கங்காவதரணம்

கங்காவதரணம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். இது பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இறுதியானதாகும். இதனை பூவரு கங்கை என்றும் அழைக்கின்றனர். ஆகாயத்திலிருந்து கங்கை கீழே இறங்குவது போல இரு கைகளையும் பூமியில் ஊன்றி உடலைப் பின்புறமாக வளைத்து கால்களை இடுப்பு வரை நேரே தூக்கி ஆடுதல் கங்காவதரணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த அற்புதமான சிற்பம் நுட்பமான யோக கலையை விளக்கும் கடினமான தாண்டவம்.

சிவனை மீன் வடிவில் வழிபட்ட திருமால்

சோமுகாசுரன் வேதங்களை திருடிச்சென்று கடலுக்கடியில் ஒளிந்து கொண்டபோது திருமால் பெரிய மீனாக உருவம் தாங்கி கடலுக்கடியில் சென்று அவனை சம்ஹாரம் செய்து வேதங்களை மீட்டு பிரம்மனிடம் தந்தார். பின் அங்கிருக்கும் அனைத்து மீன்களையும் அழித்து தின்றது. ஒரு கடல் விலங்கினங்களையும் கூட விடாமல் அனைத்தையும் கொன்று தின்றது. இச்செய்தி தேவர்கள் மூலமாக சிவபெருமானை எட்டியது. சிவபெருமானும் தேவர்களுக்கு ஆறுதல் கூறி பெரிய கொக்கு வடிவமெடுத்து மீனின் கண்களை பிடுங்கி மீனின் செருக்கை அடக்கினார். திருமால் மத்ஸ்ய (மீன்) உருவத்துடன் பல காலம் சிவபூஜை செய்ததாக வரலாறு கூறுகிறது.

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலின் முன் உள்ள 16 கால் மண்டபத்தில் உள்ள தூணில் பெரிய கொக்கு வடிவில் சிவபெருமானும் அவருடைய அலகில் சிக்கிக்கொண்டு மீன் உருவத்தில் வழிபடும் பெருமாளையும் காணலாம். திருமால் மீனாக அவதாரம் எடுத்து சிவனை வழிபட்டதால் இக்கோயில் இறைவன் மச்சேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

நடனமாடும் சிவபெருமான்

சிவபெருமான் தனது 20 கைகளில் பல ஆயுதங்கள் ஏந்தியபடி தாமரை பீடத்தில் நடனமாடும் தோரணையில் இந்த வெண்கலச் சிற்பம் உள்ளது. சிவபெருமானின் இரண்டு பக்கமும் பரிவார தேவதைகள் உள்ளார்கள். 20ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த சிற்பம் தற்போது நேபாள தேசிய அருங்காட்சியகத்தில் அமைந்துள்ளது.

நந்தியும் அனுமனும்

சைவத்தில் போற்றப்படும் நந்தி பகவானும் வைணவத்தில் போற்றப்படும் அனுமனும் ஆரத்தழுவி கொள்ளும் சுதை சிற்பம். இடம் நவ திருப்பதிகளுள் ஒன்றான திருவரகுணமங்கை கோயில்.

தத்தாத்ரேயர்

பிரம்மா விஷ்ணு சிவனின் தலை இணைந்து மூன்று தலைகளும் ஆறு கைகளுடன் அருளுகிறார். பிரம்மாவின் குறியீடாக ஜெபமாலை விஷ்ணுவின் குறியீடாக சங்கு மற்றும் சக்கரம் சிவனின் குறியீடாக திரிசூலம் மற்றும் உடுக்கை ஆகியவை ஆறு கைகளில் வைத்துள்ளார். இவரின் ரூபம் பெரும்பாலும் தனிமையில் வாழும் ஒரு சந்நியாசி போலவும் இவரைச் சுற்றி நான்கு நாய்கள் மற்றும் ஒரு பசு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இடம் ஜம்புகேசுவரர் கோயில் திருவானைக்காவல் திருச்சி.

அனுக்கிரக மூர்த்தி

தான் செல்லும் வழியில் இடையூறாக இருந்த கயிலையை ஆணவத்தால் பெயர்த்தெடுக்க முனைந்த இராவணனை அவன் செருக்கு அழியும் வண்ணம் தண்டித்து அருள் புரிந்த வடிவம் இராவண அனுக்கிரக மூர்த்தி. இடம் மதுரை மீனாட்சிஅம்மன் கோவில்.

சிவபெருமான்

சிவபெருமான் தனது இடது காலை தூக்கி நடனமாடியபடி கைகளில் உள்ள சங்கை ஒரு கிண்ணம் போல் பிடித்து அதிலிருக்கும் ஆலகால விஷத்தை குடிப்பது போல் உள்ளது. பிறை நிலவு மற்றும் சிவனின் தலைமுடியில் இருந்து கங்கை நீரை வெளியேற்றுவது மற்றும் சிவனின் தலையை சுற்றி மஹாகாளத்துடன் கூடிய அழகான சிரச்சக்கரம் இந்த சிற்பத்தில் உள்ளது. இச்சிற்பம் கறுப்பு சலவைக் கல்லால் செய்யப்பட்டுள்ளது. இடம் பீகார்.