அஷ்ட சிரஞ்சீவிகள்

அனுமன், விபீஷணர், மகாபலி சக்கரவர்த்தி, மார்க்கண்டேயர், வியாசர், பரசுராமர், கிருபாச்சாரியார், அசுவத்தாமன் ஆகியோர் அஷ்ட சிரஞ்சீவிகள் ஆவார்கள்.

அனுமன்: எந்த எதிர்பார்ப்புமின்றி ராமருக்கு தொண்டு செய்வது மட்டுமே தன் பிறவிக் கடன் என வாழ்ந்தவர். ராமரால் சிரஞ்சீவி பட்டம் அனுமனுக்கு வழங்கப்பட்டது. ராமாயணம் மட்டுமின்றி மஹாபாரதத்திலும் அனுமன் வருவதைப் பார்க்கலாம். இன்றளவும் அவர் சிரஞ்சீவியாக வாழ்ந்து வருகிறார். எங்கெல்லாம் ராமநாமம் சொல்லப்படுகிறதோ அங்கு அனுமன் இருப்பேன் என்று அருள்வாக்கு கொடுத்திருக்கிறார்.

வியாசர்: வியாசர் சொல்ல சொல்ல விநாயகர் எழுதியது மகாபாரதம். படிப்போரின் பாவங்களைப் போக்கும் மகாபாரதம் படைத்த வியாசர் என்றென்றும் சிரஞ்சீவியா வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது.

விபீஷணன்: இராவணனின் தப்பியும் இலங்கையை ஆட்சி செய்தவருமான விபீஷணனும் சிரஞ்சீவிதான். அண்ணன் என்றாலும் அதர்மத்தின் பக்கம் நிற்காமல் ராமருடன் நியாயத்தின் பக்கம் நின்றதால் அவர் சிரஞ்சீவி பட்டம் பெற்றார்.

மகாபலி: அசுரக் குலத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் நீதியுடனும் நேர்மையுடனும் ஆட்சி செய்தவர் மகாபலி. அதனால் தங்கள் தேவர் பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று தேவர்கள் அஞ்சினர். வாமன அவதாரத்தின் மூலம் மகாபலியை அழித்து பாதாள உலகத்துக்கு அவரை அனுப்பினார் விஷ்ணு. அவரும் சிரஞ்சீவியாக வாழ்ந்து வருகிறார். ஆண்டுக்கு ஒரு முறை தன்னுடைய நாட்டு மக்களை சந்திக்க அவர் வருகிறார். அதையே கேரள மக்கள் ஓணம் என்று கொண்டாடுகின்றனர்.

பரசுராமர்: பீஷ்மர் துரோணச்சாரியார் கர்ணன் ஆகியோரின் குரு. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதற்கு இவரே எடுத்துக்காட்டு. தந்தை ஆணைக்குக் கட்டுப்பட்டு தன் பெற்ற தாயையே கொன்றார். மீண்டும் தவ வலிமையால் தாயை உயிர்ப்பித்தார். ராமாயணம் மகாபாரதம் என இரண்டு காவியங்களும் இவரை சிரஞ்சீவி என்று போற்றுகின்றன.

மார்க்கண்டேயன்: மிருகண்ட முனிவர் மருத்துவதி (மானஸ்வினி) தம்பதிகள் குழந்தைப் பேற்றுக்காக சிவனை நோக்கி தவம் இருந்ததின் பலனாக பிறந்தவர் மார்க்கண்டேயன். இவரது ஆயுள் 16 வயது என்று பெற்றோர்களுக்கும் தெரியும். அதன்படி 16வது வயதில் சிவபூஜை செய்த போது மார்க்கண்டேயனின் ஆயுளை முடித்து வைக்க எமன் பாசக்கயிற்றை வீசினார். அது சிவலிங்கத்தின் மீதும் விழுந்தது. இதனால் வெகுண்டெழுந்த சிவன் எமனை எட்டி உதைத்தார். மேலும் மார்கண்டேயனுக்கு என்றும் 16 என்ற சிரஞ்சீவி பட்டத்தை வழங்கினார்.

கிருபாச்சாரியார்: பாண்டு வம்சத்தினருக்கு குலகுருவாக இருந்தவர். ஏட்டுக் கல்வி மற்றும் போர்த்திறனைப் பாண்டவர் மற்றும் கௌரவர்களுக்கு கற்பித்தவர். மகாபாரதப் போரில் கௌரவ சேனையிலிருந்து போரிட்டாலும் நடுநிலை தவறாதவர் என்று அறியப்பட்டவர். போரின் முடிவில் பரீட்சித்து மாமன்னரின் அரசகுருவாக பணியாற்றினார்.

அஸ்வத்தாமன்: மகாபாராதத்தில் வரும் துரோணாச்சாரியரின் மகன் அஸ்வத்தாமன். குருச்சேத்திரப் போரில் உயிர் பிழைத்த சிலரில் இவனும் ஒருவர். தன்னுடைய தந்தை வஞ்சகமாகக் கொல்லப்பட்டது மற்றும் நண்பன் துரியோதனன் அதர்ம வழியில் தாக்கப்பட்டதால் கோபம் கொண்ட அவன் பாண்டவர்களின் வம்சத்தை அழிப்பேன் என்று சபதம் ஏற்றுப் பாண்டவர்களின் புதல்வர்களை கொலை செய்தான். மேலும் பிரம்மாஸ்திரம் மூலமாக உத்தரயைின் கருவில் இருக்கும் குழந்தையைக் கொள்ள முயற்சி செய்தான். அதனால் அவனுக்கு சாவை விட கொடிய தண்டனையாக ஆறாத ரத்தம் வழிந்தோடும் காயங்களுடன் மரணமின்றி உலகை சுற்றி வரக் கூடிய தண்டனையை சாபமாக வழங்கினார் கிருஷ்ணன். அதனால் அவனும் சிரஞ்சீவியாக உலகைச் சுற்றி வருகிறான்.

இந்த அஷ்ட சிரஞ்சீவிகள் உள்ள சிற்பம் உள்ள இடம் நக்சல் பகவதி கோயில் காத்மாண்டு நேபாளம்.

போதேந்திர சரஸ்வதி சுவாமிகள்

போதேந்திர சரஸ்வதி சுவாமிகள் போதேந்திராள் என்றும் அழைக்கப்பட்டார். கிபி 1610 இல் கன்வ கோத்திரத்தில் பிறந்தார். அவரது தந்தை கேசவ பாண்டுரங்க யோகி. தாய் ஸ்ரீமதி சுகுணா பாய். இவர் பிறந்ததும் புருஷோத்தமன் என்ற நாமத்தை வழங்கினார்கள். காஞ்சி காமகோடி மடத்தின் 58 வது பீடாதிபதியான விஸ்வாதிகேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் உதவியாக இருந்து வந்தார் பாண்டுரங்கன். ஒரு நாள் மடத்துக்கு பாண்டுரங்கன் புறப்படும் போது நானும் வருவேன் என்று புருஷோத்தமன் அடம் பிடித்தான். எனவே ஐந்தே வயதான புருஷோத்தமனை ஸ்ரீமடத்திற்கு அழைத்துச் சென்றார். பீடாதிபதியைக் கண்டவுடன் குழந்தை நமஸ்காரம் செய்தது. சுவாமிகளும் அதனுடைய தெய்வீகத் தன்மையைப் புரிந்துக் கொண்டு இந்தக் குழந்தை இங்கேயே இருந்து எல்லாம் படிக்கட்டும் என்று சொல்லிவிட்டார். அன்றுமுதல் புருஷோத்தமன் காஞ்சி மடத்திலேயே வளர்ந்து வந்தாலும் தினமும் பெற்றோர்களை சந்தித்து நமஸ்காரம் செய்து ஆசிகளை பெறுவார். உபநயனம் வேதம் வேதாந்தம் இவைகளை திறம்படக் கற்றார். அனைத்தும் கற்ற பிறகு ராம நாம ஜபம் சிறந்தது என்று அறிந்தார். அன்று முதல் 1,08,000 நாம நாமத்தை ஜெபிப்பதாகச் சங்கல்பம் எடுத்துக் கொண்டு தினமும் ஜெபித்தார்.

காஞ்சி காமகோடி பீடத்தின் 58 ஆவது பீடாதிபதி விஸ்வாதிகேந்திர சரஸ்வதி சுவாமிகள் 1638 ஆம் ஆண்டு புருஷோத்தமனுக்கு ஸ்ரீ ஆத்ம போதேந்திர சரஸ்வதி என்று பெயர் கொடுத்து இளைய பீடாதிபதி ஆக்கினார். கபீர்தாஸ், துளசிதாஸ், மீரா பாய், ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மஹாபிரபு, ஸ்ரீ நாம தேவா, ஸ்ரீ ஏக்நாத் மற்றும் ஸ்ரீ சமர்த்த ராமதாஸ் ஆகியோரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி ராமா நாமத்தைப் பரப்பும்படி ஸ்ரீ போதேந்திராளுக்குக் கட்டளையிட்டார். போதேந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சி காமகோடி மடத்தின் 59 ஆவது பீடாதிபதி ஆனார். ஶ்ரீ ராம நாம பாராயணத்தின் பலனை சாதாரண மக்களும் அடைந்து உய்ய வேண்டும். அதுவே இந்த கலியுகத்தில் மோட்ச சாதனம் என்று மக்கள் அறிய வேண்டும் என்பதற்காக 1685 ஆம் ஆண்டில் காஞ்சி பீடத்தை தனது இளைய பீடாதிபதிக்கு விட்டுவிட்டு பீடத்தையும் துறந்து சந்நியாசியாக கிராமம் கிராமமாகச் சென்று நாம பிரசாரம் செய்து வந்தார். அவரது குருவின் ஆணையின்படி ராம நாம சித்தாந்தம் செய்து அது மோட்சத்தை கொடுக்கும் என்று சொல்லி அதற்கு ஆதாரமாக நாம பிரபாவத்தை நிரூபிக்கும் விதமாக எட்டு கிரந்தங்களை அவர் செய்துள்ளார். தஞ்சாவூரின் அருகே பல கிராமங்களை ராம நாம ஜெபம் செய்யும் கிராமங்களாகவும் மாற்றியிருந்தார்.

ஒரு சமயம் மன்னார் குடியின் அருகே உள்ள பெரம்பூர் என்ற கிராமத்தில் தங்கி இருந்தார் போதேந்திரர். அப்போது ஒருவர் இவரது தேஜசையும் காம்பீரத்தையும் கண்டு இவர் ஒரு உண்மையான மகாத்மா என்று உணர்ந்து வணங்கி நின்றார். நிமிர்ந்து பார்த்தார் சுவாமிகள். சுவாமிகள் எமது இல்லத்தில் உணவி சாப்பிட வேண்டும் என்றான். சுவாமிகள் அவரை ஏற இறங்கப் பார்த்தார். நான் எங்கும் உணவு சாப்பிட செல்வதில்லை. எமக்கு என்று விதிமுறைகளை வைத்திருக்கிறேன் என்றார். நீங்கள் உணவுவு சாப்பிட உறுதியாக வர வேண்டும். அதற்கு நான் என்ன செய்ய வேண்டுமோ சொல்லுங்கள் அப்படியே செய்கிறேன் என்றான். அதற்கு சுவாமிகள் நான் ராம நாம உணவுக்குத்தான் வருவேன் என்றார். புரியவில்லையே சுவாமி என்றான். ராமநாம ஜபத்தை செய்பவர்கள் வீட்டில் மட்டுமே உணவு சாப்பிட வேண்டும் என்று விதிமுறை வைத்திருக்கிறேன். நீ செய்வாயா என்றார். சுவாமிகள் நீங்கள் எனக்கு அந்த மந்திரத்தை உபதேசம் செய்யுங்கள் உறுதியாக ஜபம் செய்ய ஆரம்பித்து விடுகிறேன் என்றான்.

ராமநாம உபதேசம் அவருக்கு செய்துவிட்டு நாளை உனது வீட்டிற்கு உணவிற்கு வருகிறேன் என்று வாக்கு கொடுத்தார் சுவாமிகள். மறுநாள் ஒரு பெரிய சந்நியாசி உணவிற்கு வருகிறார் என்று உறவினர்கள் நண்பர்கள் என்று வீடு திருவிழா போல் காணப்பட்டது. சுவாமிகள் வந்ததும் பூர்ண கும்பம் கொடுத்து பூஜைகள் செய்தனர். பிறகு உணவிற்கு இலை போடப்பட்டது. சுவாமிகள் அமர்ந்ததும் அங்குள்ளவர்களை கவனித்தார். 3 வயது நிரம்பிய ஒரு சிறு குழந்தை தாயின் பின்னால் நின்று கொண்டு எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. சுவாமிகள் குழந்தைக்கும் ஒரு இலை போடுங்கள் குழந்தையும் எம்மோடு சாப்பிடட்டும் என்று சொல்லி விட்டுக் குழந்தையை இங்கே வா குழந்தாய் என்று அழைத்தார். குழந்தை எந்தச் சலனமும் இன்றி அவரைப் பார்த்துக் கொண்டிருந்தது. ஒன்று வர வேண்டும் அல்லது வரமாட்டேன் என்று சொல்ல வேண்டும். தலையையாவது அசைக்க வேண்டும். சலனமே இன்றிப் பார்த்துக் கொண்டிருந்த குழந்தையை ஒன்றும் புரியாமல் பார்த்துவிட்டு மீண்டும் இங்கே வா குழந்தாய் என்றழைத்தார் சுவாமிகள். அழைத்தவர் சுவாமிகளை வணங்கிவிட்டுச் சொன்னார். சுவாமி அவனுக்குக் காதும் கேக்காது. வாயும் பேசமாட்டான் அவனுக்கு தாங்கள் சொல்வது எதுவும் புரியாது என்றார். சுவாமிகள் கண்ணிலிருந்து கண்ணீர் ஆறாய்ப் பெருகியது. அதைக் கண்டதும் அழைத்தவர் சுவாமி நீங்கள் மகா ஞானி அனைத்தும் தெரிந்தவர் உங்களது கண்களில் இருந்து கண்ணீர் வரக் கூடாது. சந்நியாசி கண்ணீர் பூமியில் விழுந்தா பூமிக்கே ஆகாது. எங்க வினை நாங்க அனுபவிக்கறோம். தயவு செய்து உணவை சாப்பிடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

சுவாமிகள் அன்று காலைதான் ஒருவன் நாம நாமத்தைச் சொன்னாலும் கேட்டாலும் ஒரே பலன். எனவே நாமம் வாயில் வரா விட்டாலும் கூட பரவாயில்லை. யாராவது சொல்வதைக் கேட்டாலும் போதும். அந்த ஜீவனுக்கு நற்கதி நிச்சயம். காதுகளை பகவான் மூடி வைக்கவில்லை. எனவே யாரோ சொல்லும் நாமம் தானாய்க் காதில் விழுந்தாலும் போதும் என்று உபன்யாசம் செய்திருந்தார் சுவாமிகள். காதும் கேட்காது வாயும் பேசாது என்றால் தனது சித்தாந்தத்திலிருந்து இவனைப் போன்ற ஜீவன்கள் தப்பி விடுவார்களே அவர்களுக்கு நற்கதி கிட்டாமல் போய்விடுமோ என்று மிகவும் வருந்தி அந்த குழந்தைக்காக மானசீகமாக பிரார்த்தனை செய்தார் சுவாமிகள். அவருக்குள்ள நியமப்படி உணவை ஏழு கைப்படி மட்டும் சாப்பிட்டு கிளம்பிவிட்டார் சுவாமிகள். சுவாமிகளை வழி அனுப்புவதற்காக அவரோடு வீட்டிலிருந்தோர் அனைவரும் வீதி முனை வரை சென்றார்கள். வீட்டில் அந்தக் குழந்தை தனியாக விடப்பட்டான். குழந்தைக்கோ பசி வயிற்றைக் கிள்ளியது. காலையிலிருந்து சந்நியாசி உணவருந்த வருவதால் வேலைப்பணியில் அவனுக்கு யாரும் உணவு கொடுக்கவில்லை. சுவாமிகள் உணவு சாப்பிட்ட இலையில் அவர் 7 கைப்பிடி சாப்பிட்டது போக மீதி அத்தனையும் அப்படியே இருந்தன. பசியினால் குழந்தை இலையிலிருந்த பதார்த்தங்களை எடுத்து உண்ண ஆரம்பித்தான். சுவாமிகளை வழியனுப்பிவிட்டு வந்த பார்த்தவர்களுக்கு தாங்கள் பார்ப்பது கனவா நினைவா என்று ஒன்றும்‌ புரியவில்லை. அவர்கள் கண்ட அந்த அற்புத காட்சி. வீட்டின் கூடத்தில் அந்தக் குழந்தை இரண்டு கைகளையும் உயரத் தூக்கிக் கொண்டு நர்த்தனம் செய்து கொண்டே மதுரமான குரலில் ராம நாமத்தை இசைத்துக் கொண்டிருந்தான். இந்த சம்பவம் 1662 ஆம் ஆண்டில் நடந்தது. ஒரு உண்மையான ஞானி உண்ட அமுது அவரது ஸ்பரிசம் அவரது பிரார்த்தனை வாக்கு பார்வை அனைத்துமே மிகவும் புனிதமானவை. ஒருவருக்கு ஞானத்தை வழங்கவும் கர்ம வினைகளை முற்றிலும் அழித்து அகற்றவும் ஞானிகளுக்கு மகான்களுக்கும் சாத்தியம்.

போதேந்திரருக்குக் குழந்தைகள் என்றால் அளவில்லாத மகிழ்ச்சி. கோவிந்தபுரத்திற்கு அருகிலுள்ள காவேரியில் தினமும் நீச்சல் அடித்து சாகசங்களைச் செய்து காட்டிக் குழந்தைகளை மகிழ்விப்பார். ஒரு கோடைக்காலத்தில் 1692 ஆம் ஆண்டு பிரஜோத்பதி ஆண்டு புரட்டாசி மாத முழு நிலவு நாளில் போதேந்திரர் தஞ்சாவூர் அருகே உள்ள கோவிந்தபுரத்தில் காவேரி நதிக்கரையில் போதேந்திரர் ஆற்று மணலிலே ஒரு குழியைத் தோண்டி அதிலே அமர்ந்து கொண்டு சிறுவர்களைப் பார்த்து இதை மண்ணால் மூடிவிட்டு செல்லுங்கள். நாளை வந்து தோண்டிப் பாருங்கள். பிறகு நான் வருகிறேன் என்றார். குழந்தைகளும் விபரீதம் தெரியாமல் மண்ணைப் போட்டு மூடிவிட்டு சென்று விட்டார்கள். போதேந்திரரைக் காணவில்லை என்று ஊர் மக்கள் சொன்ன பிறகு தான் குழந்தைகள் அவர்களிடம் நடந்ததைச் சொன்னார்கள். குழந்தைகள் காட்டிய இடத்தை தேடி தோண்ட ஆரம்பித்தார்கள். அப்போது ஒரு அசரீரீ கேட்டது. நான் இங்குதான் மண்ணிலே ராம நாமத்தை ஜெபித்துக் கொண்டிருக்கிறேன். என்னைத் தொந்தரவு செய்ய வெண்டாம். இதற்கு மேலே ஒரு பிருந்தாவனம் அமைத்து ஆராதனை செய்யுங்கள் என்று ராம நாமத்திலே ஐக்கியமாகி விட்டார். இது அவருடைய ஜீவசமாதியாகும். சிறிது வருடத்தில் காவேரி வெள்ளத்தில் பராமரிப்பு இன்றி இந்த இடம் மறந்து மறைந்து போனது. 1803 ஆம் ஆண்டில் மருதநல்லூர் சத்குரு சுவாமிகள் இங்குள்ள நீரில் இருந்து ராம நாமம் ஒலிப்பதைக் கேட்டு தனது சீடரான சரபோஜி மன்னரிடம் சொல்லி நதியைத் திசை திருப்பச் செய்து அந்த இடத்தைக் கண்டுபிடித்தார். இன்றும் இந்த ஜீவசமாதிக்கு ஆராதனை நடந்து கொண்டிருக்கிறது. இப்போதும் ஸ்ரீ போதேந்திராள் அதிஷ்டானத்தில் சுவாமிகளின் ராம நாமம் தகுதியானவர்களுக்கு கேட்டுக் கொண்டே இருக்கிறது. இவர் எழுதிய பகவன்நாம ரசோதயம், பகவன்நாம ரஸார்ணவம், பகவன்நாம ரஸாயனம் போன்ற நூல்கள் புகழ் பெற்றவை.

பிரேமா பாய்

ஸ்ரீரங்கநாதரின் சன்னிதியில் அர்ச்சகராகப் பணியாற்றி வந்தவர் கிருஷ்ண பட்டர். இவரது இல்லத்தில் சில நாட்கள் தங்கியிருந்த புரந்தரதாசர் கிருஷ்ண பட்டரின் மகள் பிரேமாவுக்கு இசையை கற்றுக் கொடுத்தார். இதன் பின்னர் கர்நாடக சங்கீதத்தில் சிறந்து விளங்கிய பிரேமா கோயிலில் ஆழ்வார் பாசுரங்களைப் பாடி வந்தாள். அவள் பாடுவதைக் கேட்கும் அனைவரும் மெய் மறப்பார்கள். இந்த நிலையில் ஏழ்மை நிலையில் இருந்த கிருஷ்ணபட்டர் தனது மகளை தூரத்து உறவுக்காரப் பையன் ஒருவனுக்கு திருமணம் முடித்துக் கொடுத்தார். அவன் நல்லவன் இல்லை என்பதை தாமதமாக உணர்ந்தார் பட்டர். இதனால் அவர் மனம் தவித்தார். பிரேமா மனம் தளராமல் ஸ்ரீகிருஷ்ணரிடம் அளவற்ற பக்தியுடன் ராமாயணம் பாகவதம் ஆகியவற்றைத் தொடர்ந்து படித்து வந்தாள். அவளுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு ராமகிருஷ்ணன் எனப்பெயரிட்டு வளர்த்தாள். இந்த நிலையில் மது போதையில் காவிரி வெள்ளத்தில் சிக்கி இறந்தான் அவன் கணவன். மகளின் நிலை குறித்த கவலையால் மனம் உடைந்து போன கிருஷ்ணபட்டர் இறந்து போனார். கணவனையும் தந்தையையும் இழந்த பிரேமா ஸ்ரீரங்கத்தில் இருக்கப் பிடிக்காமல் குழந்தையுடன் வாரணாசிக்குச் சென்றாள். அங்கு தர்மசத்திரம் ஒன்றில் தொண்டாற்றி வந்தாள்.

காசியில் அனைவரும் அவளை பிரேமா பாய் என்றே அழைத்தனர். அப்போது அவளின் மகன் ராமகிருஷ்ணனுக்கு வயது பத்து. தமிழ் இந்தி ஆகிய மொழிகளில் சரளமாகப் பேசுவதில் திறன் பெற்றிருந்தான் அவன். தனது தாயிடம் கர்நாடக சங்கீதமும் கற்று வந்த ராமகிருஷ்ணன் உபன்யாசம் கலாட்சேபம் போன்றவற்றைக் கேட்டு ஸ்ரீகிருஷ்ண பக்தனாகவும் விளங்கினான். ஒருநாள் சத்திரத்துக்கு அடியார்கள் சிலர் வந்தனர். அவர்களை பக்தியுடன் வரவேற்றாள் பிரேமா பாய். இவர்களுக்கு உணவளித்து உபசரித்தால் கங்கைக் கரையில் தினமும் நடக்கும் பாகவத உபன்யாசத்தைக் கேட்க முடியாது. உபன்யாசத்திற்கு சென்றால் அடிவர்களை உபசரிக்க முடியாது. என்ன செய்வது? என்று தவித்தாள். சிறிது நேரம் யோசித்தவள். அடியவர்களுக்கு தாம் உணவளிக்கலாம். பாகவதம் கேட்க மகன் ராமகிருஷ்ணனை அனுப்பி விடலாம். பிறகு அவனிடம் விவரமாய் தாம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று முடிவு செய்தாள். அதன்படி ராமகிருஷ்ணனை பாகவதம் கேட்க அனுப்பினாள்.

உபன்யாசம் முடிந்து வீடு திரும்பிய ராமகிருஷ்ணனிடம் உபன்யாசத்தில் இன்று பவுராணிகர் என்ன சொன்னார்? என்று ஆவலுடன் கேட்டாள். அம்மா கிருஷ்ண பரமாத்மாவின் பிறப்பு வளர்ப்பு லீலைகள் ஆகியவற்றைப் பற்றிக் கூறும் தசம ஸ்கந்தம் பற்றி விளக்கினார். குழந்தை கண்ணன் புழுதியில் விளையாடியது வெண்ணெயைத் திருடி உண்டது யசோதா துரத்தியும் பிடிபடாமல் ஓடியது ஆகியவற்றை விவரித்தார். கோலைக் கையிலெடுத்து அடிக்கப் போவதாய் யசோதா பயமுறுத்துகிறாள். குழந்தைக் கண்ணன் அழத் தொடங்குகிறான். ஏதேனும் ஒரு வகையில் கண்ணனைத் தண்டிக்க எண்ணி அவனை உரலோடு பிணைத்துக் கட்டுகிறாள் யசோதா. ஆனால் குறும்புக்காரக் கண்ணனோ கட்டிய உரலையும் சேர்த்து இழுத்தபடி வீட்டின் பின்புறம் சென்று ரெட்டையாக நின்ற மருத மரங்களுக்கு இடையே புகுந்தான் என்று நிறுத்திவிட்டு உபன்யாசத்தில் இன்று இதைத்தான் சொன்னார் என்றான். இதைக் கேட்டு உணர்ச்சி வசப்பட்ட பிரேமாபாய் மெய் மறந்தாள். தான் கண்ணனின் காலத்தில் இருப்பதாகவே எண்ணிக் கொண்டாள். கண்ணா உன்னையா உரலில் கட்டிப் போட்டார்கள்? கயிறு இறுக்கி உன் வயிறு வலிக்குமே நீ மர இடுக்குகளில் நுழைந்து செல்லும் போது ஏதாவது பூச்சிகள் உன்னைக் கடித்தால் என்னாவது? என்னால் இதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. இப்போதே கயிறை அவிழ்த்து விடுகிறேன் என்றவாறு கங்கையை நோக்கி ஓடினாள்.

அம்மா அம்மா என்று கூவியபடி சிறுவன் ராமகிருஷ்ணனும் அவளது பக்தியைக் கண்டு வியந்த அடியவர்களும் அவளைப் பின்தொடர்ந்தனர். பிரேமா பாய் கங்கை நதியில் குதித்தாள். அவள் விழுந்த இடத்தில் இருந்து ஓர் ஒளிப் பிழம்பு விண்ணை நோக்கிச் சென்றது. ஜோதி வடிவாகச் செல்லும் பிரேமா பாயை அனைவரும் வணங்கினர். தந்தையைக் காவிரியிலும் தாயை கங்கையிலும் இழந்த ராமகிருஷ்ணன் தான் பிறந்த பூமியான ஸ்ரீரங்கத்துக்கு வந்தான். அங்கு அரங்கன் சன்னிதியில் கிருஷ்ண சைதன்ய மகாபிரபு பக்தர்களுடன் ஆடிப்பாடி ஆனந்த நிலையில் இருப்பதைக் கண்டு பரவசமுற்றான். நாடெங்கும் போய் பக்தியைப் பரப்பிய மகானான சைதன்ய மகாபிரபுவுடன் இணைந்து அவரைப் பின்தொடர்ந்தான். மொகாலய படையெடுப்பின் போது பெர்ஷியா நாட்டுக்குச் சென்று மறைந்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டபோது பெர்ஷியன் சங்கீதத்தைக் கற்றுத் தேறிய ராமகிருஷ்ணன் திரும்பி வந்ததும் குருவின் ஆணைப்படி பிருந்தாவனத்தை அடைந்து ஸ்ரீகிருஷ்ண நாம சங்கீர்த்தனம் பாகவத சேவை என்று தனது வாழ்நாளைக் கழித்தான். இந்த ராமகிருஷ்ணனே பிற்காலத்தில் தீட்சை பெற்று ஸ்வாமி ஹரிதாஸ் என்ற பெயரில் புகழ்பெற்றார். இவர் உருவாக்கியதே ஹிந்துஸ்தானி சங்கீதம். அக்பர் சபையில் ஆஸ்தான வித்வானாகத் திகழ்ந்த தான்சேன் இவரிடம் தான் சங்கீதம் பயின்றார்.

சுகந்த தூப தீர்த்தார்ய சுவாமிகள்

தஞ்சை மாவட்டம் அய்யம் பேட்டையில் ராமச்சந்திராபுரத்தில் 1551 ஆம் ஆண்டு பங்குனி மாதம் திருவோண நட்சத்திரத்தில் வேங்கடய்யர் பத்மாவதி தம்பதியர்க்கு மகனாகப் பிறந்தவர் தத்தாத்ரேயர். வேத பாராயணங்களை பாலகனாக இருந்த போதே கற்று தேர்ந்தார். பரமக்குடி வேதாந்த மடத்தின் ஆச்சாரியர் இலட்சுமண அய்யரிடம் அதர்வண வேதத்தை முழுமையாக பயின்றார். இவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சன்னதியில் தூபக்கால் ஏந்தி பெருமாளுக்கு தூப நித்ய கைங்கர்யம் செய்து வந்ததால் இவரது இயற்பெயர் மறைந்து சுகந்த தூப தீர்த்தார்ய சுவாமிகள் என்ற பெயர் நிலைத்தது. இவர் கும்பகோணம் மகாமக குளத்தை சுற்றியுள்ள 16 மண்டபங்களையும் கட்டியவர். இவரை மக்கள் ஐயன் என்று மரியாதையுடன் அழைப்பார்கள். இவரைப் போற்றி பெருமைப் படுத்தும் விதமாக ஐயன் பேட்டை (அய்யம்பேட்டை) என ஒரு ஊருக்கே பெயரிட்டு அழைத்தனர்.

இவர் வாழ்ந்த காலத்தில் தொடர்ந்து நான்கு ஆண்டு காலம் மழை பொழியாததால் கடும் வறட்சியைச் சந்தித்தது தஞ்சை பூமி. தஞ்சையை ஆண்ட அரசர் அச்சுதப்ப நாயக்கர் கவலையுடன் அரசவையைக் கூட்டி மழை வருவதற்கான யாகங்களை நடத்த வேண்டும் எனவும் அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள் என்று உத்தரவிட்டார். மிகப் பெரும் வேத விற்பன்னர்களை எல்லாம் வரவழைத்து யாகங்கள் தொடங்கப் பட்டு ஏழுநாட்கள் ஆன பிறகும் மழை வருவதற்கான அறிகுறிகளே இல்லை.
அப்போது தலைமை வேதவிற்பன்னர் அரசரிடம் சென்று திருவரங்கப் பெருமாளின் சன்னதியில் தத்தாத்ரேயர் என்கின்ற 20 வயது இளைஞர் ஒருவர் தினம்தோறும் தீப தூபங்கள் காட்டி பாடல்களைப் பாடி கைங்கர்யம் செய்து கொண்டிருக்கிறார். இந்த யாக குண்டத்திற்கு முன் அவரை வரவழைத்து பாடச் செய்தால் நம் நோக்கம் நிறைவேறும் என்று கூறினார். உடனே அதற்கான ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டார் மன்னர். புரோகிதர் குழு தத்தாத்ரேயரை அனுகி விபரத்தைச் சொல்லி யாகம் நடத்தும் இடத்திற்கு அழைத்தார்கள். அதற்கு அவர் மழைதானே வர வேண்டும் வரவைக்கிறேன் என்று சொல்லி யாகத்தில் வைக்கும் கலசம் போல் ஒரு கலசத்தை ஏற்பாடு செய்ய சொல்லி அந்த கும்ப கலசத்தை தலையில் வைத்துக் கொண்டு அரங்கனை நினைத்து காவிரி ஆற்றில் நின்று வருண ஜபம் செய்து காவிரி ஆற்றில் நின்ற நிலையில் மேகராகக் குறிஞ்சி ராகத்தில் அரங்கனை மனதில் நிறுத்தி வருணனை நோக்கி மனம் உருகிப் பாட ஆரம்பித்தார். காலை வேளையில் தொடங்கிய அந்த நிகழ்வை புரோகிதர்கள் உள்ளிட்ட மக்கள் திரண்டு வந்து பார்த்தார்கள். மாலைப் பொழுது வந்ததும் மேகக் கூட்டம் திரண்டது. மக்கள் மகிழ்ச்சியில் ஆரவரித்தார்கள். மழை பெய்யத் தொடங்கியதும் கரைக்கு வந்தார் தத்தாத்ரேயர். மழை மாமழையாக மாறி மூன்று நாட்கள் இடைவிடாது பெய்தது. தஞ்சையைச் சுற்றி உள்ள ஏரி குளம் கிணறு என அனைத்துமே மழை நீரில் நிரம்பியது. இனியும் மழை தொடர்ந்தால் நாட்டிற்கே கேடாக முடியம் என்று எண்ணிய மக்கள் மீண்டும் தத்தாத்ரேயரை வணங்கி மழை போதும் என்று கேட்டுக் கொண்டார்கள். தத்தாத்ரேயர் மீண்டும் பாடலைப் பாடி மழைப் பொழிவினை நிறைவு செய்தார்.

தஞ்சை மன்னர் தத்தாத்ரேயரை அழைத்து அரச மரியாதையைச் செய்து தங்கக்காசுகள் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை வழங்கினார். அனைத்தையும் புன்னகையுடன் மறுத்து அங்கிருந்து கிளம்பினார். அப்போது அரசர் தான் அணிந்திருந்த ரத்தின மாலையை அவரது கழுத்தில் போட்டு மறுக்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொண்டார். அவரது அன்புக் கட்டளைக்காக அதனை ஏற்றுக் கொண்ட தத்தாத்ரேயர் நேராக திருவரங்கக் கோயிலுக்கு வந்து மன்னர் அணிவித்த ரத்னமாலையை அரங்கனுக்கு அணிவிக்க அர்ச்சகரிடம் வழங்கினார். இதையறிந்த மன்னர் ஒருநாள் திருவரங்கக் கோயிலுக்கு வந்து என்னிடமிருந்து எந்தப் பொருளையும் பெற்றுக் கொள்ளாத தத்தாத்ரேயர் அவர்களுக்கு முதல் மரியாதையாக அதிகாலையில் வழங்கப்படும் பிரம்ம துளசி தீர்த்தத்தை வழங்க வேண்டும் என்றும் தத்தாத்ரேயர் காலத்திற்குப் பிறகு அதிகாலை வேளையில் அரங்கனின் விசுவரூப தரிசனத்திற்கு வரும் பக்தர்களில் அவருடைய வம்சத்தினர் யாரேனும் இருந்தால் அவர்களுக்குத்தான் முதல் தீர்த்தம் வழங்கப்பட வேண்டும் என்று பட்டயம் எழுதி மன்னர் ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகத்திற்கு வழங்கினார்.

தண்டு முனிவர்

தண்டு முனிவர் என்பவர் சிவபெருமானின் பக்தராகவும் நாட்டியத்தின் முதல் ஆசானாகவும் கருதப்படுகிறார். சிவபெருமானால் ஆடப்பட்ட தாண்டவங்கள் சிவ தாண்டவங்கள் என்று அழைக்கப்படுகின்றன. சிவபெருமான் தண்டு முனிவருக்கு நாட்டியத்தை கற்றுக் கொடுத்தார். தான் கற்ற நடனத்தை தண்டு முனிவர் பரத முனிவருக்கு கற்றுக் கொடுத்தார். தண்டு முனிவர் பரத முனிவருக்கு தாண்டவங்களை கற்பித்தார் என்று நாட்டிய சாத்திரத்தின் நாலாவது அத்தியாயமான தாண்டவ லட்சணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பரத முனிவர் நாட்டிய சாத்திரத்தினை சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் சமஸ்கிருத மொழியில் எழுதியுள்ளார். அதில் 36 அத்தியாயங்கள் உண்டு. முதல் அத்தியாயமும் இறுதியான 36ஆவது அத்தியாயமும் சுவையான செய்திகளைத் தருகின்றன. இதனால் பரதரின் பெயரைத் தாங்கி நாட்டியமானது பரத நாட்டியம் என்று அழைக்கப்படுகிறது. சிவன் நாட்டியத்தை தண்டு முனிவருக்கு கற்றுக் கொடுக்கும் இந்த சிற்பம் இருக்கும் இடம் மாமல்லபுரம்.

சங்கநிதி பதுமநிதி

பக்தர்கள் எவ்வளவு செல்வம் கேட்டாலும் அள்ளிக் கொடுக்கும் லட்சுமி தேவிக்கு உதவியாக சிவ பெருமானால் நியமிக்கப்பட்டவர் அழகாபுரிப் பட்டிணத்தைச் சேர்ந்த வைச்ரவணன். ஈஸ்வரன் பட்டம் பெற்ற இராவணனின் தம்பி. பல வருடங்கள் சிவபெருமானை நோக்கி கடும் தவம் செய்ததின் பலனாக சிவபெருமானின் அருளைப் பெற்றார். லட்சுமி தேவியின் செல்வங்களை பாதுகாக்கும் காவலராக சிவபெருமானால் நியக்கப்பட்டு லட்சுமி தேவியால் குபேர பட்டம் பெற்றார். சிறந்த சிவபக்தர். ஈசனின் கட்டளைப்படியும் லட்சுமி தேவியின் ஆசியுடனும் வைச்ரவணன் ஒரு நல்ல நாளில் செல்வத்தை நிர்வகிக்கும் குபேர பதவி ஏற்றார். அதன்பின் இன்றளவும் அவர் பெயர் வைச்ரவணன் என்பது மாறி குபேரன் என்றே ஆயிற்று. குபேரப் பதவியை அடைந்ததனால் அவருக்கு திருமகளின் வெண்சங்கும் கலைமகளின் வெண்தாமரையும் வரமாகக் கிடைத்தன. அந்த இரண்டையும் இரு தேவகணங்களாக்கி தன்னுடைய நிர்வாகப் பணிக்கு துணையாக வைத்துக் கொண்டார் குபேரன். வெண்சங்காய் வந்த தேவகணத்திற்குப் பெயர் சங்கநிதி. செல்வத்தை அருள்பவர். வெண்தாமரையாய் வந்த தேவகணத்திற்குப் பெயர் பத்மநிதி. அறிவினை அருள்பவர்.

ஒன்பது வகையான நிதிகளுள் (நவ நிதிகள்) சங்க நிதிக்குரிய தெய்வமாக சங்க நிதி உள்ளார். இவரை சங்க லட்சுமி எனவும் அழைக்கின்றனர். சங்க நிதி தன்னுடைய கைகளில் செல்வச் செழிப்பினைக் குறிக்கும் அடையாளமான வலம்புரிச் சங்கினை வைத்துள்ளார். கோயில்களின் வாயில்கள் சிலவற்றில் ஒருபுறம் சங்கநிதி புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் பதுமநிதி புடைப்புச் சிற்பம் உள்ளது.

சங்கம் பதுமம் மகாபதுமம் மகரம் கச்சபம் முகுந்தம் குந்தம் நீலம் வரம் ஆகியன ஒன்பது நிதிகளாகும். இவற்றை குபேர சம்பத்துகள் என அழைக்கின்றனர். இந்த ஒன்பது நிதிகளில் சங்கநிதி மற்றும் பதும நிதி இரண்டிற்கு மட்டுமே உருவங்கள் உள்ளன. சங்கநிதி பதுமநிதி என இருநிதிகளும் எப்போதுமே ஒருசேர இருக்கின்றனர். பெரும்பாலும் எல்லா சிவன் கோவில்களிலுமே இந்த இருவரின் சிற்பங்களும் கோபுரத்திலோ சற்று உயரமான இடத்திலோ அமைக்கப்பட்டிருக்கும். அறிவுச் செல்வமாக இருந்தாலும் பொருள் செல்வமாக இருந்தாலும் கேட்டதை கொடுப்பவர் ஈசன். கோவிலுக்கு வந்து கேட்கும் பக்தர்களின் உணர்வுகளை மேலிருந்து கவனித்து பார்த்து பக்தரின் நடை உடை பாவணைகளை ஆராய்ந்து பக்தர்களுக்கு இறைவன் மீது உள்ள நம்பிக்கையையும் அந்த பக்தரின் தேவையையும் அளவிட்டு நிர்ணயம் செய்து எவ்வளவு அறிவுச் செல்வத்தையும் எவ்வளவு பொருள் செல்வத்தையும் பக்தர்களுக்கு அளிக்கலாம் என முடிவு செய்து குபேரனிடம் தருவதுதான் இவர்கள் பணி. அதன்பின் ஈசனின் வரப்படி அந்த பக்தர்களுககு செல்வங்களை அளிக்க வேண்டியதுதான் குபேரரின் பணி.

இவர்களின் முக்கியத்துவம் உணர்ந்துதான் கருவூர்த் தேவர் தன்னுடைய பிரியமான இராஜராஜ சோழனை, எப்போது பெரிய கோவிலுக்குச் சென்றாலும் மதிலின் வடமேற்கே உள்ள அணுக்கன் வாயில் வழியாக உள்ளே செல்லச் சொல்வாராம். அந்த வாயிலில் சங்கநிதி பத்மநிதி சிற்பங்கள் தவிர வேறு எந்த தெய்வத்தின் சிற்பமும் காண முடியாது. இதன் காரணமாகத்தான் கோவிலுக்கு வரும்போது குளித்து விட்டு தூய ஆடை அணிந்து வம்பு தும்பு பேசாமல் இறை சிந்தனையுடன் பக்தியுடன் கோவிலை வலம் வரவேண்டும் என்று முன்னோர்கள் வரையறை செய்திருந்தனர்.

அக்கா மகாதேவி

அக்கா மகாதேவி 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு கன்னடப் பெண் துறவி மற்றும் கவிஞர். 1150 ஆம் ஆண்டு முதல் 1175 வரை வாழ்ந்த அவர் ஷிமகோடா மாவட்டத்தில் உள்ள பானவாசி நகரின் அருகில் இருந்த உடுதாடி எனும் கிராமத்தில் அன்னம்மா பிரபு மற்றும் கின்னாரி பொம்மையா என்பவர்களுக்கு மகளாகப் பிறந்தவர். இருவரும் சிவநெறிப்படி மகளை வளர்த்தனர். சிவவழிபாடு இவர் வாழ்க்கைநெறி ஆகியது. அவர் தனது இளமைப் பருவத்தை வழிபாட்டில் கழித்தார். விளையாட்டுக்களில் அதிக கவனம் செலுத்தியது இல்லை. மாறாக ஏதாவது எழுதிக் கொண்டே இருப்பார். இளம் வயதிலேயே அவர் ஆன்மீக நாட்டம் கொண்டவராகவே இருந்தார். சிவகாமாச்சாரியார் என்பவரிடம் கல்வி பயின்ற அக்கா மகாதேவி சிறு வயதிலேயே கவிதைகளை எழுதுவார். சிவலிங்கத்தை வணங்கித் துதிப்பார். ஸ்ரீ சைலம் என்னும் ஊரைப் பற்றியும் அங்கு உறையும் இறைவன் சென்ன மல்லிகார்ச்சுனனைப் பற்றி கேள்விப்பட்டார். பின்பு சென்ன மல்லிகார்ஜுனாவை அதிகம் ஆராதித்துக் கொண்டே இருப்பார். பிறந்ததில் இருந்து இவரின் வளர்ப்பு பற்றி அதிக செய்திகள் கிடைக்கவில்லை என்றாலும் அவர் தன்னுடைய தாயாரின் அரவணைப்பில்தான் பெரிய பெண்ணாகும் வரை வளர்ந்ததாக தெரிகின்றது. அக்கா மகாதேவி சில கன்னட புராணக் கதைகளில் அவரைப் பற்றிக் குறிப்பிடுகையில் அவர் பார்வதியின் ஒரு ரூபமே எனக் கூறி இருந்தாலும் அவரது சன்யாச வாழ்க்கைக்கு முன்னர் வாழ்ந்த வாழ்கை வரலாறு குறித்த செய்திகள் எதுவும் எழுத்து வடிவில் எழுதி வைக்கப்படவில்லை. அவர் சன்யாசி ஆகி வீர சைவர்கள் குழுவில் சேர்ந்த அவரைப் பற்றிய செய்திகள் அனைத்துமே வாய் மொழிக் கதைகளாகவே இருந்து உள்ளன.

அக்கா மகாதேவி பெரிய பெண்ணானதும் அவருடைய பெற்றோர்கள் அவளுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார்கள். ஆனால் அதை அவள் ஏற்கவில்லை. அவள் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கவே விரும்பினாள். அந்த ஊரில் இருந்த தனவந்தர் ஒருவர் அவள் மீது ஆசை கொண்டு அவளை மணக்க விரும்பினார். அவளுடைய பெற்றோர்களும் அவருடன் அவளை திருமணம் செய்து வைக்க விரும்பினார்கள். ஆனால் அக்க மகாதேவி அதை ஏற்கவில்லை. தன்னுடைய மானசீகக் கணவர் சென்ன மல்லிகார்ஜுனாதான் என்றே உறுதியாகக் கூறினாள். தன்னுடைய பெற்றோர்களிடம் மீரா எப்படி கிருஷ்ணரையே தன்னுடையக் கணவராக ஏற்று இருந்தாரோ அப்படித்தான் தனது கணவர் சென்னமல்லிகார்ஜுனாதான் என்றே அவர் கூறி வந்துள்ளார்.

அந்நாளில் அவ்வூரையாண்ட கெளசிகன் என்ற மன்னன் உலாப் போகும்போது அக்கா மகாதேவியைக் கண்டு அவள் அழகில் மயங்கி மணம் செய்து கொள்ள விரும்பினான். அரசனிடம் இந்த உடம்பு மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் பாத்திரம். எலும்புகளினால் செய்யப்பட்ட ஒரு பெட்டி. இது சீழ் மற்றும் துர்நாற்றம் கொண்டது. இதை ஏன் விரும்புகிறீர்கள் இறைவனை நினையுங்கள் என்று அறிவுறை கூறினாள். இதனை கண்டு கொள்ளாத அரசன் அவள் மணத்துக்கு ஒப்புக் கொள்ளாவிடில் பெற்றோர் உயிரிழக்க நேரிடும் என்று மிரட்டினான். அதனால் சில நிபந்ததனைகளுடன் அக்கா மகாதேவி அரசனை மணக்க ஒப்புக் கொண்டார். தம் வழிபட்டுக்குத் தடை விதிக்கக் கூடாதென்றும் தடை ஏற்படுமானால் மூன்று முறை பொறுத்துக் கொள்வேன். அதன் பின் உங்களை விட்டு பிரிந்து விடுவேன் என்று நிபந்தனை விதித்தாள். அரசன் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள திருமணம் நிறைவேறியது. ஆனால் அக்கட்டுப்பாட்டின்படி அரசனால் நடக்க முடியவில்லை. எனவே அக்கா மகாதேவி அரண்மனையை விட்டு வெளியேறினார். கெளசிகன் தொட்ட ஆடைகளையும் களைந்துவிட்டு கூந்தல் உடலினை மறைக்கக் கலியாண நகரம் சேர்ந்தார். வீட்டை விட்டு வெளியேறும் முன்னர் தான் ஒரு சன்யாசினியாக போக விரும்புவதாக தன்னுடைய பெற்றோர்களிடம் கூறினார். அவர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தாலும் அவளை அவர்களால் தடுக்க முடியவில்லை. இளம் வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறியவர் பல இடங்களிலும் சுற்றித் திரிந்தபடி சிவபெருமானின் பெருமைகளை பரப்பி வந்தார். பசவண்ணர் முதலிய வீரசைவ அடியார்கள் உள்ள அனுபவ மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார்.

மகாதேவி நிர்வாணமாக வந்தபோது ​​​​அவளை மனநலம் பாதிக்கப்பட்டவரோ என்று மிகவும் சந்தேகத்துடன் வரவேற்றார்கள். அப்போதைய வீரசைவத்தின் தலைவரான அல்லாமா பிரபு இளமை மலரும் பெண்ணே ஏன் இங்கு வந்தாய்? உங்கள் பெற்றோரைப்பற்றி அல்லது கணவரைப்பற்றி சொல். இல்லையென்றால் இங்கு அமர்ந்து பிரார்த்தனை செய்துவிட்டு போய்விடுங்கள் என்றார். மகாதேவி பதிலளித்தாள். இந்த உலகில் உள்ள அனைவருமே என்னுடைய பெற்றோர்கள்தான். ஒருவருக்கு ஒருவர் என்று எனக்கு கணவனாக சேர்ந்தவர் சென்ன மல்லிகார்ஜுனாவுடன்தான். அனைத்து நட்சத்திரங்களும் கோள்களும் பார்த்துக் கொண்டே இருக்க என்னுடைய குருநாதர் வந்து என் கையைப் பற்றிக் கொண்டார். லிங்கமான சிவனே மணமகனாகியது. நானோ அங்கு மணமகள் ஆனேன். ஆகவே என் கணவர் சென்ன மல்லிகார்ஜுனா. அவரை தவிர எனக்கு இந்த உலகில் வேறு எந்த உறவும் இல்லை என்றார். அல்லாமா பிரபு அவளை நீண்ட நேரம் விசாரித்து பின்பு சன்யாசி என்று ஒப்புக் கொண்டார். உடல் தோற்றத்தில் இவள் பெண் ஆனால் இவளின் மனம் கடவுளுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று அனைத்து வீரசைவர்களும் மகாதேவியின் பெருமையை அறிவித்தார். அல்லாமா பிரபுவின் வழிகாட்டுதலின் கீழ் அக்கா மகாதேவி தனது தவங்களை தொடர்ந்தார். அங்கு உள்ள சன்யாசிகளுடன் தம் இறை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

அக்கா மகாதேவியின் பக்தியைக் கண்ட வீர சைவ துறவிகளான பசவண்ணா சென்ன பசவண்ணா அல்லமா பிரபு கென்னாரி பொம்மையா போன்றவர்கள் அவளை புகழ்ந்து எழுதி உள்ளார்கள். அக்கா மகாதேவி தன்னைப் பற்றிக் கூறிக் கொள்கையில் தன்னுடைய வெளித் தோற்றம் மட்டுமே பெண் இனத்தை சேர்ந்தது. ஆனால் தன்னுடைய ஆத்மாவும் தானும் சிவனை சேர்ந்தவள் என்றே கூறிக் கொண்டார். ஒரு முறை அக்கா மகாதேவி ஒரு கூட்டத்தில் அல்லமா பிரபுவின் ஆன்மீகக் கேள்விகளுக்கு எல்லாம் சற்றும் தாமதிக்காமல் சரியான பதில் தந்ததைக் கண்டவர்கள் அவரை அக்கா என அழைக்கலாயினர். மகாதேவி என்ற பெயர் பின்பு அக்கா மகாதேவி என்று அழைக்கப்பட்டார். வீர சைவ நெறியைக் கடைப்பிடித்த அக்கா மகாதேவியின் பாசுரங்கள் கன்னட மொழியில் தமக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்தன. வசனா எனப்படும் முறையில் எழுதப்பட்ட அக்கா மகாதேவியின் பாசுரங்கள் கன்னட பெரும் கவிகளான பசவன்னா சென்னா பசவன்னா கின்னாரி பொம்மையா சித்தாராமைய்யா அல்லமாபிரபு தாசிமைய்யா ஆகியோரின் பாசுரங்களை ஒத்தவையாக இருந்தன. இவர் மொத்தம் 430 வசனா பாசுரங்களை இயற்றினார். சிவனின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட அக்கா மகாதேவி அவரையே தனது உளமார்ந்த கணவனாகப் பாவித்துக் கொண்டார்.

அக்கா மகாதேவி சன்யாசினியாக மாறிய அவர் ஆடைகள் அணியாத நிர்வாண நிலையிலேயே இருந்தார். கடவுளின் அருளினால் அவளுடைய உடம்பு முழுவதையுமே நீண்டு வளர்ந்து இருந்த அடத்தியான தலைமுடி ஒரு உடுப்பு போல மறைத்து வைத்தே இருந்தது என்பதே அவர் எந்த அளவுக்கு தெய்வீக சக்தி பெற்று இருந்தார் என்பதை விளக்கும். அக்கா மகாதேவி பார்வதியின் ஒரு அவதாரம் என்றும் சாப விமோசனம் அவர் பூமியில் வந்து பிறந்து இருந்தார் எனவும் ஒரு கிராமிய கதையும் உள்ளது.

அக்கா மகாதேவி 12 ஆம் நூற்றாண்டில் பெண்களின் விடுதலையில் பெரும் பங்காற்றினார். அங்கும் இங்கும் நடந்த ஆன்மீக விவாதங்களில் கலந்து கொண்டு தன தரப்பு வாதங்களை ஆன்மீகத்தின் பக்கம் எடுத்து உரைத்து ஆன்மீகப் பாதைக்கு வலு சேர்த்தார். பல இடங்களிலும் சுற்றிக் கொண்டு இருந்தவர் சென்ன மல்லிகார்ஜுனாவை போற்றித் துதித்த வண்ணமே இருந்தார். ஸ்ரீசைலம் பகுதியில் சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவில் இருந்த சென்னமல்லிகார்ஜுனா ஆலயம் இருந்த காட்டுக்குள் சென்று அங்கிருந்த குகையில் தங்கி தவம் செய்தவாறு தனிமையிலேயே இருந்தார். அங்கு சில காலம் இருந்தப் பின் அவர் பானவாசிக்கே வந்து தங்கினார். அவர் புகழ் கன்னட நாடெங்கும் பரவியது. அந்த குகை தற்போது அக்கா மகாதேவி குகை எனப்படுகின்றது. அவருடைய முக்கியமான பணிகளில் ஒன்றாக ஜாதி பேதங்களை உடைப்பது. உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதத்தை ஒழிப்பதுமாக இருந்தது. ஒரு பெண்ணாக இருந்து அவர் அவற்றை பெருமையுடன் அனைத்து எதிர்ப்புக்களையும் தாண்டி செய்துள்ளார். அவர் 400 க்கும் மேற்பட்ட கவிதைகளை இறைவன் மீது இயற்றி உள்ளார்.

சென்ன மல்லிகார்ஜுனா பற்றிய அவரின் கவிதை:

அம்மா கேள் நான் அவரை நேசிக்கின்றேன்
அவர் இந்த உலகில் உள்ளவர்களில் ஒருவர் மட்டுமே அவர்
அவருக்கு இறப்பும் இல்லை பிறப்பும் இல்லை
அவருக்கு ஜாதியோ பேதமோ ஒன்றும் இல்லை
அவர் எங்கும் நிறைந்தவர் உருவமற்றவர் மாறாதவர்
நம் எண்ணத்திற்கும் அப்பாற்பட்ட அழகைக் கொண்டவர்
இந்த உலகில் உள்ள அனைத்துமே முடிவாக அழிந்து விடுபவை
எனக்கு அவர்களில் ஒருவரும் வேண்டாம்
என்னுடைய நாயகனாக என்றுமே இருக்க உள்ளவர்
ஒன்றே ஒருவரான சென்ன மல்லிகார்ஜுனா மட்டுமே.

பிச்சைப் பாத்திரத்தில் உணவு போட கிராமங்களே உள்ளன
தாகம் எடுத்தால் குடிப்பதற்கு கிணறுகளும் குளங்களும் உள்ளன
படுத்து உறங்கவோ பாழடைந்த ஆலயங்களும் உள்ளன
ஆனால் என்னுடைய இதயத்துக்கு துணை இருக்க
சென்னமல்லிகார்ஜுனா மட்டுமே இருக்கின்றார்.

தன்னுடைய நிர்வாண நிலையைப் பற்றி எழுதிய ஒரு கவிதை இது

இந்த உலகமே ஆண்டவனின் கண்களாக உள்ள போது
அவர் இந்த உலகில் உள்ள அனைத்தையும் பார்த்துக் கொண்டே உள்ள போது
நீ உன்னிடம் உள்ள எதை நீ அவரிடம் மறைக்க நினைக்கின்றாய்.

பட்டு மற்றும் நகைகளின் மினுமினுப்பின் கீழ் என்னை என்ன மறைக்க விரும்புகிறீர்கள்?
முட்டாள்கள் நான் மல்லிகைப் பெருமானின் காலை ஒளியை உடையாக உடுத்தும் போது ​என்னால் வெட்கப்பட முடியாது.

இறைவனை அடைய எண்ணம் கொண்டவர்களுக்கு இவரின் அறிவுரைகள்:

அகந்தை கூடாது. பசிக்கும் போது பிச்சை எடுத்து உண்ண வேண்டும். ஏரி குளங்களில் உள்ள நீரைக் குடித்துக் கோயில்களில் படுத்து உறங்க வேண்டும். மாயை உலகம் என்ற வடிவத்தில் எல்லோரையும் மயக்குகிறது. இதிலிருந்து விடுபட ஒரு குருவை அணுக வேண்டும். குருவே உய்யும் நெறி காட்டுவார்.

வீரசைவர்களால் 20000 க்கும் மேற்பட்ட கவிததைகள் இயற்றப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 300 அக்கா மகாதேவி இயற்றியுள்ளார். இன்றைய ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீ சைலத்தில் இறைப் பேரொளியுடன் கலந்து மகாசமாதியாகிவிட்டதாக நம்பப்படுகின்றது.

குமர குருபரர்

தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் திருவைகுண்டம் என்னும் ஊரில் 17 ஆம் நூற்றாண்டில் சைவ வெள்ளாளர் குலத்தில் சண்முக சிகாமணி கவிராயர் சிவகாமி சுந்தரி என்ற தம்பதியர் வாழ்ந்து வந்தனர். நீண்ட நாட்களாக குழந்தையில்லாத இத்தம்பதியர் கந்தசஷ்டி விரதமிருந்து ஒரு ஆண் குழந்தையைப் பெற்றனர். குழந்தைக்கு குமரகுருபரன் என்று வைத்தனர். பிறந்ததில் இருந்து குழந்தைக்கு பேச்சு வரவில்லை. கவலையடைந்த பெற்றோர் குழந்தை முருகன் கொடுத்த வரம். அவனால் குழந்தைக்கு பேசும் ஆற்றலை அந்த முருகன்தான் தர முடியும் என்று முடிவு செய்து திருச்செந்தூர் சென்று விரதம் இருந்தார்கள். முருகனை வழிபட்டு ஒருவேளை உப்பில்லாத உணவு சாப்பிட்டு 40 நாள் விரதமிருந்தனர். குருபரனிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. வேதனை மிகுந்த பெற்றோர் குழந்தை பேசும் வரை கோயிலை விட்டு செல்லக் கூடாது என்று முடிவோடு இருந்தார்கள். 45 வது நாள் மாலையில் கோவிலுக்குள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த போது குமரகுருபரன் வாய் திறந்து ஏதோ பேச முற்பட்டான். பெற்றோர்கள் கூர்ந்து கேட்க தெளிவில்லாமல் ஏதோ சில சொற்களை சொன்னான். அடுத்த சில நொடிகளில் குமரகுருபரன் கடும் மழை பொழிவது போல முருகனைப் பற்றி கவிதை மழை பொழிந்தான். குழந்தை பேசமாட்டானா என ஏங்கியிருந்த பெற்றோர் வாயடைத்து நிற்க கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களும் இந்த அதிசயம் கண்டு திகைத்து நின்றனர். குமரகுருபரன் பாடிய பாடல் தொகுப்பே கந்தர் கலிவெண்பா ஆகும். இதுவே குமரகுருபரரின் முதல் நூல் ஆகும். சரவணபவ என்ற மந்திரத்தின் மகிமையை வெண்பாக்களாக பாடியிருந்தார் குருபரர். திருச்செந்தூரில் அவர் இருந்த போது தன் குருவைக் கண்டவுடன் தன்னால் சரியாகப் பேச இயலாத நிலை ஏற்படும் என்கிற அசரீரி ஒலியினைக் கேட்டார். சில வருடங்களுக்குப் பிறகு தருமபுரம் ஆதீனத்தில் உள்ள மாசிலாமணி தேசிகர் என்பவரிடம் சீடராக இருந்தார். அங்குச் சைவ சித்தாந்தம் பயின்றார்.

குமரகுருபரர் தனது இளம் வயதிலேயே தன் குருவைக் காணும் நோக்கத்தில் கடவுளை அறியும் பொருட்டு தன் குருவைத் தேடி பெற்றோர் ஆசியுடன் தல யாத்திரை புறப்பட்டார். ஒருமுறை குமரகுருபரர் மதுரை மீனாட்சி கோயிலுக்கு வந்தார். மீனாட்சி சன்னதியின் முன் நின்று மீனாட்சி அன்னையை சிறு குழந்தையாக பாவித்து அவளது அழகு அருள் ஆற்றல் திருவிளையாடல்கள் அனைத்தையும் மீனாட்சி பிள்ளைத்தமிழ் பாடலாக பாடினார். அந்நாளில் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரின் கனவில் மீனாட்சி தோன்றி மன்னா என் செல்லக் குழந்தை குமரகுருபரன் மதுரை வந்துள்ளான். அவன் என்மீது பாடிய நூலை யாம் கேட்டு ஆனந்தமடைய ஏற்பாடு செய்க என்று பணித்தாள். உடனே மன்னர் குமரகுருபரர் தங்கியிருந்த இடத்திற்கு சென்று அவர் பாதம் பணிந்து அம்மனின் விருப்பத்தை கூறினார். கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் நூல் அரங்கேற்றத்திற்கு ஏற்பாடு செய்தார். புலவர்கள் எல்லாம் கூடியிருக்க மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் அரங்கேறி கொண்டிருந்தது. அப்போது கோயில் தலைமை அர்ச்சகரின் மகள் அங்கு வந்து மன்னரின் மடியில் உரிமையுடன் அமர்ந்து குருபரர் பாடுவதைக் கேட்டு மகிழ்ந்தாள். அரங்கேற்றம் முடிந்ததும் சிறுமி உரிமையுடன் மன்னரின் கழுத்திலிருந்த மணிமாலையை கழற்றி குருபரரின் கழுத்தில் அணிவித்தாள். பின் மூலஸ்தானத்தை நோக்கி நடந்து மறைந்தாள். அதன் பின்தான் வந்தது மீனாட்சி என அனைவருக்கும் தெரிந்தது. மீனாட்சி அம்மனைப் போற்றி மதுரைக் கலம்பகம் மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் நீதி நெறி விளக்கம் போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார். பின்னர் திருவாரூர் சென்று அங்குள்ள தியாகராச பெருமானைப் போற்றித் திருவாரூர் நான்மணி மாலை என்னும் நூலை இயற்றினார்.

குமரகுருபரர் திருவாரூரிலிருந்து தருமபுரத்திற்குப் பயணப்பட்டார். தருமபுரத்தில் பாரம்பரிய திருக்கயிலாய பரம்பரையான தருமபுர ஆதீன சைவ மடம் இருந்தது. அம்மடத்தை துறவி மாசிலாமணி தேசிகர் நிர்வகித்து வந்தார். குமரகுருபரர் அங்குச் சென்று அவரை வணங்கினார். அப்போது மாசிலாமணி தேசிகர் குமரகுருபரரிடம் பெரிய புராணத்தில் வரும் ஐந்து பேரறிவும் கண்களே கொல்லா எனத் தொடங்கும் பாடலின் சிறப்பம்சத்தை விளக்குமாறு கூறினார். அப் பாடலானது தில்லையில் உறையும் கடவுள் சிவபெருமானின் நாட்டியத்தைக் கண்டு மெய்யுருகி நின்ற சுந்தரமூர்த்தி நாயனாரின் நிலையைச் சொல்வதாகும். சேக்கிழார் அந்த நிகழ்ச்சியை அழகாகப் பெரிய புராணத்தில் விவரித்திருப்பார். யாராலும் விளக்க முடியாத இந்த பாடலுக்கு விளக்கம் சொல்லுமாறு கேட்டதும் வாயடைத்து நின்றார் குமரகுருபரர். தான் தேடி வந்த குரு மாசிலாமணி தேசிகர்தான் எனப் புரிந்து கொண்டு அவரைச் சரணடைந்தார். அக்காலத்தில் முகலாய சாம்ராஜ்யத்தின் கீழ் இந்து மதம் நசுக்கப்படுவதை மாசிலாமணிதேசிகர் உணர்ந்திருந்தார். குமாரகுருபாரரின் எதிர் காலத்தை உணர்ந்த அவர் காசி (வாரணாசி) யாத்திரை சென்று திரும்பி வரவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் குமரகுருபரரை சீடராக இருக்க ஒப்புக் கொண்டு குமரகுருபரரைத் துறவறம் மேற்கொள்ளச் செய்தார்.

குமரகுருபரர் தனது குருவின் ஆணைப்படி காசிக்குச் சென்று சைவ சமயத்தைப் பரப்பினார். அங்குள்ள கேதாரேஸ்வர் கோவிலைைப் புதுப்பித்தார். காசியிலுள்ள விசுவநாதர் ஆலயம் இஸ்லாமியர்களின் வசமிருந்தது. பூஜை எதுவும் நடைபெறாமல் பூட்டிக் கிடந்தது. காசி தேசத்தை ஆண்ட நவாபிடம் போய் கோயிலை தம்மிடம் தர வேண்டுமென்று குமரகுருபரர் வேண்டுகோள் விடுத்தார். சிம்மாசனத்தில் இருந்த நவாப் அவருக்கு ஆசனம் தராமல் நிற்க வைத்துப் பேசினார். மொழி பெயர்ப்பாளர்கள் மூலம் குமரகுருபரர் என்ன சொல்கிறார் என்று புரிந்து கொண்டார். புரிந்த பின்னும் அகம்பாவத்துடன் சிரித்தார். முதியவரே நீர் என்ன சொல்கின்றீர்கள் என்று எனக்கு விளங்கவில்லை. ஏதோ தானம் கேட்கின்றீர்கள் என்பது தெரிகிறது. ஆனால் என்ன தானம் என்பது தெரியவில்லை. எனது மொழியில் கேட்டால் அல்லவா எனக்குப் புரியும். என் மொழியில் கேளுங்கள் தருகிறேன் சொல்லிவிட்டு எழுந்து போனார். அந்த நவாபின் சபை குமரகுருபரரைப் பார்த்துச் சிரித்தது. குமரகுருபரரும் சிரித்தார்.

மறுநாள் விடிந்தது. எங்கே அந்த மதுரை கிழவர் என்று நவாப் விசாரித்தார். அவர் அரபி படிக்க போயிருக்கிறார் என்று ஒருவர் சொல்ல சபை சிரித்தது. வாசலில் சிங்கத்தின் கர்ஜனை கேட்டது. எல்லோரும் திடுக்கிட்டுத் திரும்பினார்கள். பிடரியும் கோரைப் பற்களும் சிவந்த கண்களுமாய் ஒரு முதிர்ந்த ஆண் சிங்கம் சபைக்குள் நுழைந்தது. குமரகுருபரர் அந்த சிங்கத்தின் மீது இரண்டு கால்களையும் தொங்கவிட்டு அதன் பிடரியைப் பிடித்து அமர்ந்திருந்தார். ஆண் சிங்கத்தின் மேல் அமர்ந்த ஆண் சிங்கம் போல் காட்சியளித்தார். அவர் நரைத்த தலைமுடியும் தலைப்பாகையும் வெள்ளை வெளேர் என்று வயிறு வரை நீண்ட தாடியும் இறையை உணர்ந்த உறுதியான முகமும் போகமே அறியாது கடுமையான பிரும்மச்சரியத்தில் இருக்கும் கட்டுக்குலையாத உடலும் அவரை சிங்கம்போல் காட்டின. அந்த ஆண்சிங்கத்தை தொடர்ந்து மூன்று பெண் சிங்கங்களும் அதன் குட்டிகளும் வந்தன. நவாபின் சபையில் இருந்தவர்கள் பலர் கலைந்து ஓடினார்கள். பலர் தனது ஆசனத்தில் இருந்து காலைத் தூக்கிக் கொண்டார்கள். நவாப் வாளை உருவிக் கொண்டு பதட்டத்துடன் நின்றான். என்ன இது என்று கத்தினான். நேற்று நீர் எமக்கு அமர ஆசனம் தரவில்லை. எனவே ஆசனத்தை கையோடு எடுத்து வந்தோம் என்றார். இதுவா ஆசனம் இது சிங்கமல்லவா இது சிங்கம்தான். இதன் மீது நான் அமர்ந்திருப்பதால் இது என் ஆசனம். என் சிம்மாசனம். உனது ஆசனத்திலும் சிங்கம் இருக்கிறது. ஆனால் பொம்மைச் சிங்கம். பொம்மையில் அமர்ந்திருக்கிற பொம்மை நீ. உயிர் மீது அமர்ந்திருக்கிற உயிர் நான். உனக்கு நான் சொல்வது புரிகிறதா என்றார்.

சிங்கம் ஒன்று பாய்ந்து நவாபுக்கு அருகே சென்றது. நவாப் கத்தியைக் கீழே போட்டுவிட்டு பயத்தில் அலறினான். ஒரு பெண் சிங்கம் அவன் ஆசனத்தில் அமர்ந்து கொண்டது. மற்ற சிங்கங்கள் சபையை சுற்றி வந்தன. சபை வெறிச்சோடிப் போயிற்று. குமரகுருபரர் இங்கே வா என்று சிங்கங்களைக் கூப்பிட்டார். சிங்கங்கள் அவர் காலடியில் அமர்ந்து கொண்டன. நவாப் சிம்மாசனத்தின் காலடியில் உட்கார்ந்தான். குமரகுருபரர் நவாபை பார்த்துக் கொண்டு இருந்தார். அவர் கண்கள் சிரித்தன. நவாப் சலாம் செய்தான். உங்களை யாரென்று தெரியாமல் பேசியதற்கு என்னை மன்னிக்க வேண்டுகின்றேன். என் பொறுமையும் என் சபையின் திறமையின்மையும் உங்களைத் தவறாக எடை போட வைத்து விட்டன. மறுபடி நான் மன்னிப்புக் கேட்கிறேன் மீண்டும் சலாம் செய்தான். தயவு செய்து சொல்லுங்கள் உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான்.

காசி விசுவநாதர் ஆலயம் திறக்கப்பட வேண்டும். கங்கை நதிக்கரையில் மடம் கட்டிக் கொள்ள எனக்கு அனுமதி தரவேண்டும். நீங்கள் என் மொழியில் பேசினால் தருவதாகச் சொன்னயே நான் இப்போது உன் மொழியில்தானே பேசுகிறேன். எவர் துணையுமின்றி புரிந்து கொண்டு எனக்குப் பதில் சொல்கிறாயே என்றார். ஆமாம் பாரசீகத்தில் பேசுகிறீர்கள். இலக்கண சுத்தமாக பேசுகிறீர்கள். எப்படி எப்படி இது சாத்தியமாயிற்று என்று கேட்டான். உன்னுடையது என்னுடையது என்று பொருட்கள் இருக்கலாம். இறைவன் எல்லோருக்கும் பொது என்றார். உடனே நவாப் காசி விசுவநாதர் கோயில் உங்களுடையது. அது திறக்கப்பட்டு சாவி உங்களிடம் தரப்படும். நீங்கள் பூஜை செய்து கொள்ளலாம் நவாப் பணிவாகப் பேசினான். மேலும் காசியில் மடத்தை நிறுவினார். இதன் கிளையொன்றைத் திருப்பனந்தாளிலும் நிறுவினார். குமரகுருபரர் தாமிரபரணி ஆற்றங்கரையில் பிறந்து வைகை ஆற்றங்கரையில் வாழ்ந்து காவிரியாற்றங் கரையிலும் கங்கை ஆற்றங்கரையிலும் மடம் அமைத்துத் தமிழையும் சைவத்தையும் வளர்த்து கங்கை ஆற்றங்கரையில் வைகாசி தேய்பிறை திரிதியைத் திதியில் விளம்பி வருடம் வைகாசி 18 ஆம் நாள்இறைவனடி சேர்ந்தார்.

2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் தேதி ஒரு நினைவு தபால்தலை இந்திய தபால் துறையால் வெளியிடப்பட்டது. கயிலாசபுரத்தில் இவர் பிறந்த வீட்டுப் பகுதி மடமாக 31-8-1952 இல் அருள்நந்தித் தம்பிரான் சுவாமிகளால் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

குமரகுருபரர் இயற்றிய நூல்கள்

கந்தர் கலிவெண்பா
மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்
மதுரைக் கலம்பகம்
நீதிநெறி விளக்கம்
திருவாரூர் நான்மணிமாலை
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
சிதம்பர மும்மணிக்கோவை
சிதம்பரச் செய்யுட்கோவை
பண்டார மும்மணிக் கோவை
காசிக் கலம்பகம்
சகலகலாவல்லி மாலை
மதுரை மீனாட்சியம்மை குறம்|மதுரை மீனாட்சி அம்மை குறம்
மதுரை மீனாட்சி அம்மை இரட்டை மணிமாலை
தில்லைச் சிவகாமி அம்மை இரட்டை மணிமாலை
கயிலைக் கலம்பகம்
காசித் துண்டி விநாயகர் பதிகம்

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை 338 பாடல்களில் ஸ்ரீகுமரகுருபர சுவாமிகளின் சரித்திரம் என்ற நூலை எழுதியுள்ளார். சேற்றூர் இரா. சுப்பிரமணியக் கவிராயர் 1001 பாடல்கள் கொண்ட ஸ்ரீகுமரகுருபர சுவாமிகளின் புராணம் என்ற நூல் எழுதியுள்ளார். பாரதிதாசன் தமது எதிர்பாராத முத்தம் என்ற நூலில் குமரகுருபரரைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். தேனூர் வே. செ. சொக்கலிங்கனார் குமரகுருபரரைப் பற்றி செய்த தொண்டர் புராணத்தில் குறிப்பிட்டுள்ளார். இவரது நூல்கள் நூல்கள் தோன்றியது பற்றிய கதைகளை மு. அருணாசலம் கையெழுத்து நிலையில் குறிப்புகளாக வைத்திருந்தார். இவரது நூல்கள் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் பிரபந்தங்கள் என்னும் பெயரில் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ண பக்தை அம்மாளு அம்மாள்

அம்மாளு என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர் கும்பகோணத்தில் 1906ல் அவள் பிறந்தாள். அந்த கால வழக்கப்படி சிறு வயதிலேயே அவளுக்கு திருமணம் நடந்தது. திருமணம் என்றால் என்ன என்றே தெரியாத நிலையில் கணவன் மரணம் அடைந்ததால் அவள் சிறு வயதிலேயே விதவையாகி விட்டாள். சமூகத்தில் ஒதுக்கப்பட்டு பெண் உருவத்தில் சிதைக்கப்பட்டு உள்ளத்தில் நொறுக்கப்பட்டு சமூகத்தில் அபசகுனமாக வெறுக்கப்பட்டு சபிக்கப்பட்ட ஒரு ஜீவனாக பசியிலும் அவமானத்திலும் வளர்ந்து வாழ்ந்தாள். நரசிம்மனிடம் நாராயணனிடம் கிருஷ்ணனிடம் அவள் கொண்ட பக்தி ஒன்றே அவளை உயிர் வாழச் செய்தது. நாட்கள் செல்ல செல்ல இந்த சமூகம் எனும் கொடிய உலக நரகத்திலிருந்து விடுதலை பெற தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தாள். பக்கத்தில் ஒரு ஆழமான குளம். கண்களை மூடி ஒருநாள் பகவானே என்னை ஏற்றுக் கொள் என்று குதிக்கும் போது நில் என்று ஒரு குரல் தடுத்தது கண் விழித்தாள்.

உக்கிரமான நரசிம்மர் அவள் எதிரே சாந்த ஸ்வரூபமாக நின்றார். எதற்காக இந்த தற்கொலை முயற்சி உனக்கு. உனக்கு கடைசி நிமிடம் வரை உண்ண உணவும் உடுக்க உடையும் இருக்க நிழலும் கிடைக்க போகிறதே என்றார் நரசிம்மர். அம்மாளு அவரை போற்றி வாழ்த்தி வணங்கினாள். பகவானே எனக்கு ஒரு வரம் தா என்றாள். என்ன வேண்டும் கேள் அம்மாளு என்றார். எனக்கு பசியே இருக்கக் கூடாது என்றாள். அம்மாளு இனி உனக்கு பசி என்றால் என்ன என்றே தெரியாது என்று நரசிம்மர் வரமளித்ததார். அன்று முதல் ஒரு நாளைக்கு ஒரு முறை ஒரு டம்பளர் மோர் பால் ஏதாவது ஒரு பழம் என்று கடைசி வரை வாழ்ந்த அம்மாளு அம்மாள் உணவை தொடவில்லை. ஏகாதசி அன்று அதுவும் கிடையாது. உற்சாகத்தோடு இருந்தாள். தினந்தோறும் கிருஷ்ண பஜனையில் தன்னை மறந்த நிலையில் ஈடுபட்டாள். அவளுக்கு குருவாக இருந்த ராமச்சந்திர தீர்த்தர் பலவற்றை கற்றுக் கொடுத்தார். இளம் விதைவையாக வாழ்ந்த அம்மாளுக்கு ஒரு நாள் பாண்டுரங்கன் கனவில் உத்தரவிட்டான். நீ பண்டரிபுரம் வா என்றான் பண்டரிநாதன்.

இந்த குரல் அவளை பொழுது விடிந்ததும் பண்டரிபுரம் போக வைத்தது. எப்படி தனியாக போவது என்று அவளது அம்மாவை நீயும் என் கூட வா என்று கூப்பிட்டாள். அம்மா வரவில்லை. தனியாக கட்டிய துணியோடும் தம்புராவோடும் பண்டரிபுரம் சென்றவள் பல வருடங்கள் அங்கேயே தங்கி விட்டாள். கோவிலை அலம்பினாள் பெருக்கினாள் கோலமிட்டாள் மலர்கள் பறித்து மாலை தொடுத்து இறைவனுக்கு சூட்டினாள் பாடினாள் நிறைய பட்சணங்கள் உணவு வகைகள் சமைத்து பாண்டுரங்கனுக்கு திருப்தியோடு அர்பணித்தாள். எல்லோருக்கும் அவற்றை பிரசாதமாக விநியோகித்தாள். ஆனால் அவைகளில் ஒரு துளியும் அவள் உட்கொள்ளவில்லை. அந்த ஊர் ராணி அம்மாளுவின் பூஜைக்காக வெள்ளி தங்க பாத்திரங்கள் நிறைய கொடுத்தாள். கண்ணில் கண்டவர்களுக்கு எல்லாம் அவற்றை அப்படியே விநியோகம் செய்து விட்டாள் அம்மாளு அம்மாள். பணத்தை தொட்டதே இல்லை. கீர்த்தனங்களை சாதாரணமாக அவள் பாடினாள். எந்த கோவிலுக்கு சென்றாலும் அந்த கோவிலின் பெருமைகளை அப்படியே அவள் பாடலில் பாடினாள். அவள் அந்த கோவில்களுக்கு அதற்கு முன் சென்றதில்லை ஒன்றுமே தெரியாது என்றாலும் இந்த அதிசயம் பல கோவில்களில் நடந்திருக்கிறது.

மகா பெரியவா கும்பகோணத்தில் தங்கி இருந்த போது ஒருநாள் ஒருவர் தன் பெண்ணுக்கு திருமணம் பெரியவா ஆசீர்வாதம் ஆசி பெற வந்திருக்கிறேன் என்கிறார். என்கிட்டே எதுக்கு வந்திருக்கே. மரத்தடியில் ஒரு நித்ய உபவாசி இருக்காளே அவா கிட்டே போய் ஆசிர்வாதம் வாங்கிக்கோ. உனக்கு சர்வ மங்களமும் சித்திக்கும். வேண்டிக் கொண்ட எண்ணங்களும் நிறைவேறும் என்றார். மகாபெரியவா இவ்வாறு அம்மாளு அம்மாளின் பெருமைகளை எல்லோருக்கும் அறிவித்ததற்கு பிறகு நிறைய பக்தர்கள் அம்மாளுவை சூழ்ந்து கொண்டார்கள். மகாபெரியவா ஒரு தடவை அம்மாளு அம்மாள் புரந்தர தாசர் அம்சம் என்று கூறினார். பாகவத தர்மத்தின் உதாரணமாக நித்ய பஜனை ஆடல் பாடல் என்று அவள் வாழ்க்கை பூரணமாக கடந்தது. ஒரு பெரியவர் மரணத் தருவாயில் இருக்கும் போது உறவினர்கள் அம்மாளுவை அவரிடம் அழைத்து போனார்கள். அவரைப் பார்த்ததும் அவர் உயிர் பிரிந்து போவது தெரிந்தது. உடனே அம்மாளு தன்னை மறந்த நிலையில் கண்களை மூடி பாடினாள். அவரது உயிரை ராம நாமம் தூக்கி செல்வது அவளுக்கு தெரிந்தது. அதை பாடினாள். அருகே இருந்த உறவினர்களுக்கு அந்த மனிதர் ராம நாமம் உபதேசம் பெற்று ஜபித்து வந்தவர் என்பதே தெரியாது. பிறகு தான் தெரிந்தது.

ஒரு சமயம் சென்னை ஜார்ஜ் டவுனில் நாராயண முதலி தெருவில் நாராயண செட்டி சத்திரத்தில் அம்மாளு தங்கியிருந்தார். அப்போது சென்னையில் பொருட்காட்சி நடந்து கொண்டிருந்தது. அதிலே பங்கேற்ற நாட்டியக் கலைஞர்கள் கோபிநாத் மற்றும் தங்கமணி தம் குழுவினருடன் இரவு நேரக் கலை நிகழ்ச்சியை முடித்து விட்டு அம்மாளு தங்கியிருந்த சத்திரத்தின் மேல் தளத்திற்கு வந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 12 மணியைத் தாண்டிய நிலையில் சற்றே கண்ணயரும் நிலையில் கீழே தாள சப்தமும் நர்த்தனம் ஆடும் சப்தமும் கேட்டதும் இந்த நேரத்தில் யார் ஆடுவார்? பிரமையோ என்று நினைத்தார்கள். மீண்டும் மீண்டும் இன்னமும் சப்தம் அதிகரிக்க நாட்டியக் கலைஞர்கள் கீழே வந்து பார்த்த போது அம்மாளு அம்மாள் தன்னை மறந்து ஆடிக் கொண்டிருந்தார். உடனே தாளத்தை வாங்கி நாட்டியத்தில் அனுபவம் மிக்க கலைஞர்கள் தாளம் போட்டனர். சுமார் இரண்டு மணி நேரம் அவர்களை மறந்து நாட்டியத்தில் லயித்தனர். கேதார ராகத்தில் பாலக் கடல சய்யா எனும் கீர்த்தனம் பிறந்தது. எல்லாம் முடிந்ததும் நாட்டியக் கலைஞர்கள் அம்மாளு அம்மாவை வணங்கி சில ஜதிகள் நாட்டிய சாஸ்திரம் நன்கு கற்றவர்களாலேயே ஆட முடியாது. அதைப் போன்ற எவராலும் சாதாரணமாக ஆட முடி யாத தெய்வீக நர்த்தனத்தை இன்று கண்டோம். இது யாரிடமும் பயின்று வருவதல்ல யாராலும் பயிற்றுவிக்க முடியாததும் கூட என்று கூறி பிரமித்து நின்றனர். இன்று இதைக் கண்டது நாங்கள் செய்த பேறு என உணர்ச்சி வசப்பட்டனர். இவள் புரந்தரதாஸரின் அவதாரம் என்று ஒருமனதாக புகழ்ந்து போற்றி வணங்கினார்கள்.

மதுராபுரி ஆஸ்ரமத்தில் 2002 இல் அம்மாளுக்கு 94 வயதில் நேரிலேயே கல்யாண ஸ்ரீனிவாச பெருமாள் தரிசனம் கிடைத்தது. அந்த கணமே நாக்கு கால மூர்தியு நீனே நீ தானே நாலு கால மூர்த்தி என பாடினாள். அந்த நாலு கால மூர்த்திகள் யார்? விடியற்காலையில் ஸ்ரீமந் நாராயணன் காலை முடியும் நேரம் ஸ்ரீ ராமன் அந்தி நேரத்தில் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மன் இரவில் ஸ்ரீ வேணுகோபாலன். கடைசி காலங்களை கும்பகோணத்தில் கழித்தாள். வயதானாலும் கிருஷ்ணனை தூங்கப் பண்ணி எழுப்பி குளிப்பாட்டி சிங்காரித்து ஆடைகள் அணிவித்து பாடி உணவு சமைத்து நிவேதித்து தாயாக பாண்டுரங்கனுக்கு சேவை செய்தவள் அம்மாளு அம்மாள். ஒரு நாள் தன்னுடைய இறுதிக் காலம் நெருங்கியதை உணர்ந்த அம்மாளு பாடிக் கொண்டிருக்கும் போது அதில் வைகுண்டம் எப்படி இருக்கும் என விவரித்து பாடினாள். பங்குனி உத்தரம் நாளில் கௌரி சிவனை அடைந்தாள். சீதை ராமனை அடைந்தாள். ஆண்டாள் பரமனை அடைந்தாள். அதுபோல் அம்மாளு அம்மாள் 104 வயது வாழ்ந்து 2010 பங்குனி உத்திரம் அன்று சித்தி அடைந்தாள்.