகன் மேல் நின்று அகிலமெல்லாம் இயங்க ஆடிக் கொண்டிருக்கிறார். புலித்தோல் ஆடை ஆடும் வேகத்தில் முடிந்தும் நீண்டும் பறந்து கொண்டிருக்கின்றன. ஓரத்தில் கரை குஞ்சம் போன்ற அமைப்பு. வலத்தோளின் பின்புறம் படமெடுக்கும் நாகம், தோள் மாலை, கழுத்தணி, கையணி, இடையணி, காலணியுடன் அம்மையும் அவள் பங்கிற்குப் பேரழகுடன் நிற்கிறாள். குடவரைகளில் அம்மை காண ஆனந்த நடனம் புரியும் நடராஜரின் சிற்பம். இடம்: மூவரைவென்றான் மொட்டமலை பல்லவா் கால குடைவரை கோவில் விருதுநகா் மாவட்டம்.

சேத்திரபாலர் – பைரவர்

பைரவரை சேத்ரபாலர் என்ற பெயரில் குறிப்பிட்டு ஒவ்வொரு ஊரையும் அங்கு திகழும் திருக்கோயிலையும் தீமைகளிலிருந்து காக்கும் கடவுளாக வணங்கப்படுகிறார். எட்டுக் கரங்களுடன் திகழும் பைரவ வடிவமே சேத்திரபாலர் திருமேனிகளில் உத்தமமானதாகும். எரிசுடர்கள் (ஜ்வாலாமகுடம்) பிறைச்சந்திரன் ஆகியவை தலைமேல் திகழ எட்டுக் கரங்களுடன் சேத்திரபாலர் திகழ்கின்றார். திரிசூலம் வாள் வில் அம்பு டமருகம் மணி (காண்டா) கேடயம் ஆகியவற்றைத் தரித்திருக்கிறார். ஆடையின்றி இடுப்பிலும் கரங்களிலும் பாம்புகளை ஆபரணமாகப் பூண்டுள்ளார். தோளிலிருந்து நீண்ட மணிமாலை கணுக்கால் வரை உள்ளது. இந்த அற்புத திருமேனியின் முன் கரங்கள் உடைக்கப் பட்டுள்ளது. இடம் பெருவுடையார் கோவில் தஞ்சை.

தம்பதி சமேதராக தட்சிணாமூர்த்தி

சுருட்டப்பள்ளியில் உள்ள தட்சிணாமூர்த்தி தன் மனைவியுடன் அருள் காட்சியளிக்கிறார். அம்பாள் கௌரி வாமபாகத்தில் இருந்து ஆலிங்கனம் செய்து கொள்ளும் காட்சியே தம்பதி சமேத தட்சிணாமூர்த்தி ஆகும்.

மதிநுதல் மங்கையோடு வடவாலிந்து மறையோதும் எங்கள் பரமன் என்று திருஞானசம்பந்தர் தம்பதி சமோதரர்களாக விளங்கும் தம்பதி சமேத தட்சிணாமூர்த்தியை சிறப்பிக்கிறார். சாந்த சொரூபமாக தனது இடது புறத்தில் தனது தேவியுடன் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தியன் திருக்கோலம் உலகின் வேறெங்கும் காண முடியாது. தட்சிணாமூர்த்தி தனது இடது காலை மடித்து வலக்காலை முயலகன் முதுகின் மீது தொங்கவிட்டு பத்ம பீடத்தில் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். தனது முன்கை சின்முத்திரை காட்ட இடது முன்கை மடித்த இடது காலின்மீது உள்ளது. பின்னிரு கரங்களில் மானும் மழுவும் உள்ளன. சனகாதி முனிவர்கள் காலடியில் அமர்ந்துள்ளனர். அவரது இடது தோளின் பின்புறம் பரிவோடு தோளைப் பற்றியவாறும் அவர் முகத்தை ஏறிட்டுப் பார்ப்பது போலவும் அமைந்துள்ள பார்வதி தேவியின் அழகிய திருவடிவம். இடம்: பள்ளிகொண்டீஸ்வரர் கோவில் ஊத்துக்கோட்டை சுருட்டபள்ளி ஆந்திர மாநிலம்.

நந்தி லிங்கம்

ஈசனின் வாகனமான நந்தி பகவான் சிவலிங்க ஆவுடையாரின் மீதும் அவரின் மீது சிவலிங்கம் இருக்கும் அரிதான சிவலிங்க வடிவம்.

இடம்: மகாராஷ்டிரா மாநிலம் சட்டரா மாவட்டம் பட்டேஸ்வர் என்னும் ஊரில் அமைந்துள்ளது. இங்கு சிவனுக்காக 7 குகை கோவில்கள் உள்ளது. 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இந்த கோவில்கள் சற்று சிதிலம் அடைந்திருந்தாலும் கோவிலில் உள்ள சிற்பங்கள் அனைத்தும் சிறப்பாகவே உள்ளது.

கங்காதர மூர்த்தி

கங்காதர மூர்த்தியின் வலது மேல் கரம் ஜடா முடியைப் பிடித்துக் கொண்டு வெகு வேகமாக வரும் கங்கையைத் தாங்குகிறது. வலது கீழ் கரத்தால் நாகத்தைப் பிடித்துள்ளார். இடது மேல் கரம் ஜடா முடியை அவிழ்ப்பது போல் உள்ளது. மற்றொரு கரத்தை இடுப்பில் ஒய்யாரமாக வைத்திருக்கிறார். வலது காலைத் தூக்கி முயலகன் தலை மீது வைக்க அவன் பாரம் தாங்காமல் சற்றுச் சாய்வாகப் படுத்து இடக்கையாலும் பாதத்தைத் தாங்குகிறான். அருகில் பகீரதன் இருக்க இறைவனைச் சுற்றி தேவர்களும் இருக்கின்றனர். கிமு 7 ஆம் நூற்றாண்டில் மகேந்திர வர்ம பல்லவனால் கட்டப்பட்ட குடைவரைச் சிற்பம் இது.

இடம்: திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சன்னிதியில் இருந்து உச்சிப்பிள்ளையார் சன்னிதி செல்லும் வழியில் இடப் புறம் லலிதங்குரா பல்லவேஸ்வர க்ருஹம் என்ற இடத்தில் ஒரு சிறிய அறை போல் காணப்படும் பகுதியில் உள்ளது.

மாதங்கேஸ்வரர்

கஜூராஹோ கேதார்நாத் வாரணாசி மற்றும் கயா ஆகிய இடங்களில் மாதங்க முனிவரின் ஆசிரமங்கள் அமைந்திருக்கின்றன. இந்த நான்கு தலங்களும் தற்போது நான்கு மாதங்கேஸ்வரர் கோவில்கள் என்று அழைக்கப்படுகின்றன.

மத்திய பிரதேசத்தில் உள்ள கஜூராஹோ நகரில் உள்ளது இந்த கோயில். சிறிய அளவிலான இந்த ஆலயத்தின் உள்ளே அதிக பக்தர்கள் நிற்க முடியாது. வந்த வழியே திரும்பி வருவதும் சிரமம் தான். எனவே ஒரு வழியாக ஏறிச் சென்று மற்றொரு வழியாக இறங்கி வருவதற்கு என்று தனித்தனியாக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆலயத்தில் உள்ள மாதங்கேஸ்வரர் சிவலிங்க வடிவில் பிரமாண்டமாக காட்சி தருகிறார். இந்த லிங்கத்தின் பாணம் 1.1 மீட்டர் விட்டத்துடன் 2.5 மீட்டர் உயரமுள்ளது. லிங்கத்தின் அடிதளம் 1.2 மீட்டர் உயரமும் 7.6 மீட்டர் விட்டமும் கொண்டது. லிங்கத்தில் நாகரி மற்றும் பாரசீக கல்வெட்டுகள் உள்ளன.

இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம் கிபி 900 முதல் 925 ஆம் ஆண்டுக்குள் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. கோயிலின் உட்புறச் சுவர்கள் வெளிப்புறச் சுவர்கள் மற்றும் வளைவு கோபுரம் ஆகியவை எந்த சிற்பங்களின் வடிவமைப்பும் இல்லாமல் காட்சியளிக்கிறது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் சிவராத்திரி விழா வெகு விமரிசையாக நடைபெறும். 1986 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் இந்த கோயில் இடம் பெற்றது.

இடம்: மத்தியப்பிரதேசம் கஜூராஹோ நகர்

ஏலவார்குழலியை கரம் பற்றி ஏகாம்பரேஸ்வரர்

சிவபெருமான் ஏகாம்பரநாதராகவும் பார்வதிதேவி ஏலவார்குழலியாகவும் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கும் விஷ்ணு பகவான். இடம் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் அமைந்துள்ள நாகரத்தார் மண்டபத் தூண்.