திருமாளிகைதேவர்

நவகோடி சித்தர்புரம் என அழைக்கப்படும் திருவாவடுதுறையில் சித்தஞான யோக சாதனை செய்து வந்த போகரின் சீடர்களில் ஒருவர் திருமாளிகைதேவர். சைவ ராஜதானியாகிய திருவாவடுதுறை ஆதீனத் திருமடத்தின் சந்நிதி விசேஷங்கள் இரண்டு. ஒன்று ஆதீன பரமாசாரியர் ஸ்ரீ நமசிவாய மூர்த்திகள் சந்நிதி. இன்னொன்று சித்தர் திருமாளிகைத்தேவர் சந்நிதி. இவ்விருவர் சமாதிக் கோயில்களும் திருமடத்தில் அடுத்தடுத்து அமைந்துள்ளன. திருமாளிகைத் தேவர் மாளிகை மடம் இருந்த இடத்திலேயே அவரது சமாதிக் கோயிலை ஒட்டி நமச்சிவாய மூர்த்திகள் சமாதிக் கோயிலுடன் இணைந்த குருமடம் பிற்காலத்தில் திருவாவடுதுறை ஆதீனமாக வளர்ந்தது என்பது வரலாறு.

திருவிடைமருதூரைப் பூர்வீகமாக உடைய ஐந்து கோத்திரத்தார் மரபில் ஒன்றான சைவராயர் மரபில் அவதரித்தவர் திருமாளிகைதேவர். 9 ம் திருமுறையாக விளங்கிடும் திருவிசைப்பாவில் நான்கு திருப்பதிகங்கள் திருமாளிகைத்தேவர் அருளிச் செய்தவை ஆகும். திருவிசைப்பா அருளிச் செய்த இவரின் காலம் 9 ம் நூற்றாண்டு. திருமாளிகைதேவர் காலையில் எழுந்ததும் தன் குல வழக்குப்படி அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு கோவிலுக்கு சென்று சிவா பெருமானையும் அம்பிகையையும் வணங்கி விட்டு சுவாமிக்குப் படைத்த நெய்வேத்யம் செய்த பிரசாதத்தை மட்டுமே சாப்பிடுவது தினசரி வழக்கம். இவர் சோழர்களின் தீட்சா குருவாக விளங்கினார். அரண்மனையில் பணி புரிந்தாலும் எப்பொழுதும் சிவபெருமானையே நினைத்துக் கொண்டிருப்பார். போகர் திருவாவடுதுறைக்கு வந்திருந்ததை அறிந்த திருமாளிகைத்தேவர் அவரிடம் உபதேசம் பெற சென்று போகரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார். திருமாளிகைத்தேவரின் பக்குவ நிலையை உணர்ந்த போகர் அவருக்கு ஞான நிலையை உபதேசித்தார். போகரின் வழிகாட்டுதல் படியே திருமாளிகைத்தேவர் தன் தவ வாழ்கையை நடத்தியதால் திருமாளிகைத் தேவரின் உடல் தங்கம் போல் ஜொலித்தது. ஒருநாள் போகர் தம்முடைய பாதுகையைத் திருமாளிகைத் தேவரிடம் கொடுத்து இதனைப் பூசித்துக் கொண்டு திருவாவடுதுறைத் தலத்திலேயே இருந்து அன்பர்களுக்கு அருள் வழங்கு என ஆணை தந்து தான் அத்தலத்தை விட்டுத் திருப்புகலூருக்குச் சென்றார். திருமாளிகைத்தேவர் குரு ஆணைப்படி அத்தலத்திலேயே அடியார்கள் பலரோடு மாசிலாமணிசுவரர் கோயிலுக்குத் தென்புறம் திருமடம் ஒன்று அமைத்துக் கொண்டு தங்கியிருந்தார்.

திருமாளிகைத் தேவருக்கு போகர் நடராசப் பெருமானைப் பூசை செய்யும் செயல் முறைகளை உபதேசித்துள்ளார். குருவிற்கு பணிவிடை செய்திடும் பொருட்டும் சிவபூஜை செய்திடும் பொருட்டும் மேலும் இரண்டு கரங்களைக் தமது தவ வலிமையால் உருவாக்கிக் கொண்டு நான்கு கரங்களுடன் தமது பணிகளை தொடர்ந்தார். சிறந்த சிவஞானியரான இவர் அழகும் பொலிவும் நிறை திருமேனியராய்த் திகழ்ந்தார். திருமாளிகைத் தேவரின் உடல் தங்கம் போல் ஜொலித்தது. அந்த ஊரில் திருமணம் நடந்து பல வருடங்கள் குழந்தைகள் இல்லாத பெண்கள் சிலர் குழந்தை வரம் வேண்டி இவரின் முன்பு நின்றார்கள். அவர்களுக்கு ஆசி வழங்கினார். அவரருளால் அப்பெண்களுக்குக் குழந்தைப் பேறு கிட்டியது. திருமாளிகைத் தேவரின் அருளால் பிறந்த குழந்தைகள் அவரைப் போன்றே நான்கு கையுடன் இருப்பதைக் கண்டு அப்பெண்களின் கற்பு நெறியில் அவர்களது கணவர்கள் சந்தேகமடைந்தார்கள். அச்சமயம் பல்லவ மன்னன் காடவர்கோன் கழற்சிங்கருக்கு (காடவர்கோன் கழற்சிங்கன் காலம் கிபி 825 – 850) கப்பம் கட்டும் சிற்றசர்களில் ஒருவரான நரசிங்கர் திருவாவடுதுறைக்கு அருகில் இருக்கும் பேட்டையில் தங்கினார். இவ்வழியே போகும் பொழுதெல்லாம் அவர் இங்கு தங்கியதால் இவ்விடம் நரசிங்கன்பேட்டை என்ற பெயர் பெற்றது. இது திருவாவடுதுறைக்கு அருகில் 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. நரசிங்கர் வந்திருந்ததை அறிந்த சிலர் நரசிங்க அரசனிடம் புகார் செய்தார்கள். இதை கேட்டு கோபம் கொண்ட அரசன் திருமாளிகைத்தேவரைப் கட்டி இழுத்து வாருங்கள் என்று தனது வீரர்களுக்கு ஆணையிட்டார். அரசனின் ஆணைப்படி சென்ற வீரர்கள் திருமாளிகைத் தேவரை நெருங்கிய பொழுது அவர்களின் நோக்கத்தை அறிந்த திருமாளிகைத் தேவர் ம் ஆகட்டும் கட்டிக் கொண்டு செல்லுங்கள் என்று கூறினார். திருமாளிகைத் தேவரின் மந்திரம் போன்று மென்மையாக ஒலித்த அந்த சொற்கள் வீரர்களை மயக்கியதால் வீரர்களே தங்களை தாங்களே கட்டிக் கொண்டு நரசிங்கர் முன்னால் பொய் நின்றார்கள்.

திருமாளிகைத் தேவரின் செயலைக் கேட்ட அரசன் மேலும் கோபமுற்று சிந்தையை மயக்கும் அந்த கொடியவனை நீ போய் சிதைத்து விடு. அவன் இனி உயிருடன் இருக்கக் கூடாது என்று தன் தளபதிக்கு உத்தரவிட்டார். தளபதியும் திருமாளிகைத்தேவரின் தலையை சீவிக் கொண்டுத் தான் வருவேன் என்று நரசிங்கரிடம் வீர வசனம் பேசிவிட்டுச் சென்றார். தளபதியைப் பார்த்தவுடன் திருமாளிகைத் தேவர் என் தலையை வெட்டுவதற்காகத் தானே வந்தீர்கள் சரி வெட்டிக் கொண்டு போங்கள் என்று அமைதியாகக் கூறினார். உடனே வீரர்கள் ஒருவருகொருவர் வெட்டிக் கொண்டு இறந்தார்கள். தப்பிப் பிழைத்த இரண்டொருவர் அரசனிடம் சென்று நடந்ததைக் கூறினார்கள். அரசன் திருமாளிகைத் தேவர் தன்னைப் போல் மந்திரம் தெரிந்தவர் என்று நினைத்துக் கொண்டு அவன் மந்திரம் என்னிடம் பலிக்காது நானே சென்று அவனை ஒழித்து விடுகிறேன் என்று கிளம்பினார்.

திருவாவடுதுறை மாசிலாமணிசுவரர் கோவிலின் மதிர் சுவற்றின் மேல் நான்குப் புறமும் காவல் இருந்த நந்திகள் உயிர் பெற்று எழுந்து இறைவன் முன்பாக இருக்கும் நந்தி தேவரின் உடலில் புகுந்து பூதகணங்களாக வெளிப்பட்டது. அரசர் திருமாளிகைதேவர் இருக்கும் ஊரின் அருகில் வந்ததும் பூதகணங்கள் வந்த படைகளை அழித்தன. மந்திரியையும் அரசரையும் கட்டி திருமாளிகைத் தேவரின் முன்னால் நிறுத்தின. அரசரின் முன்பாகவே அந்த பூதகணங்கள் இறைவன் முன்பு இருக்கும் நந்தி உருவத்துள் புகுந்து மறைந்தன. ஆனால் திருமாளிகைத் தேவரோ நடந்தவற்றிகும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லாதது போல் சிவனே என்று அமைதியாக உட்கார்ந்திருந்தார். இந்த நிலை அரசர் நரசிங்கருக்கு அவரின் ஞான உண்மைகளை உணர்த்தியது. உடனே மன்னர் பெருமானே தங்கள் அருமையை அடியேன் அறியவில்லை. சாதாரண மந்திரவாதி என்று நினைத்து பெரும் தவறு செய்துவிட்டேன் என்னை மன்னியுங்கள் என்று அழுதார். அரசரை அமைதிப் படுத்திய திருமாளிகைத் தேவர் நரசிம்மா இடைவிடாமல் நாம் எதை நினைத்துக் கொண்டு இருக்கிறோமோ அது நம் நெஞ்சில் பதிந்து நிற்கும் இது உலகின் இயல்பு. பெண்கள் என்னை அன்போடு நினைத்தனர். அதன் விளைவாகவே அவர்களின் குழந்தைகள் என்னைப் போல் இருந்தன. யார் மீதும் தவறு இல்லை. அரசனான நீ புகார் கொடுத்தவர்களின் சொல்லை கேட்டாயே தவிர பிரதிவாதியான என்னை ஒரு வார்த்தைக் கூட கேட்கவில்லையே. அதனால் தான் உனக்கு இவ்வளவு தொல்லைகளும் நடந்தன என்று கூறி அரசரையும் அமைச்சரையும் விடுவித்தார். இதனால்‌ திருமாளிகைத்‌ தேவர்‌ உத்தமர்‌ என்பதை அனைவரும் அறிந்து கொண்டனர்‌. இவ்வாறு அவரது புகழ்‌ அந்த நாடு முழுவதும்‌ பேசப்பட்டு வெகுவாகப்‌ பரவியது. இந்த வரலாற்றிற்கு சான்றாக இன்றும் திருவாவடுதுறை மாசிலாமணிசுவரர் கோவிலில் மதில் மேல் நந்திகள் இல்லாதிருப்பதை நாம் காணலாம். மதில் மேல் இருந்த அனைத்து நந்திகளும் இறைவன் முன் இருக்கும் நந்தியுடன் கலந்ததால் தான் பெரிய நந்தி உருவானதாக திருவாவடுதுறை மாசிலாமணிசுவரர் கோவிலின் தல வரலாறு கூறுகின்றது. நந்தியின் முன்பாக இருக்கும் தூணில் நரசிங்க அரசன் மற்றும் அவரது அமைச்சரின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

திருமாளிகைத்தேவர் தமது காலத்தில் பல அற்புதங்கள் செய்திருக்கிறார். ஒரு நாள் போகரும் திருமாளிகைத் தேவரும் கோவிலில் சிவ தரிசனம் முடிந்து பிரசாதமான பயற்றஞ் சுண்டல் பெற்றுக் கொண்டு வெளியேறும் பொழுது தீவட்டி பிடிப்பவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அதனால் அவரை எழுப்ப வேண்டாம் என்று திருமாளிகைத் தேவரே குருவிற்கு தீவட்டிப் பிடித்துக் கொண்டு சென்றார். அருள்துறை என்னும் திருமடத்தை நெருங்கியதும் தீவட்டிப் போதும் இங்கேயே நில். என்று சொல்லி விட்டு திரும்பிக் கூட பார்க்காமல் போகர் திருமடத்துக்குள் சென்றார். குரு வார்த்தையே வேதவாக்கு என்று திருமாளிகைத் தேவர் பொழுது விடியும் வரை ஒரு கையில் பயற்றஞ் சுண்டலும் மறு கையில் தீவட்டியும் வைத்துக் கொண்டிருந்ததால் காலை அனுஷ்டாங்களை செய்ய தூய்மையான வேறு இரண்டுக் கைகளை உண்டாக்கி முடித்துக் கொண்டார். அச் சமயம் போகர் திருமாளிகை எங்கே என கேட்க திருமாளிகைத் தேவர் சுவாமி அடியேன் இங்கே இருக்கிறேன் என்று வீதியில் இருந்து குரல் கொடுத்தார். ஏன் உள்ளே வரலாமே என்று குருநாதர் கூறியவுடன் திருமாளிகைத் தேவர் உள்ளே போனார். இரவெல்லாம் விழித்திருந்த சீடரின் குரு பக்தி போகரை வியக்க வைத்தது. அதன் பிறகே தீவட்டி பிடிப்பவர் வந்தார். குருநாதரின் கட்டளைப்படி தீவட்டியை அவரிடம் ஒப்படைத்தார் திருமாளிகைத் தேவர். திருமாளிகைத் தேவரின் கையில் இருந்த பயற்றஞ் சுண்டல் வேகாத பயிராக மாறியதால் அதை ஆட்கள் மூலம் நிலத்தில் விதைத்தார். சில நாட்களில் அவை முளைத்துச் செழித்தன. இதைப் பார்த்த ஊர்மக்கள் திருமாளிகைத் தேவரை சித்தர் என்று நம்பினர்.

திருமாளிகைத் தேவர் ஒரு நாள் வழக்கம் போல் காவிரியில் குளித்து அனுஷ்டாங்களை முடித்து பூக்களைப் பறித்துக் கூடையில் நிரப்பி அபிஷேகத்துக்கான நீர் குடத்துடன் கோவிலை நோக்கி சென்றார். ஒரு குறுகலான பாதையில் சென்று கொண்டிருக்கும் போது எதிரில் சவப் பறை முழங்க பிண ஊர்வலம் வரக்கண்டார். அதைப் பார்த்த திருமாளிகைத் தேவர் மனம் குழம்பி அருகில் இருந்த விநாயகரைத் துதித்து விக்னேசா என் மனம் கொண்ட விக்கினத்தைக் களை என்று வேண்டி இறைவனுக்கு அபிஷேகம் செய்ய கொண்டு வந்த திருமஞ்சனக் குடத்தையும் பூக்கூடையையும் மேல் நோக்கி வீசி அந்தரத்தில் நிற்கும்படி செய்து விட்டு பாடையில் இருந்த பிணத்தை நோக்கிப் பார்த்தார். இவ்விநாயகர் கொட்டு தவிர்த்த விநாயகர் என்ற பெயரில் இன்றும் அருள் பாலிக்கிறார். பிணமானது மீண்டும் உயிர் பெற்றெழுந்து நடந்து சென்று இவரைக் கடந்து சிறிது தூரம் சென்று மீண்டும் உயிரை விட்டது. திருமாளிகைத் தேவர் சிவ சிவ என்றபடி அங்கிருந்து நகர்ந்தார். இவர் கோவிலை நோக்கி நடக்க திருமஞ்சனக் குடமும் பூக்கூடையும் ஆகாயத்தில் மிதந்தபடி கோவில் வரை வந்து அவரின் கைகளில் வந்து சேர்ந்தது. அன்றிலிருந்து திருமாளிகைத் தேவர் காவிரியில் நீராடி விட்டுத் திரும்பும் பொழுது தீர்த்தக் குடத்தையும் பூக் கூடையையும் ஆகாயத்தில் வீசிவிட்டு வேகமாக நடப்பார். அவையும் ஆகாயத்தில் அவரைத் தொடர்ந்து வரும். பூஜை செய்யும் இடம் வந்ததும் திருமாளிகைத் தேவர் தன் இரண்டு கையையும் நீட்டுவார். அவை அவர் கைகளில் வந்து சேரும். பின்பு பூஜைகளை செய்வார்.

திருமாளிகைத் தேவரிடம் ஒரு நாள் போகர் நான் புகலூருகுக் கிளம்புகிறேன் என்று சொல்லி விட்டுக் கிளம்பினார். குருநாதர் போகரின் பாதுகைகளை அவரின் ஆணையின்படி பூஜித்து வந்த அவர் மாசிலாமணி ஈசரை வழிப்படுவதும் குரு தேவரின் பாதுகைகளை பூஜை செய்வதும் வலியப் போய் அடுத்தவருக்கு உபதேசம் செய்வதும் நல்வழிக் காட்டுவதுமாக இருந்தார். ஒருநாள் திருமாளிகைத் தேவர் திருவீழிமிழலைக்குப் சென்று சிவ ஆலயத் தத்துவங்களை விளக்கும் வகையில் ஒரு தேரை உருவாக்கி அதன் மேல் சுவாமியை வைத்தார். மக்கள் எல்லோரும் கூடி தேரை இழுக்க தேர் நகரவில்லை. மக்கள் கவலையில் ஆழ்ந்தார்கள். திருமாளிகைத் தேவர் தேரின் வடங்களை அவிழ்த்து விட்டு தனக்கும் தேருக்குமாக ஒரு சதாரணமான கயிற்றை கட்டி மாட வீதிகளை வலம் வந்தார். மேலும் பல அற்புதங்களாக கொங்கணர் சித்தருடைய கமண்டலத்தில் இருக்கும் என்றும் வற்றாத நீரினை வற்றச் செய்திருக்கிறார். மயானத்தில் எரிந்து கொண்டிருக்கும் சடலத்தின் புகையினை நறுமணம் கமழும் படிச் செய்திருக்கிறார். திருமாளிகைதேவரின் அற்புதங்கள் அனைத்தையும் தொகுத்து தொட்டிக்கலை ஸ்ரீ சுப்பிரமணிய முனிவர் பாடல்களாக பாடியுள்ளார்.

திருமாளிகைத் தேவர் சொன்ன உபதேசங்களில் ஒன்று. நமது மூக்கில் உள்ள இரண்டு துவாரங்களில் வலது துளை சிவம் இடது துளை சக்தி. சனி ஞாயிறு செவ்வாய்க் கிழமைகளில் சிவத் துளையின் வழியாகவும் திங்கள் புதன் வெள்ளிக் கிழமைகளில் சக்தித் துளையின் வழியாகவும் சுவாசம் வெளிப்பட வேண்டும். வியாழக் கிழமைகளில் மட்டும் வளர்பிறையாக இருந்தால் சக்தித்துளை வழியாகவும் தேய்பிறையாக இருந்தால் சிவத்துளையின் வழியாகவும் சுவசாம் வெளிப்பட வேண்டும்.

திருமாளிகைத் தேவர் திருவாவடுதுறையில் தனது குருவான போகரின் திருவடிகளுக்கு பின்னால் யோக நிலையில் அமர்ந்து தவம் புரிந்த இடத்திலேயே முக்தி பெற்று அருள்பாலித்து வருகின்றார். இன்றும் கோமுக்தீஸ்வரருக்கு பூஜைகள் பூர்த்தியான பிறகு அச்சிவாசாரியராலேயே மடாலயத்தில் திருமாளிகைத் தேவருக்கு ஆராதனைகள் நிகழ்த்தப் பெறுவதும் அதன் பின்னரே நமச்சிவாய மூர்த்திகளுக்கு வழிபாடுகள் நிகழ்த்தப் பெறுவதும் மாகேஸ்வர பூஜை நடை பெறுவதும் தொன் மரபாக உள்ளது. கோமுக்தீஸ்வரர் ஆலயத்து வருடாந்திர தை ரதசப்தமி உற்சவத்தில் துவஜாரோஹணத்திற்கு முன்தினம் இரவு திருமாளிகைத்தேவர் உற்சவம் நடைபெறும். கோயிலில் சம்பிரதாய பூஜைகளை ஏற்றருளிய பின்னர் திருமடத்திற்கு எழுந்தருளும் திருமாளிகைத் தேவரை திருமடத்து வாயிலில் ஸ்ரீலஸ்ரீகுருமகாசந்நிதானம் அவர்கள் எதிர்கொண்டு வரவேற்பார்கள். பின்னர் மங்கல வாத்தியங்கள் முழங்க திருமடத்தில் பிரவேசித்து உபச்சாரங்களை அவர் ஏற்றருளி கோயிலுக்கு திரும்ப ஏகும் நிகழ்வுகள் நடத்தப் பெறும்.

அருணகிரிநாதர்

அருணகிரிநாதர் தமிழ் நாட்டில் கிபி 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்ற அருளாளர் ஆவார். இவர் திருவண்ணாமலையில் பிறந்தவர். இவர் தமிழ் மொழி வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். இவரைப் போல் ஆயிரக்கணக்கான இசைச் சந்தங்களிலே பாடியவர் வேறு யாரும் இல்லை. கருத்தாழமும் சொல்லழகும் இசைத்தாளச் செறிவும் நிறைந்தது இவரது பாடல்கள். அருணகிரிநாதர் தென்னிந்தியா முழுவதிலும் உள்ள கோயில்களுக்குச் சென்று 16000 பாடல்களை இயற்றினார். அவற்றுள் சுமார் 2000 பாடல்கள் மட்டும் இன்று வரை பாடப்படுகின்றன. அவரது பாடல்கள் நல்லொழுக்கம் மற்றும் நீதியுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான வழியைக் காட்டுகின்றன. இவருடைய மூதாதையர்கள் தற்போதைய பங்களாதேஷ் ராஜசாகி மாவட்டம் வரேந்திர கிராமத்திலிருந்து 11ம் நூற்றாண்டில் பிரபுடேவ மன்னன் காலத்தில் இங்கு குடியேறியதாக வரலாற்று செய்திகள் கூறுகின்றன.

காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்து வந்த திருவெண்காடாருக்கும் முத்தம்மைக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இவளுக்கு ஆதிலட்சுமி என்று பெயர் வைத்தார்கள். முத்தம்மைக்கு முருகக் கடவுள் மேல் அபார பக்தியாதலால் முருகப் பெருமானின் திருப்பாதங்களே சரண் என்று வாழ்ந்து வந்தாள். முருகன் கோயிக்குப் போவதிலும் முருகன் திருநாமத்தை ஜபிப்பதிலும் முருகக் கடவுளுக்குப் பூமாலை கட்டித் தருவதிலும் ஒருநாளும் அவள் தவறியதில்லை. முத்தம்மையின் முருக பக்தி தொடர்ந்து வந்தது. இவளுக்கு பெண் குழந்தை பிறந்திருந்தாலும் ஓர் ஆண் மகன் வேண்டும் என்று நாள் தோறும் பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள். முத்தம்மை செய்து வந்த தொடர் பிரார்த்தனைகளால் மூத்த பெண் ஆதிலட்சுமிக்கு நான்கு வயதாக இருக்கும் போது முத்தம்மைக்கு இரண்டாவது ஆண் குழந்தை ஆனிமாதம் மூல நட்சத்திரத்தில் அருளினான் முருகன். ஆண் குழந்தை பெற்ற மகிழ்ச்சியில் திளைத்தாள் முத்தம்மை. அக்குழந்தைக்கு அருணாச்சலேஸ்வர மலையின் பெயரை வைத்து அருணகிரி என்று பெயரிட்டாள் முத்தம்மை. அருணகிரியின் கைகளில் ஆறு விரல் இருந்தன. அதனால் முருகப் பெருமானின் ஆறு தலைகளையும் அவருக்குரிய சரவணபவ எனும் ஆறெழுத்து மந்திரத்தினையும் நினைவுறுத்துவது போல இருந்தது.

அருணகிரி பிறந்த மகிழ்ச்சியில் காசி யாத்திரை கிளம்பினார் திருவெண்காடர். யாத்திரை முடித்து அவர் வெகுகாலம் திரும்பி வரவில்லை காசியிலேயே தங்கி விட்டதாகக் கருதினாள் முத்தம்மை. சிறிது நாளில் கடுமையாக நோய் வாய்ப்பட்டாள் முத்தம்மை. தனக்கு நோய் முற்றி மரணம் நெருங்குவதை அறிந்து கொண்ட முத்தம்மை திருவண்ணாமலைக்கு வந்து விட்டாள். மரணம் நெருங்கிய காலத்தில் தன் மகள் ஆதிலட்சுமியை அழைத்தாள் முத்தம்மை. மகளே ஆதி என்ற உனது பெயரைப் போலவே ஆதி முதல் அந்தம் வரை இந்தக் குடும்பப் பொறுப்பு முழுவதும் உன் தலையில் விழுந்திருக்கிறது. நான் சேர்த்து வைத்துள்ள சொத்துகள் உன் வாழ்வைப் பாதுகாக்கும். நீ பாதுகாக்க வேண்டியது உன் தம்பியை. தவமாய்த் தவமிருந்து பெற்ற பிள்ளை. நீ அவன் மனம் நோகாமல் அவனை வளர்த்துவா. நீயே சிறுமி. உன்னிடம் இந்தப் பிஞ்சுக் குழந்தையை ஒப்படைக்கிறேன். இவனை முருக பக்தனாகப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். நீ இவனை நன்றாக வளர்ப்பாய் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என்று கூறிய முத்தம்மை அருணகிரியின் கையைப் பற்றித் தன் மகள் ஆதிலட்சுமியின் கரத்தில் வைத்தாள். ஒரு பெருமூச்சோடு முருகா என்று உரத்து முருகன் நாமத்தை ஜபித்தாள். மறுகணம் மயில்மேல் அமர்ந்து முருகன் அவள் உயிரை ஏற்க ஓடோடி வரும் காட்சி அவள் கண்ணுக்கு மட்டும் தெரிந்தது. பெண்ணே நான் உன்னையும் ஆட்கொள்வேன். உன் மகன் அருணகிரியையும் பின்னாளில் ஆட்கொள்வேன் என்று சிரித்தவாறே வாக்குறுதி தந்தான் முருகன். முத்தம்மையின் முகத்தில் புன்னகை மலர்ந்து முக்தியடைந்தாள்.

அருணகிரியை வாரியெடுத்து முத்தமிட்டுத் தன்னோடு அணைத்துக் கொண்டாள் ஆதிலட்சுமி. தன் தாய் தனக்கிட்ட கட்டளையை எந்தக் குறைபாடுமின்றி நிறைவேற்றுவதென உறுதி கொண்டாள். திருமணம் செய்து கொள்ளாமல் தம்பியின் வாழ்க்கையையே நினைத்துத் தம்பிக்குச் சேவை செய்து வந்தாள் ஆதி. அருணகிரியே சிறு வயதில் இருந்து மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்து வந்தார் ஆதி. அருணகிரிநாதர் சிறு வயதில் இருந்தே பெண்ணாசை கொண்டவராய் இருந்தார். இந்த செய்தி தெரிந்தும் ஆதிலட்சுமி அம்மையார் விரைவில் இவர் திருந்துவார் என எதிர்பார்த்தார். ஏனெனில் அருணகிரி இளமையிலே நல்ல கல்வி கற்றுத் தமிழில் உள்ள இலக்கிய இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்திருந்தார். இளமையிலேயே திருமந்திரம் தேவாரம் திருமுருகாற்றுப்படை திருக்குறள் காரிகை ஆகிய தமிழ் நூல்களைப் படித்து அதில் புலமை பெற்றிருந்தார். உலா ஏசல் கலம்பகம் கோவைசிந்து தூது பரணி மடல் மாலை எனப்படும் நூல் வகைகளைப் பயின்றும் காம சாஸ்திர நூல்களை ஆராய்ந்தும் புலமை வாய்ந்து கவிபாடும் திறம் உடையவராயிருந்தார். உரிய வயதில் திருமணத்தை அவருக்கு செய்து வைத்தார் அவரது சகோதரி ஆதிலட்சுமி. ஆனாலும் இவருக்கு முற்பிறவியின் பயனாலோ என்னவோ பெண்களின் தொடர்பு அதிகமாய் இருந்தது. வீட்டில் கட்டிய மனைவி அழகியாய் இருந்தும் விதி வசத்தால் வெளியில் பரத்தையரிடமே உள்ளத்தைப் பறி கொடுத்ததோடு மட்டுமல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாய்ச் தனது சொத்தையும் இழந்தார். எந்நேரமும் காமத்திலே மூழ்கித் திளைத்ததன் விளைவாக சொத்தை இழந்ததோடு பெரும் நோயும் வந்து சேர்ந்தது அருணகிரிக்கு. அந்நிலையிலும் இவருக்குப் பெண்ணின் அண்மை தேவைப்பட கட்டிய மனைவியைக் நெருங்க முற்பட்டவரை மனைவி வெறுத்து ஒதுக்கினார். இதனால் இவர் சகோதரி தன்னை நெருங்குமாறு கோபத்துடனும் வருத்தத்துடனும் இவரிடம் சொல்ல தன் தீய செயல்களால் ஏற்பட்ட விளைவு குடும்பத்தையே உருக்குலைத்ததை எண்ணி இவர் வீட்டை விட்டே வெளியேறிக் கால் போன போக்கில் சென்றார். அப்போது ஒரு பெரியவர் இவரைத் தடுத்து ஆட்கொண்டார்.

அருணகிரிநாதரை தடுத்தாட் கொண்டது அருணாசலேஸ்வரர் என்றும் முருகக் கடவுள் என்றும் இரு வேறு கருத்துக்கள் உள்ளது. அந்தப் பெரியவர் அவருக்கு முருகக் கடவுளைப் பற்றிச் சொல்லி சரவணபவ ஆறெழுத்து மந்திரத்தையும் அதன் உட்பொருளையும் சரவணபவ என்னும் சொல்லின் தத்துவத்தையும் விளக்கி முருகனைப் போற்றிப் தவவாழ்வு வாழச் சொல்லி ஆசீர்வாதம் செய்தார். குழப்பத்தோடு இருந்த அருணகிரிநாதர் பெரியவர் சொன்னது சரியாகக் கேட்கவில்லை. ஒரு பக்கம் பெரியவரின் பேச்சு மறுபக்கம் குழப்பமான மனது. தவத்தினால் மனம் சற்றுத் தெளிவடைகிறது என நினைத்தால் மீண்டும் மீண்டும் குழப்பம். முருகனை நினைத்து தியானத்தில் அமர்ந்தால் மனம் ஈடுபட மறுக்கிறது. அமைதி வரவில்லை. தவம் வரவில்லை என்ன செய்யலாம்? குழப்பத்திலும் கவலையிலும் செய்வதறியாது தவித்த அருணகிரிநாதர் இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தார். திருவண்ணாமலைக் கோபுர வாயிலில் மேலே ஏறி அதிலிருந்து கீழே குதித்து தம் உயிரை விட முற்பட்டார். அவர் கீழே குதித்த போது இரு கரங்கள் அவரைத் தாங்கி காப்பாற்றின. திகைத்த அருணகிரி தம்மைக் காப்பாற்றியது யார் எனப் பார்க்க முருகர் தன் திருக்கோலத்தைக் காட்டி அருளினான். மயில் வாகனனின் தரிசனம் கிடைத்த அருணகிரி வியப்பின் உச்சியிலிருந்தார். முருகன் அவரை அருணகிரிநாதரே என அழைத்துத் தம் வேலால் அவர் நாவிலே சரவணபவ என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்து யோக மார்க்கங்களும் மெய்ஞ்ஞானமும் அவருக்குக் கைவரும்படி அருளினார். சித்தம் கலங்கிய நிலையில் இருந்த அருணகிரியாரின் சித்தம் தெளிந்தது. நாதர் என்ற பட்டத்தைப் பெற்ற அருணகிரி அன்று முதல் அருணகிரிநாதர் என்று அழைக்கப்பட்டார்.

அருணகிரிநாதர் உபதேசத்தை நேரடியாக முருகனிடமிருந்தே பெற்றதும் முருகனை இரு கரம் கூப்பித் தொழுதார். அப்போது முருகர் அருணகிரிநாதரே இந்தப் பிறவியில் இன்னும் செய்ய வேண்டியவை நிறைய உள்ளன உனக்கு. ஆகையால் இம்மையில் எம்மைப் பாடுவாயாக. பாடிப் பணிந்து பின்னர் எம்மிடம் வந்து சேருவாய் என்று அருளினார். முருகனின் கட்டளையால் மனம் மகிழ்ந்தாலும் பாடல் புனையும் வழி அறியாத தாம் எவ்விதம் கந்தனைப் பாடுவது எனக் கலங்கினார். அப்போது முருகர் யாமிருக்க பயமேன் அஞ்சேல் என்று சொல்லி முத்தைத் தரு பத்தித் திருநகை என பாடல் பாடுமாறு ஆரம்பத்தை எடுத்துக் கொடுத்து விட்டு முருகர் மறைந்தார். முருகர் வந்து உபதேசம் செய்து சென்ற பின்னர் திருவண்ணாமலை ஆலயத்தின் இளையனார் சந்நிதியில் பெரும்பாலும் மௌனமாக தவம் செய்து வந்தார் அருணகிரிநாதர். தவம் கலைந்த வேளைகளில் சந்தப் பாடல்களை மனம் உருகிப் பாடிவந்தார். சிறிது நாளில் அவரது உடம்பில் இருந்த நோய்கள் அனைத்தும் மறைந்து விட்டது. இவரின் இந்தப் பாடல்கள் யோகக் கலையை ஒட்டி அமைந்தவை. பரிபூரண யோக ஞானம் கைவரப் பெற்றவர்களுக்கு மட்டுமே இந்தப் பாடல்களின் உட்பொருள் புரியும். அப்போது திருவண்ணாமலையை ஆண்டு வந்தவன் விஜயநகர வம்சத்தைச் சேர்ந்த பிரபுடதேவராயன் என்னும் மன்னன். தெய்வ பக்தி மிகுந்த அவன் அருணகிரியாரைப் பற்றியும் அவருக்கு நேர்ந்த அனுபவங்கள் பற்றியும் அறிந்து கொண்டான். அருணகிரிநாதரைப் பணிந்து தனக்கும் அவருக்குக் கிடைத்த பாக்கியங்கள் கிடைக்குமாறு செய்யவேண்டும் என வேண்டிக் கேட்க அருணகிரிநாதருக்கும் அரசனுக்கும் நட்பு உண்டானது.

அருணகிரிநாதருக்கும் மன்னனுக்கும் உண்டான நட்பு அரண்மனையின் ஆஸ்தான பண்டிதன் ஆன சம்பந்தாண்டானுக்கு பொறாமையை உண்டாக்கியது. தேவியின் பக்தனான சம்பந்தாண்டான் தேவியின் குமாரனனான முருகனை பாடி தொழுது வந்த அருணகிரியிடம் ஏற்கெனவே பொறாமை கொண்டிருந்தான். இப்போது மன்னனும் அருணகிரியைப் பணிந்து அவர் சீடர் ஆக முயல்வதைக் கண்டதும் பொறாமை குணம் அதிகமாகி மன்னனைத் தடுக்க எண்ணம் கொண்டான் சம்பந்தாண்டான். அரசரிடம் நேரடியாக சென்றவன் அருணகிரிநாதரைப் பற்றி பேச ஆரம்பித்தான். அரசே நான் உங்கள் நெருங்கிய நண்பன். உங்கள் நன்மையே நாடுபவன். உங்களுக்கு நல்லதேயே செய்ய நினைக்கிறேன். அருணகிரிநாதர் பற்றி நீங்கள் சரிவர தெரியாமல் அவனிடம் நட்புக் கொண்டுள்ளீர்கள். இந்த நட்பு வேண்டாம். பரத்தையரிடமே தஞ்சம் எனக் கிடந்தவன் அந்த அருணகிரிநாதர். உற்றார் உறவினர்கள் அனைவரும் அவனை கைவிட்டனர். அத்தகைய பெருநோய் வந்திருந்தது அவனுக்கு. ஏதோ மாய வித்தையால் இப்போது அனைத்து வியாதிகளும் மறைந்திருக்கலாம். சித்து வேலைகளை எவ்வாறோ கற்றுக் கொண்டு முருகன் நேரில் வந்தான் எனக்குச் சொல்லிக் கொடுத்தான் நான் முருகனுக்கு அடிமை என்று சொல்லித் திரிகின்றான். அவன் பேச்சை நம்பவேண்டாம் என்று சொன்னான்.

அருணகிரிநாதரின் ஆன்ம பலத்தையும் அவரின் பக்தியையும் யோக சக்தியையும் அரசர் நன்கு உணர்ந்திருந்தார். அருணகிரியின் செந்தமிழ்ப் பாக்களும் அதன் சந்தங்களும் அவரைப் பெரிதும் கவர்ந்திருந்தன. சம்பந்தாண்டானிடம் பேசிய அரசர் நீங்கள் பெரிய தேவி உபாசகர் என்பதை நான் அறிவேன். அருணகிரிநாதர் பரிசுத்தமான யோகி. முருகன் அவரை உண்மையாகவே ஆட்கொண்டதோடு அல்லாமல் பாடல் பாடவும் அடியெடுத்துக் கொடுத்துள்ளான். அவரின் கடந்த கால வாழ்க்கை எவ்விதம் இருந்தாலும் இப்போது அவர் வாழ்வது பரிசுத்தமான துறவு வாழ்க்கை. முருகன் அருணகிரியை ஆட்கொள்ளவில்லை என்பதை உம்மால் நிரூபிக்க முடியுமா? என்று கேட்டான் அரசன். சம்பந்தாண்டான் இது தான் சமயம் என சாமர்த்தியமாக மன்னா தன்னை முருகனடிமை என்று சொல்லிக் கொண்டிருக்கும் அந்த அருணகிரியை அழையுங்கள். தேவி உபாசகன் ஆன நான் என் பக்தியால் அதன் சக்தியால் அந்தத் தேவியை இங்கே தோன்றச் செய்கிறேன். அதே போல் அருணகிரியும் தன் பக்தியால் அந்த முருகனைத் தோன்றச் செய்ய வேண்டும். தோல்வி அடைந்தால் ஊரை விட்டே ஓடவேண்டும் சம்மதமா? என்று சவால் விட்டான். அரசனும் தேவி தரிசனம் ஒருபக்கம் இன்னொரு பக்கம் முருகன் தரிசனம் சம்மதமே என்று சொன்னான் அரசன். குறிப்பிட்ட நாளும் வந்தது. அருணகிரிநாதருக்கும் விஷயம் சொல்லப்பட்டது. என் முருகன் என் அப்பன் என்னைக் கைவிட மாட்டான் என்ற பூரண நம்பிக்கையுடன் அவரும் சம்மதம் சொல்லிவிட்டார். மந்திர தந்திரங்களில் தேர்ந்த சம்பந்தாண்டான் தன் தந்திர வித்தையால் தேவியை வரவழைக்க முடியும் என்ற நம்பிக்கையில் இருந்தான். ஊரெங்கும் செய்தி பரவியது.

அருணகிரிநாதரை எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று எண்ணிய சம்பந்தாண்டான் தன் தவ வலிமையால் தேவியிடம் அருணகிரிநாதரை வெற்றி பெற அருளவேண்டும் என்று கேட்டுக் கொண்டான். அதற்கு தேவியோ உனது தவ வலிமை அனைத்தையும் நீ வீணடித்து விட்டாய். ஆகவே இனி உனக்கு எமது காட்சி கிடைக்காது என்று அசீரிரியாக பதில் அளித்தாள். உடனே சம்பந்தாண்டான் தேவியிடம் ஒரு சிறு விண்ணப்பம் வைத்தான். அருணகிரிநாதர் நாளை முருகனை அழைத்துப் பாடும் போது முருகனை உனது அன்பினால் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். அருணகிரிநாதரின் புகழை உலகறியச் செய்ய நினைத்த தேவி இதற்கு சம்மதித்தாள்.

அருணகிரிநாதர் அரசர் சொல்லி அனுப்பிய இடத்திற்கு வந்தார். அனைவரும் அங்கு கூடி விட்டார்கள். தேவி உபாசகன் ஆன சம்பந்தாண்டான் தான் வழிபடும் தேவி தான் அழைத்ததும் வந்து விடுவாள். முதலில் அருணகிரிநாதரை முருகரின் தரிசனத்தை கிடைக்க செய்யுங்கள் என்றான். அனைவரும் அருணகிரியாரை மிகுந்த ஆவலுடன் நோக்கினார்கள். அருணகிரிநாதர் முருகரை நினைத்து திருப்புகழ் பாடினார். முருகரை தேவி தன் அன்பானால் பிடித்து வைத்துக் கொண்டிருந்தாள் ஆகையால் முருகர் தரிசனம் அங்கு கிடைக்கவில்லை. முருகர் ஏன் வரவில்லை என்று தன் ஞான திருஷ்டியில் கண்டு கொண்ட அருணகிரிநாதர் சம்பாந்தாண்டானின் சூழ்ச்சியை அறிந்து கொண்டார். முருகனை மனதில் தியானித்துப் பின்னர் அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் வடக்குப் பக்கம் இருக்கும் மண்டபத்தின் வடகீழ்த் தம்பத்தில் முருகன் காட்சி அளிக்கும்படி வேண்டிக் கொள்வதாயும் இறைவன் திருவருளால் காட்சி கிடைக்கும் என்றும் சொல்லி விட்டுக் கோயிலை நோக்கி நடக்கலானார். அனைவரும் அவரைப் பின் தொடர்ந்து சென்றார்கள். அருணகிரிநாதர் பக்திப் பரவசத்துடன் மனமுருகி மயிலை துதித்துப் பாட ஆரம்பித்தார். பாடி முடித்ததுதான் தாமதம் மயில் வாகனன் மயில் மீது அமர்ந்த திருக்கோலத்தில் கையில் வேல் தாங்கியபடி அங்கே அனைவரும் பார்க்கும் வண்ணம் தோன்றி மறைய கூடி இருந்த கூட்டம் பக்திப் பரவசத்தில் ஆனந்தக் கூத்தாடியது. அருணகிரிநாதரின் மகிமையை அனைவரும் உணர்ந்து கொண்டார்கள். இப்போது சம்பந்தாண்டானின் முறை வந்தது. சம்பந்தாண்டான் எவ்வளவோ முயற்சித்தும் தேவி தோன்றவே இல்லை. கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. சம்பந்தாண்டானின் தோல்வி உறுதியானது. சம்பந்தாண்டான் அவமானத்துடன் வெளியேறினான்.

அருணகிரிநாதர் தொடர்ந்து தல யாத்திரையாகத் தமிழ்நாட்டில் உள்ள தலங்களைத் தரிசித்து அங்குள்ள முருகப் பெருமான் மேல் திருப்புகழ் பாக்களைப் பாடி வந்தார். வயலூருக்கு வருமாறு ஆணையிட்ட முருகனை வயலூர் சென்று தரிசித்தார். விராலிமலைக்கு வருமாறு கூறி வழியையும் காண்பித்தார். அத்தலத்தையும் அருணகிரிநாதர் சென்று வணங்கினார். முருகனை நாடி திருப்பரங்குன்றம் வந்தார். மனமுருகி வழிபட்டபின் திருச்செந்தூர் வந்தார். திருச்செந்தூர் செல்லும் வழி காடாக இருந்ததால் மயில் அவருக்கு வழி காட்டியது. செந்திலாண்டவன் அவருக்கு நடராஜரைப் போல திருத்தாண்டவம் ஆடினார். ஆறுபடை வீடுகள் தவிர தமிழகத்தில் சுமார் 200 தலங்களைத் தரிசித்து வடநாடு ஈழநாடு முதலிய பல தலங்களுக்கும் சென்று அங்குள்ள முருகனைத் தரிசித்தார்.

அருணகிரிநாதர் ஒவ்வொரு ஊராக சென்று கொண்டிருக்கும் போது இடையில் வந்த தென்பெண்ணையாற்றின் வளங்கொழிக்கும் நடுநாட்டில் சனியூர் என்ற ஊரில் ஒரு வைணவப் பெரியார் இருந்தார். அவர் பெயர் வில்லிபுத்தூரார். இவர் சந்தக்கவி பாடுவதில் வல்லவர். வியாச பாரதக் கதையை தமிழில் மணிப்பிரவாள நடையில் எழுதி பெரும் புகழ் பெற்றவர். வரபதியாட் கொண்டான் என்ற கொங்கு நாட்டு அரசனின் அரசவைப் புலவராக வீற்றிருந்து அரசர்க்குரிய அனைத்து மரியாதைகளுடன் வரகவி என்று மக்களால் போற்றப்பட்டவர் இப்படி தனக்கு ஏற்பட்ட புகழால் கல்விச் செருக்குண்ட வரகவி தம்மிடம் வாதுக்கு வருபவர்களை வென்று கவிபாடி காது அறுப்பார். இவர் அருணகிரியாரின் அருட்செயல்களைக் கேட்டு பொறாமை அடைந்தார். கவிஞர்களின் காதுகளை அறுக்கும் அடாத செயலைக் கேட்டறிந்த அருணகிரியார் வருத்தப்பட்டார். இச்செயல் இனி நடக்காதவாறு தடுக்க வேண்டும் என்ற கருணையினால் வில்லிபுத்தூராரை சந்தித்து போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். மன்னர்கள் கூடிய பேரவையில் அருணகிரநாதருக்கும் வில்லியாருக்கும் பல்வேறு வகையான வாதங்கள் நடந்தன. ஒரு முடிவுக்கு வர இயலாத நிலையில் ஒருவர் பாட மற்றொருவர் பொருள் கூறவேண்டும் என்ற நிபந்தனை ஏற்பட்டது. பொருள் சொல்ல முடியாதவர் தோற்றவராவர் என முடிவு செய்யப்பட்டது. முதலில் அருணகிநாதர் கந்தர் அந்தாதி என்ற பிரபந்தம் பாடினார். ஒவ்வொரு பாடலுக்கும் வில்லியார் பொருள் விளக்கம் கூறிவந்தார். 54-ஆம் பாடலகிய

திதத்தத்தத் தித்தக திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதிதித்த தேதுத்த தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாத திதேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே என்ற பாடலுக்கு பொருள் கூற முடியாமல் வில்லிபுத்தூரார் திகைத்தார். பாடல் முழுவதும் தகர வர்க்கத்தால் ஆனது இப்படி ஒரு பாடல் இருக்காது இது பொய் பாடல் என்று வில்லிபுத்தூரார் கூறினார். இது மெய்ப்பாடலே இப்பாடலின் விளக்கத்தை கற்றோர் ஏற்றுக் கொள்ளுமாறு அருணகிரிநாதர் எடுத்துரைத்தார். அரசவை அருணகிரியாரைப் பாராட்டியது. வில்லிபுத்தூரார் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு காதருக்கும் கருவியை அருணகிரியாரிடம் கொடுத்து தன் காதை அறுக்குமாறு செருக்கு அழிந்து பணிந்து நின்றார். கருணைமிகுந்த அருணகிரிநாதர் அவ்வாறு செய்யவில்லை. இனி எங்கும் யாரையும் வாதுக்கு இழுத்து காதை அறுக்காதீர்கள். நன்று தமிழ்ப்பணி செய்வீர் என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு கிளம்பினார். அன்று முதல் காதறுக்கும் தொழிலைக் கைவிட்டார் வில்லிபுத்தூரார். கருணைக்கு அருணகிரி என மக்களால் போற்றப்பட்ட அருணகிரிநாதர் மீண்டும் திருவண்ணாமலை வந்தடைந்தார்.

அருணகிரிநாதரிடம் தோல்வி அடைந்த சம்பந்தாண்டான் அவரை பழி வாங்கத் துடித்தான். அந்த நேரத்திற்காக காத்திருந்தான். சில ஆண்டுகளில் மன்னன் பிரபுடதேவனின் கண் பார்வையில் கோளாறு ஏற்பட்டது. அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சம்பந்தாண்டான் தேவலோகத்தில் உள்ள பாரிஜாத மலரை கொண்டு வந்தால் மன்னனுக்கு மீண்டும் பார்வை கிடைக்கும் என்றான். அதோடு அந்த மலரை கொண்டு வரும் ஆற்றல் அருணகிரிநாதருக்கு மட்டுமே இருப்பதாகவும் கூறினான். உடனே அருணகிரிநாதரை அழைத்த மன்னன் தேவலோகம் சென்று பாரிஜாத மலரை கொண்டு வரும்படி கேட்டுக் கொண்டார். அதை ஏற்றுக் கொண்ட அருணகிரிநாதர் திருவண்ணாமலை பேக் கோபுரத்துக்கு சென்றார். அங்கு தவத்தில் ஆழ்ந்தார். பிறகு கூடு விட்டு கூடு பாயும் சக்தி மூலம் தனது உயிரை உடம்பில் இருந்து பிரித்தார். அங்கு இறந்து கிடந்த கிளி உடம்பில் உயிரை செலுத்தி தேவலோகத்துக்கு பறந்து சென்றார். இதையெல்லாம் மறைந்து நின்று பார்த்துக் கொண்டிருந்த சம்பந்தாண்டான் சடலமாக கிடந்த அருணகிரிநாதரின் உடலை அரசனிடம் காண்பித்து அருணகிரிநாதர் இறந்து விட்டார் என்று கூறி அனைவரையும் நம்ப வைத்தான். அரசனும் உண்மை அறியாது அவ்வுடலைத் தகனம் செய்தான். பாரிஜாத மலருடன் திரும்பிய அருணகிரிநாதர் தம் உடலை காணாது தேடினார். தன் உடல் அழிக்கப்பட்டதை கடவுள் செயலாகக் கருதினார்.

அருணகிரிநாதர் கிளி உருவத்தில் சென்று மன்னனிடம் பாரிஜாத மலரை கொடுத்தார். அப்போது அவர் மன்னிடம் நான் இறைவனிடம் சுகபதம் (முக்தி) வேண்டினேன். எனக்கு சுக (கிளி) உருவம் கொடுத்து விட்டார் என்றார். அதன்பிறகு கிளி உருவிலேயே கோபுரத்தில் அமர்ந்து கந்தர் அந்தாதி திருவகுப்பு மற்றும் கந்தர் அனுபூதியை அருணகிரிநாதர் பாடினார். ஒரு ஆனி மாதம் மூல நட்சத்திரம் கூடிய பவுர்ணமி நாளில் முருகனின் திருவடியை அருணகிரிநாதர் அடைந்தார். அவரது ஆன்மாவை தாங்கியிருந்த கிளி உண்ணாமுலை அம்மன் கையில் போய் அமர்ந்து விட்டதாகவும் திருத்தணியில் உள்ள முருகன் கையில் அமர்ந்ததாகவும் இருவேறு கருத்துக்கள் உள்ளது. திருவண்ணாமலை தலத்தில் அருணகிரிநாதர் கோபுரத்தின் உச்சியில் இருந்து கீழே குதித்த போது முருகரால் தாங்கி பிடிக்கப்பட்ட இடத்தில் கோபுரத்து இளையனார் என்ற பெயரிலும் கம்பத்தில் முருகர் காட்சியளித்த இடத்தில் கம்பத்து இளையனார் என்றும் முருகனுக்கு சன்னதிகள் அமைந்துள்ளன.

அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழ் பாடல்கள் பல ஆண்டுகளாக இங்கும் அங்கும் எனச்சில ஓலைச் சுவடிகளில் பிரதி இருந்தன. 1871 இல் வ.த. சுப்ரமணிய பிள்ளை ஒரு மாவட்ட நடுவராக பணியாற்றியவர். அவர் சிதம்பரம் சுற்றுப்பயணத்தில் இருந்த போது அதிகாலை பண்டாரம் ஒருவரால் ஒரு திருப்புகழ் பாடலின் வரிகளை கேட்கும் வாய்ப்பைப் பெற்றார். பாடலால் ஈர்க்கப்பட்ட அவர் திருப்புகழ் பாடல்களின் முழுத் தொகுப்பையும் தேடும் பணியை மேற்கொள்ள முடிவு செய்தார். அவர் தென்னிந்தியா முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். எழுத்தோலை சுவடிகள் உள்ளிட்ட திருப்புகழ் கையெழுத்துப் பிரதிகளை சேகரித்து இரண்டு தொகுதி நூல்களாக வெளியிட்டார். அவரது மறைவுக்குப் பிறகு அவரது மகன் வ.சு செங்கல்வராய பிள்ளையால் விளக்கம் எழுதப்பட்டு புத்தகமாக வெளியிடப்பட்டது. திருப்புகழை மக்களிடையே பரவச் செய்தவர்களில் ஒருவர் வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் ஆவார். திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரர் மாணிக்கவாசகர் கண்ணப்ப நாயனார் திருமழிசை ஆழ்வார் முதலிய அடியார்கள் குறித்தும் திருப்புகழில் அருணகிரிநாதர் குறிப்பிட்டுள்ளார்.

அருணகிரிநாதர் இயற்றியவை

கந்தர் அந்தாதி 102 பாடல்கள்
கந்தர் அலங்காரம் 108 பாடல்கள்
கந்தரனுபூதி 52 பாடல்கள்
திருப்புகழ் 1307 பாடல்கள்
திருவகுப்பு 25 பாடல்கள்
சேவல் விருத்தம் 11 பாடல்கள்
மயில் விருத்தம் 11 பாடல்கள்
வேல் விருத்தம் 11 பாடல்கள்
திருவெழுகூற்றிருக்கை

விஷ்வக்சேனர்

விஷ்வக்சேனர்

வைகுண்டத்தில் திருமாலுக்கு இடைவிடாது தொண்டு செய்பவர்களில் முதன்மையானவர்கள் மூவர். அனந்தன் கருடன் விஷ்வக்சேனர். துலா மாசம் பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர் விஷ்வக்சேனர். இவரின் மனைவி பெயர் சூத்ரவதி. இவர் எல்லாத் திசைகளிலும் விஷ்ணுவின் படைகளுக்கு சேனைத் தலைவராக விளங்குகிறார். ஆகையால் இவர் சேனைமுதலி என்றும் சேனாதிபதி ஆழ்வான் என்றும் பெயர் பெற்றார். விஷ்ணு என்ன நினைக்கிறாரோ அதை உணர்ந்து செயல்படுத்தக்கூடிய வல்லமை வாய்ந்தவர் விஷ்வக்சேனர். இவரின் கையில் ஒரு பிரம்பு ஒன்று இருக்கும். செங்கோல் போன்ற இதை ஏந்தி தேவர்கள் முனிவர்கள் யட்சர்கள் கந்தர்வர்கள் கின்னரர்கள் கிம்புருடர்கள் மருத கணங்கள் வித்யாதரர்கள் ஆழ்வார்கள் மற்றும் அடியார்கள் என்று விஷ்ணுவைப் தரிசிக்க வரும் கூட்டத்தை கட்டுப்படுத்துவார். நம்மாழ்வாருக்கு உபதேசம் செய்த பெருமை உடையவர். பராசர பட்டரால் வணங்கப்பட்ட பெருமைக்குரியவர். சடகோபர் இவரின் அம்சமாகவே அவதரித்தார். இத்தனை பெருமை உடையவர் விஷ்வக்சேனர்.

ஒரு முறை சலந்திரன் என்னும் அரக்கனை அழிக்க விஷ்ணுவுக்கு ஈஸ்வரன் ஒரு சக்ராயுதத்தைக் கொடுத்தார். அந்த சக்ராயுதத்தை விஷ்ணு வீரபத்திரர் மீது கோபத்தில் ஏவினார். வீரபத்திரர் கபாலங்களைக் கோத்து மாலையாக அணிந்திருப்பார். அதில் ஒரு வெண் தலை கபாலம் விஷ்ணு ஏவிய சக்ராயுதத்தை வாயை அகலமா திறந்து விழுங்கி விட்டது. சக்ராயுதத்தை இந்த வெண் தலை கபாலம் விழுங்கி விட்டதே என்று யோசனையில் ஆழ்ந்தார் விஷ்ணு. விஷ்ணு நினைத்ததும் அது விஷ்வக்சேனருக்குத் தெரிந்து விட்டது. வயிரவரின் சூலத்திலிருந்து ஒரு முறை விஷ்வக்சேனரை விஷ்ணு அந்த சக்ராயுதத்தை வைத்து காப்பாற்றி இருந்தார். ஆகையால் அந்த சக்ராயுதத்தை மீட்டு விஷ்ணுவுக்குத் தர வேண்டும் என்று விஷ்வக்சேனர் எண்ணினார்.

வீரபத்திரர் இருக்குமிடம் சென்றார் விஷ்வக்சேனர். அங்கே காவல் காத்துக் கொண்டிருந்த பானுகம்பன் என்ற காவலாளிகள் விஷ்வக்சேனரை உள்ளே விட மறுத்தார்கள். உடனே விஷ்வக்சேனர் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து லிங்கத்தையே வீரபத்திரராக நினைத்து வழிபட்டார். இவரின் பக்தியைப் பார்த்த வீரபத்திரர் இவர் முன்னே தோன்றி என்ன வேண்டும் விஷ்வக்சேனா என்று கேட்டார். அதற்கு விஷ்வக்சேனர் விஷ்ணுவின் சக்ராயுதம் வேண்டும் என்றார். அதற்கு வீரபத்திரர் சக்ராயுதம் என்னிடம் இல்லை. என் கழுத்தில் மாலையாக இருக்கும் இந்த வெண் தலை கபாலம் சக்ராயுதத்தை விழுங்கி விட்டது. அது சிறிது குறும்புத்தனம் உடையது அதனிடம் கேள். அந்த வெண் மலை கபாலம் திருப்பிக் கொடுத்தால் எடுத்து செல் என்றார் வீரபத்திரர்.

விஷ்வக்சேனர் யோசனை செய்தார். சண்டையிட்டோ பிடுங்கியோ அந்த வெண் தலை கபாலத்திடமிருந்து சக்ராயுதத்தை வாங்க முடியாது. ஆகையால் அதன் வழியில் அது வழியிலேயே நாமும் குறும்புத்தனம் செய்வோம். அப்போது அது திரும்பிக் கொடுத்து விடும் என்று எண்ணினார். உடனே தன் உடம்பை அஷ்ட கோணலாக மாற்றினார். அதைப் பார்த்த மற்ற கபாலங்கள் எல்லாம் திகைத்துப் பார்த்து சிரித்தார்கள். விஷ்வக்சேனர் எதற்காக இப்படி செய்கிறார் என்பதை அறிந்த வெண் தலை கபாலம் அமைதியாக இருந்தது. திரும்ப கைகாலை முறுக்கி உடம்பை அஷ்டகோணலாக்கி ஆடி நின்றார். அப்போதும் வெண் தலை கபாலத்துக்கிட்ட லேசான சிரிப்பு மட்டுமே வந்ததே தவிர அந்த சக்ராயுதத்தை கொடுக்காமல் அமைதியாக இருந்தது. மற்ற கபாலங்கள் எல்லாம் சிரித்துக் கொண்டே இருந்தது. மூன்றாவது முறையாக விஷ்வக்சேனர் தன் முகத்தை அஷ்ட கோணலாக்கி கண் வாய் மூக்கு அனைத்தையும் அங்கேயும் இங்கேயும் திருகி அகட விகடம் செய்தார். உடனே ஒரு பெரும் சிரிப்புச் சத்தத்துடன் தன்னை மறந்த அந்த வெண் தலை கபாலம் தன் வாயில் பிடிச்சிருந்த சக்ராயுதத்தை நழுவ விட்டது. இதற்காகவே காத்துக் கொண்டிருந்த விஷ்வக்சேனர் அந்த சக்ராயுதத்தை எடுக்க விரைந்தார்.

வினாயகர் அப்போது அந்த இடத்திற்கு விரைவாக வந்து அதனை எடுத்துக் கொண்டார். வினாயகரிடம் சக்ராயுதம் சென்றதை பார்த்த விஷ்வக்சேனர் இது என்ன சோதனைன்னு மீண்டும் யோசிக்க ஆரம்பித்தார். அப்போது வினாயகர் இதே போல் எனக்காக மீண்டும் ஒரு முறை விகடக் கூத்தாடு அப்போது இந்த சக்ராயுதத்தை தருகிறேன் என்றார். விநாயகருக்காக ஒரு முறை தன் உடம்பு கைகால் முகம் கண் வாய் அனைத்தையும் அஷ்டகோணலாக்கி விகடக் கூத்தாடி அங்கிருந்த அனைவரையும் சிரிக்க வைத்தார் விஷ்வக்சேனர். கைதட்டி சிரித்து மகிழ்ந்த விநாயகர் அந்த சக்ராயுதத்தை விஷ்வக்சேனரிடம் கொடுத்தார். அதை எடுத்து வந்து விஷ்ணுவிடம் சமர்ப்பித்தார் விஷ்வக்சேனர். இதில் மகிழ்ந்த விஷ்ணு விஷ்வக்சேனரை சேனாதிபதியாக்கி அவரைத் தன் தலைமைத் தளபதியாக நியமித்தார்.

சிற்றம்பல நாடிகள்

சிற்றம்பல நாடிகள் என்பவர் 14-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவப் பெரியார். இவர் எப்போதும் மாணவர் திருக்கூட்டத்தோடு வாழ்ந்துவந்தார். வேளாளர் குலத்தில் பிறந்தவர். சீரை என்னும் சீர்காழிப் பகுதியிலுள்ள வேளைநகர் என்னும் புள்ளிருக்குவேளூர் இவரது ஊர். சீர்காழியில் வாழ்ந்த கங்கை மெய்கண்டார் என்பவர் இவரது ஆசிரியர். தில்லைச் சிற்றம்பலத்தை இவர் நாடி சிற்றம்பலத்தையே தனது நாடித்துடிப்பாகக் கொண்டிருந்ததால் சிற்றம்பல நாடிகள் எனப் போற்றி அழைக்கப்பட்டார். 63 சீடர்கள் உள்ள இவருக்கு இவரையும் சேர்த்து 64 பேர் ஒரு திருக்கூட்டமாய்த் திகழ்ந்து வந்தார்கள். இவர்கள் அனைவரும் காழி சிற்றம்பல நாடிகளின் அருளால் ஒரே சமயத்தில் முத்தி பெற்றனர். திருஞான சம்பந்தருக்குப் பின்னர் தம் திருக்கூட்டத்துக்கு ஒரே சமயம் முத்தி பெறச் செய்தவர் காழி சிற்றம்பல நாடிகளே.

சிற்றம்பல நாடிகள் ஒரு நாள் தம் திருக்கூட்டத்துடன் உணவு உண்ண அமர்ந்திருந்தார். உணவு பரிமாறிய சமையல்காரர் தவறுதலாக நெய் என எண்ணி வேப்ப எண்ணையைப் பரிமாறிவிட்டார். சிற்றம்பல நாடிகளும் சீடர்களில் 62 பேரும் அமைதியாக வேப்ப எண்ணெயை நெய்யாகக் கருதி உணவு உண்ண ஆரம்பிக்க கண்ணப்பர் என்னும் ஒருவர் மட்டும் குமட்டினார். சிற்றம்பல நாடிகள் அவரைப் பார்த்து கண்ணப்பா நம் திருக்கூட்டத்தில் இப்படிப் பக்குவமில்லாத ஒருவன் இருப்பது தகுமோ? எனக் கேட்க மனம் வருந்திய அந்தக் கண்ணப்பர் என்னும் சீடர் திருக்கூட்டத்தில் இருந்து விலகி வட தேச யாத்திரைக்கு போய்விட்டார். சிறிது காலத்திற்குப் பின்னர் சிற்றம்பல நாடிகள் ஜீவ சமாதியடையத் திருவுளம் கொண்டார். அப்பகுதியை ஆண்ட அரசனை அழைத்துத் தாம் தம் சீடர்கள் 62 பேரோடும் ஒரே சமயம் சமாதி அடையப் போவதாய்ச் சொல்லிச் சித்திரைத் திருவோண நாளில் அந்நிகழ்ச்சி நடைபெறும் எனவும் கூறினார். தாம் சமாதியில் இறங்க வசதியாகத் தனித்தனியாக 63 சமாதிகள் அமைக்கும்படியும் கூறினார். வியப்படைந்த மன்னனும் அவ்வாறே 63 சமாதிக் குழிகளை அமைத்தான். இந்த அதிசய நிகழ்வைக் காண மக்கள் கூட்டம் கூடியது. சிற்றம்பல நாடிகள் கூடி இருந்த மக்களை வாழ்த்தி ஆசிகள் வழங்கினார். மூன்று வெண்பாக்களைப் பாடித் தமக்கென நிர்ணயிக்கப் பட்ட சமாதிக்குழியில் இறங்கினார். அவ்வாறே சீடர்களும் ஆளுக்கு ஒரு வெண்பாவைப் பாடிவிட்டு அவரவருக்கென நிர்ணயித்த சமாதிக் குழியில் இறங்கினார்கள்.

சிற்றம்பல நாடிகள் தம் குருநாதர் திருவடியில் மனம் ஒன்றி நிட்டையில் ஆழ்ந்து ஜீவ சமாதி அடைந்தார். அவ்வண்ணமே மற்றச் சீடர்களும் தங்கள் குருநாதரான சிற்றம்பல நாடிகளின் திருவடியில் ஒன்றி நிட்டையில் ஆழ்ந்து சமாதி அடைந்தனர். கூடி இருந்த மக்கள் 63 பேர் இருந்த திருக்கூட்டத்தில் ஒருவர் குறைவதைக் கண்டு வியப்புற்று ஒருவருக்கொருவர் அந்த மறைந்த சீடர் எங்கே சென்றாரோ இங்கே நடக்கும் விஷயங்கள் அவருக்குத் தெரியுமோ தெரியாதோ எனப் பேசிக் கொண்டனர். அப்போது திடீரென அங்கே கண்ணப்பர் வந்து சேர்ந்தார். தம் குருவானவர் மற்றச் சீடர் திருக்கூட்டத்தோடு சமாதி அடைந்து கொண்டிருந்ததைக் கண்ட கண்ணப்பர் நமக்கும் இங்கே சமாதிக்குழி அமைக்கவில்லையே என்று மனம் வருந்தி குருநாதரின் சமாதியை வலம் வந்து வணங்கித் தமக்கும் ஓர் இடம் தருமாறு வேண்டி பாடல் பாடினார். அந்த பாடலைப் பாடி முடித்ததுமே சிற்றம்பல நாடிகளின் சமாதி திறந்தது. சிற்றம்பல நாடிகள் கண் விழித்துத் தம் சீடனாம் கண்ணப்பரை நோக்கிக் கையைப் பற்றி அழைத்துத் தம் மடி மீது அமர்த்திக் கொண்டார். தம்மோடு இரண்டறக் கலக்கச் செய்தார். கூடி இருந்த மக்களும் மன்னனும் ஏற்கெனவே தாங்கள் அடைந்திருந்த வியப்புப் போதாது என இப்போது நேரில் கண்ட இந்நிகழ்வால் மேலும் வியந்து போற்றினர். இவரது சமாதி ஒரு கோயிலாகக் கட்டப்பட்டது.

சிற்றம்பல நாடிகள் வரலாற்றில் இந்நிகழ்வு நடந்த இடம் மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் மயிலாடுதுறைக்கு மேற்கே சித்தர்காடு என்ற ஊராக உள்ளது. இப்போதும் இந்த இடம் ஒரு கோயிலாக உள்ளது. சித்தர்காடு பிரம்மபுரீசுவரர் திருக்கோயில் மற்றும் சம்பந்தர் கோவில் என அழைக்கப்படும் இந்தக் கோயிலின் முக்கிய மூர்த்திகளாக பிரம்மபுரீசுவரர் உடனுறை திரிபுரசுந்தரி அருள் பாலிக்கின்றனர். ஈசனின் லிங்கத் திருமேனி இருக்கும் இடமே சிற்றம்பல நாடிகள் ஜீவசமாதி அடைந்த இடம் எனவும் சுற்றிலும் மற்றவர்கள் சமாதி அடைந்தனர் எனவும் கோவில் வரலாறு உள்ளது. ஒவ்வொரு வருடமும் சித்திரைத் திருவோணத்தில் இங்கே சிற்றம்பல நாடிகள் ஜீவசமாதியடைந்த தினம் வெகு விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது.

சிற்றம்பல நாடிகள் இயற்றிய நூல்கள்

இரங்கல் மூன்று
சிவப்பிரகாசக் கருத்து
சிற்றம்பலநாடி கட்டளை
ஞானப் பஃறொடை
திருப்புன்முறுவல்
துகளறுபோதம்
சிற்றம்பலநாடி சாத்திரக்கொத்து

சிற்றம்பல நாடிகளின் மாணாக்கர்கள் இயற்றிய நூல்கள்

அறிவானந்த சித்தியார்
அனுபூதி விளக்கம்
சிற்றம்பல நாடிகள் கலித்துறை
சிற்றம்பலநாடி பரம்பரை
திருச்செந்தூர் அகவல்
சிற்றம்பல நாடி தாலாட்டு
சிற்றம்பல நாடி வெண்பா

சடையாச்சி அம்மாள்

திருவண்ணாமலையில் வாழ்ந்த பெண் சித்தர்களில் குறிப்பிடத்தக்கவர் சிவஞானி சடையாச்சியம்மாள். இவரின் சடை பதினாறு அடி நீளமும் ஒரு அடி அகலமும் இருந்தததால் சடையாச்சி அம்மையார் என்ற பெயர் ஏற்பட்டது. இவர் சடை சாமியார் என்றும் அழைக்கப்பட்டு வந்தார். சடையாச்சி அம்மாளின் இயற்பெயர் சண்முகத்தம்மாள். இவரது சொந்த ஊர் ராஜபாளையம் தனது நாற்பதாம் வயதில் தனது சொந்த ஊரில் இருந்து திருவண்ணாமலை வந்த இவர் இல்லற வாழ்க்கையைத் துறந்து துறவு பூண்டவர். திருவண்ணாமலையில் முலைப்பால் தீர்த்தம் பலாமரத்தடி குகை ஆகியவற்றில் வாழ்ந்து வந்தார். அண்ணாமலையாருக்குத் தும்பைப் பூவால் கட்டிய மாலையை தினமும் சாற்றி வந்தார். ஈசனை எண்ணிப் பல மணி நேரம் தியானம் செய்யும் வழக்கம் கொண்டவர். தும்பைப் பூ போட்டால் துன்பம் தீரும் இது சிவனுக்குப் பிரியமானது என்று பக்தர்களுக்கு எடுத்துரைப்பார் சடையாச்சி அம்மாள். வெயில் மழை புயல் காற்று என்று எந்த இயற்கைச் சீற்றத்திற்கும் அஞ்சாமல் தினந்தோறும் கோயிலுக்கு வந்த சடையாச்சி அம்மாள் நடுவில் ஒரு வார காலம் தரிசனம் செய்யக் கோயிலுக்கு வரவில்லை. அம்மைக்கு என்ன ஆனதோ என்று அர்ச்சகர் கவலையுற்றார். அன்று அர்ச்சகர் கனவில் தோன்றிய சிவன் குளத்தில் நீருக்குள் அவர் அமிழ்ந்திருப்பதாக எடுத்துக் கூறினார். குளத்தில் உள்ள படிக்கட்டுகளுக்கு அடியில் உள்ள இடைவெளியில் படுத்த நிலையில் தியானத்தில் ஆழ்ந்துவிட்டார் சடையாச்சி அம்மையார். ஐந்து நாட்கள் தண்ணீரில் மூழ்கிய நிலையில் இருந்தபொழுதும் அவர் உயிருடன் மீட்க்கப்பட்டார். அதன் பிறகு பல ஆண்டுகள் வாழ்ந்த இவர் திருவண்ணாமலையிலேயே ஜீவ சமாதி அடைந்தார்.

அம்மணி அம்மாள்

திருவண்ணாமலை அருகேயுள்ள சென்ன சமுத்திரம் என்ற ஊரில் கோபால்பிள்ளை ஆயிஅம்மாள் தம்பதிக்கு 1735 ஆம் ஆண்டு மார்கழி மாதம் அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர் அருள்மொழி. இவருக்கு தாண்டவம்பிள்ளை என்ற அண்ணன் ஒருவரும் இருந்தார். அருள்மொழி சிவபெருமான் மீது அளவற்ற பக்தியைக் கொண்டிருந்தார். தினமும் ஊதுவத்தி ஏற்றி வைத்து சாம்பிராணி வைத்து ஓம் நமச்சிவாய என்று மந்திரத்தை சொல்லிக் கொண்டே தினமும் தியானம் செய்வார். வீட்டிற்கு வெளியே சென்றாலும் யாரும் இல்லாத இடத்தில் ஒரு மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்தபடியே இருப்பார். பழங்கள் காய்கள் என்று இயற்கை உணவை மட்டுமே சாப்பிட்டார். தான் அமருகின்ற இடம் எந்த இடமாக இருந்தாலும் அங்கு தண்ணீர் தெளித்து தூய்மை செய்த பின்னரே அமர்வார். இதனைக் கண்ட பெற்றோர் இவள் வயது பெண்கள் எல்லாம் தோழிப் பெண்களோடு விளையாடிக் கொண்டும் காட்டில் வேலை செய்து கொண்டும் இருக்கிறார்கள். இவள் மட்டும் அமைதியுடன் எப்போதும் ஒரே இடத்தில் அமர்ந்திருக்கிறாளே எங்கிருந்து வந்தது இந்தப் பெண்ணிற்கு இவ்வளவு பக்தி என்று குழப்பத்துடனே இருந்தார்கள். இவளுக்கு திருமணம் செய்து வைத்தால் அனைத்தும் சரியாகும் என்ற எண்ணத்தில் வரன் பார்க்க ஆரம்பித்து சொந்த மாமன் மகனை மணமகனாகப் பேசி முடித்தார்கள் தாய் தந்தை மற்றும் உறவினர்கள். ஒரு நாள் அருள்மொழியை பெண் பார்க்க வருவதாகவும் தயாராக இருக்கும்படியும் தாய் கூறினார். துடித்துப் போனாள் அருள்மொழி என்ன செய்வது? என்று தெரியாமல் திகைத்தாள். நான் இதற்காக பிறவி எடுக்கவில்லை என்று எவ்வளவோ பேசிப் பார்த்தாள் பயனில்லை. பரிசம் போட்டுவிட்டால் எப்படியாவது திருமணம் செய்து வைத்துவிடுவார்கள் என்று பயந்தாள்.

ஓம் நமச்சிவாய மந்திரத்தை சொல்லியபடி திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற தெளிவான மனதோடு கால் போன போக்கில் வேகமாக நடக்கத் துவங்கினாள். வீட்டிலிருந்து 1 கிமீ தூரத்தில் உள்ள கோமுட்டிக் குளத்தின் முன் சென்று நின்றாள். எல்லாம் உன் செயல் என்று இறைவனை நினைத்து மந்திரத்தை உச்சரித்தபடி அந்தக் குளத்தில் குதித்து விட்டாள் அருள்மொழி. குளத்தைச் சுற்றி இருந்த வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் அவள் விழுந்ததைப் பார்த்து ஓடி வந்தார்கள். குளத்தில் குதித்துத் தேடிப் பார்த்தார்கள். அவளது தாய் தந்தை அழுதபடியே குளத்தின் அருகில் அமர்ந்து விட்டார்கள். குளத்திற்குள் அவள் எங்கு தேடியும் அவள் கிடைக்கவில்லை. அனைவரும் எவ்வளவோ சொல்லியும் அவளது தாய் தந்தை குளக்கரையை விட்டு நகர மாட்டேன் என்று குளத்தைப் பார்த்தபடி அங்கேயே இருந்தார்கள். மூன்று நாள் சென்றது. மூன்றாவது நாள் குளம் திடீரென சல சலத்தது. தாயும் தந்தையும் ஆர்வத்தோடு அருகே சென்று பார்த்தார்கள். அங்கே தேஜசான முகத்துடன் உயிருடன் வெளிவந்தாள் அருள்மொழி. செய்தியே கேள்விப்பட்டு ஊரில் உள்ளவர்கள் அனைவரும் கூடிவிட்டார்கள். அனைவருக்கும் அங்கிருந்த குளக்கரை மணலை எடுத்து கொடுத்தாள் அருள்மொழி. அது அவல் பொரியாக பிரசாதமாக மாறி அனைவரின் கையில் இருந்தது. தனக்கு சிவபெருமானே குருவாக இருந்து யோக நிலையைக் கற்றுத் தந்ததாகவும் தான் ஒரு பெண் சித்தராக மாறி விட்டதாகவும் கூறிய அருள்மொழி தன் பெயர் அம்மணி அம்மாள் என்றும் கூறினாள். திருமணப் பேச்சை அதோடு விட்டார்கள் தாய் தந்தையர். சில நாட்கள் தியானம் பூஜைகள் என்று அமைதியாக சென்றது.

அம்மணி அம்மாளின் இல்லத்தில் உள்ள அனைவரும் ஒரு நாள் அண்ணாமலையாரை தரிசிக்க நடை பயணமாக திருவண்ணாமலை புறப்பட்டார்கள். பல மணி நேர பயணத்துக்குப் பிறகு தெரிந்த அண்ணாமலையின் கம்பீரம் அம்மணி அம்மாளுக்கு பரவசத்தை ஏற்படுத்தியது. அனைவரும் கோயிலை வந்தடைந்து பிராகாரங்களை வலம் வந்து அண்ணாமலையார் சந்நிதி முன்பு போய் நின்றார்கள். அங்கே இறைவனின் திருமேனியைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்ட அம்மணி அம்மாள் அர்ச்சகர் தந்த விபூதியை அள்ளி நெற்றி நிறையப் பூசிக்கொண்டார். உண்ணாமுலை அம்மன் உள்ளிட்ட எல்லாத் தெய்வங்களின் திருச்சந்நிதி தரிசனமும் முடிந்தாயிற்று. எல்லோரும் வெளியே வந்தார்கள். ஊருக்குப் புறப்படத் தயாராகி அருள்மொழி வா புறப்படலாம் என்று தாயார் அழைத்தார். அம்மா நான் ஊருக்கு வரவில்லை எனக்கு திருவண்ணாமலை மிகவும் பிடித்துப் போய்விட்டது. நான் இங்கேயே இருந்து விடுகிறேன் என்றார் அம்மணி அம்மாள். வயதுக்கு வந்த பெண்ணை எப்படியம்மா தனியாக விட்டுப்போக முடியும்? உன் விருப்பப்படி உன்னை விட்டுச் சென்றால் ஊரார் நமது குடும்பத்தை கேலி பேசுவார்களே யாத்திரை சென்ற இடத்தில் பெண்ணை விட்டுவிட்டு வந்துவிட்டாள் என்றல்லவா புரளி பேசுவார்கள்? அப்படி ஒரு கெட்டப் பெயர் உன்னால் எனக்கு ஏற்பட வேண்டுமா என்று அழுதார் அம்மணி அம்மாளின் தாயார். எதைப்பற்றியும் கவலைப்படாத அம்மணி அம்மாள் அண்ணாமலையாரின் பரவசத்திலேயே லயித்து வரவில்லை என்று முடிவோடு இருந்தார். அவரது தாயும் தந்தையும் பிறகு சமாதானமாகி தனது உறவினர் வீட்டில் அவரைச் சிறிது காலத்துக்குப் பாதுகாப்பாக ஒப்படைத்து விட்டு சென்னசமுத்திரம் புறப்பட்டுச் சென்றார்கள்.

அம்மணி அம்மாள் உறவினர் வீட்டில் தங்கியிருந்தபடியே அண்ணாமலையாரை தரிசிக்க தினமும் கோயிலுக்கு வந்து விடுவார். பெரும்பாலான நேரங்கள் அண்ணாமலையார் சந்நிதியிலேயே கழித்தார் நாட்கள் வேகமாக நகர்ந்தன. திருவண்ணாமலையிலேயே நிரந்தரமாகத் தங்கி துறவியாக மாறிவிட்டார் அம்மணி அம்மாள். தினமும் அண்ணாமலையாருக்கு தொண்டு செய்வதும் கிரிவலம் செல்வதுமாக இருந்தார். திருவண்ணாமலை வடக்கு கோபுரம் முற்றுப் பெறாமல் அடித்தளத்துடன் இருப்பதை எண்ணிக் கொண்டே இருந்தார் அம்மணி அம்மாள்.

திருவண்ணாமலை பகுதியை ஆண்ட அரசர்களில் புகழ்பெற்றவர் மூன்றாம் வீர வல்லாள மகாராஜா. தற்போது திருவண்ணாமலை கோவிலுக்கு இருக்கும் வல்லாள மகாராஜா என்ற பெயருடைய கோபுரத்தை நிர்மாணித்தவர். இவர் கோவிலின் வடக்கு கோபுரம் கட்ட வேண்டும் என்று அடித்தளம் அமைத்தார். அதன் பின்பு அவர் எவ்வளவு முயற்சி செய்தும் அந்த கோபுரத்தை அவரால் தொடர்ந்து கட்ட முடியவில்லை. பல வகையில் தடைகள் வந்து கொண்டே இருந்தது. இதனால் வருத்தமடைந்த வல்லாள மகாராஜா திருவண்ணாமலையில் இருந்த ஒரு சித்தரிடம் இதுபற்றிக் கேட்டார். அதற்கு அவர் இந்த கோபுரத்தை உன்னால் கட்ட முடியாது. சரியான நேரம் வரும் போது இதனைக் கட்ட இறைவன் அருளால் ஒரு பெண் வருவாள் அவளாளே இந்த கோபுரம் கட்டி முடிக்கப்படும் என்று கூறினார். அதன் பின் வடக்கு கோபுரம் இறைவனின் விருப்பப்படி நடக்கட்டும் என்று விட்டுவிட்டார். அதன் பிறகு வந்த எத்தனையோ பேர் அந்த கோபுரத்தைக் கட்ட முயற்சி செய்தார்கள் அனைத்தும் முயற்சியுடனே நின்றது.

அம்மணி அம்மாளிடம் வடக்குக் கோபுரத்தை கட்டும் பணியைத் தொடங்கு என்று ஈசன் ஒருநாள் உத்தரவிட்டார். அம்மணி அம்மாள் இறைவனின் பரிபூரண அருளைப் பெற்றிருந்தாலும் முதலில் அவருக்கு பிரமிப்பாகத்தான் இருந்தது. ஆனாலும் இறைவனின் ஆணையை நிறைவேற்ற முடிவு செய்து அதற்கான பணியை ஆரம்பித்தார். அம்மணி அம்மாளின் ஆற்றலை அறிந்து வியந்த வணிகர்களும் பொதுமக்களும் தங்களால் இயன்றதைக் கொடுத்தார்கள். சேர்ந்த பணத்தைக் கொண்டு கோபுரம் கட்டும் வேலையை அவர் ஆரம்பித்தார். ஒரு நாள் அந்த ஊரில் இருந்த ஒரு வியாபாரியின் வீட்டிற்கு சென்ற அம்மணி அம்மாள் கோபுரம் கட்டும் பணிக்கு தங்களால் இயன்றதை கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். அம்மணி அம்மாளைப் பற்றி தெரியாத அந்த வியாபாரி அவரின் எளிமையான துறவித் தோற்றத்தைக் கண்டு இவர் ஏமாற்றுகிறாறோ என்ற எண்ணத்தில் பணம் கொடுக்க விரும்பாமல் பணம் ஏதும் தற்போது என்னிடம் இல்லை என்றார். இதனைக் கேட்ட அம்மணி அம்மாள் குறிப்பிட்ட பணத்தை அளவாக சொல்லி இந்த பணம் தற்போது உன்னுடைய பணப் பெட்டியில் உள்ளது. சரியாக இருக்கிறதா பார்த்துச் சொல் என்றார். அம்மணி அம்மாள் சரியாக சொன்னதைக் கேட்டு திகைத்த வியாபாரி இவர் ஏமாற்றுக்காரர் இல்லை மிகப்பெரிய ஞானி என்பதை உணர்ந்து அவரிடம் மன்னிப்பு கேட்டதோடு மட்டுமல்லாமல் தன்னால் இயன்றவரை கோபுரம் கட்டும் பணிக்கு பணத்தை கொடுத்தார். கோபுரம் ஒவ்வொரு நிலையாக கட்டி முடிக்கப்பட்டது. ஒன்று முதல் ஐந்து நிலைகள் வரை கட்டி முடிக்கப்பட்டபோது அம்மணி அம்மாளுக்கு மீண்டும் பணம் தேவைப்பட்டது. பொது மக்களிடமும் வணிகர்களிடமும் திரும்ப திரும்ப எத்தனைத் தடவைதான் பண உதவியும் பொருள் உதவியும் கேட்க முடியும்? எனவே மைசூர் மகாராஜாவிடம் போய் பொன் பொருள் உதவிகள் கேட்க அவர் தீர்மானித்தார் மறுநாளே மைசூருக்கு பயணமானார்.

அம்மணி அம்மாள் மைசூர் அரண்மனையை அடைந்தபோது வாசலில் நின்ற வாயிற்காப்பாளன் அவரின் எளிமையான கோலத்தைப் பார்த்து சந்தேகம் அடைந்து உள்ளே விட மறுத்தான். அம்மணி அம்மாள் அரண்மனை வாயிலின் ஒரு ஓரமாக அமைதியாக அமர்ந்தார் காலையில் வந்தவர் மதியம் வரை ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டிருந்தார். அதே சமயத்தில் அரண்மனை உள்ளே தர்பார் மண்டபத்திற்கு லகிமா ஆற்றலால் உலகின் எந்தப் பகுதிக்கும் சென்று வந்து விடும் சக்தியைப் பயன்படுத்தி அம்மணி அம்மாள் அரண்மனைக்குள் சென்றார். அதே சமயத்தில் அரண்மனை வாசலில் வாயில் காப்பாளனால் தடுக்கப்பட்ட இடத்திலும் அம்மணி அம்மாள் இருந்தார். ஆக ஒரே நேரத்தில் தனது சக்தியால் இரண்டு இடத்திலும் தன்னை வெளிப்படுத்திக் காட்டினார். உரிய அனுமதியின்றி ஒரு பெண் தன் அருகே வந்து நிற்பதைக் கண்டதும் மகாராஜா மிகவும் ஆச்சரியமடைந்தார். நீ யார்? எப்படி உள்ளே வந்தாய்? உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டார். அம்மணி அம்மாள் தன்னைப் பற்றியும் திருவண்ணாமலை ஆலயத்தில் கோபுரம் கட்டி வரும் தகவலையும் சொல்லி அந்த கோபுரப் பணியை நிறைவு செய்ய பொன்னும் பொருளும் கேட்க வந்தோம். வாயிற்காப்பாளன் தன்னை உள்ளே விட மறுத்ததால் ஒரே நேரத்தில் 2 இடங்களில் தோன்றும் சித்தாடல் மூலம் உள்ளே வந்ததாக தெரிவித்தார். இதைக் கேட்டதும் மைசூர் மகாராஜா நம்ப முடியாமல் வாயிற்காவலனை வரச் சொல்லி உத்தரவிட்டார். மகாராஜா இருக்கும் அவைக்குள் வந்த வாயிற் காவலன் சற்று அதிர்ச்சியுடன் அம்மணி அம்மாளைப் பார்த்து நான் உங்களை உள்ளே விடவில்லையே வெளியில் தானே அமர்ந்திருந்தீர்கள். உள்ளே எப்படி வந்தீர்கள்? என்றான். உடனே மகாராஜா நீண்ட நேரமாக அந்த அம்மாளுடன் தான் பேசிக் கொண்டிருப்பதாக கூறி விட்டு வாயிற் காவலனுடன் விறுவிறுவென வாசல் பகுதிக்கு வந்தார். அங்கும் ஒரு ஓரமாக அம்மணி அம்மாள் அமர்ந்திருந்தார். அவரை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றபோது சபைக்குள் இருந்த அம்மணி அம்மாள் மாயமாய் மறைந்திருந்தார்.

அம்மணி அம்மாள் சாதாரண பெண் அல்ல என்பதை மகாராஜா புரிந்து கொண்டார். அம்மணி அம்மாள் வடிவில் அண்ணாமலையாரே வந்து விட்டதாக கருதினார் நன்கு உபசரித்தார். பட்டுப்புடவை ஒன்று பரிசளித்தார். பிறகு தனது குதிரைகள் மற்றும் ஓட்டகங்கள் நிறைய பொன்னும் பொருளும் ஏற்றி கோபுரத்தைக் கட்டி முடிக்குமாறு அம்மணி அம்மாளை மகாராஜா கேட்டுக் கொண்டார். மகாராஜா கொடுத்த அனைத்து பொன் பொருளுடன் மஞ்சவாடிக் கணவாய் என்ற இடத்தை கடந்த பொழுது ஒரு கொள்ளையர்கள் கூட்டம் அவரை சூழ்ந்து கொண்டார்கள். அம்மணி அம்மாள் அவர்களிடம் இந்த பொன் பொருள் அனைத்தும் சிவனுடையது ஆகவே தொடதீர்கள் என்று எச்சரித்தார். இதனை காதில் வாங்காத கொள்ளையர்கள் குதிரைகள் ஒட்டகம் மேல் இருந்த பொன் பொருளை கொள்ளை அடிக்கும் நோக்கில் தொட்டதும் அனைவரின் கண்களும் தெரியாமல் போனது. பயந்து திருந்திய கொள்ளையர்கள் அம்மணி அம்மாளை சரணடைந்து மன்னிக்கும் படி கேட்டுக் கொண்டார்கள். அம்மணி அம்மாளும் அவர்களை மன்னித்து தன்னிடம் இருந்த விபூதியை கொள்ளையர்களிடம் கொடுத்தார். விபூதியை பெற்ற கொள்ளையர்கள் தங்களின் நெற்றியில் பூசிக் கொண்டதும் அனைவரின் பார்வையும் மீண்டும் திரும்பி அண்ணாமலையாரின் பெருமையை தெரிந்து கொண்டார்கள். அதன்பின் அனைவரும் அம்மணி அம்மாளுடன் திருவண்ணாமலை வந்து கோவில் கோபுரத்தை கட்ட உதவி செய்ய வேண்டும் என்று அவருடனேயே புறப்பட்டார்கள்.

அம்மணி அம்மாள் திருவண்ணாமலை அருகை உள்ள மசார் என்ற கிராமத்தின் வழியாக வந்து கொண்டிருந்த போது ஒட்டகங்கள் தண்ணீர் தாகத்தில் அங்கு இருந்த நீரை குடித்துக் கொண்டிருந்தது. இதனை அங்கு பார்த்த ஒருவர் ஒரு ஒட்டகத்தின் மீது உள்ள மூட்டையை பிரித்துப் பார்த்தார். மூட்டை நிறைய வெள்ளிப் பணத்தைக் கண்டதும் மூட்டையை அப்படியே எடுத்துக் கொண்டு தனது வீட்டில் பூமிக்கு அடியில் பதுக்கி வைத்தார். வெள்ளிப் பணம் இருந்த மூட்டை இல்லாமல் ஒட்டகம் மட்டும் மற்ற ஒட்டகத்துடன் திருவண்ணாமலை சென்று சேர்ந்தது. அம்மணி அம்மாள் திருவண்ணாமலை வந்து சேர்ந்ததும் கொண்டு வந்த பொன் பொருளை சரி பார்த்தார். ஒரு ஒட்டகத்தில் இருந்த மூட்டை மட்டும் காணாமல் இருந்ததைக் கண்டதும் தனது தியானத்தின் வழியாக என்ன நடந்தது என்பதை தெரிந்து கொண்டார். அடுத்த நாள் அம்மணி அம்மாள் மசார் கிராமத்திற்கு சென்று வெள்ளிப் பணம் பதுக்கி வைக்கப்படிருந்த வீட்டிற்கு சென்று அங்கிருந்தவரிடம் நடந்தவற்றை அப்படியே கூறி அனைத்தும் சிவன் சொத்து ஆகவே பூமிக்கு அடியில் பதுக்கி வைத்திருக்கும் மூட்டையை கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். வெள்ளிப்பணத்தை பதுக்கி வைத்தவர் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்றும் தனக்கு ஒன்றும் தெரியவே தெரியாது என்று சாதித்துக் கூறினார். அதனைக் கேட்ட அம்மணி அம்மாள் நீ பதுக்கி வைத்திருக்கும் பொருள் அனைத்தும் சிவனுடையது. அது உனக்கு பயன்படாது என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பி திருவண்ணாமலை வந்து சேர்ந்தார். அம்மணி அம்மாள் சென்றதும் தான் பதுக்கி வைத்திருந்த மூட்டையை வெளியே எடுக்க அந்த மனிதர் பூமியை தோண்டினார். அங்கு மூட்டை இருந்த இடத்தில் சாம்பல் மட்டுமே இருந்தது. அந்த வெள்ளிப்பணம் என்ன ஆனது என்று அம்மணி அம்மாள் யாரிடமும் சொல்லவில்லை.

அம்மணி அம்மாள் மைசூர் மகாராஜா கொடுத்த பொன் பொருட்களைக் கொண்டு கோபுரத்தின் 6-வது மற்றும் 7-வது நிலைகளை எளிதாகக் கட்டி முடித்தார். இன்னும் 4 நிலைகள் கட்ட வேண்டும். பணத்துக்கு என்ன செய்வது என்று தவித்தார். அண்ணாமலையாரே வழி காட்டுங்கள் என்று ஆழ்ந்த தவத்தில் அமர்ந்து விட்டார். அப்போது அண்ணாமலையார் அவர் கனவில் தோன்றி கோபுர வேலையைத் தொடர்ந்து செய் தினமும் வேலை முடிந்ததும் பணியாளர்களுக்கு விபூதியை அள்ளிக் கொடு என்றார். அதன்படியே கோபுர வேலை நடந்தது. தினமும் மாலை பணியாட்களுக்கு சம்பளத்துக்கு பதில் அம்மணி அம்மாள் திருநீறை அள்ளிக் கொடுத்தார். விபூதி அவரவர்கள் செய்த வேலைக்கு ஏற்ற கூலியாக பணமாக மாறியது. வேலை செய்யாமல் இருப்பவர்களின் கையில் கொடுக்கப்பட்ட விபூதி விபூதியாகவே இருந்தது. இப்படி கோபுரத்தின் 11 நிலைகளும் கட்டி முடிக்கப்பட்டன. இதன் மூலம் மனதில் துணிச்சலும் இறை அருளும் இருந்தால் எதையும் செய்து முடிக்க முடியும் என்பதை அம்மணி அம்மாள் செய்து காட்டினார்.

அம்மணி அம்மாளின் விடாமுயற்சியைக் கண்டு ஆங்கிலேயர்களும் வியந்து நின்றனர். 171 அடி உயரத்துக்கு கட்டப்பட்ட அந்த கோபுரம் கிழக்கில் உள்ள ராஜகோபுரத்துக்கு இணையானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் அம்மணி அம்மன் கோபுரத்திலும் ராஜகோபுரத்திலும் ஒரே மாதிரி தலா 13 கலசங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. தெற்கில் உள்ள திருமஞ்சன கோபுரமும் (157 அடி) மேற்கில் உள்ள பேய் கோபுரமும் (144 அடி) வடக்கு கோபுரத்தை விட உயரம் குறைந்ததாகும். (மேற்கு கோபுரம் என்று அழைக்கப்பட்டது பின்நாளில் பேச்சு வழக்கில் மருவி மேக்கோபுரம் என்று மாறியது. பிறகு அது பேக்கோபுரம் என்று பேசப்பட்டது. கடந்த நூற்றாண்டில் பேக்கோபுரம் என்பதை மக்கள் தவறாக பேசி பேசியே பேய்க்கோபுரம் என்று அழைக்க தொடங்கி விட்டனர்.) திருவண்ணாமலை ஆலயத்தில் ராஜகோபுரத்துக்கு அடுத்தப்படியாக பெரிய கோபுரத்தைக் கட்டி சாதனை படைத்ததால் அந்த கோபுரத்தை அனைவரும் அம்மணி அம்மன் கோபுரம் என்று அழைக்க ஆரம்பித்தார்கள். நாளடைவில் அந்த பெயரே நிலைத்து நின்றது. இந்தக் கோபுரம் கட்டி முடித்ததும் கோபுரத்துக்கும் ஆலயத்துக்கும் அம்மணி அம்மாள் தாமே முன்நின்று கும்பாபிஷேகத்தை நடத்தினார்.

அம்மணி அம்மாள் பிறந்த சென்ன சமுத்திரம் பக்கத்தில் வளையம்பட்டு கிராமத்தில் உள்ளவர்களை ஒரு விதமான வியாதி தாக்கியது. மக்கள் மிகவும் துன்பப்பட்டார்கள். எந்த விதமான மருந்துகளுக்கும் அந்த வியாதி சரியாகவில்லை. அங்குள்ளவர்கள் அம்மணி அம்மாளிடம் வந்து இந்த வியாதி போவதற்கு ஏதேனும் ஒரு வழி சொல்லுமாறு கேட்டுக் கொண்டார்கள். தியானத்தில் சிறிது நேரம் அமர்ந்த அம்மணி அம்மாள் அந்த ஊருக்கு சென்று அந்ந ஊரின் அமைப்பையே மாற்றி அமைத்தார். ஊருக்கு வெளியே சுடுகாடு அமையுமாறு மாற்றி ஊரின் நுழைவுப் பகுதியையும் மாற்றி அமைத்தார். ஊருக்குள் இருந்த ஒரு புராண காலத்து வினாயகர் கோவிலில் ஒரு பலா மரத்தையும் நட்டு வைத்தார். அதன் பின் அந்த ஊரில் இருந்த வியாதி மறைந்து போனது. மக்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். இன்றும் அந்த வினாயகர் கோவில் உள்ளது.

அம்மணி அம்மாள் பிறந்த சென்ன சமுத்திரத்தில் அம்மணி அம்மாள் கட்டிய குளம் ஒன்று இன்றும் உள்ளது. அந்த குளத்தை சுற்றி அவர் நட்டு வைத்த மரங்கள் இன்றும் உள்ளது. குளத்தின் அருகில் அவருக்கு தனியாக கோவில் கட்டி இன்றும் வழிபட்டு வருகிறார்கள். அம்மணி அம்மாள் விபூதி வைத்திருந்த சிறிய டப்பா மற்றும் அவரது மோதிரம் மைசூர் ராஜா அவருக்கு கொடுத்த புடவை மற்றும் அவர் உபயோகப்படுத்திய சில பொருட்கள் இன்றும் அங்கு உள்ளது. அம்மணி அம்மாள் துறவி போல் வாழ்ந்து பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு திருநீறு கொடுத்து நோய் தீர்த்தார். திருநீறு மூலம் பல அற்புதங்கள் நிகழ்த்தினார். அம்மணி அம்மாள் பூமிக்குள் புதைந்திருக்கும் புதையலையே அறிந்து கொள்ளும் வல்லமை வாய்ந்தவர். திருநீறு மூலம் அற்புதங்கள் செய்து புகழ் பெற்ற அம்மணி அம்மாள் தன் 50 வது வயதில் 1785 ஆம் ஆண்டு தைப்பூசம் தினத்தன்று பரிபூரணம் அடைந்தார். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் 8 வது லிங்கமான ஈசான்ய லிங்கம் எதிரில் அவருக்கு ஜீவசமாதி அமைக்கப்பட்டுள்ளது. இன்றும் சூட்சுமமாக திருவண்ணாமலையில் இருந்து அருளிக் கொண்டிருக்கிறார்.

அம்மணி அம்மாள் திருவண்ணாமலையில் வாழ்ந்த இடம்

பாம்பன் சுவாமிகள்

1923 வது வருடம் பாம்பன் சுவாமிகள் சென்னையில் நடந்து செல்லும் போது பாதையில் எதிர்பாராத விதமா ஒரு குதிரை வண்டி அவர் மேல் மோதியது. இதனால் அவரது கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவரை பரிசோதித்த டாக்டர்கள் 73 வயது ஆகிவிட்டதால் இனி இவரது எலும்பு கூடுவது மிகவும் கடினம் மேலும் இவர் நீண்ட காலமாக உப்பு போடாத பச்சரிசி பச்சைப்பயறு பொங்கல் மட்டுமே சாப்பிட்டு வந்ததால் மிகவும் பலகீனமாக இருக்கிறார் என்று டாக்டர் சொல்லி விட்டார்கள். அப்போது முதல் தான் இயற்றிய சண்முக கவசத்தை தொடர்ந்து ஆறு நாட்கள் பாடிக் கொண்டே இருந்தார். ஆறாவது நாள் அவர் கனவில் சேவல் மயிலுடன் குழந்தை வேலன் காட்சியளித்தார். அடுத்த நாள் காலையில் எழுந்து தானாகவே நடக்க ஆரம்பித்தார் பாம்பன் சுவாமிகள். டாக்டர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. உடனே X RAY எடுத்து பார்த்தார்கள். டாக்டர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியம். அவரோட எலும்புகள் கூடி இருந்தது.

இன்றும் சென்னை அரசு பொது மருத்துவ மனையில் இவருக்கு முதலில் எடுத்த X RAY ரிப்போர்டும் அவர் நடக்க ஆரம்பித்ததும் எடுக்கப்பட்ட எடுத்த X RAY ரிப்போர்டும் ஆவணப்படுத்தப் பட்டிருக்கிறது.

ஜடபரதன்

பரதன் என்ற ஒரு நாட்டு அரசன் காட்டில் தவ வாழ்வு மேற்கொள்ள நாட்டைத் துறந்தான். தவ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் போது ஒரு நிறைமாத கர்பிணியாய் இருக்கும் மான் ஒன்று ஆற்றில் நீர் அருந்துவதை பார்க்கிறார். மான் அதன் தாகம் தீர்ந்தவுடன் கரையேற முற்படும் போது ஒரு சிங்கத்தின் கர்ஜனையை கேட்டது. மானுக்கு குலை நடுங்கி விட்டது. இதனால் தண்ணீருக்குள்ளேயை தன் குட்டியை ஈன்றது. அந்த மான் குட்டி ஆற்றின் நீரிலேயே விழுந்து மிதந்து போனது. தன் கண்ணெதிரே கன்று மிதந்து போவதை பார்த்து தாய் மான் கலங்கி உருகி வருந்தியது. சிங்கம் மானை துரத்த ஆரம்பிக்க சிங்கத்திடம் இருந்து தப்பிக்க வேறு வழியில்லாமல் காட்டிற்குள் ஓடி விட்டது. நீரில் சென்ற குட்டி மானை பார்த்த பரதன் அதன் மீது ஈரக்கம் கொண்டு அதனை காப்பாற்றி அன்புடன் வளர்க்க ஆரம்பித்தார். ஆசிரமத்தின் அருகாமையில் இருந்த இளம்புற்களை மேய்ந்து கொண்டும் புலியைக் கண்டால் பயந்து ஆசிரமத்துக்கு ஓடி வந்து ஒளிந்து கொண்டும் காலையில் புறப்பட்டு மேய்ந்து விட்டு மாலையில் ஆசிரமத்திற்குத் திரும்பி வந்து தங்கிக் கொண்டும் அந்த மான் வளர்ந்து வந்தது. அந்த மான் ஓடி விளையாடுவதைக் கண்ட பரதரின் மனம் மானின் மீது பற்றும் பாசமும் உண்டானது. ராஜ்யம் மக்கள் முதலிய பந்த பாசங்களை விட்டு தவம் செய்ய வந்த பரதன் மான் மீது மிகவும் அபிமானம் கொண்டிருந்தார். மாலை தனது இருப்பிடம் மான் வரவில்லை என்றால் நம்முடைய மான்குட்டியைக் காணவில்லையே? அதைச் புலி அடித்து சாப்பிட்டு விட்டதோ சிங்கம் அடித்து சாப்பிட்டு விட்டதோ இன்னமும் வரவில்லையே? என்ன செய்வேன்? என்று வருந்துவார். மான் குட்டி மேய்ச்சலுக்கு சென்று திரும்பும் வரை அதன் நினைவாகவே இருந்து தவவாழ்வினை மறந்தார். இந்நிலையில் அவருக்கு மரண காலமும் நெருங்கியது.

பரதனை அவரது அன்பு மகன் பார்ப்பதைப் போல அந்த மான் குட்டியானது கண்ணில் கண்ணீர் ததும்ப பார்த்துக் கொண்டிருந்தது. அதுபோலவே பிரியமான மகனைத் தந்தை பார்ப்பது போல பரதரும் கண்ணீர் ததும்ப மான்குட்டியைப் பார்த்துக் கொண்டே தன் உடலை விட்டார். அதனால் மறுபிறவியில் அவர் கங்கைக் கரையில் ஒரு மானாகப் பிறந்தார். ஆனாலும் தன் தவத்தின் பயனால் பூர்வ ஜன்ம ஞானமுடையவராக இருந்தார். மான் மீது வைத்த பற்றினால் தன்னுடைய தவ வாழ்க்கையை இழந்து விட்டோமே என்று எண்ணி வருத்தப்பட்ட அவர் தான் முன்பு வாழ்ந்த இடத்திற்கு வந்து அங்குள்ள உலர்ந்த புற்களையும் சருகுகளையும் தின்று மானாகப் பிறக்க காரணமான கர்மங்களைக் கழித்து அங்கேயே மரணமடைந்தார். பிறகு அந்த ஊரிலேயே பிராமணர் குலத்திலே பூர்வ ஜன்ம வாசனையோடு பிறந்தார். பூர்வ புண்ய ஞானத்தால் சகல சாஸ்திரங்களின் உண்மையை உணர்ந்தவராய் எல்லாவிதமான ஞானத்திலும் தேர்ச்சி பெற்றார். ஆத்ம ஞானியாக இருந்ததால் எந்தவொரு செயலையும் செய்யாமல் அழுக்கு நிறைந்த உடம்போடும் அழுக்கேறிய கந்தை ஆடைகளோடும் காண்பவர்கள் அருவருத்து அவமதிக்கும்படி நடந்து கொண்டார். யாரேனும் அருகில் வந்தால் அவர்கள் மீது பற்று வந்து மீண்டும் பிறவி எடுக்க வேண்டி வருமோ என்று எண்ணி இது போல் நடந்து கொண்டார். மூடனைப் போலவும் பித்தனைப் போலவும் நீண்ட ஜடாமுடியுடன் சுற்றி திரிந்து கொண்டிருந்த இவரை ஊரார் ஜடபரதர் என்ற பெயர் கொடுத்தார்கள்.

ஜடபரதன் ஒரு ஆத்ம ஞானி என்பதை அறிந்து கொண்ட சவ்வீர ராஜன் என்பவன் இவரை காளிக்கு இவரை பலியிட்டால் பல சக்திகள் கிடைக்கும் என்று எண்ணி அவரைக் காளிக்கு நரபலியிட நிச்சயித்து இரவில் அவரைப் பிடித்துக் கொண்டு சென்றான். பலியிடுவதற்குரிய அலங்காரங்களை எல்லாம் அவருக்குச் செய்து காளியின் திருக்கோயிலின் எதிரே கொலை செய்யும் இடத்தில் கொண்டு நிறுத்தினான். காளியானவள் இவர் மகாயோகி என்பதையறிந்து அவரைப் பலியிட வந்த அந்தக் கொடியவனையே தன் கத்தியினால் வெட்டினாள்.

ஜடபரதன் இருந்த நாட்டின் சௌவீரன் என்ற மன்னன் கபிலர் என்ற ரிஷியிடம் துக்கமயமான சம்சாரத்தில் எது உயர்ந்தது என்ற தனது சந்தேகத்தை போக்கிக் கொள்ள வேண்டும் என்று அவரை சந்திக்க தனது பல்லக்கில் சென்று கொண்டிருந்தான். பல்லக்கு தூக்குவதில் ஒருவனுக்கு உடல் சரியில்லாமல் போனது. பல்லக்கு தூக்குவதற்கு ஒருவரை மன்னனது சேவகர்கள் தேடினார்கள். அருகில் இருந்த ஜடபரதரை கண்ட அவர்கள் அரசனுடைய பல்லக்கை தூக்குமாறு கட்டளையிட்டார்கள். சகல ஞானமும் உணர்ந்தவராக ஜடபரதர் இருந்தாலும் தமது முற்பிறவிப் பாவங்களைத் தொலைக்க அவர் பல்லக்கை தூக்கி நடக்க ஆரம்பித்தார். பல்லக்கு தூக்கும் மூவரும் ஒரே வேகத்தில் நடக்க இவரது வேகம் சற்று வித்தியாசப்பட்டது. இதனால் பல்லக்கு நிலையின்றி தடுமாறி சென்றது. இதனைக் கண்ட மன்னன் பல்லக்கு சரியாக செல்லாததற்கு காரணம் ஜடபரதர் என்று எண்ணினார். என் பல்லக்கைச் சிறிது தூரம் தானே நீ சுமந்திருக்கிறாய் அதற்குள் உடல் களைத்து விட்டதோ? உடல் பருத்திருக்கும் உன்னால் மன்னனான என்னை வைத்து இந்த பல்லக்கை தூக்க முடியவில்லையா? என கோபமாக கேட்டார். அதற்கு ஜடபரதர் நீங்கள் மன்னரும் இல்லை. நான் பருத்தவனும் அல்ல. உனது பல்லக்கை நான் சுமக்கவும் இல்லை. அதனால் நான் களைப்படையவும் வில்லை என்றார். இந்த வார்த்தைகளைக் கேட்டு வியப்படைந்த அரசன் பல்லக்கிலிருந்து இறங்கி அம்மனிதனைப் பார்த்தான். என்னை மன்னித்து விடுங்கள் ஞானியான அந்தணரை அவமதித்த பாவம் என்னைச் சேரும் என அஞ்சுகிறேன். தங்கள் பேச்சுக்கள் என் மனத்தில் ஐயங்களை எழுப்பியுள்ளன. தாங்கள் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் என் கண்ணால் கண்டவற்றை மறுக்கின்றன. தயவு செய்து தங்கள் வார்த்தைகளின் உள்ளர்த்தம் என்னவென்பதை விளக்குங்கள் என்று பணிவுடன் வேண்டினான்.

ஜடபரதன் பேச ஆரம்பித்தார். உடல் வேறு உள்ளிருக்கும் ஆத்மா வேறு உடல் ஒவ்வொருவருக்கும் மாறிக் கொண்டே இருக்கும். குழந்தைப் பருவம் இளமைப் பருவம் முதுமைப் பருவம் என்ற கட்டங்களைக் கடந்து முடிவில் பஞ்சபூதங்களில் கலந்து விடும். நிலையில்லாத இந்த உடலைப் பார்த்து நீங்கள் பருத்தவன் என்று சொன்னீர்கள். அதனால் நான் பருத்தவன் இல்லை என்றேன். ஆனால் உடலுக்குள்ளிருக்கும் ஆத்மா அழிவற்றது. எப்போதும் மாறாதது. என்னையும் என் உடலையும் பல்லக்கையும் அதில் அமர்ந்துள்ள உங்களையும் இந்த பூமி சுமக்கிறது பூமியை யார் சுமக்கிறார்கள்? அறிவியல் ரீதியாக அணுக்கள் சுமக்கின்றன எனலாம். ஆனால் ஜடப்பொருளான அணு தானாக இயங்காது. அதை இயக்குபவன் அணுவைக் காட்டிலும் நுண்ணியதாக இருந்து இறைவன் இயக்குகின்றான். ஓர் உயிருக்கு இறைவன் வேறு இந்த உலகத்தில் வாழும் உயிர்கள் வேறு என்ற எண்ணம் அவனது கர்மங்களால் உண்டாகிறது. தவத்தின் வழியாக இந்த கர்மங்களை நீங்கியதும் இந்த வேறுபாடு நீங்கி விடும் அதன் பிறகு இந்த உலகத்தில் வாழும் உயிர்களுக்குள் இருக்கும் ஆத்மாக்கள் அனைத்திற்கும் ஒருவருகொருவர் உருவத்தில் வேற்றுமை கிடையாது. அனைத்திற்கும் மூலமாக இருப்பது பரமாத்மாவான இறைவனே என்று உணர்ந்து கொள்ளலாம் என்றார்.

ஜடபரதன் தொடர்ந்து பேசினார். அடுத்து நீங்கள் மன்னன் இல்லை என்றேன். உண்மையே நீங்கள் இந்த நாட்டுக்கு மட்டும் மன்னன். உங்களை விடப் பெரிய அரசர்கள் உள்ளனர். அவர்களை விட பெரிய அரசர்களும் உள்ளார்கள். அனைவரையும் ஆளும் அரசன் ஒருவன் இருக்கிறான் அவனே இறைவன். பந்தம் பாசத்தினால் உறவு என்ற எண்ணத்தில் நிலையில்லாத ஒரு உடலின் மீது பற்று வைத்துக் கொண்டு நாம் ஆசைகளை வளர்த்துக் கொண்டு துன்பங்களுக்கு ஆளாகிறோம் என்றார் ஜடபரதர். இந்த ஞானத்தை எப்படி பெறுவது என்று மன்னன் கேள்வி கேட்டான். அதற்கு ஜடபரதன் பார்க்கும் உயிர்கள் மற்றும் அசையும் பொருள் அசையா பொருள் அனைத்துமே இறைவனே என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டால் இந்த ஞானத்தை விரைவில் பெறலாம் என்றார். மன்னன் தெளிவடைந்து ஆன்மீக மார்க்கத்தில் பயணிக்க ஆரம்பித்தான்.

திரிலோசனதாசர்

திரிலோசனதாசர் பொற்கொல்லர் இனத்தைச் சார்ந்தவர் தனது தொழிலில் மிகவும் நேர்மையானவர் இறை பக்தி மிக்கவர் பாண்டுரங்கனிடம் அளவு கடந்த அன்பும் பக்தியும் கொண்டவர். இவர் இயற்றியுள்ள பக்திப் பாடல்கள் சீக்கிய கிரந்தத்தில் இடம் பெற்றுள்ளன. இவர் மன்னரின் அரண்மனைப் பொற்கொல்லராக இருந்தார். மன்னரின் மகளுக்குத் திருமணம் நடக்கவிருந்தது. மகளுக்கான நகைகளை திரிலோசனதாசர் செய்ய வேண்டுமென மன்னன் விரும்பி பொன் மற்றும் நவரத்தினக் கற்களை திரிலோசனரிடம் கொடுத்து நான்கு நாட்களுக்குள் நகை செய்து தரவேண்டும் எனக் கட்டளையிட்டான். திரிலோசனரும் சம்மதித்தார். ஆனால் இவர் அரண்மனையிலிருந்து வீடு வந்து சேர்ந்தவுடன் இவர் வீட்டிற்கு பஜனை கோஷ்டி ஒன்று வந்து இரண்டு நாட்கள் தங்கியிருந்து திரிலோசனாருடன் பாண்டுரங்கனை பற்றி பஜனை செய்ய விரும்புவதாகச் சொன்ன போது மிகவும் மகிழ்ந்து போனார் திரிலோசனார். இரண்டு நாட்கள் அவரின் வீடு பாண்டுரங்கன் பஜனையால் கோலாகலமாய் இருந்தது. பஜனை கோஷ்டி விடை பெற்றுச் சென்றது. அதன் பின்னர் தான் இவருக்கு நகை செய்ய வேண்டுமென்ற நினைவு வந்தது. நவரத்தினம் பதித்த நகைகளை செய்யும் வேலையில் இறங்கினார். அந்நகையைச் செய்வது அவ்வளவு எளிதாய் இல்லை. நான்கு நாள் கெடுவில் ஏற்கனவே பஜனையில் இரண்டு நாட்கள் கழிந்து விட்டதால் மீதமிருந்த இரண்டு நாளில் என்ன முயன்றும் திரிலோசனதாசரால் நகைகளைச் செய்ய முடியவில்லை. மன்னரின் ஆட்கள் நான்கு நாட்கள் முடிந்து விட்ட நிலையில் நகை செய்தாகி விட்டதா எனக் கேட்டு வந்தார்கள். இவர் இன்னும் இரண்டு நாட்கள் தரும்படியும் அதற்குள் செய்து முடித்து விடுவதாகவும் சொல்ல இன்னும் இரண்டு நாட்களில் செய்து முடித்து தராவிட்டால் மன்னரின் கோபத்திற்கு ஆளாகி தண்டனை பெறுவீர்கள் என எச்சரித்து விட்டுச் சென்றார்கள். என்ன சோதனையோ இரண்டு நாளில் இவரால் முடிக்க முடியவில்லை பயந்து போனார் திரிலோசனார். மன்னர் என்ன தண்டனை தருவாரோ என்ற பயத்தில் மனைவியிடம் கூடச் சொல்லாமல் அடர்ந்த காட்டிற்குள் சென்று ஓர் மரத்தடியில் அமர்ந்து பாண்டுரங்கனை நினைத்து தியானத்தில் ஆழ்ந்துவிட்டார்.

பாண்டுரங்கனின் அவதாரமான கிருஷ்ணரின் பால லீலைகலைப் பாடல்களாகப் புனைந்து பாடியபடியும் பாண்டுரங்கனை நினைத்து தியானித்தபடியும் காட்டில் காலத்தைப் போக்கினார். கணவரைக் காணாது அவரின் மனைவி கலங்கிப்போனார். அப்போது பாண்டுரங்கன் திரிலோசனதாசராக உருவெடுத்து அவருடைய வீட்டிற்கு வந்தார். அவருடைய மனைவி அவரிடம் திடீரென உங்களைக் காணவில்லையே எங்கு சென்றீர்கள் எனக் கேட்கவும் என்னிடம் கேள்வி கேட்பதைத் தவிர் என்றார் திரிலோகரின் உருவில் இருந்த பாண்டுரங்கன். மேலும் எதுவும் கேள்விகள் கேட்காமல் மௌனமாகிவிட்டார் திரிலோகரின் மனைவி. திரிலோசனாரின் வீட்டுக்கு அவரின் உருவில் வந்த பாண்டுரங்கன் மன்னரின் மகளுக்காக அழகிய நகைகளைச் செய்து முடித்தார். அது சந்திரனைப் போல் ஒளி வீசியது. அதனை அவரே அரண்மனைக்கு எடுத்துச் சென்றார். ஒளி வீசும் நகைகளைப் பார்த்த மன்னரின் கண்கள் வியப்பால் விரிந்தன. நகைகள் மிகவும் அழகு என வியந்து பாராட்டினார் மன்னர். இவ்வளவு அழகான நகைகளைச் செய்த உங்களுக்கு எவ்வளவு பொருள் தந்தாலும் தகும் எனச் சொல்லி ஒரு பை நிறைய பொற்காசுகளைக் கொடுத்தனுப்பினார். திரிலோசனாரின் உருவில் இருந்த பாண்டுரங்கன் பொற்காசுகளுடன் வீட்டிற்கு வந்தார். அவற்றை திரிலோசனதாசரின் மனைவியிடம் கொடுத்து பொற்காசுகளில் சிலவற்றை எடுத்துச் சென்று உணவுப் பொருட்கள் வாங்கி வந்து விருந்து தயாரிக்கும் படியும் தான் போய் பக்தர்கள் சிலபேரை விருந்துண்ண அழைத்து வருவதாகவும் சொல்லிச் சென்றார். திரிலோசனாரின் மனைவிக்கு அதிக அளவு பொற்காசுகளைப் பார்த்து அதிசயமாக இருந்தது. ஆனாலும் கணவரை ஒன்றும் கேட்கவில்லை. கணவர் சொல்லிச் சென்றது போல் விருந்து தயார் செய்தார்.

பாண்டுரங்கனும் சில பக்தர்களை உணவுண்ண அழைத்து வந்தார். தானும் அவர்களோடு அமர்ந்து உணவு உண்டார். பின்னர் விருந்தில் தயாரித்திருந்த அனைத்துப் பதார்த்தங்களையும் பொட்டலங்களாகாக் கட்டி எடுத்துக் கொண்டு திரிலோசனார் ஒளிந்திருந்த காட்டிக்கு அடியவர் வேடத்தில் வந்தார். அப்போது திரிலோசனார் கண்களை மூடி தியானத்தில் இருந்தார். அடியவர் வேடத்தில் வந்திருந்த பாண்டுரங்கன் ஐயா கொஞ்சம் விழித்துக் கொள்ளுங்கள் என்று பலமுறை வேண்டினார். திரிலோசனாரும் கண்களைத் திறந்து அடியவரை பார்த்து இந்த காட்டில் உங்களைப் பார்த்தால் வியப்பாக உள்ளது. நான் தங்களுக்கு என்ன உதவி செய்ய வேண்டும் என்று கேட்டார். அடியவர் வேடத்தில் இருந்த பாண்டுரங்கன் இன்று இன்னாட்டின் மன்னர் மகளுக்கு திருமண நிச்சயதார்த்தம். மன்னரின் மகளான மணமகள் அணிய கண்டோர் வியக்கும் வண்ணம் நகைகளை பொற்கொல்லர் ஒருவர் செய்து கொடுத்திருக்கிறார். இதனால் மகிழ்ந்த மன்னர் அளவுக்கதிகமாக பொற்காசுகள் கொடுத்திருக்கிறார். அந்த பொற்கொல்லார் அடியவர்களை அழைத்து நல்லதொரு விருந்தளித்தார். அவ்விருந்தில் நானும் கலந்து கொண்டேன். திருப்தியாய் சாப்பிட்ட நான் திரும்பி வருகையில் பாதை தவறி இக்காட்டிற்குள் வந்து விட்டேன். விருந்தில் அளிக்கப்பட்ட பதார்த்தங்களை மீண்டும் பசியெடுத்தால் உண்ணலாமென கொஞ்சம் அந்த பொற்கொல்லரிடம் கேட்டுப் பெற்றுக் கொண்டு வந்துள்ளேன். உங்களைப் பார்த்தால் மிகவும் பசியோடு இருப்பவர் போல் தெரிகிறது. இந்தாருங்கள் இதனை நீங்கள் உண்ணுங்கள் என்று கொண்டு வந்திருந்த உணவுப் பொட்டலத்தை அளித்தார்.

பாண்டுரங்கன் வடிவில் இருந்த அடியவர் கூறிய செய்தி திரிலோசனதாசருக்கு மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது. நாம் இல்லை என்பதை தெரிந்து கொண்ட மன்னர் வேறொரு பொற்கொல்லரை வைத்து நகைகளை செய்து வாங்கிக் கொண்டார். இனி நமக்கு பயமில்லை. இனி நாம் நம் வீடு திரும்பலாம் என நினத்தார். அந்த நினைப்பே அவருக்குப் பசியைத் தூண்டியது. அடியவர் அளித்த உணவை ஏற்று அதனை உண்டார் திரிலோசனார். வீட்டுக்குக் கிளம்பியவர் அந்த அடியவரிடம் சுவாமி எனக்கு உணவளித்த நீங்கள் என்னுடன் என் இல்லம் வரவேண்டும். உங்களுக்குத் தக்க மரியாதை செய்ய விரும்புகிறேன் என்றார். அடியவரின் உருவில் இருந்த பாண்டுரங்கனும் சம்மதித்தார். இருவரும் திரிலோசனாரின் இல்லம் அடைந்தனர். அடியவர் திரிலோசனாரின் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொள்ள திரிலோசனதாசர் உள்ளே சென்றார். வீட்டில் குவிந்து கிடந்த மளிகைப் பொருட்களைக் கண்டு வியந்த திரிலோசனார் மனைவியிடம் இவ்வளவு மளிகைப் பொருட்கள் குவிந்து கிடக்கின்றன எப்படி வந்தது என்று வியப்போடு கேட்டார். அவரின் கேள்வியில் திகைத்துப் போன மனைவி இதென்ன இப்படிக் கேட்கிறீர்கள்? நீங்கள் தானே நகைகளை செய்து கொடுத்ததற்காக மன்னர் அளித்த பொற்காசுகளை என்னிடம் கொடுத்து அடியவர்களுக்கு விருந்து வைக்க மளிகைப் பொருட்கள் வாங்கி வரச் சொன்னீர்கள். அவ்வாறு நானும் வாங்கி வர அடியவர்களுக்கு விருந்தும் வைத்தோமே? நீங்களும் அவ்விருந்தில் இருந்த பதார்த்தங்களைப் பொட்டலமாகக் கட்டிக் கொண்டு எங்கோ சென்றீர்களே? ஒன்றுமறியாதவர் போல கேள்வி கேட்கிறீர்களே என்றாள். மனைவி சொன்னதைக் கேட்டு வியந்து போன அவர் தன்னைக் காட்டில் சந்தித்தவரும் இதைத்தானே சொன்னார் என்று அதிசயத்தபடி வெளியே வந்து பார்த்த போது திண்ணையில் அந்த அடியவர் இல்லை. இப்போது திரிலோசனதாசருக்கு நன்கு புரிந்தது. தான் மன்னனுக்கு பயந்து காட்டில் சென்று ஓளிந்து கொண்ட போது பாண்டுரங்கனே தம் உருவில் இங்கு வந்து நகைகளைச் செய்து மன்னனிடம் கொடுத்து கூலிபெற்று அதில் மளிகை வாங்கி அடியவர்களுக்கு விருந்து படைத்துள்ளார். அவிருந்தில் அளிக்கப்பட்ட உணவினை எனக்கும் கொண்டு வந்து அளித்துள்ளார் என மிகுந்த பக்தியோடு தன்னை மறந்து பாண்டுரங்கன் மீது பாடல்களைப் பாட ஆரம்பித்தார்.

துக்காராம்

துக்காராம் தேவநகரம் என்னும் ஊரில் மாதவராவ் என்னும் பக்தசீலரின் பிள்ளையாக 1598ல் அவதரித்தார். தந்தை செய்து வந்த தானிய வியாபாரத்தை இவரும் செய்தார். கல்வியறிவு பெறாவிட்டாலும் இயற்கையிலேயே இசைஞானம் பெற்றவராக இருந்தார். கவிதை எழுதும் ஆற்றலும் இருந்தது. குடும்பத்தினர் வழிவழியாக மீது பக்தி செலுத்தியதை துக்காராமும் பின்பற்றினார். இசை ஞானமும் பக்தி ஞானமும் துக்காராமின் இருகண்களாக அமைந்தன. ஒரு கட்டத்தில் தானிய வியாபாரம் குறைந்து துக்காராமின் குடும்பம் வறுமையில் சிக்கியது. இந்த நிலையிலும் பாண்டுரங்கன் மீதான பக்தி மட்டும் துக்காராமுக்கு குறையவில்லை. பாண்டுரங்கன் பல அற்புதங்களை இவருடைய வாழ்வில் நிகழ்த்தினார். துக்காராம் அந்த ஊரில் உள்ள ஒரு சவுகாரிடம் கடன் பெற்று தானியம் வாங்க வெளியூர் சென்றார். தானியத்தை வண்டியில் ஏற்றிக் கொண்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். இரவுவேளை பலத்தமழை புயல்காற்றுடன் பெய்தது. மாடுகளை அவிழ்த்து விட்டு ஓரிடத்தில் ஒதுங்கினார். களைப்பாக இருக்கவே தூங்கி விட்டார். மறுநாள் விழித்த போது அதிர்ச்சி காத்திருந்தது. வண்டி மாடு தானியம் எதையும் காணவில்லை. மனவேதனைக்கு ஆளானார். மிகவும் சோர்வுற்ற துக்காராம் பாண்டுரங்கனைக் குறித்து தியானத்தில் ஆழ்ந்தார். அந்த நேரத்தில் பாண்டுரங்கனே துக்காராம் போல் உருவை மாற்றிக்கொண்டு மாட்டு வண்டியில் புறப்பட்டார். தானிய வியாபாரத்தில் சம்பாதித்த பணத்தை துக்காராம் மனைவி ஜீஜாபாயிடம் கொடுத்துவிட்டு நீராடக் கிளம்பினார். ஜீஜாபாய் கடனாக வாங்கிய பணத்தைக் கொடுக்க சவுகார் வீட்டுக்குச் சென்றாள். ஏற்கனவே துக்காராம் வந்து கடனைத் திருப்பி கொடுத்து விட்டார் என்று சொன்னதும் எல்லையில்லாத மகிழ்ச்சியுடன் வீட்டுக்குத் திரும்பினாள். வீட்டில் குளித்துக் கொண்டிருந்த துக்காராமையும் காணவில்லை. வெளியே சென்றிருப்பார் என்று அமைதியாக இருந்து விட்டார் ஜீஜாபாய்.

துக்காராம் தியானத்தில் இருந்து கண் விழித்த துக்காராம் வருத்தத்துடன் வீடு திரும்பிவந்தார். வீட்டில் நடந்த விபரங்களை ஜீஜாபாய் மூலம் அறிந்து கொண்ட துக்காராம் ஆச்சரியத்தில் மூழ்கினார். தன்னைப் போல வந்து அற்புதத்தை நிகழ்த்தியது பாண்டுரங்கனே என்பதை எண்ணி தம்பதியர் இருவரும் ஆனந்தக்கண்ணீர் பெருக்கினர். துக்காராம் பாண்டுரங்கன் கோயிலில் பாடல்கள் பாடுவதை தன் முழுநேரப் பணியாகக் கொண்டார். கோயிலில் பக்தர் கூட்டம் பெருகியது. பலரும் இவருடைய சீடர்களாக மாறினர். சிலர் அவர் மீது பொறாமையும் கொண்டனர். அதில் ராமேஸ்வரபட் என்பவர் துக்காராம் நீ பிறப்பால் தாழ்ந்தவன் அதனால் நீ பாடும் பாடல்களை பாண்டுரங்கன் ஏற்றுக் கொள்ளமாட்டான். நீ எழுதிய பாடல்களை இந்திராயணி ஆற்றில் நானே எறிந்து விடுகிறேன் என்று சொல்லி ஆற்றில் தூக்கி எறிந்தார். துக்காராம் பாண்டுரங்கனை எண்ணி தியானத்தில் மூழ்கினார். நதிதேவதை மூலம் மீண்டும் பாடல்கள் அவரிடம் வந்து சேர்ந்தன. இந்த நிகழ்ச்சிக்குப் பின் அவருக்கு துன்பம் செய்த ராமேஸ்வரபட்டும் துக்காராமின் சீடராக மாறினார்.

துக்காராம் மீது வீரசிவாஜி மிகுந்த மதிப்பு கொண்டிருந்தார். ஒருமுறை அவர் துக்காராமைச் சந்திக்க மாறுவேடத்தில் வந்திருந்தார். ஒற்றர்கள் மூலம் இவ்விஷயத்தை அறிந்த அவுரங்கசீப்பின் படைகள் பாண்டுரங்கன் கோயிலைச் சுற்றி வளைத்தன. சிவாஜியைக் காப்பாற்றும்படி பாண்டுரங்கனை துக்காராம் வேண்டிக் கொண்டார். பாண்டுரங்கனே வீரசிவாஜி போல குதிரையில் தப்பி ஓட அவுரங்கசீப்பின் படை வீரர்கள் பின்தொடர்ந்தனர். அதனால் உண்மையான சிவாஜி காப்பாற்றப்பட்டார். இதற்காக துக்காராமுக்கு பொன்னும் பொருளும் சன்மானமாக வீரசிவாஜி கொடுத்த போதும் அவற்றை துக்காராம் ஏற்றுக் கொள்ளவில்லை.

துக்காராமுக்கு கமலாபாய் என்ற மனைவியும் உண்டு. ஒரு நாள் அவள் தன் சேலையை துவைத்து வெயிலில் உலர்த்தப் போட்டுவிட்டு ஏதோ வேலையாக வெளியில் சென்றுவிட்டாள். கிழிந்த சேலை கட்டியிருந்த ஒரு ஏழைப்பெண்ணுக்கு உதவும் எண்ணிய துக்காராம் கமலாபாயின் சேலையை அவளிடம் கொடுத்து விட்டார். அவளும் அதை கட்டிக் கொண்டு புறப்பட்டாள். வீட்டுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்த கமலா தன் சேலையை உடுத்தியிருந்த பெண்ணைக் கண்டதும் துக்காராமிடம் கோபித்தாள். பாண்டுரங்கா பாண்டுரங்கா என்று சொல்லி வீட்டையும் பாழாக்குறீங்களே என்று கத்தினாள். குழவிக் கல்லை எடுத்துக் கொண்டு பாண்டுரங்களை அடிக்க கோயிலுக்கு புறப்பட்டாள். கோயிலில் புன்னகையுடன் ருக்மணியே கமலாபாயின் புடவையைக் கட்டிக் கொண்டு காட்சி அளித்தாள். பலவிதமான ஆடை ஆபரணங்களை கமலாபாய்க்கு கொடுத்து அருள்புரிந்தாள். ஓடிவந்து துக்காராமின் பாதங்களில் விழுந்து கதறி அழுதாள் கமலா. துக்காராம் கமலாபாயிடம் கமலா நீயே பாக்கியசாலி. வழிபட்டும் காணமுடியாத பிராட்டியைக் கண்ணாரக் கண்டு தரிசிக்கும் பாக்கியம் பெற்ற விட்டாயே நீ பாக்கியவதி என்று சொல்லி மகிழ்ந்தார்.

துக்காராம் தன்னை மறந்த நிலையில் இறைவனைப் பாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது ஒருவர் வந்து அவரை நமஸ்கரித்தார். துக்காராமோ தன்னை மறந்த நிலையில் பாடிக்கொண்டு பரவசத்துடன் காணப்பட்டார். வந்தவர் துக்காராம் அவர்களின் உடலில் காணப்படும் மயிர்க்கூச்சலைக் கண்டார். ரோமங்கள் எல்லாம் முள்ளம்பன்றியின் முட்கள்போல் புடைத்துக்கொண்டு காணப்பட்டது. விழிகளில் ஆனந்தக் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. இருதயத்தில் பக்தியானது கீர்த்தனைகளாக வெளிப்பட்டுக்கொண்டிருந்தது. அவருடைய முகத்தில் கருணை அன்பு அமைதி திவ்யமான தேஜஸ் எல்லாம் ஒன்று சேர்ந்து குடிகொண்டிருந்தது. துக்காராமை நமஸ்கரித்தவருக்கும் இது போல் நாமக்கும் நடை பெற வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. கீர்த்தனம் முடிந்தபிறகு துக்காராமை தனிமையில் தரிசனம் செய்தார். எனக்கும் தங்களைப் போல ஞான வைராக்கியத்துடன் கூடிய பக்தி சித்திக்க தாங்கள் அருள் செய்ய வேண்டும் என்று மன்றாடி கேட்டுக் கொண்டார். துக்காரமும் புன்முறுவலுடன் அவருக்கு ஒரு வாழைப்பழத்தை கொடுத்தார். பழத்தைப் பெற்றவருக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. நாம் ஞானபக்தியை வைராக்கியத்தைக் கேட்டால் இவர் ஒரு வாழைப்பழத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டாரே என்று வருந்தினார். அந்த ஏமாற்றமும் வருத்தமும் எல்லாம் சேர்ந்து வெறுப்பாக மாறியது. வீதியில் அப்பொழுது சாங்கேவர்மன் என்ற ஓர் ஏழை தெருவிலிருக்கும் குப்பைகளைக் கூட்டிக் கொண்டிருந்தார். வெறுப்பில் அந்த வாழைப் பழத்தை அவரிடம் தூக்கிப் போட்டு விட்டுப் போய்விட்டார். அந்தப் பழத்தைச் சாப்பிட்டவுடன் அவர் பாண்டுரங்கனின் மகா பக்தராகி தனது குருநாதரைப் பற்றி பாடல்கள் பல இயற்றி பாடினார்.

துக்காராம் நாற்பத்தைந்து ஆண்டுகள் பூவுலகில் வாழ்ந்த துக்காராம் பலர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒரு மரத்தடியில் நின்றுகொண்டு நான் போய் வருகிறேன் என்று கூறினார். அனைவருக்கும் ஒன்றும் புரியவில்லை. அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ராம் ராம் என்று சொல்லிக் கொண்டே இந்தப் பூத உடலுடன் வைகுண்டம் கிளம்பினார்.