காலசம்ஹாரமூர்த்தி

மிருகண்டு ரிஷியும் அவரது மனைவி மருத்மதியும் சிறந்த சிவபக்தர்கள். சிவபெருமானிடம் ஆண் குழந்தை வேண்டும் என வேண்டி பிரார்த்தித்தார்கள். இறைவன் அவர்களின் வழிபாட்டில் மகிழ்ந்து அவர்களுக்கு இரண்டு விருப்பங்களைக் கொடுத்தார். ஒன்று குறுகிய ஆயுளுடன் ஒரு புத்திசாலி மகனைப் பெறலாம் அல்லது குறைந்த புத்திசாலித்தனம் கொண்ட நீண்ட ஆயுளுடன் ஒரு மகனைப் பெறலாம். குறுகிய ஆயுளாக இருந்தாலும் புத்திசாலி மகன் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அவர்களின் வேண்டுகோளின்படி அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு மார்க்கண்டேயன் என பெயரிட்டார்கள். அவனுக்கு 12 வயது வரை ஆயுள் இருந்தது. மார்க்கண்டேயர் சிவபெருமானிடம் மிகுந்த பக்தியுடன் இருந்தான். அவன் 12 வயதை எட்டியபோது ​​​​யம தூதர்கள் மார்க்கண்டேயனை அழைத்துச் செல்ல வந்தார்கள். அவன் மகாமிருத்யுஞ்சய மந்திரத்தை தீவிர பக்தியுடன் உச்சரித்துக் கொண்டிருந்தான். இதனால் அவனது உயிரை தூதர்களால் எடுக்க முடியவில்லை. இதனால் கோபமடைந்த யமன் நேரில் வந்து மார்க்கண்டேயனைச் சுற்றி தனது கயிற்றை வீசினார். அந்த கயிறு சிவலிங்கத்தைச் சுற்றி விழுந்து மார்க்கண்டேயனோடு சிவலிங்கமும் வந்தது. யமனின் இந்தச் செயல் சிவபெருமான் பக்தனைக் காக்க யமனை காலால் உதைத்தார். மஹாமிருதுஞ்சய மந்திரத்தின் சக்தியால் மார்க்கண்டேயனை சிவபெருமான் கால சம்ஹாரமூர்த்தியாக வந்து மரணத்திலிருந்து பாதுகாத்தார்.

மஹாமிருத்யுஞ்சய மந்திரம் என்பது மூன்று வார்த்தைகளின் கலவையாகும். மஹா என்றால் பெரியது. மிருத்யுன் என்றால் மரணம். ஜெயா என்றால் வெற்றி. மரணத்திலிருந்து பெரிய வெற்றி என்று பொருள். காலனை காலால் உதைத்து சம்ஹாரம் செய்த காலசம்ஹாரமூர்த்தியின் இந்த சிற்பம் கருப்பு சலவைக்கல்லால் ஆனது. இடம் பீகார்.

சுயம்பு நடராஜர்

கோனேரிராஜபுரம் நடராஜர் தீபாராதனை. புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே இந்த கோவிலில் உள்ள நடராஜரை தரிசிக்க முடியும் என்று அப்பர் பெருமானார் போற்றிப் பாடப்பட்ட சுயம்பு நடராஜர் இவர். இந்த கோயில் வரலாற்றையும் நடராஜரின் வரலாற்றை அறிந்து கொள்ளவும் மேலும் புகைப்படங்களை பார்க்கவும் கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்

சிவலிங்கத்தைச் சுமக்கும் சதாசிவன்

தன்னைத்தானே அர்ச்சிக்கும் மூர்த்தி சதாசிவ வடிவமாகும். அகவழிபாடு செய்பவர்களுக்கு அவரது உடம்பே சதாசிவமாயும் சதாசிவ லிங்கமாயும் நிற்கும். உருவம் அருஉருவம் (லிங்கம்) என இரண்டு நிலைகளை பார்க்கும் வண்ணமும் அருபத்தை உணரும் வண்ணமும் இத் திருவுருவம் அமைந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கொடும்பாளூரிலும் அரியலூர் மாவட்டத்தில் மேலப்பழுவூரிலும் சிவலிங்கத்தைத் தோளில் சுமந்தவாறு காட்சி தரும் அரிய சதாசிவனின் சிற்பங்கள் உள்ளன.

சிவசக்தி

சிவபெருமானின் கையில் உள்ள ருத்ராட்ச மாலை. அவரும் உமாமகேஸ்வரி அணிந்திருக்கும் அணிகலன்கள். அவள் மடக்கி வைத்திருக்கும் காலில் உள்ள கொலுசின் நிலைப்பாடு என்று பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கிறார்கள் சிற்பிகள். இடம்: ஹலபேடு. ஹாசன் மாவட்டம் கர்நாடக மாநிலம்.

நடராஜர்

வியாக்கிரபாதர் பதஞ்சலி முனிவர் இருவருக்கும் நடராஜர் தனது திருநடனத்தை காட்டி அருளிய காட்சி. இடம் முக்தீஸ்வரர் கோவில். மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.

கல்யாண சுந்தரேசுவரர்

மணக்கோலத்தில் சிவனும் உமையவளும். இடம் திருவாலந்துறையார் திருக்கோயில் மகாமண்டபத்தில் நுழைவாயில் வலதுபுறம் அமைந்துள்ளது. கீழப்பழுவூர் அரியலூர் மாவட்டம்.