வில்லிதாசர் என்பவர் அவருடைய மனைவி பொன்னாச்சியாருடன் உறையூரில் வாழ்ந்து வந்தார். இவருடைய இயற்பெயர் தனுர்தாசர். அவருடைய மனைவியின் கண்கள் மிகவும் பிரகாசமாக அழகுடன் இருந்தது. இதனால் தன் மனைவியிடம் மிகவும் அன்புடன் இருந்தார். பெரிய செல்வந்தரான இவர் உறையூர் அரசவையின் சிறந்த மல்யுத்த வீரராகவும் இருந்தார். அந்த ராஜ்யத்தில் வீரம் பொருந்தியவராக இருந்ததால் நாட்டில் நன்மதிப்புடன் விளங்கினார். ஒருமுறை ஸ்ரீ ராமானுஜர் தன்னுடைய சிஷ்யர்களுடன் நடந்து சென்ற பொழுது வில்லிதாசர் தன் மனைவி பொன்னாச்சிக்கு வெயிலில் இருந்து பாதுகாப்பதற்காக ஒரு கையால் குடை பிடித்துக் கொண்டும் மற்றொரு கையால் அவள் நடக்கும் பொழுது அவளது கால்கள் புண்ணாகாமல் இருப்பதற்குத் தரையில் ஒரு துணியை விரித்துக் கொண்டும் செல்வதைக் கவனித்தார். வில்லிதாசருடைய அன்யோன்யமான இச்செயலைக் கண்டு வியப்படைந்த ராமானுஜர் வில்லிதாசரை அழைத்து அந்த பெண்மணிக்கு சேவை செய்வதற்குக் காரணம் என்ன என்று கேட்டார். அதற்கு வில்லிதாசர் அவளுடைய கண்களின் அழகில் முழுமையாக அடிமையாகி விட்டேன். மேலும் அந்தக் கண்களின் அழகை பாதுகாக்கத் தான் எதையும் செய்யத் தயார் என்றும் கூறினார்.
இதனைக் கேட்ட ராமானுஜர் அழியப்போகும் அழகின் மேல் இவ்வளவு ஆசையாய் இருக்கிறாரே என்று வில்லிதாசரிடம் உங்கள் மனைவியின் கண்களை விட வேறு ஒரு அழகான கண்களைக் காண்பித்தால் அதற்கு அடிமையாகி விடுவீர்களா என்று கேட்டார். வில்லிதாசரும் அத்தகைய கண்களை காண்பித்தால் அந்த கண்களுக்கு தான் அடியாமையாவதாக ஒப்புக்கொண்டார். ராமானுஜர் வில்லிதாசரை ஸ்ரீரங்கநாதரிடம் அழைத்துச் சென்று திருப்பாணாழ்வாருக்கு ஸ்ரீரங்கநாதர் காட்டியருளிய அழகிய கண்களை வில்லிதாசருக்குக் காண்பித்தருளும்படி வேண்டினார். ரங்கநாதரும் தம்முடைய அழகிய கண்களை வில்லிதாசருக்கு காட்டியருளினார். வில்லிதாசரும் அக்கண்களின் உண்மையான அழகை உணர்ந்து உடனே ராமானுஜரிடம் சரணடைந்து தன்னை சிஷ்யனாக ஏற்றுக் கொள்ளும்படி விண்ணப்பம் செய்தார். வில்லிதாசருடைய மனைவியும் ராமானுஜருடைய பெருமையை உணர்ந்து ரங்கநாதரிடம் சரணடைந்து தங்களுக்கு வழிகாட்ட வேண்டினாள். தம்பதிகள் இருவரும் தங்களுடைய உடைமைகளைத் துறந்து ரங்கநாதர் மற்றும் ராமனுஜருடைய திருவடித் தாமரைகளுக்குத் தொண்டு செய்வதற்காக ஸ்ரீரங்கம் வந்தடைந்தனர். தன் சீடரான வில்லிதாசருக்கு திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் கருவறை மற்றும் கோயில் நகைகளை காக்கும் பணியை ராமானுஜர் ஒப்படைத்தார்.
ஸ்ரீரங்கநாதர் வில்லி தாசரை முழுமையாக ஆட்கொண்டார். ஸ்ரீ ராமரின் வனவாசத்தின் பொழுது லட்சுமணன் உறங்காமல் ராமருக்கு காவல் காத்தது போல் வில்லி தாசரும் ரங்கநாதரை இடைவிடாமல் துதித்துக் கொண்டிருந்தார். இதனால் அவருக்குப் பிள்ளை உறங்கா வில்லிதாசர் என்ற திருநாமம் ஏற்பட்டது. வில்லிதாசரும் அவர் மனைவியும் ராமானுஜரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள் ஆனர்கள். ராமானுஜருக்கு பணிவிடை செய்து தங்களுடைய எளிமையான வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார்கள். ஒருமுறை ரங்கநாதரின் கடைசி நாள் உற்சவம் தீர்த்தவாரியன்று ராமானுஜர் வில்லிதாசரின் கரங்களை பிடித்தபடி கோயிலின் குளத்திலிருந்து ஏறி வந்தார். இதனை கண்ட சீடர்கள் சன்யாசியாகிய ராமானுஜர் பிறப்பால் தாழ்ந்த வில்லிதாசரின் கரங்களை பிடிப்பது முறையில்லை என்று நினைத்தார்கள். சீடர்கள் தாங்கள் நினைத்ததை ராமனுஜரிடம் கூறினார்கள்.
ராமானுஜர் வில்லிதாசர் மற்றும் அவரது மனைவி பொன்னாச்சியாரின் மகிமையை சீடர்கள் அனைவரும் புரிந்து கொள்வதற்காக சீடர்களிடம் வில்லிதாசரின் இல்லத்திற்குச் சென்று அங்கேயுள்ள நகைகள் பொருட்கள் அனைத்தையும் முடிந்தவரை களவாடிக் கொண்டு வரச்சொன்னார். சீடர்கள் வில்லிதாசரின் இல்லத்திற்குச் சென்ற பொழுது பொன்னாச்சியார் உறங்கிக் கொண்டிருந்தார். மிகவும் நிசப்தமாக அவரிடம் சென்று அவர் அணிந்திருந்த நகைகளைக் கழற்ற முற்பட்டனர். பொன்னாச்சியாரும் இந்த இவர்கள் வறுமையின் காரணமாக களவாடுகிறார்கள் என்று எண்ணி அவர்கள் நகைகளை எளிதில் கழற்றுவதற்கு இடம் கொடுத்தார். அந்த சீடர்கள் அவருடைய ஒரு பக்கத்தின் நகைகளை கழற்றிய பின் அடுத்த பக்கத்தின் நகைகளை எளிதில் கழற்றுவதற்காக தான் இயல்பாக தூக்கத்தில் திரும்புவது போல பாசாங்கு செய்தார். ஆனால் அவர் திரும்புவதைக் கண்டு அச்சமடைந்த சீடர்கள் வில்லிதாசரின் இல்லத்திலிருந்து ராமானுஜரிடம் ஓடினர். நடந்த சம்பவங்களைக் கேட்டபின் ராமானுஜர் சீடர்களை மறுபடியும் வில்லிதாசரின் இல்லத்திற்கு சென்று அங்கு நடப்பவைகளை கவனிக்கச் சொன்னார்.
ராமானுஜரின் உத்தரவுப்படி மீண்டும் வந்த சீடர்கள் வில்லிதாசர் தன் மனைவி பொன்னாச்சியாரிடம் உரையாடிக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். வில்லிதாசர் பொன்னாச்சியாரின் ஒரு பக்க நகைகளை மட்டும் காணவில்லை எங்கே என கேட்டார். அதற்கு பொன்னாச்சியார் சிலர் தான் அணிந்திருந்த நகைகளை களவாட வந்த பொழுது நான் உறங்குவது போல் பாவனை செய்து அவர்கள் எளிதில் களவாடும்படி செய்தேன். பிறகு அவர்கள் அடுத்த பக்கம் களவாடுவதற்கு ஏதுவாக நான் திரும்பிப் படுக்கும் பொழுது அவர்கள் பயந்து ஓடி விட்டார்கள் என்று சொன்னாள். அதைக் கேட்ட வில்லிதாசர் மன வருத்தமுற்று நீ கல்லை போல கிடந்து அவர்கள் விருப்பம் போல நகைகளை எடுத்துக் கொள்ள அனுமதித்திருக்க வேண்டும் என்று கூறினார். அவர்கள் இருவரும் களவாட வந்தவர்களுக்குக் கூட உதவும் மனப்பான்மை உடையவர்களாக இருந்தனர். வில்லிதாஸர் தம்பதிகளுடைய உரையாடலைக் கேட்ட சீடர்கள் ராமானுஜரிடம் திரும்பச் சென்று நடந்தவைகளை விவரித்து அந்த சிறந்த தம்பதிகளின் பெருந்தன்மையை ஒப்புக் கொண்டனர். அதற்கு மறுநாள் ராமானுஜர் வில்லிதாசரிடம் நடந்தவற்றை விவரித்து நகைகளை அவரிடம் திருப்பிக் கொடுத்தார்.
வில்லிதாசர் தனது இறுதி நாட்களின் பொழுது வைஷ்ணவர்கள் அனைவரையும் தனது இல்லத்திற்கு அழைத்துத் பாதபூஜைகள் செய்தார். அப்பொழுது பொன்னாச்சியாரிடம் தாம் பரமபதத்தை அடையப் போவதாகவும் நீ தொடர்ந்து வாழ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ராமானுஜரின் பாதுகைகளை தன் தலையில் வைத்துக் கொண்டே தனது திருமேனியை நீத்தார் வில்லிதாசர். வைணவர்களுக்கு உண்டான முறைப்படி அவருக்கு இறுதிக்கடன்களை செய்தார்கள் வைணவர்கள். வில்லிதாசரின் திருமேனியை பல்லக்கில் வைத்து தெருக்கோடி வரை சென்றவுடன் வில்லிதாசரின் பிரிவை தாங்கமுடியாமல் பொன்னாச்சியார் வாய்விட்டு கதறி அழுது தன் உயிரை அப்பொழுதே நீத்தார். அதைக்கண்டு திகைத்த வைணவர்கள் பொன்னாச்சியாரையும் வில்லிதாசருக்கு பக்கத்தில் வைக்க ஏற்பாடு செய்தனர். மணவாள மாமுனிகள் இயல் சாற்றுமுறையை (உற்சவகாலங்களின் முடிவில் ஓதப்படுவது) பல்வேறு ஆசார்யர்களின் பாசுரங்களின் அடிப்படையாக கொண்டு தொகுக்கும் பொழுது பிள்ளை உறங்கா வில்லிதாசர் இயற்றிய பாசுரம் முதலில் இடம்பெற்றுள்ளது. பிள்ளை லோகாச்சார்யர் தனது தலை சிறந்த க்ரந்தமான ஸ்ரீவசன பூஷணத்தில் எம்பெருமானின் மங்களாசாஸனத்தை விவரிக்கும் பொழுது பிள்ளை உறங்கா வில்லிதாசரைக் கொண்டாடியுள்ளார்.
ஸ்ரீ வைகுண்டத்தில் ஸ்ரீமன் நாராயணன் முன்பு சுகப்பிரம்மர் வணங்கி நின்றிருந்தார். பாரத பூமியில் பக்தி குறைந்திருந்த அந்த சமயத்தில் நாராயணன் சுகப்பிரம்மரை பூமியில் அவதரிக்க ஆணையிட்டார். மறுபடியும் ஒரு கருவறைக்குள் புக விரும்பாத சுகப்பிரம்மர் சுயம்புவாக பூமியில் காசியில் உள்ள கங்கை கரையில் தோன்றினார்.
புண்ய சேத்ரங்களிலேயே சிறந்த காசி மாநகரில் தமால் எனும் பெரியார் ஒருவர் தன் மனைவியுடன் நெசவுத் தொழில் செய்து வாழ்ந்து வந்தார். இருவரும் நாள் தோறும் ஒருவருக்காவது அன்னதானம் செய்தும் தான் நெய்த துணிகளை தானமாக வழங்கி விட்டு தான் உணவு அருந்துவார்கள். இருவருமே தங்களுக்கென ஒரு குழந்தை இல்லை என பெரிதும் வருந்தினார்கள். ஒருநாள் விருந்தினராக வந்த பெரியவர் ஒருவர் அவர்களது சேவையை கண்டு வியந்து நீங்கள் செய்யும் இந்த விருந்தோம்பல் உங்களோடு நின்று விட இறைவன் விடமாட்டார். இந்த மாபெரும் கைங்கர்யத்தைத் தொடர்ந்து செய்வதற்கு உங்களுக்கு ஒரு மகனை அளிப்பார் என்று வாழ்த்திவிட்டு சென்றார். தமால் ஒரு நாள் குழந்தை இல்லையே என மனம் நொந்தவராக துணி நெய்வதற்கான நூல் சுருள்களை அலசுவதற்காக கங்கைக்கு கரைக்கு சென்றார். அங்கும் பலர் பகட்டான வழிபாடுகளைச் செய்வதைக் கண்டு காசிக்கு வந்தும் உலக ஆசைகளில் உழல்கிறார்களே என வருந்தி நினைக்கையில் அவரின் கையில் இருந்த நூல் சுருள் கங்கை நதியோடு சென்றது. இந்த நூல் இருந்தால் துணி நெய்து ஐம்பது பேருக்கு கொடுக்கலாமே என வருந்தியவராக அதைத் தொடர்ந்து கரை ஓரமாகவே ஓடினார். அந்த நூல் சுருள் கங்கையின் வேகத்தில் கண்ணுக்கு எட்டாத தூரத்தில் சென்று மறைந்தது. அவர் நின்ற இடத்துக்கு அருகே ஒரு பர்ணசாலை இருந்தது. வருத்ததுடன் இருந்த தமால் இறைவனை தியானிப்போம் என்று அங்கே அமர்ந்தார்.
கங்கைக் கரையில் தியானத்தில் ஆழ்ந்திருந்தார் தமால். நாராயணனின் ஆணைக்கினங்க சுயம்புவாக தோன்றிய சுகப்பிரம்மர் குழந்தையாக அழும் குரல் கேட்டுக் கண் விழித்தார் தியானத்தில் இருந்த தமால். வேறு யாரும் அருகில் இல்லாத நிலையில் தனியாக அழுது கொண்டிருந்த குழந்தையைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு வீட்டுக்குத் திரும்பினார். அவரால் எடுத்துவரப்பட்ட குழந்தையைக் கண்டு அவரது மனைவியும் மனம் மகிழ்ந்தார். அக்குழந்தைக்கு கபீர் எனப் பெயரிட்டனர். கபீர் என்றால் பெரிய என்று பொருள். குழந்தை கபீரின் விளையாட்டுகள் கூட தெய்விக மணம் கமழ்ந்த வண்ணம் இருந்தன. தளர்நடை போட்ட பருவத்திலேயே தந்தையிடம் நெசவும் கற்றான். எந்த வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும் சிறுவன் தெய்வத்தின் பெயரையே உச்சரித்துக் கொண்டே செய்தான். நல்ல குரல் வளமும் பாடும் திறமையும் பெற்று இறைவனைப் பாடி வளர்ந்து வந்தார். சிறுவயதிலேயே கபீருக்கு அவனது பெற்றோர் மணமுடிக்க விரும்பினர்.
முன்பொரு காலத்தில் சுகப்பிரம்மரை மணக்க முயன்று தோற்ற ரம்பை அவர் பூவுலகில் பிறந்திருப்பது அறிந்து அவரைப் பின்பற்றி அவரது உறவினருக்கே சீந்தரா எனும் மகளாகப் பிறந்திருந்தாள். அவளின் அழகைக் கண்டு கபீரின் பெற்றோர் அவளை கபீருக்கு திருமணம் பேசி முடித்தனர். திருமணத்துக்கு முன் தங்களது மத வழக்கப்படி சுன்னத்து செய்ய அவரது உறவினர்கள் முயன்றனர். சுன்னத் செய்து கொள்ள மாட்டேன் என்று அவர்களுடன் வாதிட்டுக் கபீர் வென்றார். இதனால் கோபமடைந்த உறவினர்கள் மதச்சடங்குகளை அவமதிக்கும் கபீரை வீட்டை விட்டுத் துரத்த வேண்டுமெனக் கூறினர். கபீரும் வீட்டைத் துறந்து ஓட முயன்றார். கபீரை இழக்க மனமின்றி அவரது பெற்றோர் அவரைத் தடுத்து வீட்டிலேயே தங்கித் தறி நெய்யும்படி கூறினார்கள்.
நல்ல குரல் வளமும் பாடும் திறமையும் பெற்ற கபீர்தாஸர் ராமரின் வரலாற்றுப் பெருமையை பஜனை வடிவமாக பாடலாக பாடி வளர்ந்து வந்தார். பாடுவதில் பெருவிருப்பம் கொண்டிருந்ததால் நெசவு செய்வதில் சற்றும் விருப்பமின்றி இருந்தார். கபீருக்கு குருவென்று ஒருவரும் இல்லை. இதனால் இவருக்கு எழுதவும் படிக்கவும் தெரியாமல் போனது. ஆனாலும் ஞானம் வளர்ந்தபடியே இருந்தது. திருமணப் பேச்சு மீண்டும் ஆரம்பித்தது. சுன்னத்து செய்து கொள்ளாதவனுக்கு பெண் கொடுக்கமாட்டோம் எனப் பெண் வீட்டார் கூறிவிட்டார்கள். கபீரின் தாய் தந்தையர் மனம் வெதும்பினர். சீந்தராவின் தந்தையின் கனவில் தோன்றிய இறைவன் உன் மகளைக் கபீருக்கே மணம்முடி எனக்கூறினார். இதனால் தந்தை குழப்பமடைந்த நிலையில் இருந்தார். சீந்தராவும் கபீரையே மணப்பேன் இல்லை என்றால் வேறு ஒருவரை மனதாலும் நினைக்க மாட்டேன் எனக்கு திருமணம் வேண்டாம் என்று பிடிவாதமாக இருந்தாள். இறுதியில் இறைவனே ஒரு முதியவர் வேடத்தில் வந்து ஒவ்வொருவரிடமும் சமாதானமாகப் பேசி திருமணத்தை செய்து வைத்தார்.
குடும்ப வாழ்வில் ஈடுபட்டாலும் இவருடைய மனம் ஆன்ம ஞானத்தைத் தேடியபடி இருந்தது. அந்தத் தேடல் அவர் இயற்றிய பாடல்களிலும் பிரதிபலித்தது. இஸ்லாமிய முறைப்படி வளர்ந்தாலும் ராமரின் மீது பக்தி கொண்டு வாழ்ந்தார். தமாலின் வீட்டில் இரவும் பகலும் தறியின் இசையும் கபீரது இசையும் இறைவனது புகழைப் பாடியபடி இருந்தன. ஒருநாள் மெய்மறந்து கபீர் பாடும் போது அவரது கை நெசவு செய்வதை நிறுத்தி விட்டது. பக்தனின் பணியில் இறைவனே அமர்ந்து தறியை இழுத்தார். தறி தானாகவே நகர்ந்து துணிகளை நெய்தது. ஒரு முழம் துணி நெய்து விட்டு பின்பு கபீர் தியானத்தில் அமர இறைவன் இன்னொரு முழம் நெய்தார். காலையில் வந்து கண்ட அவரது தாயார் சோம்பேறி இரவெல்லாம் நெய்தது இரண்டே முழம்தானா இதை விற்றுப் பணம் வந்தால் தான் உனக்கு இன்று உணவு எனக் கடிந்தார்.
கபீரும் தறியிலிருந்து துணியை எடுத்துக் கொண்டு கடைத்தெருவுக்குச் சென்றார். அந்த அழகிய துண்டை எவரும் வாங்கவில்லை. மனம் தளர்ந்த கபீர் வீட்டிற்கு திரும்பி வரும் போது ஓர் அந்தணர் அந்தத் துணியைப் பிடுங்கிக் கொண்டு ஓடினார். கபீர் ஓடி அவரை வழி மறித்துத் துணியைப் பிடித்து இழுத்தார். அந்த இழுபறியில் துணி இரண்டாகக் கிழிந்து விட்டது. தான் கிழித்த துணியைத் தானே எடுத்துக் கொள்வதாகக் கூறிய அந்தணர் சில சோழிகளை அதற்கு விலையாகத் தந்தார். கோபம் கொண்ட கபீர் அந்த சோழிகளை வீசி எறிந்தார். அந்தணரோ என்னிடம் வேறு ஒன்றுமில்லை. அந்தத் துண்டை இலவசமாக தந்தால் நான் பிருந்தாவனம் செல்வதால் அதைக் கண்ணனுக்கு சாத்தி மகிழ்வேன் என்றார். அதை விற்றுப் பணம் எடுத்துச் செல்லாவிட்டால் தான் பெற்றோரின் கோபத்துக்கு ஆளாக நேரும் என்பதால் கபீர் தர மறுத்தார். ஆனால் அந்தணரோ ராமரின் திருநாமத்தின் பெருமையையும் அதை காசி விஸ்வநாதரே காசியில் இறப்பவர்கள் அனைவருக்கும் ராம நாமத்தை உபதேசித்து முக்தியளிக்கிறார் என்பதையும் கூறி தானத்தின் பயனைப் பற்றி எடுத்துக்கூறி நீண்டதொரு பிரசங்கம் செய்து அவரது தயக்கத்தைப் போக்கினார். இடைவிடாது ராம நாமத்தை ஜபித்து பக்தி மார்க்கத்தின் வழியாக இறைவனை அடைந்து கொள். அதற்கு சற்குரு ஒருவரைத் தேடி அடைந்து கொள் என்று சொல்லி ஒரு துண்டுத் துணியுடன் மறைந்து விட்டார்.
கபீர் அந்தணர் கூறியபடி ராம நாமத்தினையே துணையாகக் வைத்துக் கொள்வோம் என எண்ணியவராக மீதியிருந்த ஒரு முழத்துண்டை மடித்து எடுத்துக் கொண்டு வீடு நோக்கி நடந்தார். கபீரின் எதிரே ஒரு முஸ்லீம் முதியவர் வந்தார். கபீரை நெருங்கி ஐயா குளிர் அதிகமாக இருக்கிறது. நீங்கள் சாதுக்களுக்கு தான தருமங்கள் அளிப்பவர் என்று கேள்விப்பட்டேன். இந்த ஒரு முழம் துணியைத் தந்தால் தலையில் கட்டிக் கொண்டு பனியிலிருந்து காத்துக் கொள்வேன் என்றார். சற்று முன் அந்தணர் கூறியவற்றை மனத்தில் நினைத்தவராக கபீர் ஜெய் ஸ்ரீராம் எனக்கூறி அந்தத் துண்டை முதியவரிடம் தந்தார். அதற்கு அந்த முதியவர் அல்லாவின் பெயரை சொல்லாமல் ஏதோ ஒரு மனிதனின் பெயரைச் சொல்கிறாயே. உன்னிடம் வாங்க மாட்டேன் எனக்கூறி கபீரின் பெற்றோரிடம் இதனை சொல்வதற்கு கபீரின் வீட்டிற்கு விரைந்தார். தாய் அடிப்பாள் என்று பயந்த கபீர் ஒரு பாழடைந்த வீட்டில் ஒளிந்து கொண்டார். உன் மகன் குலத்தைக் கெடுக்க வந்திருக்கிறான். இன்று காலையில் யாரோ ஓர் அந்தணருக்கு ஓர் அழகான துணியை கொடுத்தான். நான் எனக்குக் கொடுக்கச் சொன்னேன். இரண்டாகக் கிழித்து ஆளுக்குப் பாதி என்கிறான். நான் இத்தனை சின்னத் துண்டு வேண்டாம் என்றேன். என் தாயாரிடம் போய்க் கேள் பெரிய துணியாகக் கிடைக்கும். ஆனால் நான் தானம் செய்ததைச் சொல்லாதே என்று பாழடைந்த இந்த வீட்டில் ஒளிந்து கொண்டிருக்கிறான் என்று கபீரை பற்றி குற்றம் சொல்லி விட்டு சென்றார்.
துணியை விற்ற பணத்துடன் கபீரை எதிர்பார்த்த அவரது தாயார் இதனை கேட்டதும் கபீரை பிரம்பினால் இரண்டு அடி அடித்தார். கபீர் ஹரே ராம் ஹரே ராம் எனக் கதறினார். அந்த அடிகள் இறைவனது முதுகிலும் பட்டன. இருவருக்கும் காட்சி கொடுத்த இறைவன் அம்மா நீ பாக்யவதி கபீர் பரம ஞானி எனது மெய்த்தொண்டன். நீ அவனை அடித்தது எனது முதுகிலும் பட்டிருக்கிறது பார் என்று காட்டினார். இறைவனைக் கண்டு மூர்ச்சையுற்ற தாயாரை தெளிவித்து விட்டு தகுந்த குருவை அடைந்து பக்தி மார்க்கத்தைப் பின்பற்றும்படி கூறிவிட்டு மறைந்தார்.
வாரணாசியில் ராமானந்தர் என்ற பெரும் ஞானி பலரைப் பக்திமார்க்கத்தில் வழி நடத்தி வந்தார். கபீர் அவரிடம் உபதேசம் பெற சென்றார். முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவரென அவரை ராமானந்தரின் சீடர்கள் மடத்துக்குள்ளேயே விடாமல் கபீரை தடிகளால் அடித்துத் துரத்தினார்கள். அடிகளையும் பொறுத்துக் கொண்டு கபீர் அங்கேயே உட்கார்ந்து விட்டார். ராமானந்தரை சந்திக்க விடாமல் கபீர் ஒரு திருடன் எனக் கூறி அங்கிருந்து அடித்து விரட்டி விட்டனர். ராமானந்தரிடம் தீட்சை பெற கபீருக்கு ஒரு நல்ல யோசனை உதித்தது. ராமானந்தரோ விடியற்காலையில் கங்கையில் நீராட வருகிறார். அந்தப் படியிலே நாம் படுத்திருந்தால் இருளிலே மிதித்து விடுவார். பெரியோர்கள் தவறு செய்தாலும் நன்மை செய்தாலும் இறைவனுடைய திரு நாமத்தையே சொல்லுவார்கள். அதையே நாம் உபதேசமாகவும் திருவடி தீட்சையாகவும் கொள்வோம் என்று திட்டமிட்டு அன்று இரவே கங்கை படிக்கட்டிலே சென்று படுத்துக் கொண்டார். அன்றிரவு ஸ்ரீராம லட்சுமணர்கள் அந்த மடத்தை விட்டு கோபித்துக் கொண்டு வெளியேறுவதைப் போல ராமானந்தர் கனவு கண்டார். உடனே அலறிக்கொண்டு எழுந்து கங்கைக்கரை நோக்கி சென்றார். கபீரை இருட்டில் மிதித்துவிட்ட ராமானந்தர் வழக்கப்படி ராம் ராம் என உச்சரித்த வண்ணம் கங்கையில் இறங்கி நீராட சென்று விட்டார். அப்போது ராமனந்தர் செபித்த ராம ராம என்ற திருநாமமே கபீருக்கு முதல் வேத பாடமானது.
ராம மந்திரத்தை தனது குருவின் பாத தீட்சையாக ஏற்றுக் கொண்ட கபீர் வீட்டுக்குத் திரும்பி நெற்றித் திலகமிட்டு துளசி மாலையணிந்து ராம நாமத்தை ஜபம் செய்ய ஆரம்பித்தார். சிறு வயதிலேயே பகவானைப் பற்றி உரையாடல்கள் நிகழ்த்தினார். இதனால் ஊரில் இருக்கும் தன் குல மக்களால் தண்டிக்கப்பட்டார். இருந்தும் தன் நிலையிலிருந்து மாறவே இல்லை. கபீரின் ராமநாம ஜபம் செய்வதினால் அவருக்கு எதிராக முஸ்லீம்கள் நமது மதத்திற்கு எதிரானது என்று அவருடன் வாதிட்டனர். அவர்களுடன் வாதிட்ட கபீர் அவர்களை ராமனும் ரஹீமும் ஒன்றே என்பதையும் இறைவன் ஒருவனே என்றும் வாதிட்டு ஒப்புக்கொள்ள வைத்தார்.
அக்காலத்தில் மச்சேந்திரநாதர் என்ற ஒரு மகான் இருந்தார். அவருடைய சீடர் கோரக்நாதர் என்பவர் சில சித்திகள் கைவரப்பெற்றார். அதனாலேயே கர்வம் கொண்டவராக ஊர் ஊராகச் சென்று அனைவரையும் வாதத்தில் வென்றார். ராமானந்தரையும் வெல்ல விரும்பி காசி மாநகரில் அவரது மடத்துக்கு வந்து அவரை வாதத்தற்கு அழைத்தார். ராமானந்தரின் சீடர்கள் கோரக்நாதரை கண்டு ஓடி ஒளிந்தனர். சாந்த சீலரான ராமானந்தர் செய்வதறியாது திகைத்தவராகத் தியானத்தில் ஆழ்ந்தார். இவை யாவற்றையும் கேள்வியுற்ற கபீர் கோரக்கருடன் வாதம் புரிய ராமானந்தரின் அனுமதியைக் கோரினார். ஆனால் ராமானந்தர் இது சிறுபிள்ளைத்தனம் எனக் கருதி கபீர் வாதத்தில் தோற்றால் அது தன்னைப் பாதிக்கும் என அனுமதி கொடுக்கவில்லை. கபீரோ குருவின் ஆசிகள் மட்டுமே போதும் கோரக்நாதர் உடனான வாதில் நிச்சயம் வெற்றி பேறுவேன் எனக்கூறி ராமானந்தரின் அனுமதியை பெற்றார்.
கோரக்நாதரின் எதிரில் சென்ற கபீர் என் குருவின் வல்லமை தெரியாமல் இருக்கின்றீர்கள். வாதிலும் பிரம்ம ஞானத்திலும் அவர் முன் நிற்கக்கூட உங்களுக்குத் தகுதி இல்லை. மரியாதையாகச் சென்று விடுங்கள் என்று கர்ஜித்தார். சிறுவனே உன்னை என்ன செய்கிறேன் பார் என கோரக்நாதர் எழுந்தார். தனக்கு உதவ வந்த ராமானந்தரை தடுத்த கபீர் தன் கையிலிருந்த பட்டுநூல் கண்டை ஆகாயத்தில் வீசினார். அது பூமியிலிருந்து ஆகாயம் வரை ஒரு மரம் போல் வளர்ந்து நின்றது. அதன் மேலேறி உச்சியில் அமர்ந்த கபீர் கோரக்நாதரை வானவெளியில் அமர்ந்து வாதம் புரிய அழைத்தார். கோரக்ராதர் திகைத்தார் எனினும் நொடியில் ராமானந்தரின் உருவத்திற்கு மாறி அவரைக் கீழே அழைத்தார். உண்மையான ராமானந்தர் தன் சீடனைக் காப்பாற்ற இறைவனை வேண்ட கபீர் உற்சாகமடைந்தவராக கோரக்நாதரின் குருவான மச்சேந்திரரின் உருவை அடைந்து நின்றார். உடனே கோரக்கர் மஹாவிஷ்ணு உருவத்திற்கு மாறினார். கபீரும் சரபமூர்த்தியானார். கோரக்நாதர் மாறும் உருவத்திற்கு ஏற்ப ஒருபடி மேலாகவே தன்னை வெளிப்படுத்திக் கொண்ட கபீரது திறமை கண்டு தனது கர்வத்தை விட்டார் கோரக்நாதர். ராமானந்தரிடன் சென்ற கோரக்நாதர் சிறந்த சீடனை அடைந்த நீங்கள் மிகவும் பாக்யசாலி எனக்கூறி வணங்கி அங்கிருந்து சென்றார். தனது பாதத்தில் பணிந்த கபீரைக் கண்டு மகிழ்ந்த ராமானந்தர் இந்த இளம் வயதிலேயே இறைவனை அடையும் பிரம்ம ஞானத்தை அடைந்து விட்ட நீ நீடூழி வாழ வேண்டும் என ஆசி கூறினார். காசி நகர் முழுவதும் ராமானந்தரையும் கபீர்தாசரையும் புகழ்ந்தது. குருநாதர் மெச்சும் சீடனாக கபீர் விளங்கினார்.
ஒருநாள் நூறு சாதுக்கள் படைசூழ இறைவன் கபீர்தாசரின் இல்லத்துக்குப் பசியாற வந்தார். வீட்டில் ஒரு மணி அரிசி கூட இல்லை. கபீரும் அவர் மனைவியுமே பட்டினி. இந்நிலையில் அடகு வைக்கவும் ஏதுமில்லாத நிலையில் சீந்தரா ஒரு யோசனை கூறினாள். கடைத்தெருவில் ஒரு சௌகார் நெடுநாளாக என்மேல் கண் வைத்திருக்கிறான். ஒருமுறை அவனது விருப்பத்துக்கு நான் இணங்கினால் பணத்தை கொட்டித் தருவதாகக் கூறுகிறான். இந்த சாதுக்களின் பசி தீர்க்க உதவுமானால் அப்படிச் செய்தால் என்ன என்றாள். கபீரும் அவளுடன் கிளம்பி சௌகாரின் வீட்டுக்குச் சென்று நூறு சாதுக்களுக்கு உணவளிக்கப் பொருள் வேண்டும். விருந்தோம்பல் முடிந்த பின் பொருளுக்கு விலையாக இவளை இங்கு விட்டுச் செல்கிறேன் என்றார். மதிமயங்கி அவனும் பொருள் அளித்தான். சாதுக்களுக்கு வயிறார விருந்து சாப்பிட்டனர். பிறகு கபீர்தாசர் வாக்களித்தபடி சீந்தராவை வியாபாரியின் வீட்டுக்குக் கொட்டும் மழையில் சேறுபடாமல் சுமந்து சென்று சௌகாரின் வீட்டில் விட்டார். அப்போது அந்த ஊர் அரசு அதிகாரி வீட்டினுள் புகுந்து திருட்டுச் சொத்து அங்கிருப்பதாகக் கூறி வீட்டைச் சோதனையிட ஆரம்பித்தார். உள்ளே சீந்தராவைக் கண்டு இவள் கபீரின் மனைவி. இந்த உத்தமியையா கடத்தி வந்தாய் எனக்கூறி சீந்தராவை அழைத்துச் சென்று அவளது வீட்டிலேயே விட்டுச் சென்றார்.
வீட்டுக்குத் திரும்பிய அவள் கூறியதைக் கேட்டு வெகுண்ட கபீர் என் விஷயத்தில் தலையிட நீங்கள் யார் என அரசு அதிகாரியின் வீட்டுக்குச் சென்று திட்டி அடிக்க கை ஓங்கினார். அப்போது அங்கே அந்த அதிகாரி காணவில்லை. மாறாக ஶ்ரீராமர் காட்சி அளித்து அதிகாரியாக சென்று உன் மனைவியை மீட்டது நான்தான் உனக்கு அடிக்க வேண்டுமென்று தோன்றினால் என்னை அடி என்றார். இறைவனின் தரிசனம் கண்ட கபீர் கலங்கிப் போய் ராமனைத் தொழுது பாடல்கள் புனைந்தார். இது போல் கபீரின் வாழ்வில் ஆயிரம் ஆயிரம் சம்பவங்கள் இறையருளால் நடைபெற்றுக்கொண்டு இருந்தன. இதனால் பழுத்த ஆன்ம ஞானியாக விளங்கினார் கபீர்தாசர்.
கபீர்தாசருக்கு இரண்டு குழந்தைகள் தோன்றினர். மகன் பெயர் கமால். மகனாக மட்டுமல்லாமல் கமால் மகானாகவும் விளங்கினான். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய கமால் ஏழு வயதிலேயே தீர்த்த யாத்திரை செல்ல விரும்பினான். அவனைப் பிரிய மனமின்றி கபீர் முதலில் மறுத்தாலும் பின்னர் அனுமதி அளித்தார். செல்லும் இடமெல்லாம் இறைவனது நாமத்தின் பெருமைகளைக் கமால் பரப்பினான். கூட்டம் கூட்டமாக வந்து அவரைத் தரிசித்த மக்கள் அவரை கிருஷ்ணரின் உருவமாகவே கண்டனர். அந்த ஊரில் இருந்த ஒரு ரத்ன வியாபாரியின் இல்லத்தில் சிலர் கமாலைப்பற்றி இகழ்ந்து பேசிக் கொண்டிருந்தனர். தீராத வயிற்று நோயினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த அந்த வியாபாரி இந்த நோயை கமால் தீர்த்தால் அவரை ஒரு மகான் என நம்பலாம் என்றார். மறுநாள் காலையில் வலியினால் துடித்த போது முன் தினம் கமாலைப் பற்றிப் பேசியது நினைவுக்கு வந்தது. உடனே கமாலை நினைத்து வணங்கினார். உடனே அவரது வயிற்றுவலி மறைந்தது.
ரத்ன வியாபாரி கமாலைத் தனது வீட்டுக்கு அழைத்து வணங்கி பொற்காசுகள் நிறைந்த ஒரு பையை அளித்தார். கமால் இதைக் கட்டிக் காத்து வீட்டுக்குக் கொண்டு போய்ச் சேர்க்கும் திறமை சிறுவனான எனக்கில்லை என ஏற்க மறுத்தார். வியாபாரி கமாலுக்கு தெரியாமல் அவரது துணியில் விலையுயர்ந்த மரகதம் ஒன்றை முடித்து வைத்தார். வீடு திரும்பி கமால் பெற்றோரை வணங்கும் போது மரகதகல் அவர்கள் கண்ணில் பட்டது. அதே சமயம் பக்தனுடன் விளையாட விரும்பிய இறைவன் ஓர் அந்தணராக அங்கு தோன்றி கமால் அந்தப் மரகதக் கல்லைத் தன்னிடமிருந்து திருடிவிட்டதாகக் கூறினார். கபீர்தாசர் தன் மகனை அடிக்கக் கை ஓங்கிவிட்டார். அதே சமயத்தில் நடக்க விருப்பதை முன்பே அறிந்து அங்கு வந்து சேர்ந்தா ராமானந்தர். இறைவன் சீதா, லக்ஷ்மண, பரத, சத்ருக்ன, அனும சமேதராக அங்கு தோன்றி அனைவருக்கும் திவ்ய தரிசனம் தந்தார்.
ஒரு நாள் இரவு களைத்தவர்களாகவும், பசித்தவர்களாகவும் நூற்றுக்கணக்கான சாதுக்கள் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்றிருந்த கபீர்தாசரின் இல்லத்தைத் தேடி வந்தனர். வீட்டிலோ வறுமை. வேறு வழியின்று தந்தையும் மகனுமாக மளிகைக் கடையில் திருடவும் துணிந்தனர். சிறுவன் கமால் சுவரிலுள்ள பிளவு மூலம் சென்று பொருட்களை கபீரிடம் தந்து விட்டு அந்தப் பிளவு மூலமாகவே வெளியேறி விடுவது என திட்டமிட்டுப் பொருள்களை எடுத்துத் தந்தையிடம் தந்துவிட்டுக் கமால் வெளியேறுவதற்கு முன் கடைக்காரன் வந்துவிட்டான். பாதி வெளியேறிய நிலையில் கமாலின் கால்கள் கடைக்காரனின் கைப்பிடியில் சிக்கிக் கொண்டன.
சற்றும் தயங்காது கமால் தந்தையின் இடையில் இருந்த தறிவேலை செய்யும் கூரிய கத்தியை அவர் கையில் தந்து என் தலையை வெட்டி எடுத்துச் சென்று விடுங்கள். தலையின்றி அவர்களால் என்னை அடையாளம் காண முடியாது என வற்புறுத்தினான். தயக்கத்துடன் கபீரும் அவ்வாறே செய்யக் கடைக்காரர் உடலை மட்டும் காவலர்களிடம் ஒப்படைத்தான். மற்ற திருடர்களுக்கு ஒரு படிப்பினையாக இருக்கட்டும் என நாற்சந்தியில் அந்த உடல் தொங்க விடப்பட்டது. விருந்து முடிந்த நிலையில் மறுநாள் சாதுக்கள் பஜனை செய்தவாறே அவ்வழியாக வந்தார்கள். தலையற்ற அந்த உடல் இரு கைகளையும் கூப்பி அவர்களை வணங்கியது. இதனைக் கண்ட சாதுக்களும் ஊர்மக்களும் திகைக்க இறைவன் அசரீரியாக கபீர் உலகிலே மனைவி மக்களிடம் கொண்ட பாசம் தான் வெல்ல முடியாதது. அவ்விரண்டையும் சாதுக்களுக்குச் செய்யும் சேவைக்காகத் துறந்த உன் பக்தியே உயர்ந்தது. அன்பனே கமால் எழுந்திரு எனக்கூற அடுத்த கனம் கபீரிடம் இருந்த கமாலின் தலையானது வந்து உடலில் சேரக் கமால் சிரித்த முகத்துடன் நாராயண நாமத்தை சொல்லி சாதுக்களையும் பெற்றோரையும் வணங்கினார்.
சீரடி சாயிபாபா மகா பக்த விஜயத்திலே கபீர்தாஸரின் வரலாறு விரிவாகக் கூறப்படுகிறது. ராமனை தன்னுள் உணர்ந்த கபீர்தாஸர் இந்து முஸ்லிம் சமய ஒற்றுமைக்குப் பெரிதும் பாடுபட்டவர். கபீர்தாஸரின் குரு ராமாநந்தரின் தாக்கம் இவரிடம் அதிகம் காணப்பட்டது. கபீர் தன்னுடைய குருவான ராமானந்துக்கு சிலை எழுப்பினார். இந்து சமயம் இசுலாம் ஆகிய இரு சமயங்களிலும் தவறு இருந்தால் அதனை கபீர் கடுமையாக விமர்சித்தார். வேதங்களை தவறான முறையில் மொழி பெயர்த்து சொல்லிக் கொடுக்கப்பட்டு இந்து சமயம் தவறான வழியில் செல்லப் படுவதாகவும் உபநயனம் போன்ற சடங்குகள் அர்த்தமற்றவை எனவும் கூறினர். அவரது கருத்துகளுக்காக இந்து மற்றும் இசுலாமியர் இருவரின் கோபத்துக்கும் ஆளானார். எல்லா உயிரிலும் ஆண்டவன் உறைகிறான். அவன் எந்த ஆலயத்திலும் இல்லை என்று உபதேசித்தார். கபீர் படிக்காதவராக இருந்தாலும் பல நூல்களை இயற்றினார். ஆதிகிரந்தம், பிரம்ம நிருபன், ஷப்தாவளி போன்ற புகழ் பெற்ற நூல்களை இயற்றியுள்ளார்.
ஜபமாலையை உருட்டுகிறாய் நெற்றி நிறைய விபூதியைப் பூசிக்கொள்கிறாய் கற்றைச் சடாமுடியைக் கட்டிக்கொள்கிறாய் என்ன செய்தால் என்ன? உன் நெஞ்சில் ஈரம் இல்லை அன்பு இல்லை நீ எப்படி இறைவனை அடைவாய்.
என்று போலியான மதவாதிகளைக் கண்டித்து பாடினார். எழுதப் படிக்கத் தெரியாத கபீரின் பாடல்கள் மக்களின் மனங்களில் ஆழப் பதிந்து விட்டது. வாரணாசியில் ஏழை எளிய மக்கள் இவருடைய பாடல்களை மனப்பாடம் செய்து கொண்டார்கள். அதுவே பின்னாளில் நூலாக வெளிவர உதவியது. 500 ஆண்டுகளுக்கு முன்னரே பல புரட்சிகரக் கருத்துகளைக் கூறிய கபீர்தாசர் ராமர் சீதாவின் திவ்ய தரிசனத்தைப் பலமுறை கண்டார். கபீரின் போதனைகள் இந்து இசுலாமிய மதங்களைக் கடந்து சீக்கிய மதத்திலும் இடம் பெற்றன. சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த சாஹிப் பில் கபீரின் பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன. அவரின் பிரபலமான பாடல் ஒன்று
நீர்த்துளி கடலில் அடங்கும் என்பதை யாரும் அறிவார்கள். நீர்த்துளிக்குள் கடல் அடங்கும் என்பதை யாரும் அறிய மாட்டார்கள்.
இதற்கு அர்த்தம் உலகம் இறைவனின் படைப்பு என்பதை அனைவரும் அறிவார்கள். இந்த இறைவனின் படைப்பாகிய தொண்டர்களின் உள்ளத்துக்குள்ளே இறைவனே அடக்கம் என்பதை யாரும் அறிய மாட்டார்கள் என்று பாடுகிறார். 1518 ஆம் ஆண்டில் காசியில் கபீர் இறைவனைத் துதித்தவாறே மோட்ச பிராப்தி அடைந்தார். அவர் இறந்த பொழுது அவரால் ஈர்க்கப்பட்ட இந்து முஸ்லீம் சமயத்தை சேர்ந்தவர்களால் அவரவர் சமயத்தைச் சேர்ந்தவர் என உரிமை கொண்டாடப்பட்டார். கபீரின் இறந்த உடல் தங்களுக்கே சொந்தம் என உரிமை கொண்டாடினர். அவரது உடலை எரிப்பதா அல்லது புதைப்பதா என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு பெரியவர் ஏன் வீணாகச் சண்டையிட்டுக் கொள்கிறீர்கள்? நீங்கள் இருவரும் தலா ஒரு போர்வையைக் கொண்டு உடலைப் போர்த்தி விட்டு செல்லுங்கள். நாளை இறுதி ஊர்வலத்தின் போது முடிவு செய்து கொள்ளலாம் என்று சொல்லி விட்டு சென்றார். அதன்படி இரு தரப்பினரும் உடலின் வலப் பகுதியையும் இடப் பகுதியையும் போர்வை கொண்டு போர்த்தி விட்டுச் சென்றனர். அடுத்த நாள் அவரது திருவுடலை எடுத்துச் செல்ல வந்தனர். போர்வையை எடுத்ததும் ஆச்சர்யத்தில் மூழ்கினார்கள். கபீரின் உடல் மறைந்து அங்கே புத்தம் புது மலர்கள் இருந்தன. இறைவனுக்காகப் பாமாலைகள் பாடிப் பாடிப் பரவசமடைந்த அவரது திருமேனி பூக்களாக உருமாறி இருந்தன. இரு தரப்பினரும் சச்சரவு இல்லாமல் சரிபாதியாக பூக்களைக் கொண்டு சென்று இந்துக்கள் ஒரு பாதி பூக்களை காசியில் சாஸ்திரங்கள் முறைப்படி ஈமக்கடன்களைச் செய்தார்கள். அதுபோல முஸ்லிம்கள் பாதி பூக்களைப் புதைத்தார்கள்.
சுதந்திரத்திற்கு முன்பிருந்த இந்தியாவில் சென்னையிலேயே அதிக மருத்துவ வசதிகள் கிடையாது. ஒரு சிறுவன் அவனது காலில் புண் ஏற்பட்டது சின்னப் புண் தானே என்று அந்தப் பையனும் கண்டு கொள்ளவில்லை. நாள் பட்ட அந்தக் காயம் உள்ளூக்குள் பெரிதாகிப் போனதால் அவனுக்கு உள்ளே வலி ஏற்பட்டது. வலி தாங்கமுடியாமல் தவித்த அவனை அவனது பெற்றோர் டாக்டரிடம் காண்பித்தனர். அந்த உள்ளூர் டாக்டர் அவர்களை கண்டபடி திட்டி இப்படியா விட்டு வைப்பது உடனே பட்டணம் போய் காண்பியுங்கள் என்றார். பையனைச் சோதித்த டாக்டர் உதட்டைப் பிதுக்கினார் உள்ளே செப்டிக் ஆகி விட்டது உடனே காலை எடுக்க வேண்டும் இல்லையேல் உயிருக்கே ஆபத்தாகி விடும் என எச்சரித்தனர். காலை எடுப்பதற்கு நீங்கள் எந்த மருத்துவ மனைக்குப் போனாலும் குறைந்தது 5000 ரூபாய் ஆகும். இந்த மருத்துவமனை என்றால் 3000 ஆகும். நீங்கள் எனக்குத் தெரிந்தவர் என்பதால் நான் என்னுடைய பீஸைக் கூட குறைத்துக் கொள்கிறேன் மருத்துவமனை செலவுகளுக்காக மட்டும் 1500 ரூபாய் கட்டிவிடுங்கள் சிகிச்சையைத் தொடரலாம் என்றார்.
அந்த நாட்களில் அரசாங்க அதிகாரிகளின் மாத சம்பளமே 15 ரூபாய் தான் 1500 ரூபாய் என்று கேட்டதும் அதிர்ந்து போனான் பையன். ஒரு காலை வெட்டி எடுக்க ஒரு மருத்துவருக்கு 1500 ரூபாய் கொடுக்க வேண்டுமென்றால் அந்த காலைக் கொடுத்த கடவுளுக்கு நம்மால் அதற்குப் பிறகு என்ன தரமுடியும் இந்தக் கால் தேயும் வரை அவன் ஆலயத்தை சுற்றுவோம் இவ்வாறு நினைத்த சிறுவன் தன் சொந்த ஊரிலுள்ள முருகன் கோயிலுக்கு சென்றான், 108 மற்றும் 1008 என்ற கணக்கெல்லாம் இல்லை. காலை மாலை என தினமும் கணக்கு வழக்கின்றி கோயிலை சுற்றிக் கொண்டே இருந்தான். சில மாதங்களில் யாராலும் நம்ப முடியாத அற்புதமாக அந்த டாக்டரே அதிசயப்படும் வகையில் தானே ஆற ஆரம்பித்த புண் இருந்த இடம் தெரியாமல் ஓடி மறைந்தது. இனி என் வாழ் நாள் முழுதும் முருகன் புகழ் பாடுவதிலேயே கழியும். அதுவே என் தொழில். அதுவே என் மூச்சு என்று ஊர் ஊராக பிரசங்கம் செய்யத் தொடங்கினான் அந்தப் பையன். அந்தப் பையன் தன் உடல் தளரும் வரை ஓர் அரை நூற்றாண்டிற்கு மேல் நின்றபடியே முருகன் புகழ் பாடிய திரு முருக கிருபானந்த வாரியார் என அழைக்கப்பட்ட வாரியார் சுவாமிகள்.
தாய் தந்தையரை இழந்த ஒரு சிறுவன் இருந்தான். அவனுக்குப் பார்வையும் இல்லை. அவனது உறவினர்கள் அவனை பாரமாக நினைத்து அடித்து விரட்டிவிட்டனர். ஒரு குச்சியை வைத்துக்கொண்டு அவன் அழுதுகொண்டே கால் போனபோக்கில் சென்றுகொண்டிருந்தவன் பக்கத்தில் இருந்த காட்டிற்குள் நுழைந்துவிட்டான். கண் தெரியாததால் காட்டில் தனியாக இருப்பதும் அவனுக்கு பயமாக இல்லை. ஒரு கொட்டாங்கச்சியைக் கண்டுபிடித்து அதில் குச்சி நாண் எல்லாம் வைத்துக்கட்டி இசைக்கத் துவங்கினான். காலையில் மெதுவாகக் கிளம்பி அருகிலுள்ள கிராமத்திற்குச் செல்வான். எங்கேயோ எப்போதோ கேட்ட ஒரு நாமாவளி அவன் நினைவில் இருந்தது. கிருஷ்ணா கோவிந்தா முராரே என்று பாடிக்கொண்டே வீடு வீடாகச் சென்று பிச்சையெடுத்து வயிற்றைக் கழுவிக் கொண்டான். வேண்டியது கிடைத்ததும் திரும்பிக் காட்டுக்கே வந்துவிடுவான். அவனுக்குத் தெரிந்த அந்த ஒரே நாமாவளியையே விதம் விதமாகப் பாடிக்கொண்டிருப்பான். பகவன் நாமத்தைப் பாடிப் பாடி அவனுக்கு நல்ல குரல் வளமும் வந்துவிட்டது. இப்படியாக அவன் காலம் உருண்டோடியது. வயதும் ஏறிக்கொண்டேயிருந்தது. கிருஷ்ண நாமத்தின் பெருமை அறியாமல் சொன்னபோதும் நாமத்தினால் முகத்தில் ஒரு தேஜஸும் வந்துவிட்டது.
ஒரு நாள் சில வீரர்கள் அங்கு வந்தனர். அவர்கள் இவரையும் இவரது ஒளி பொருந்திய முகத்தையும் பார்த்ததும் விழுந்து வணங்கினர். யாரோ எதிரே நிற்கிறார்கள் என்று உணர்ந்ததும் பழக்கத்தினால் கிருஷ்ணா என்றார். சுவாமி எங்களைக் காப்பாத்துங்க என்றனர். என்னைக் காப்பாத்தவே யாருமில்லன்னு நானே காட்டில் வந்து உக்காந்திருக்கேன். நான் எப்படி உங்களைக் காப்பாற்றுவது என்று கேட்டார். சுவாமி நீங்க அப்படிச் சொல்லக்கூடாது. நாங்க பெரிய ஆபத்தில் இருக்கோம். உங்களை விட்டா வேற வழி இல்லை. நாங்க ராஜாகிட்ட வேலை பார்க்கறோம். ராஜா ரொம்ப ஆசையா ஒரு அரபுக் குதிரையை வளர்த்தார். அந்தக் குதிரை எங்க பொறுப்பில் இருந்தது. இன்று காலை அந்தக் குதிரை காணாமல் போய்விட்டது. அந்தக் குதிரையை இரவுக்குள் தேடிக்கண்டுபிடிச்சுக் கொண்டு வரலன்னா எங்க ரெங்க ரெண்டு பேர் தலையையும் வாங்கிடுவேன்னு அரசர் உத்தரவு போட்டிருக்கார். நாங்களும் காலையில் இருந்து தேடிக்கொண்டிருக்கின்றோம். குதிரையைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. நீங்க உங்க ஞான த்ருஷ்டியில் பார்த்துச் சொன்னால் எங்கள் உயிர் தப்பிக்கும் நீங்கதான் எங்களை காப்பாத்தனும் என்றனர்.
சுவாமி சிரித்தார். எனக்கு ஊன த்ருஷ்டியே இல்லை. ஞான த்ருஷ்டிக்கு நான் எங்க போவேன் என்றார். இருவரும் விடுவதாய் இல்லை. நீங்க அப்படிச் சொல்லக்கூடாது. எப்படியாவது சொல்லுங்க. உங்களைப் பார்த்தாலே நீங்க பெரிய தபஸ்வின்னு தெரிகிறது என்று அவரிடம் கேட்டுக்கொண்டே இருந்தனர். அவர்களிடமிருந்து விடுபட்டால் போதும். எதையாவது சொல்லி அனுப்பிவிடுவோம் என்று முடிவு செய்தார். இங்கேயிருந்து நேரா கிழக்குப்பக்கம் போங்க அங்க ஒரு ஆலமரம் இருக்கும். அங்கிருந்து திரும்பி வடக்கே போனால் ஒரு குளம் வரும். குளக்கரையில் வேப்பமரம் இருக்கும். அதன் கிளையில் ஒரு காக்கா இருக்கும். அந்தக் காக்கா பறக்கும் திசையில் தொடர்ந்துபோனா உங்க குதிரை கிடைக்கும் என்று வாயில் வந்ததையெல்லாம் சொன்னார். அவர்களும் மிக்க நன்றி என்று சொல்லிவிட்டு வணங்கிச் சென்றனர்.
அவர் சொன்னதையே வாய்ப்பாடு மாதிரி சொல்லிக்கொண்டு அதே வழியில் சென்றனர். பார்த்தால் ஆச்சரியம் தாங்கவில்லை. நிஜமாகவே காகம் பறந்த திசையில் சென்றபோது குதிரை மேய்ந்து கொண்டிருந்தது. மறுபடி அவரைத் தேடிச் செல்ல நேரமின்றி இரவுக்குள் அரசவைக்குப் போகலாம் என்று குதிரையை அழைத்துக்கொண்டு அரசனிடம் போனார்கள். குதிரை திரும்பக் கிடைத்ததற்கு மிகவும் மகிழ்ந்தான் அரசன். எப்படிக் கிடைத்தது குதிரை என்று கேட்டார் அரசர். ஒருவரை ஒருவர் பார்த்தனர் காட்டில் நடந்த விவரங்களைச் சொன்னார்கள். அரசனுக்கு மிகவும் ஆச்சரியம். நம் எல்லைக்குட்பட்ட காட்டில் இப்படி ஒரு மஹான் இருக்கிறார் என்றால் நாம் அவசியம் அவரை தரிசிக்க வேண்டும். நாளைக் காலை என்னை அவரிடம் அழைத்துச் செல்லுங்கள் என்றான் அரசன். மறுநாள் காலை வீரர்களோடு அரசரும் பெரிய பரிவாரத்துடனும் வெகுமதிகளோஒடும் இந்தக் கண் தெரியதவர் முன் வந்து நின்றனர். அரசன் அவரை விழுந்து விழுந்து வணங்கி குதிரை கிடைத்துவிட்டதையும் சொன்னதும்தான் அவருக்குச் சற்று நிம்மதியாயிற்று. அவரை வற்புறுத்தித் தன்னுடனேயே அரண்மனையில் சிலகாலம் தங்குமாறு அழைத்துச் சென்றான்.
கூனிக் குறுகிப்போனார் கண் தெரியாதவர். வாயில் வந்ததையெல்லாம் சொன்னதே பலித்துவிட்டது இத்தகைய வாக்குசித்தி நமக்கு எப்படி வந்தது வயிற்றுப் பிழைப்பிற்காகவும் பொழுதைப் போக்குவதற்காகவும் உன் நாமத்தைச் சொன்னதற்கே இவ்வளவு பலனா? நிஜமாக உணர்ந்து சொன்னால்?அழுதார் கண் தெரியாதவர். சிலநாட்கள் அரண்மனையில் இருந்துவிட்டு மன்னனிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பி கிருஷ்ணநாமத்தை உருகி உருகிப் பாடிக்கொண்டு அவர் வீதியில் நடந்தபோது ஸ்ரீ வல்லபாசாரியார் அவரைத் தடுத்தாட்கொண்டு கிருஷ்ண மந்திரத்தை உபதேசம் செய்தார். அவரது பூஜா மூர்த்தியான ஸ்ரீ நாத்ஜிக்கு தினமும் இரவு உத்சவத்தில் பாடும் கைங்கர்யத்தைக் கொடுத்தார். கண் தெரியாத அந்த மகான் சூர்தாஸர் ஆவார். அவர் பாடும்பொழுது கண்ணன் அவர் எதிரில் அமர்ந்து அவரது பாடல்களை ரசித்துக் கேட்பான்.
பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் பூந்தானம் நம்பூதிரி என்பவர் சிறந்த குருவாயூரப்பன் பக்தர். இவர் இந்தியாவின் கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தில் கீழாற்றூரில் வசித்து வந்தார். இவர் தனது 20 வயதில் திருமணம் செய்து கொண்டார். ஆனால் நீண்ட காலமாக அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. அவர் சந்தனா கோபாலம் ஓதி மூலம் குருவாயூர் இறைவனைப் பாடித்துதித்தார். பின்னர் இவருக்கு ஒரு மகன் பிறந்தார். அதற்கான ஒரு வீழா ஏற்பாடு செய்து அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். அனைவரும் வந்தனர். ஆனால் விழா ஆரம்பிக்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்பே குழந்தை இறந்துவிட்டது. துயரமடைந்த பூந்தானம் குருவாயூர் கோயிலில் தஞ்சம் அடைந்து பிரார்த்தனை செய்யத் தொடங்கினார். மனம் உடைந்த பூந்தானத்தின் மடியில் குருவாயூரப்பன் ஒரு குழந்தையாக ஒரு கணம் இருந்து ஆறுதல் படுத்தினார். சிறிய கிருஷ்ணர் நம் இதயத்தில் நடனமாடுகையில் நமக்கு சொந்தமான சிறியவர்கள் தேவையா என்று கிருஷ்ணரை தனது மகனாக கருதி ஞானம் அடைந்தார். இதனை ஞானப்பனா என்னும் நூலில் எழுதியிருக்கிறார்.
அவர் தினமும் தனது ஊரிலிருந்து காட்டு வழியே தொலைதூரம் நடந்து குருவாயூருக்குச் சென்று குருவாயூரப்பனை தரிசனம் செய்வார். அவ்வாறு செல்கையில் ஒரு நாள் வழியில் சில கொள்ளைக்காரர்கள் அவரைத் தடுத்துத் தாக்கினர். அவரிடம் என்ன பொருள் இருக்கிறது என்று ஆராயத் தொடங்கினார்கள். அவர் மனமோ தன் விரல்களில் உள்ள மோதிரத்தை அவர்கள் பார்த்துவிடக் கூடாது என்று பயந்தது கண்களை மூடி குருவாயூரப்பா குருவாயூரப்பா என்று உரத்துக் கூறினார். சிறிது நேரத்தில் புதியதான மலரின் மணம் காற்றில் வீசியது. கண் திறந்து பார்த்தபொழுது மாங்காட்டச்சன் என்ற திவான் குதிரை மேல் வேகமாக வாளைச் சுழற்றிக் கொண்டு வந்தார். அவரைக் கண்டதும் கொள்ளையர்கள் வேகமாக அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார்கள். மனம் நெகிழ்ந்த பூந்தானம் உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்வேன் என்று கேட்டார் அவரும் உன்னுடைய கையில் இருக்கும் மோதிரத்தை எனக்குக் கொடு என்று கூறினார். மோதிரம் களவு போய்விடக் கூடாது என்று பயந்த பூந்தானம் இப்போது தயங்கி திகைத்து செய்வதறியாது அந்த மோதிரத்தை திவானுக்குப் பரிசாக அளித்தார். திவான் அவரைத் தன் குதிரையில் ஏற்றிக் கொண்டு குருவாயூர் எல்லையில் விட்டுவிட்டுச் சென்றார்.
அதே நேரம் கோவில் அர்ச்சகரின் கனவில் தோன்றிய குருவாயூரப்பன் அர்ச்சகரே என் கையில் ஒரு மோதிரம் இருக்கும் அதைப் பூந்தானத்திடம் கொடுத்து விடுங்கள். கொள்ளையர்களிடம் இருந்து அவரைக் காப்பாற்ற மாங்காட்டச்சன் உருவில் சென்று அவரிடம் இருந்து விளையாட்டாக மோதிரத்தைப் பெற்றேன் என்று கூறினார். பூந்தானம் குருவாயூர்க் கோயிலை நெருங்கும்போது அர்ச்சகர் ஓடி வந்து பூந்தானத்தின் காலில் விழுந்தார். தன் கனவில் குருவாயூரப்பான் சொன்னதைக் கூறி மோதிரத்தை அவரிடம் கொடுத்தார். மோதிரத்தைப் பார்த்த பூந்தானத்திற்குப் புல்லரித்தது. முந்தைய இரவு மாங்காட்டச்சனிடம் கொடுத்த அதே மோதிரம்தான் அது தன்னைக் காப்பாற்ற குருவாயூரப்பனே மாங்காட்டச்சனாக வந்ததை எண்ணி ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார்.
தனது இறுதிகாலம் வந்ததை உணர்ந்த அவர் தான் சொர்க்கத்திற்கு புறப்பட போவதாகவும் தன்னுடன் வர விருப்பம் உள்ளவர்கள் வரலாம் என்றும் அறிவித்தார். கிராம மக்கள் அனைவரும் மறுத்துவிட்டனர். இறுதியில் நோய்வாய்ப்பட்ட மனைவியை பராமரித்த ஒரு வேலைக்காரி மட்டுமே அவருடைய பரலோக பயணத்தில் அவருடன் சேர்ந்து கொண்டதாக அவரது புராண வரலாறு தெரிவிக்கிறது. ராகவியம், விஷ்ணுவிலாசம் சமஸ்கிருதத்தில் சீதாராகவம் மலையாளத்தில் விஷ்ணுகீதா பஞ்சதந்திரம் ஆகிய நூல்களை இயற்றியிருக்கிறார்.
வள்ளலார் அவர்கள் 1864-ம் ஆண்டு வேட்டவலம் கிராமத்திற்கு வருகை தந்தபோது ஜமீன் மாளிகையில் தங்கியிருந்தார். அப்போது பிரபல ஓவியரான விழுப்புரத்தைச் சேர்ந்த செங்கல்வராசு என்பவர் வள்ளலார் அவர்களின் திருஉருவத்தை ஓவியமாக வரைந்தார்.
அந்த ஓவியத்தின் கீழேயே வரைந்தவரின் கையொப்பமும் ஆண்டு தேதியும் குறிக்கப்பட்டிருந்தது. இது மட்டுமே நேரடியாக வரையப்பட்ட படம். இந்த படத்தில் இருப்பதுதான் வள்ளலாரின் திருஉருவம்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த தேவிகாபுரம் என்ற சிற்றூரில் 1854 ல் பிறந்தாள் ஆனந்தாம்பா. அந்த ஊரில் புகழ்பெற்ற பெரியநாயகி ஆலயம் உண்டு. அந்த ஆலயத்தின் மேற்கு மூலையில் தேவியின் மூல விக்கிரகத்தை தரிசித்தவாறு மணிக்கணக்கில் தியானத்தில் ஆழ்ந்திருப்பாள் சிறுமி ஆனந்தாம்பா. அவளது வீடு கோயிலின் அருகில் ஞ இருந்தது அவள் தந்தை சேஷ குருக்கள் கோயில் அர்ச்சகர்களில் ஒருவர். குருக்களின் புதல்வி என்பதால் ஆலயத்திற்கு அவளால் எப்போது வேண்டுமானாலும் போக முடிந்தது. தியானத்தில் மணிக்கணக்கில் அமர்ந்திருக்கவும் முடிந்தது. அவள் வயதுடைய சிறுமிகள் பல்லாங்குழியிலும் பாண்டியிலும் பொழுது போக்கிய காலங்களில் அவள் மட்டும் தன் நேரம் முழுவதையும் தியானத்திற்கே அர்ப்பணித்தாள்.
அக்கால வழக்கப்படி அவளுக்கு ஒன்பது வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது. சட்டநாத மடத்தின் உரிமையாளன் கணவன் சாம்பசிவம் 24 வயதுப் பையன். சென்னை கோமளீஸ்வரன் பேட்டையில் சட்டநாத மடம் என்றொரு மடம் இருந்தது. கோமளீஸ்வரன் பேட்டை இப்போது புதுப்பேட்டை எனப்படுகிறது. ஏற்கனவே திருமணமாகி மனைவியை இழந்த அவனுக்கு இரண்டாம் தாரமாய் வாழ்க்கை பட்டாள் ஆனந்தாம்பா. ஆனந்தாம்பாவை அவன் ஒரு வேலைக்காரி போல் நடத்தினான். சட்டநாத மடத்தின் அருகில் கோமளீஸ்வரர் கோயில் என்ற சிவன் கோயில் இருந்தது. தற்போதும் கோயில் இருக்கிறது. வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் அங்கே போய் சிவன் சன்னதியில் அமர்ந்து கொள்வாள் ஆனந்தாம்பா. பெண்பித்துப் பிடித்து பல்வேறிடங்களில் அலைந்த சட்டநாதன் பெருவியாதி பிடிக்கப்பட்டு முப்பத்தைந்தே வயதில் காலமானான். ஆனந்தாம்பாவுக்கு அப்போது வயது இருபது. அக்கால வழக்கப்படி அவளுக்கு முடி மழித்து முக்காடு போட்டார்கள். கணவன் காலமானது அவளுக்கு ஆன்மிக வாழ்வுக்கு ஒரு வாய்ப்பே ஏற்படுத்தியது.
தேவிகாபுரத்தில் சிறிதுகாலம் இருந்த அவள் அதன்பின் திருவண்ணாமலை அருகே போளூரில் அண்ணன் வீட்டுக்கு வந்துசேர்ந்தாள். வீட்டின் அருகிலிருந்த குன்றில் நட்சத்திர குணாம்பா என்ற உயர்நிலைத் துறவினி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவளை சிஷ்யையாக ஏற்றார். இறைச்சக்தியை தேவி வடிவில் மந்திர ரூபமாக வழிபடும் ஸ்ரீ சக்ர உபாசனையைக் கற்றுத் தந்தார். அந்த உபாசனையை மேற்கொண்டதால் தான் பின்னால் ஆனந்தாம்பா ஸ்ரீ சக்ர அம்மா என அழைக்கப்பட்டார். அதுவே பொது மக்களின் வாய்மொழியில் மருவி சக்கரையம்மா ஆயிற்று. நான் மீண்டும் சென்னைக்கு, என் புகுந்த வீட்டிற்குச் செல்ல வேண்டுமே என குருவான உங்களை இனி அடிக்கடிச் சந்திப்பது எவ்விதம் என்று சக்கரையம்மா கேட்டபோது குணாம்பா அதுபற்றிக் கவலைப்படாதே என்று லகிமா என்ற ஓர் ஆன்மிக சித்தியே அவருக்கு கற்று கொடுத்தார். லகிமா என்பது உடலை மிக லேசாக மாற்றிக் கொள்வது. அந்த சித்தி அடைந்தவர்களால் விண்ணில் பறக்க முடியும். இனி எப்போது வேண்டுமானாலும் நீ பறந்துவந்து என்னைப் பார்க்கலாம் என அருள்புரிந்தார் குணாம்பா.
சென்னை கோமளீஸ்வரன் பேட்டையில் இருந்த தன் புகுந்த வீட்டுக்கு வந்தாள் ஆனந்தாம்பா. ஒருநாள் ஸ்ரீசக்ர உபாசனையில் அவள் பேரொளியால் சூழப்பட்டாள். தானே பரம் பொருளாய் ஒளிவீசுவதுபோல் தோன்றியது அவளுக்கு. அளவற்ற ஆனந்தத்தில் கடகடவென்று சிரிக்கலானாள். அவளது ஆன்மிக வளர்ச்சியை அறியாத புகுந்த வீட்டார் கணவன் இறந்ததால் அவளுக்குப் பித்துப் பிடித்துவிட்டதென்று கருதினர். அக்காலத்தில் டாக்டர் எம்.சி. நஞ்சுண்டராவ் என்ற புகழ்பெற்ற ஒரு மருத்துவர் இருந்தார். ஏழைகளுக்கு இலவசமாகவே மருத்துவம் பார்த்தவர். உன்னதமான ஆன்மிகவாதி அவர். ஒரு சமயம் ஆனந்தாம்பாவின் சகோதரருக்கு உடல்நலம் குன்றியது. மருத்துவம் பார்க்க டாக்டர் நஞ்சுண்டராவை அழைத்தார்கள். அவர் மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்த போது மொட்டை மாடியிலிருந்து வித்தியாசமான அந்தச் சிரிப்பின் முழக்கம் கடகடவெனக் கேட்டது. ஆன்மிகவாதியான நஞ்சுண்டராவ் அந்தச் சிரிப்பால் கவரப்பட்டார். யார் உரத்துச் சிரிக்கிறார்கள் என்று விசாரித்தார். கணவனை இழந்ததால் மனநிலை பாதிக்கப்பட்ட ஆனந்தாம்பா என்ற பைத்தியத்தின் சிரிப்பு அது என்று அலட்சியமாகக் கூறினார்கள் உறவினர்கள். அந்த சிரிப்பு அவரை அழைத்ததுபோல் அவருக்கு தோன்றியது. மாடியேறிச் சென்றார். முதுகுப் புறத்தைக் காட்டிக் கொண்ட அமர்ந்திருந்த ஆனந்தாம்பா மகனே வா என அழைத்தாள். தூக்கிவாரிப்போட்டது நஞ்சுண்டராவுக்கு மனிதர்களுக்கு முதுகில் கண் உண்டா என்று எண்ணி மேற்கொண்டு எதுவும் பேசாத ஆனந்தாம்பாளிடம் தானும் பேசாமல் விழுந்து வணங்கிவிட்டு வந்துவிட்டார்.
பின்னொருநாள் கோமளீஸ்வரன் கோயிலுக்குச் சென்றார். ஆலய வாயிலில் அமரந்து கடகடவென்று சிரித்துக் கொண்டிருந்த ஆனந்தாம்பாவை மறுபடி பார்த்தார். ஒளிவீசும் கண்கள். ஆனந்தாம்பாவின் மேனியிலிருந்து ஓர் அமைதி கலந்த பிரகாசம் பொங்கி வழிவதுபோல் தோன்றியது. நிச்சயம் இவர் பித்துப் பிடித்த பெண்மணி அல்ல என்பதை அவரது அவரது மருத்துவ மனம் உணர்ந்தது. ஏன் சிரிக்கிறீர்கள் தாயே என்று பக்தி கலந்த பணிவோடு விசாரித்தார். ஆனந்தாம்பா சிரிப்பை நிறுத்திவிட்டு நஞ்சுண்டராவைப் பார்த்தார். மகனே மனித உடலின் உள்ளே உறைந்திருக்கும் ஆன்மா எப்போதும் ஆனந்தம் நிறைந்தது. இன்ப துன்பங்கள் உடலுக்குத் தானே அன்றி ஆன்மாவுக்கில்லை. நீ உடல் அல்ல. நீ உடலில் உள்ளாய். அவ்வளவுதான். உனது தற்காலிகக் கூடாரமான இந்த உடலைப் பாராமல் கூடாரத்தின் உள்ளே நிரந்தர வஸ்துவாய் வசிக்கும் உன் ஆன்மாவைப் பார் அப்படிப் பார்க்கத் தொடங்கினால் நிலையான பேரின்பத்தை நீ அடைய முடியும். இந்த வார்த்தைகள் நஞ்சுண்டராவின் உள்ளத்தில் மின்னல் போல் பாய்ந்தன. சொன்ன வார்த்தைகளில் உள்ள பேருண்மை சொன்னவர் அந்த வார்த்தைகளின் கருத்தை வாழ்வில் அனுசரித்து வாழ்கிறார் என்பதால் அந்த வார்த்தைகளுக்கு ஏற்பட்டிருந்த மந்திர சக்தி. தன் குரு அவரே என உணர்ந்து ஆனந்தாம்பா என்கிற சக்கரையம்மாவைப் பணிந்தார் நஞ்சுண்டராவ். பின்னர் சக்கரையம்மா பற்றி வெளியுலகம் அறிய நஞ்சுண்டராவே காரணமானார். அடிக்கடி சக்கரையம்மாவைச் சந்தித்து உரையாடிப் பயன்பெற்று அவர் சக்கரையம்மாவின் சீடராகவே ஆனார். தம் குருவைப் பல திருத்தலங்களுக்கு நஞ்சுண்ட ராவ் அழைத்துச் சென்றார்.
திருவண்ணாமலையில் வாழ்ந்த சேஷாத்ரி சுவாமியையும் ரமணரையும் சக்கரையம்மா சந்தித்தார். தன்னை ஆசிர்வதிக்குமாறு சக்கரையம்மா ரமணரிடம் கேட்டபோது ரமணர் மலர்ச்சியோடு அவர் ஏற்கெனவே கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர் என்று குறிப்பிட்டார். 1901இல் சக்கரையம்மா திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்திற்குச் செல்ல விரும்பினார். நஞ்சுண்டராவ் அழைத்துச் சென்றார். அப்போது நஞ்சுண்டராவைத் தவிர இன்னும் சிலரும் அவரது சிஷ்யர்களாகியிருந்தார்கள். திரும்பி வரும்போது சக்கரையம்மா அந்தப் பகுதியில் அமைந்த ஓர் இடத்தை நஞ்சுண்டராவிடம் குறிப்பிட்டுக் காட்டினார். அந்த நிலத்தை வாங்கி விடுமாறும் தன் உடலை அங்கேயே அடக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் சொன்னபோது வருத்தத்துடன் தலையாட்டினார் நஞ்சுண்டராவ். தம் குரு தம்மை விட்டு சென்றுவிடுவார் என்பதை அந்த சிஷ்யரால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. வருந்தாதே மகனே நான் சமாதியில் என்றென்றும் இருந்து அனைவருக்கும் அருள்புரிந்து வருவேன். என் சமாதி இருக்குமிடம் அமைதியின் கோயிலாகத் திகழும் என்று சொல்லிச் சீடரை ஆறுதல் படுத்தினார் குரு. சொன்னபடியே 1901 பிப்ரவரி 28 ஆம் நாள் சக்கரையம்மா உடல் சட்டையை உதறினார். அவரது பொன்னுடல் அவர் குறிப்பிட்ட இடத்திலேயே சமாதி செய்விக்கப்பட்டது. சென்னையில் திருவான்மியூரில் உறவுகளைத் துறந்து துறவியான பெண் சித்தர் சக்கரையம்மா தன் சமாதியில் நிரந்தரமாய் வாழ்ந்து வருகிறார்.சுதந்திரப் போராட்ட காலத்தில் சக்கரையம்மா என்ற பெண்சித்தர் வானில் பறவைபோல பறப்பதைப் பலரும் பார்த்து வியந்திருக்கிறார்கள். தமிழறிஞரான திரு.வி.க. தாம் எழுதிய உள்ளொளி என்ற புத்தகத்தில் இதுபற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.
ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் ஜீவ சமாதி அடைந்த இடம் மாஞ்சாலி கிராமம் எனப்படும் மந்த்ராலயம். இது ஆந்திராவில் துங்கபத்திரா நதிக்கரையில் அமைந்துள்ளது. அது பூர்வ காலத்தில் பிரகலாதன் யாகம் செய்த இடம். அதனால் அந்த இடத்தையே தனது சமாதிக்குத் தேர்ந்தெடுத்தார் ஸ்ரீ ராகவேந்திரர். அப்பகுதியை ஆண்ட சுல்தான் மசூத் கானும் அதற்கு இணங்கி மாஞ்சாலியை ராகவேந்திரருக்குக் கொடுத்தார். ஸ்ரீ ராகவேந்திரர் 1671ம் ஆண்டில் ஜீவன் தன்னுடலில் இருக்கும் போதே பிருந்தாவனத்தில் அமர்ந்து ஜீவ சமாதி அடைந்தார். கி.பி. 1812ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு ஒரு சட்டம் இயற்றியது. அந்தச் சட்டத்தின் மூலம் கோயில் இடத்திற்கான வாரிசுகள் யாரும் இல்லை என்றால் அந்த இடத்தை அரசாங்கமே எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிப்புச் செய்தது. அந்தச் சட்டத்தின் மூலம் பிருந்தாவனத்துக்கு தானமாகக் கொடுக்கப்பட்டிருந்த நிலமானியம் முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டது. ஆனால் பொது மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். பல ஆண்டுகளுக்கு முன்னால் அப்பகுதியை ஆண்ட சுல்தான் ஸ்ரீ ராகவேந்திரருக்கு தானமாக வழங்கிய இவ்விடத்தை அரசு கையகப்படுத்தக் கூடாது என்று அவர்கள் எதிர்த்தனர். அதனால் பிரிட்டிஷ் அரசு அப்போது பெல்லாரி மாவட்ட ஆட்சியாளராக இருந்த சர்தாமஸ் மன்றோ தலைமையில் ஒரு குழுவை நியமித்து நிலைமையைச் சரி செய்யச் சொல்லி உத்தரவிட்டது.
சர்தாமஸ் மன்றோ தனது குழுவினருடன் ஆலயத்துக்கு விரைந்தார். ஆலயத்தின் நுழைவாயிலில் தனது ஷூவையும் தொப்பியையும் கழற்றி விட்டு பிருந்தாவனத்தை நோக்கிச் சென்றார். ஜீவசமாதி ஆலயம் அருகே சென்ற சர்தாமஸ் மன்றோ யாரோ அங்கு இருப்பது போல் வணக்கம் செலுத்தினார். பின் சத்தமாக உரையாட ஆரம்பித்தார். அவருடன் வந்திருந்த குழுவினருக்கு ஒன்றுமே புரியவில்லை. காரணம் அங்கே மன்றோவைத் தவிர எதிரே யாருமே இல்லை. ஆனால் மன்றோவோ யாரோ எதிரில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருப்பது போல சரளமாக ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தார். ஆலயம் பற்றி அதை தானமாக அளித்தது பற்றி ஆங்கிலேய அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பு பற்றி எல்லாம் அவர் யாரிடமோ விரிவாக விளக்கிக் கொண்டிருந்தார். அவர் யாரிடம் பேசுகிறார் எதற்குப் பேசுகிறார் ஒருவேளை சித்தப்பிரமை ஏதும் ஏற்பட்டு விட்டதா என்றெல்லாம் என்ணிய குழுவினர் ஒன்றுமே புரியாமல் திகைத்துப் போய் நின்று கொண்டிருந்தனர். வெகு நேரம் கழித்து தனது உரையாடலை முடித்துக் கொண்டு தங்கள் ஆங்கிலேயப் பாணியில் அந்த பிருந்தாவனத்துக்கு ஒரு சல்யூட் வைத்து விட்டு வெளியே வந்தார் சர்தாமஸ் மன்றோ. அதுவரை திகைத்துப் போயிருந்த குழுவினர் அவரிடம் யாரிடம் பேசிக் கொண்டிருந்தீர்கள் எனக் காரணம் கேட்டனர். அதற்கு சர்தாமஸ் மன்றோ பிருந்தாவனத்தின் அருகே காவி உடை அணிந்து ஒளி வீசும் கண்களுடன் உயரமாக ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவருக்கு நான் அரசு மான்யம் பற்றி சில விளக்கங்களை அளித்தேன். அவரும் என்னிடம் அது குறித்து உரையாடி மடத்தின் சொத்து பற்றிய சரியான விளக்கத்தைத் தந்து விட்டார். இந்த இடம் மடத்துக்குத்தான் சொந்தம் என்பதில் எந்த ஐயமுமில்லை என்றார். மேலும் அந்த மனிதரது ஒளி வீசும் கண்கள் பற்றியும் அவரது கம்பீரக் குரல் பற்றியும் செழுமையான ஆங்கில உச்சரிப்புப் பற்றியும் வியந்து கூறியவர் ஏன் நீங்கள் அவரைக் காணவில்லையா என்று கேட்டார். தங்கள் கண்களுக்கு அங்கு யாருமே தெரியவில்லை என்று கூறிய அவர்கள் சர்தாமஸ் மன்றோவுடன் உரையாடியது சாட்சாத் ஸ்ரீ ராகவேந்திரர் தான் என்பதை அவருக்கு உணர்த்தினர்.
கடந்த நூற்றாண்டில் காலமான மகான் தன் முன் நேரில் தோன்றி அதுவும் தன் பாஷையான ஆங்கிலத்திலேயே தன்னுடன் பேசிப் பிரச்சனையைத் தீர்த்த விதம் கண்டு பிரமித்தார் சர்தாமஸ் மன்றோ. தனக்குக் கிடைத்த பாக்கியத்தை எண்ணி மகிழ்ந்தார். அரசுக்கும் ஆளுநருக்கும் அந்த இடம் மடத்துக்குச் சட்டப்படி உரிமை உள்ள நிலம் என்று தகவல் அனுப்பியதுடன் அன்று முதல் ஸ்ரீ ராகவேந்திரரின் பக்தராகவும் ஆகிப்போனார். விரைவிலேயே சர்தாமஸ் மன்றோ தாற்காலிக ஆளுநராகப் பொறுப்பேற்கும் நிலை வர அவர் கையெழுத்திட்ட முதல் கோப்பு மடத்துக்கு நிலம் அளிப்பது தொடர்பானது தான். இந்தச் சம்பவங்கள் அப்போதைய சென்னை மாகாண கெஜட்டிலும் (அரசு ஆவணக் குறிப்பு) வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அன்று முதல் மந்த்ராலயம் ஆலய வளர்சிக்கு உதவியதுடன் பல இந்துத் திருத்தலங்களுக்கும் சென்று இறைவனை வணங்கி வழிபட்டார். ஒருமுறை சர்தாமஸ் மன்றோவுக்கு மிகக் கொடிய வயிற்று நோய் ஏற்பட்டது. நம்பிக்கையோடு அவர் திருப்பதி பெருமாளை வேண்டிக் கொண்டார். வயிற்றுவலி குணமானதும் ஒரு கிராமத்தையே கோயிலுக்கு தானமாக அளித்ததுடன் தன் பெயரில் தினந்தோறும் பொங்கல் செய்து இறைவனுக்குப் படைக்கப்பட வேண்டும் என்றும் ஆணையிட்டார். இன்றும் தினமும் திருப்பதி திருமலையில் சர்தாமஸ் மன்றோ கட்டளை பெயரில் பொங்கல் செய்து விநியோகிக்கப்படுகிறது.
நாராயண பட்டத்ரி 1560 ஆம் ஆண்டு பாரதப் புழா ஆற்றின் வடகரையில் திருநாவா என்ற விஷ்ணு சேத்திரத்திற்கு அருகில் மேல்புத்தூர் என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது தகப்பனார் மாத்ருதத்தர் இவருக்கு சிறு வயதில் கல்வி கற்றுக் கொடுத்தார் பிறகு இவர் ரிக் வேதத்தை மாதவாச்சாரியார் என்பவரிடமும் தர்க்க சாஸ்திரத்தை தாமோதராச்சாரியாரிடமும் கற்றுத் தேர்ந்தார். இவர் வ்யாகரணம் என்று சொல்லப்படுகின்ற சமஸ்கிருத இலக்கணத்தை அச்யுதபிஷாரடி என்பவரிடம் பயின்றார். இவர் தன் இளமையிலேயே கல்வியைக் கற்று முடித்தார். ஒரு நாள் இவரது குருவான அச்யுதபிஷாரடி இவரை அழைத்து இன்றோடு உன் குருகுல வாசம் முடிகிறது. உனக்கு சமஸ்கிருதத்தில் எல்லாம் கற்றுக் கொடுத்து விட்டேன். இனி நீ உன் இல்லத்திற்குச் சென்று திருமணம் செய்து கொண்டு கிரகஸ்தாஸரமத்தை ஏற்றுக் கொள். தேவர்களுக்குப் பண்ண வேண்டிய யாகங்கள் ஹோமங்கள் எல்லாம் செய் என்று கூறி ஆசிர்வதித்தார். இதைக் கேட்ட பட்டத்ரி அவர் காலில் விழுந்து நமஸ்கரித்து. குருவே இத்தனை காலமும் சமஸ்கிருதத்திலேயே மிகவும் கடினமான வ்யாகரணத்தை நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள். உங்களுக்கு நான் குருதக்ஷணையாக என்ன தரட்டும் என்று பணிந்து கேட்டார். அப்பொழுது அச்யுதபிஷாரடி எனக்கு எந்த குருதக்ஷணையும் வேண்டாம். குருவுக்கு யாரும் தட்சணை கொடுக்க முடியாது. ஒரு குருவுக்கு அவர் சீடன் கொடுக்கும் சிறந்த தட்சணை அவன் கற்ற பாடத்தை மற்றவருக்கும் குற்றம் இல்லாமல் கற்றுக் கொடுப்பதுதான். அப்படியும் நீ குருதக்ஷணை கொடுக்க நினைத்தால் நீ கற்ற சமஸ்கிருதத்தை தக்ஷணை வாங்காமல் எல்லோருக்கும் கற்றுக் கொடு அதுவே எனக்குப் போதும் என்று கூறினார்.
பட்டத்ரி குருவிடம் குருவே நீங்கள் சொன்னது போலவே நான் செய்கிறேன். ஆயினும் நான் தங்களுக்கு ஏதாவது குரு தட்சணை தர விரும்புகிறேன் என்று கேட்டார். இதைக் கேட்ட குரு உன்னால் எனக்கு என்ன தர முடியும் என்று சொல் அதை வாங்கிக் கொள்ள முடியுமா முடியாதா என்று நான் சொல்லுகிறேன் என்று கூறினார். பட்டத்ரியின் விடாப்பிடியான வேண்டுகோளுக்கு ஒரு காரணம் இருந்தது. அவரது குருவான அச்யுதபிஷாரடிக்கு வாதரோகம் இருந்தது. அவரால் தன் கை கால்களை நகர்த்தக் கூட முடியாது. அப்படிப்பட்ட நிலையிலும் அவர் தன் சீடர்களுக்குப் பாடம் கற்றுக் கொடுத்தார். தினமும் அவரை 15 20 சீடர்கள் குளிப்பாட்டி அவரைக் கொண்டு வந்து ஒரு நாற்காலியில் உட்கார வைப்பார்கள். அந்த நிலையிலேயே அவர் தன் சீடர்களுக்குப் பாடம் நடத்துவார். இதனை தினமும் கண்ணுற்ற பட்டத்ரிக்கு இவரது நோயை நாம் ஏன் வாங்கிக் கொள்ளக் கூடாது என்று தோன்றியது. இவர் குருகுலம் சேர்ந்த முதல் நாளிலிருந்தே நம் குரு இவ்வளவு கஷ்டப்பட்டு நமக்குப் பாடம் நடத்துகிறாரே நாம் அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் இருந்தது. இப்பொழுது அதைக் கேட்டே விட்டார். குருவே நீங்கள் உங்கள் வாத நோயை எனக்கு ஆவாகனம் செய்து கொடுங்கள் வாத ரோக நிவர்த்தி என்ற குருதட்சணையை நான் உங்களுக்குத் தர விரும்புகிறேன். அந்த சந்தோஷத்துடன் நான் இந்த குருகுலத்தை விட்டுச் செல்வேன். உங்களால் அந்த மாதிரி தத்தம் செய்ய முடியும். ஏனென்றால் நீங்கள் சித்த புருஷர். நீங்கள் உங்கள் கர்மபலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். அதனால் உங்கள் கைகளில் ஜலத்தை எடுத்து ஆவாகனம் செய்து எனக்கு தத்தம் செய்து கொடுத்தால் உங்கள் வாத நோய் சரியாகி விடும். அது உங்களால் முடியும் என்று கூறினார். இதைக் கேட்ட குரு சிரித்துக் கொண்டு சொல்லலானார். ஒரு குருவானவன் தன் சிஷ்யனுக்கு ஆத்ம ஞானத்தையும் கல்வி கேள்விகளையும் சாஸ்திரங்களையும் சகல வித்தைகளையும் கடவுள் பக்தியையும் புராணங்களையும் போதிக்க வேண்டுமே தவிர நீ கேட்டாய் என்பதற்காக நான் என் நோயைத் தரக் கூடாது. அவ்வாறு நான் செய்தால் இந்த ஊர் மக்கள் என்னை பழிப்பார்கள்.
குருவானவர் தன் சீடனை சொந்த மகனாக பாவிக்க வேண்டும். என்னுடைய கர்ம பலனால் வந்த இந்த ரோகம் என்னுடனே போகட்டும். இதை வாங்கிக் கொண்டு நீ அவஸ்தைப் பட வேண்டாம். நீ இங்கிருந்து புறப்படு என்றார். ஆனால் பட்டத்ரி அதெல்லாம் இல்லை. நீங்கள் கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்று அவரை வற்புறுத்தினார். அதற்கு குரு நீ வியாதியால் கஷ்டப்படுவதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நீ என்னை விடச் சிறியவன். உன் ஆச்சார்ய பக்தியைக் கண்டு என் மனம் மகிழ்கிறது. உன்னைப் போல் ஒரு சிஷ்யன் கிடைக்க நான் மிகவும் கொடுத்து வைத்திருக்கிறேன். இருந்தாலும் இது தர்மம் கிடையாது. ஆகையால் நீ கிளம்பு என்று கூறுகிறார். அதற்கு பட்டத்ரி குருவே எனக்கும் உங்களுக்கும் சில வித்தியாசங்கள் இருக்கிறது. நான் உங்களை விட வயதில் சிறியவன். அதனால் இந்த ரோகத்தைத் தாங்கும் சக்தி உங்களை விட எனக்கு அதிகம் இருக்கும். அது மட்டுமில்லை நீங்கள் இந்த வியாதியை எனக்குக் கொடுத்தாலும் கூட நான் இதனால் கஷ்டப்பட மாட்டேன் ஏனென்றால் நீங்கள் ஆச்சார ஸ்ரேஷ்டராக இருக்கிறீர்கள். நீங்கள் வைத்தியரிடம் செல்வது கிடையாது. இதற்கு எந்த மருந்து மாத்திரையும் எடுத்துக் கொள்வது கிடையாது. ஆனால் நான் அப்படி இல்லை. நான் கேரள மாநிலத்தில் உள்ள சிறந்த வைத்தியரிடம் காட்டி என் நோயை குணப்படுத்திக் கொள்வேன். அதனால் உங்கள் நோய் என்னிடம் வெகு நாட்கள் இருக்கும் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். நான் இன்னும் ஒரு வாரத்தில் நன்கு குணமாகி உங்களை வந்து நமஸ்கரிப்பேன். அதற்கு எனக்கு ஆசிர்வதியுங்கள் என்று வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டார்.
பட்டத்ரியின் பிடிவாதமான வார்த்தைகளைக் கேட்ட அச்யுதபிஷாரடி தன் கண்களை மூடிக் கொண்டு சிந்தித்தார் தன்னுடைய ஆத்ம பலத்தால் வருங்காலத்தை நினைத்துப் பார்த்தார். சிருஷ்டியின் சூட்சுமம் புரிந்துவிட்டது அவருக்கு. இவையெல்லாம் அந்த இறைவனின் திருவிளையாடலே இவனின் பிடிவாதத்திற்குக் காரணம் அந்த குருவாயூரப்பனே. இவன் தன் வாயால் நாராயணியம் கேட்க வேண்டும் என்று அந்த கிருஷ்ணன் முடிவு செய்து விட்டான் என்று அவர் நினைக்கையில் அவர் மனக்கண் முன் கிருஷ்ணன் வந்தான். தலையில் மயில் பீலி அணிந்து பட்டுப் பீதாம்பரம் உடுத்தி புல்லாங்குழலுடன் நின்று புன்முறுவல் புரிந்தான். தான் கண்ட காட்சியைக் கண்டு அச்யுதபிஷாரடி மெய் சிலிர்த்துப் போனார். பக்தியின் ஆழத்தை நினைத்து வியந்து போனார். தன் பக்தனுக்காக அந்த மாயக் கண்ணன் என்ன லீலை வேண்டுமானாலும் செய்வான் என்று நினைத்தார். அதனால் இதை நம்மால் தடுத்து நிறுத்த முடியாது. இது தெய்வ சங்கல்பம் என்று புரிந்து கொண்டார். எனவே தன் கையில் ஜலத்தை எடுத்து அவருக்கு தன் ரோகத்தை தத்தம் செய்து கொடுத்து விட்டார். அடுத்த நிமிஷம் குரு எப்படி இருந்தாரோ அப்படி பட்டத்ரியும் பட்டத்ரி எப்படி இருந்தாரோ அப்படி குருவும் ஆகி விட்டனர். உடனே குரு தன் மற்ற சீடர்களிடம் இவனைக் கொண்டு போய் இவனது வீட்டில் சொல்லி விட்டுவிட்டு வாருங்கள். ஏனென்றால் படிக்கச் சென்ற குழந்தை ரோகத்துடன் வந்தால் அந்த பெற்றோர் மனம் எவ்வளவு பாடுபடும் குரு எவ்வளவு சொல்லியும் கேளாமல் குருவே நிர்பந்தப்படுத்தி அவரின் ரோகத்தை இவன்தான் வாங்கிக் கொண்டு விட்டான் என்று கூறுங்கள். அவர்கள் என்னை தப்பாக நினைக்கக் கூடாது என்றார்.
பட்டத்ரியை ஒரு பல்லக்கில் வைத்து தூக்கிக் கொண்டு வந்து அவரது வீட்டில் விட்டனர் சிஷ்யர்கள். வீட்டுக்கு வந்த பட்டத்ரியைப் பார்த்த குடும்பத்தினருக்கு குரு மீது மிகுந்த கோபம். இவன்தான் கேட்டான் என்றால் அந்த குரு எப்படி ரோகத்தைத் தன் சீடனுக்குக் கொடுக்கலாம். மற்ற சீடர்களுக்கு இல்லாத அக்கறை இவனுக்கு ஏன் படிக்கச் சென்ற பிள்ளை இப்படி ரோகத்துடன் வந்து விட்டானே இவனை எப்படி குணமாக்குவது. எந்த வைத்தியரைப் பார்ப்பது என்று மனச் சஞ்சலம் அடைந்தனர். இவரை அழைத்துக் கொண்டு பிரபல வைத்தியர்களிடம் சென்றனர். ஆனால் எங்கு சென்றாலும் அவரது நோயின் வலிமை கூடியதே அன்றி ஒரு துளியும் குறையவில்லை. அவர் சாப்பிட்ட மருந்து மாத்திரைகள் சூர்ணத்தினால் உடலில் உள்ள வியாதியின் வலி குறையும் ஆனால் இவருக்கு நாளுக்கு நாள் வலி கூடியது. கை, கால்களை துளிக் கூட அசைக்க முடியவில்லை. வைத்தியத்தினால் அவர் உடலில் ஒரு முன்னேற்றமும் இல்லை. அவர் குருவிடம் இருந்து எப்படி அந்த ரோகத்தை வாங்கினாரோ அப்படியே இருந்தது. எல்லா வைத்தியர்களிடமும் காட்டி விட்டு இனி செல்ல கேரளாவில் வைத்தியரே இல்லை என்ற நிலைமைக்கு வந்தாகிவிட்டது.
இப்பொழுது பட்டத்ரி சிந்திக்க ஆரம்பித்தார். நாம் நல்ல சிந்தனையோடு தானே நம் குருவிடம் இருந்து இந்த வியாதியை வாங்கிக் கொண்டோம். ஆனாலும் ஏன் குணமாகவில்லை அதற்கு ஒரே காரணம் நாம் குருவிடம் கர்வமாகப் பேசி விட்டோம். வியாதி போகாததற்கு உங்கள் ஆசாரம் தான் காரணம். ஆனால் எனக்கு அப்படி இல்லை. வைத்தியரிடம் சென்றால் தீர்ந்து விடும். ஒரு வாரத்தில் வந்து உங்களை நமஸ்கரிக்கின்றேன் என்று கூறி விட்டேன். பகவானிடம் கூட கர்வமாகப் பேசலாம். ஆனால் குருவிடம் கர்வமாகப் பேசக் கூடாது. நான் அப்படிப் பேசியிருக்கக் கூடாது. நான் மாபெரும் அபச்சாரம் அல்லவா செய்திருக்கிறேன் அதனால்தான் என்ரோகம் இன்னும் தீரவில்லை. இப்படியாகத் தான் தன் குருவை அபசாரமாகப் பேசியதற்காக பட்டத்ரி மிகவும் வருத்தப் பட்டுக் கொண்டார். இனி நாம் என்ன செய்வது இந்த நோயை எப்படிப் போக்குவது என்று தன் மனதினுள் சிந்தித்துக் கொண்டிருந்தார். எப்பொழுதுமே வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்படுபவர்கள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும்போது தான் தன் ஜாதகத்தை நினைப்பார்கள். எந்த ஜோசியரிடம் போவது என்ன பரிகாரம் செய்வது என்று சிந்திக்கத் தொடங்குவார்கள். அதுபோலத்தான் இவரும் நினைத்தார். எந்த ஜோதிடரிடமாவது தன் ஜாதகத்தைக் காட்டி ஏதாவது பரிகாரம் உண்டா என்று கேட்கலாம் என்று நினைத்தார். அப்போது அவர்கள் ஊரில் எழுத்தச்சன் என்று ஒரு பிரபல ஜோசியர் இருந்தார். அவர் யார் வீட்டுக்கும் போய் ஜோதிடம் பார்க்க மாட்டார். அவர் வீட்டிற்கு நாம் சென்றால் மட்டுமே ஜோதிடம் பார்ப்பார். அவர் அஷ்ட மங்கல ப்ரஸனம் என்று எட்டு விதமான மங்கலப் பொருட்களை வைத்துக் கொண்டு சோழி உருட்டி அவர்கள் வந்த நேரத்தையும் கணக்கில் வைத்து அவர்கள் கஷ்டத்தையும் மனதில் நினைத்து அது தீர ஜோதிடம் பார்த்துச் சொல்வார். பட்டத்திரியும் நோயின் காரணமாக அவர் வீட்டுக்குச் செல்ல முடியாது. அவரும் வரமாட்டார். என்ன செய்வது என்று யோசித்தார்.
அவர் தம் குடும்பத்தினரிடம் தன்னை அழைத்துக் கொண்டு செல்லும்படி கேட்டதற்கு வைத்தியருக்கு செலவு செய்ததே போதும். இன்னும் ஜோதிடருக்கு வேறு செலவா நீங்கள் இப்படியே இருங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறி விட்டனர். ஆனால் நாளுக்கு நாள் அவரது ரோகத்தின் வீரியம் அதிகரிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான் அவர்கள் வீட்டு வேலைக்காரர்களில் ஒருவன். சிறு வயது முதலே அந்த வீட்டில் வேலை செய்வதாலும் பரம்பரை பரம்பரையாக அவர்களைத் தெரியும் என்பதாலும் அவனுக்கு பட்டத்ரி மீது மிகுந்த பாசம் உண்டு. பட்டத்ரி அவன் மனம் நம் எஜமானர் இப்படி கஷ்டப்படுகிறாரே அவருக்காக நாம் சென்று அவரது ஜாதகத்தைக் காட்டி பார்த்துக் கொண்டு வரலாம். என்று நினைத்தான். அதை மெதுவாக அவரிடமும் கூறினான். ஐயா நான் வேண்டுமானால் உங்கள் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு போய் ஜோசியர்கிட்ட காட்டி கேட்டுக் கொண்டு வருகிறேன் என்றான். இதைக் கேட்ட பட்டத்ரி மிகவும் சந்தோஷப்பட்டுக் கொண்டு என் குடும்பத்தாரும் உறவினர்களும் கூட முடியாது என்று சொல்லி விட்டபோது நீ எனக்காக செல்கிறேன் என்று சொல்கிறாயே எனக்கு மிகவும் ஆனந்தமாக இருக்கிறது என்று கூறி தன் ஜாதகத்தை அவனிடம் கொடுத்து அனுப்பினார். அவன் சென்று அந்த ஜோதிடரின் காலில் விழுந்து நமஸ்கரித்து, பட்டத்ரியைப் பற்றி முழுமையாகக் கூறி அவருடைய ஜாதகத்தைக் காட்டி இது என் எஜமானரின் ஜாதகம். அவர் வாத நோயால் வாடுகிறார். அவரால் வர இயலாது. அவர் குடும்பத்தாரும் வர மறுக்கின்றனர். அதனால்தான் நான் வந்தேன். இவர் நோய் தீருமா என்று பார்த்துச் சொல்லுங்கள் என்று கேட்டான்.
எஜமான விஸ்வாசத்தைப் பார்த்த ஜோதிடர். உனக்காக நான் பார்த்துச் சொல்கிறேன் என்று கூறி பட்டத்ரியின் ஜாதகத்தைப் பார்த்தவர் பிரமித்துப் போனார். பின் அவர் சோழியைப் போட்டுப் பார்த்து அஷ்ட மங்கல ப்ரஸனம் பார்த்து அவன் வந்த நேரத்தையும் பார்த்து அவனது உள்ளக் கிடக்கையும் அறிந்து சொல்லலானார். உன் எஜமானனுக்குக் கண்டிப்பாக இந்த வியாதி நீங்கும். இதற்குப் பரிகாரம் இருக்கிறது. ஒரே ஒரு பரிகாரம் செய்தால் போதும் என்றார். உடனே அந்த வேலைக்காரன் ஆவலோடு அப்படியா என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் ஐயா நான் உடனே செய்கிறேன் என்றார். அதற்கு எழுத்தச்சர் இந்த பரிகாரத்தை நீ செய்ய வேண்டாம் உன் எஜமானார் தான் செய்ய வேண்டும். திருச்சூர் அருகில் குருவாயூர் என்றொரு பிரசித்தி பெற்ற கோயில் உள்ளது. குருவும் வாயுவும் பிரதிஷ்டை செய்த தெய்வம் கிருஷ்ணரே ஸ்நானம் செய்த புண்ணியக் குளமான நாராயண சரஸ் உள்ள கோவில். அந்த நாராயண சரஸ் என்னும் தீர்த்தத்தில் நீராட வைத்து பின் புது வஸ்திரம் அணிவித்து கொடிக்கம்பமாகிய ஜ்வஜஸ்தம்பம் தாண்டி உள்ளே நுழையும் இடத்தில் பகவானுக்கு வலது பக்கம் நமக்கு இடது பக்கம் உள்ள திண்ணையில் அவரை உட்கார வைத்து மத்ஸ்யம் (மீன்) தொட்டுப் பாட சொல் என்று கூறினார்.
இதைக் கேட்ட அந்த வேலைக்காரன் வீட்டிற்கு ஓடி வந்து விட்டான். அவனைக் கண்ட பட்டத்ரி எனக்கு ஏதாவது நிவாரணம் உண்டு என்று சொன்னாரா என்று மிகவும் ஆவலுடன் கேட்டார். அதற்கு அவன் ஐயா அவர் உங்களுக்கு வியாதி குணமாகும். கண்டிப்பாகப் பரிகாரம் இருக்கிறது என்று கூறினார். அதுவும் ஒரே ஒரு பரிகாரம் செய்தால் போதும் என்றும் கூறினார். ஆனால் அதற்குப் பிறகு அவர் சொன்ன பரிகாரம் தான் எனக்கு அதிர்ச்சியைத் தந்தது என்றான். அதற்கு பட்டத்ரி அப்படி என்ன சொல்லி விட்டார்? என்று ஆர்வமாகக் கேட்க அவன் ஜோதிடர் சொன்ன விவரமெல்லாம் சொல்லி புனிதமான கோவில் குருவாயூரில் தங்களை மீனை நாக்கில் வைத்துக் கொண்டு பாடச் சொல்கிறார். அந்தக் கோயிலில் ஒரு சின்னக் குழந்தை அசுத்தம் செய்து விட்டாலே மூன்று மணி நேரத்திற்குக் கோயில் கதவை மூடி புண்யாகவாசனம் என்ற சுத்தி செய்துவிட்டுத்தான் பிறகு திறப்பார்கள். அப்பேர்ப்பட்ட பெருமை மிகுந்த கோயிலில் உங்களை மீனை நாக்கில் தொட்டுப் பாடச் சொல்கிறார். அப்படிச் செய்வதற்கு நீங்கள் மேல்புத்தூரிலேயே உங்கள் வாத ரோகத்துடன் இருக்கலாம். நானே உங்களைப் பார்த்துக் கொள்கிறேன். இந்த ஜோசியர் இப்படிச் சொல்லுவார் என்று தெரிந்திருந்தால் நான் போயே இருக்க மாட்டேன். நான் ஏன் தான் அந்த ஜோசியரிடம் போனேனோ என்று வருத்தப்படுகிறேன் என்றான். ஜோசியர் கூறியதன் உட்பொருளைப் புரிந்து கொண்டார் பட்டத்ரி. அவர் மிகவும் சந்தோஷப்பட்டுக் கூறலானார். நாம் இன்றே குருவாயூர் செல்ல வேண்டும். அதற்கு உண்டான ஏற்பாடுகள் செய்யுங்கள் என்றார். இதைக்கேட்ட வேலைக்காரன் நான் கூட வர முடியாது. குருவாயூர் போன்ற புண்ணிய கோவிலை நீங்கள் அசுத்தம் செய்வதை நான் விரும்பவில்லை. நீங்கள் உங்கள் வியாதி குணமாக வேண்டும் என்பதற்காக இதைச் செய்யலாம். ஆனால் இதற்கு உடன்பட என்னால் முடியாது என்று கூறினான்.
அவனை சாந்தப்படுத்திய பட்டத்ரி மத்ஸ்யம் தொட்டுப் பாடணும் என்றால் சாதாரண மீன் என்று நீ ஏன் நினைத்துக் கொள்கிறாய் பகவான் குருவாயூரப்பனின் அவதாரங்களில் முதல் அவதாரம் மத்ஸ்ய அவதாரம். அவர் மிகவும் இஷ்டப்பட்டு எடுத்த அவதாரமும் மத்ஸ்ய அவதாரம்தான். மத்ஸ்யம் தொட்டு என்றால் மத்ஸ்ய அவதாரம் தொடங்கி தசாவதாரம் முழுவதையும் அவர் என்னைப் பாடச் சொல்லி இருக்கிறார். அதனால் நான் மத்ஸ்ய அவதாரம் தொடங்கி தசாவ தாரங்களைப் பற்றி குருவாயூரில் பாட வேண்டும். அதனால் இப்பொழுதே என்னை குருவாயூருக்கு அழைத்துச் செல்லுங்கள் என்றார். தன் வியாதிக்குப் பரிகாரம் கிடைத்த சந்தோஷம் அவருக்கு. அதுமட்டுமில்லாமல் தம் குரு தமக்குக் கற்றுக் கொடுத்த சமஸ்கிருத மொழியில் பாட அந்த பகவானே நம்மைப் பணித்திருக்கிறார் என்று நினைத்து அவர் கண்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தன. அந்த குருவாயூரப்பனைப் பாடப் பாட நம் ரோகம் நிவர்த்தி ஆகும் என்று நினைத்ததும் அவர் மனம் ஆனந்தக் கூத்தாடியது. பகவானின் பெருங் கருணையை எண்ணி மனம் பரவசம் அடைந்தது. ஆனால் இவருடைய வியாதியால் ஏற்கெனவே நொந்து போயிருந்த உறவினர்கள் இது வேறா என்ற வெறுப்புடன் வேறு வழியில்லாமல் அவர் குருவாயூர் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்தனர். ஒரு பத்துப் பதினைந்து பேர் அவரை ஒரு பல்லக்கில் வைத்துத் தூக்கிக் கொண்டு குருவாயூர் சென்றனர். பட்டத்ரியின் மனம் பல்லக்கை விட வேகமாகச் சென்றது. அந்த குருவாயூரப்பனின் தரிசனத்திற்காக அவர் மனம் ஏங்கியது. அவர் மனத்தில் இருந்த பயம் விலகியது. இந்த ரோகத்தால் இனி நம்மை ஒன்றும் செய்ய முடியாது. அந்தக் குட்டிக் கிருஷ்ணன் நம்மைப் பார்த்துக் கொள்வான். நாளை காலை நிர்மால்ய தரிசனத்தின்போது நாம் அந்த குருவாயூரப்பன் சன்னதியில் இருப்போம் என்று எண்ணிக் கொண்டார்.
அடுத்த நாள் விடியற்காலையில் அவர்கள் குருவாயூர் சென்றடைந்தனர். அவரை அழைத்து வந்தவர்கள் அவரை நாராயண சரஸில் ஸ்நானம் செய்ய வைத்தனர். புது வஸ்த்ரம் உடுத்தினர். அவரை தூக்கிக் கொண்டு கருடரை வணங்கி பின் பிரதான வாயிலைத் தாண்டி கொடிக் கம்பத்தைக் கடந்து கர்ப்பகிரகத்தின் சிறிய வாயில் நுழைந்தனர். அவரைத் தூக்கிக் கொண்டு வந்தவர்கள் அங்குள்ள திண்ணையைக் கண்டனர். பகவானுக்கு வலப் பக்கம் உள்ள அந்தத் திண்ணையில் அவரை அமர வைத்தனர். பட்டத்ரி அந்த மண்டபத்தில் அமர்ந்தவுடன் அவருக்கு குருவாயூரப்பனின் தரிசனம் கிடைக்கவில்லை. அந்த மண்டபமானது குருவாயூரப்பனுக்கு வலது பக்கத்தில் இருந்தது. பட்டத்ரிக்கோ வாத ரோகம் இருந்ததால் தன் கழுத்தைத் திருப்பி குருவாயூரப்பனை தரிசனம் செய்ய இயலவில்லை. அப்போது பட்டத்ரி அந்த குருவாயூரப்பனை மனதில் நினைத்துக் கொண்டு உன் திவ்ய தரிசனத்தைக் காணாமல் என்னால் எப்படி நாராயணியம் எழுத முடியும். அதனால் நீ எனக்கு உன் திவ்ய தரிசனத்தைத் தா என்று அழுது கண்ணீர் மல்குகிறார். அதற்கு குருவாயூரப்பன் ஒன்றும் பேசவில்லை. வாத ரோகம் உள்ள காரணத்தால் பட்டத்ரி மனம் வருந்தி கண்ணனிடம் நீ ஒன்றுமே செய்ய வேண்டாம். என் வலது பக்க கழுத்தில் மட்டுமாவது லேசாக அசைவு வரும்படி செய். உன்னைப் பார்க்க அனுகிரகம் செய். என்று மனம் குழைய கெஞ்சிக் கேட்கிறார். அப்போது குருவாயூரப்பன் முதன் முதலில் பட்டத்ரியிடம் பேச ஆரம்பிக்கிறார். எண்ணால் இப்பொழுது உன் கழுத்தை சரி செய்ய முடியாது. என்று நீ வந்த காரியம் முடிவடைகிறதோ அன்றுதான் உன் வியாதி நீங்கும் என்று கூறுகிறார்.
அப்பொழுது பட்டத்ரி எனக்கு உன் தரிசனம் எப்போது கிடைக்கும் இதைக் கேட்ட குருவாயூரப்பன் கருணையோடு சொல்லலானார். பட்டத்ரி நீ உன் மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டு கழுத்தை சாய்த்து தான் என்னைப் பார்க்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம். எனக்குக் கழுத்தின் இரு பக்கமும் நன்றாகத்தான் இருக்கிறது. அதனால் என் கழுத்தைத் திருப்பி என்னால் உன்னைப் பார்க்க முடியும். நான் என் தலையைச் சாய்த்து உன்னைப் பார்க்கிறேன். என்று கூறி பாண்டுரங்கனாக மாறி இடுப்பில் கையை வைத்துக் கொண்டு தலையை சாய்த்து பட்டத்ரியைப் பார்த்து நீ நாராயணியம் ஆரம்பித்துக் கொள் என்று கூறி அனுகிரகம் செய்கிறார். இப்பொழுதும் நாராயண பட்டத்ரி மண்டபத்தில் உட்கார்ந்து பார்த்தால் நமக்கு அந்த குருவாயூரப்பன் தெரிய மாட்டான். ஆனால் குருவாயூரப்பன் நின்று கொண்டிருக்கும் இடத்தில் இருந்து நம்மைக் காணமுடியும். பட்டத்ரி நாராயணியம் எழுதி முடித்தவுடன் இந்த ஊரில் உள்ள எல்லா இடமும் எனக்குச் சொந்தம். ஆனால் இன்று முதல் இந்த இடம் மட்டும் உனக்கு சொந்தம். இது இனிமேல் பட்டத்ரி மண்டபம் என்று அழைக்கப்படும் என்று குருவாயுரப்பன் கூறினார். இந்த நாராயணியம் என்கிற க்ரந்தம் முழுவதுமே நாராயண பட்டத்ரியும் குருவாயூரப்பனும் பேசும் பாவனையில் எழுதப்பட்டுள்ளது. நான் நாராயணியம் எழுத ஆரம்பிக்கட்டுமா என்று பட்டத்ரி கேட்க ம் எழுது நான் கேட்க ஆவலாக இருக்கிறேன் என்று குருவாயூரப்பன் கூறுகிறான். அப்போது பட்டத்ரி நான் நாராயணியத்தைத் தொடங்க வேண்டும் என்றால் சில பல நிபந்தனைகள் உள்ளன. அவற்றை எல்லாம் நீ பூர்த்தி செய்தால் மட்டுமே என்னால் நாராயணியம் பாட முடியும். இல்லையென்றால் நான் ஊருக்குச் செல்கிறேன் என்கிறார். இப்படி முழுக்க முழுக்க அவர்களுக்குள் நடக்கும் சம்பாக்ஷணை போல் அமைந்திருக்கிறது.
குருவாயூரப்பனின் இடது பக்கம் உள்ள திண்ணையில் ஒரு செப்புப் பட்டயம் இருக்கிறது. அதில் மலையாளத்திலும் தமிழிலும் நாராயண பட்டத்ரி நாராயணியம் எழுதிய இடம் என்று எழுதப்பட்டுள்ளது. அந்த இடத்தில் தான் நாராயணபட்டத்ரி நூறு நாட்கள் அமர்ந்து குருவாயூரப்பனின் பெருமையை ஸ்ரீமத் பாகவதத்தின் சாரமான நாராயணியம் எழுதினார்.
சக்கரத்தாழ்வார், சுதர்சனர், சக்கரராஜன், நேமி, திகிரி, ரதாங்கம், சுதர்சனாழ்வான், திருவாழிஆழ்வான் என்று பல்வேறு நாமங்களால் போற்றப்படும் சுதர்சன சக்கரமே சக்கரத்தாழ்வாராகும். மகாவிஷ்ணுவின் கைகளில் பல்வேறு விதமான ஆயுதங்கள் இருந்தாலும் பெரும்பாலான திவ்ய தேசங்களில் சங்கும் சக்கரமும் ஏந்திய திருக்கோலத்தில்தான் காட்சியளிப்பார். சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் என்று திருப்பாவையில் திருமாலை பாடுகிறாள் ஆண்டாள். திருமாலை எப்போதும் தாங்கிக்கொண்டிருக்கும் ஆதிசேஷனை அனந்தாழ்வான் என்றும் வாகனமான கருடனை கருடாழ்வார் என்றும் நம்மாழ்வார் ஞானம் பெற்ற புளியமரத்தை திருப்புளியாழ்வான் என்றும் மகாவிஷ்ணுவின் பஞ்ச ஆயுதங்களில் முதன்மையான சக்கரத்தை திருவாழிஆழ்வான் எனும் சக்கரத்தாழ்வான் என வைணவ சாஸ்திரங்களும் சில்பரத்தினம் என்ற நூலும் தெரிவிக்கிறது.
பெருமாள் கோயில்களில் 8 கரங்கள் கொண்ட சுதர்சனரையும் 16 கரங்கள் கொண்ட மூர்த்தியையும் 32 கரங்கள் கொண்ட மகா சுதர்சனரையும் வீறு கொண்டு எழும் தோற்றத்துடன் அறுகோண சக்கரத்தில் சக்கரத்தாழ்வார் காட்சி தருவார். ஷட்கோண சக்கரம் என்னும் ஆறுகோணத்தின் மத்தியில் உக்கிர வடிவ சுதர்சனரும் திரிகோண சக்கரம் எனும் முக்கோணத்தில் பின் பக்கம் யோக நரசிம்மரும் அருள் பாலிக்கின்றனர். சுதர்சனர் தனது திருக்கரங்களில் சக்கரம், மழு, ஈட்டி, தண்டு, அங்குசம்,அக்னி, கத்தி, வேல், சங்கம், வில், பாசம், கலப்பை, வஜ்ரம், கதை, உலக்கை, சூலம் என 16 கைகளில் 16 வகையான ஆயுதங்களுடன் மகா சுதர்சன மூர்த்தியாக காட்சி தருகிறார். அழிக்க முடியாத பகையை அழித்து நீக்க முடியாத பயத்தை நீக்க வல்லவர் சுதர்சன மூர்த்தி. திருமாலின் வலக்கையை அலங்கரிக்கும் சக்கர ஆயுதமே சக்கரத்தாழ்வார். இவர் திருமாலுக்கு இணையானவர் என்று வேதாந்த தேசிகர் கூறுகிறார். திருமால் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்குத் தனிச் சன்னதி உண்டு. சங்கு, சக்கர, கதாபாணியான பெருமாளின் கரங்களில் எப்போதும் வலக்கையிலேயே இடம் பெற்று இருப்பவர் சக்கரத்தாழ்வார். ஆனால் சில இடங்களில் மாறுபட்டும் அமைந்திருப்பது உண்டு. திருக்கோவிலூரில் மூலவர் இடக்கையில் காட்சி அளிக்கிறார் சக்கரத்தாழ்வார்.
சக்கரத்தாழ்வார் எதிரிக்கு எதிரி சிசுபாலனின் தாய்க்கு அளித்த வாக்கின்படி சிசுபாலனின் தவறை நூறு முறை மன்னித்துவிட்டார் கிருஷ்ணர். அவனது நூற்றியோராவது தவறைக் கண்டு கொதித்த சுதர்சன சக்கரம் சீறி எழுந்து பெருமாளின் எதிரியான சிசுபாலனை அழித்தது. மகாபாரத யுத்தத்தின்போது ஜயத்ரதனை வெல்ல இயலாத நிலையில் பெருமாளின் சக்கரம் வானில் சுழன்று எழுந்து சூரியனை மறைத்தது. அதனால் குருஷேத்திரமே இருண்டது. இதனால் ஜயத்ரதன் ஒழிக்கப்பட்டு மகாபாரத வெற்றிக்கு வித்திடப்பட்டது. கஜேந்திர மோட்சம் என்ற புராணக் கதையில் யானையின் காலைப் பிடித்துக்கொண்ட மகேந்திரன் என்ற முதலையை சீவித் தள்ளி, கஜேந்திரனைக் காப்பாற்றியது சுதர்சன சக்கரமே. பக்தர்களுக்குத் துன்பம் ஏற்பட்டால், பெருமாளுக்கே இடையூறு ஏற்பட்டாற்போல் விரைந்து காப்பவர் சக்கரத்தாழ்வார். சக்கரத்தாழ்வார் வரலாற்றை முழுமையாக பக்தியுடன் நம்பிக்கையுடன் படித்தால் பிறவி இல்லா நிலையை அடையலாம் என்கிறது புராணம்.